Published : 04 Apr 2019 11:33 AM
Last Updated : 04 Apr 2019 11:33 AM

நான் தேர்தலுக்காக மட்டும் கோவை வருபவன் அல்ல; அதுவோர் அடிமைக் கூட்டணி: கோவை மார்க்சிஸ்ட் வேட்பாளர் நடராஜன் சிறப்புப் பேட்டி

கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதியில் திமுக, காங்கிரஸ் கூட்டணியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் பி.ஆர்.நடராஜன் களம் காண்கிறார்.

தமிழகத்தில் பாஜக மீது நிலவும் பொதுவான அதிருப்தி, ஏற்கெனவே எம்.பி.யாக இருந்த அனுபவம்,  திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி, ஜிஎஸ்டி குறித்து தொழிலாளர்களின் அதிருப்தி ஆகியவை நடராஜனுக்கு பலம். அதே நேரத்தில் மேற்கு மண்டலத்தில் குறிப்பாக கோவையில் பாஜகவுக்கு இருக்கும் செல்வாக்கு, கொங்கு பகுதியில் வலிமையான அதிமுகவுடன் பாஜக கூட்டணி, அதன் வேட்பாளர் சிபி.ராதாகிருஷ்ணனுக்கு உள்ள ஆளுங்கட்சி அதிகாரம் ஆகியவை பலவீனமாக இருக்கக் கூடும்.

சூறாவளிப் பிரச்சாரத்தில் இருந்தவரிடம் 'இந்து தமிழ்' இணையத்துக்காகப் பேசினேன்.

தொகுதி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது?

கோவை மக்கள் மத்திய, மாநில அரசுகளின்மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்கள் எனக்கு ஆதரவு அளிப்பார்கள் என்ற கருத்தோடு மக்களைச் சந்திக்கிறேன். அவர்களும் அதையே திரும்பச் சொல்கின்றனர். தமிழக தொழில்துறை அமைச்சரே, சட்டப்பேரவையில் ''50 ஆயிரம் சிறு, குறு தொழில்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றன, 5 லட்சம் பேர் வேலை இழந்திருக்கின்றனர்'' என்று பதிவு செய்தார்.

ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கோவையில் தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சரக்குகளுக்கு குறைந்தபட்ச வரி என்பது சரி. சேவைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி (Job Order GST- பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் துணைப் பொருட்களுக்கு தனி ஜிஎஸ்டி, தயாரான இறுதிப் பொருளுக்கு மீண்டும் ஜிஎஸ்டி விதிப்பது) பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால், ஜிஎஸ்டி வரியை  5% ஆகக் குறைப்போம் என்கிறார்கள். அது நியாயமில்லையே! தொழில்கள் முடங்கியபிறகு இதைத் சொல்வது தேர்தல் நேரத்தில் எடுக்கும் நிலைப்பாடு.

எனில் உங்களுக்கு மக்களிடத்தில் ஆதரவு அதிகமாக இருக்கிறதா?

நாங்கள் கூடுதலாக மக்களைச் சந்தித்து பேசுகிறோம். குடிசைகள் உட்பட வீடு வீடாகச் சென்று மக்களின் பிரச்சினைகளைக் கேட்கிறோம். மாநில அரசின் மீதான வெறுப்பும் அதிருப்தியும் மிகப்பெரிய மாற்றத்தை தமிழ்நாட்டிலேயே உருவாக்கும். கோவையில் கட்டாயம் உருவாக்கும்.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறீர்கள். ஈஷா யோகா மையத்தை நீங்கள் குறிப்பிட்டதாக எடுத்துக்கொள்ளலாமா?

மேற்குத்தொடர்ச்சி மலை மக்களுக்கு இயற்கை கொடுத்த கொடை. வனவிலங்குகளின் வழித்தடங்கள் அளிக்கப்படுவதால், வனவிலங்கு - மனித மோதல் ஏற்படுகிறது. அதைத் தவிர்க்க வேண்டும். இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

தனி நபர்கள் ஒரு பிரச்சினையே அல்ல. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவேண்டும் என்பது பொதுவான விஷயம்தானே. நான் பொதுவாகத்தான் பேசுகிறேன்.

கோவை நகர் என்ன பிரச்சினைகளைச் சந்திக்கிறது? அதற்கு நீங்கள் முன்வைக்கும் தீர்வுகள் என்னென்ன?

போக்குவரத்து நெரிசல் முக்கியப் பிரச்சினை. அதற்கு மெட்ரோ ரயில் சிறந்த தீர்வாக இருக்கமுடியும். நான் எம்.பி.யாக இருந்தபோது மெட்ரோ ஸ்ரீதரனை அழைத்து வந்து ஆய்வு நடத்தினோம். அந்தவகையில் மெட்ரோவைக் கொண்டு வருவோம். ரயில்வே மேம்பாலங்கள் (Road Over Bridge) இன்னொரு தீர்வு. நான் டெல்லியில் இருந்தபோதே 8 மேம்பாலங்கள் திட்டமிட்டு, 5 முடிக்கப்பட்டது. மீதமுள்ள 3 மேம்பாலங்களைக் கட்டிமுடிப்போம்.

மக்களின் அடிப்படைத் தேவையான குடிநீர் தனியார் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது. மாநகராட்சி பொதுமக்களுக்குத்தான் குடிநீரை வழங்கவேண்டுமே தவிர, தனியார் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடாது. உலக நாடுகள் பலவற்றில் இருந்து விரட்டி அடிக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனத்துக்கு வழங்குவதை எதிர்க்கிறோம்.

கெயில் குழாய், பெட்ரோல் குழாய் ஆகியவை விவசாயிகளுக்கு முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது. மின்குழாயை பூமிக்கடியில் பதித்துக் கொண்டு செல்லலாமே! பிஎஸ்என்எல் தனது டவர்களுக்கு வாடகை கொடுப்பதைப் போல, அவர்களும் டவர்களுக்கு வாடகை கொடுக்கலாமே? தொலைத்தொடர்பு சட்டத்தின்கீழ் குழாய்களைக் கொண்டுசெல்வது கிட்டத்தட்ட நிலத்தையே எடுத்துக்கொள்வது போலத்தான். நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கேபிள்கள் மூலம் குழாய்களைக் கொண்டு செல்லவேண்டும் என்பது எங்கள் வாதம்.

அதேபோல நசித்துப் போய் இருக்கும் விசைத் தறித் தொழிலை முன்னேற்ற நடவடிக்கை எடுப்போம். பாரதியார் பல்கலைக்கழகத்துக்கு இடம் கொடுத்த விவசாயிகளுக்கு இன்னும் பணம் முறையாகச் சென்றுசேரவில்லை. 35 ஆண்டுகள் ஆகியும் நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் பணம் கிடைக்கவில்லை. அத்தொகை அவர்களின் வாரிசுகளுக்குச் சென்றுசேர நடவடிக்கை எடுப்பேன்.

கம்யூனிஸ்டுகள் தேர்தலில் நிற்கும்போது பணத்தை அதிகம் செலவழிக்கமாட்டார்கள். அதனால் தேர்தல் பிரச்சாரப் பணிகளில் சுணக்கம் நிலவும் எனக் கூறப்படுகிறதே? அண்மையில் மதுரை கம்யூனிஸ்ட் வேட்பாளர் மீதும் அதே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது..

மக்களிடையே நிதி வசூல் செய்து, பிரச்சாரம் செய்கிறோம். நிதிக்கான வரவு- செலவை முறையாக வைத்திருக்கிறோம். தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்பேரில் 5 நாட்களுக்கு ஒருமுறை கணக்கைக் காண்பிக்கிறோம்.

மக்களிடையே வசூலிக்கும் தொகையே போதுமானதாக உள்ளதா?

இருக்கிறது. ''அநாவசியச் செலவுகள் செய்யமாட்டோம்; பிரச்சாரத்துக்கு மட்டுமே செலவழிப்போம்'' என்று சொல்லித்தான் பணம் வசூலிக்கிறோம். அது தேவையான அளவுக்குக் கிடைக்கிறது.

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு எப்படி இருக்கிறது?

மிகவும் நல்ல முறையில், இணைந்து பணியாற்றுகிறோம்.

பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், அவர் எம்.பி.யாக இருந்தபோது என்ன செய்யவில்லை என்று நினைக்கிறீர்கள்?

நான் அதிகமாக செயல்பட்ட எம்.பி. தேர்தல் நேரத்தில் மட்டும் கோவைக்கு வரக்கூடியவன் நான் அல்ல. நான் தொடர்ந்து கோவையிலேயே இருந்துகொண்டு என் மக்களின் பிரச்சினைகளில் தலையிட்டவன். கூடுதலாக செயல்பட்ட எம்.பி. என்ற பெயரை வாங்கியவன். நான், மக்களோடு இருக்கிற, இருந்த நாடாளுமன்ற உறுப்பினர்.

கோவையில் பாஜகவுக்கு இருக்கும் வாக்கு வங்கி, அதிமுக கூட்டணியில் வெற்றி வாய்ப்பைத் தரும் என்று கூறப்படுகிறதே? அது எந்தளவுக்கு உங்களுக்கு பாதிப்பாக அமையும்?

2014 தேர்தலில் வா வா என்று அழைக்கப்பட்ட மோடிதான் இன்று 'கோ பேக் மோடி' என்று கூறப்படுகிறார். அது உலக அளவில் ட்ரெண்ட் ஆகிறது. அதிமுக என்பது ஜெயலலிதா இல்லாத அதிமுக. ஆகவே அந்தக் கூட்டணி குறித்த கணக்குகள் எல்லாம் தவறு. அடிமைக் கூட்டணியாக அது அமைந்திருக்கிறது. எங்களுடையது தோழமைக் கூட்டணி. ஆகவே அந்தக் கணக்குகள் இந்தத் தேர்தலில் செல்லாது. மக்களின் மனநிலை இரு அரசுகளுக்கும் எதிராகவே இருக்கிறது.

இளைஞர்களைக் கவரக் கட்சிகள் எடுத்திருக்கும் ஆயுதம் சமூல வலைதளங்கள். நீங்கள் பொதுவாக கம்யூனிஸ்டுகள் ஏன் அதை அதிகம் கையாள்வதில்லை?

பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். குறைவாக இருப்பதாக நீங்கள் கருதினால் அதை வலுப்படுத்துவோம்.

பிரதமர் வேட்பாளர் என்று நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?

அது மக்களவைத் தேர்தல் முடிந்தபிறகு நாடாளுமன்றக் குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுக்கும் சமாச்சாரம்.

இந்தியா முழுவதும் இடதுசாரிகளின் பலம் ஏன் குறைந்துகொண்டே செல்கிறது? குறிப்பாக தேர்தல் அரசியலில்..

மக்கள் எங்கெல்லாம் தோற்றுப்போகிறார்களோ அங்கெல்லாம் இடதுசாரிகள் பலம் இழக்கிறார்கள். மக்கள் வெற்றிபெறும் இடங்களில் எங்களின் பலம் கூடுகிறது'' என்றார் பி.ஆர்.நடராஜன்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x