Last Updated : 15 Apr, 2019 04:52 PM

 

Published : 15 Apr 2019 04:52 PM
Last Updated : 15 Apr 2019 04:52 PM

தேர்தல் பிரச்சாரங்களில் சுரண்டப்படும் குழந்தைகள் உரிமை: வாய் திறக்காத தலைவர்கள்

''போடுங்கம்மா ஓட்டு...  இரட்டை இலையைப் பார்த்து, போடுங்கம்மா ஓட்டு... உதயசூரியனைப் பார்த்து...'' என அனல் பறக்கும் மதிய வெயிலில் கட்சிகளின் தேர்தல் பிரச்சார ஊர்வலத்தில் சென்று கொண்டிந்தனர் வாக்குரிமையே இல்லாத அந்தச் சிறுவர், சிறுமிகள்.

எதற்காக இந்தக் கூட்டத்துடன் கோஷமிட்டுக் கொண்டு செல்கிறோம் என்ற புரிதல் இல்லாமல் கட்சிகள் பிரசுரித்த வாக்குறுதிகளை விநியோகிக்கும் இளம் சிறார்களின் முகங்களை இரண்டு வாரங்களாக சென்னையில் கடக்க முடிந்தது. இந்தக் சிறுவர், சிறுமிகளில் சிலர் அவர்களது பெற்றோர்களுடனும் வந்திருந்தனர்.

''குடும்ப வறுமை, தங்களது ஒரு நாள் குடும்பச் செலவை இந்தக் கட்சிகள் தரும் 200 ரூபாய் ஈடுசெய்துவிடும் என்ற எண்ணத்தில்தான் இந்தக் கட்சி ஊர்வலங்களில் கலந்து கொள்கிறோம். வீட்டில் குழந்தைகளைத் தனியாக விடமுடியாதே? எல்லாவற்றையும் தாண்டி இவர்கள் வைத்திருக்கும் பணம் எங்கள் பணம் தானே பிறகென்ன...'' என்ற விரக்தி அடைந்த குரல்களையும் கேட்க நேரிட்டது.

இவை எல்லாவற்றையும் தாண்டி சிறுவர், சிறுமிகளை அரசியல் பிரச்சாரப் பேரணிகளில் பயன்படுத்துவது குழந்தைத் தொழிலாளர் முறைதானே. அவர்களது உழைப்பையும், வறுமையையும் இந்த அரசியல் கட்சிகள் சுரண்டுகின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மை. 

இதுவரை இதற்கு எதிராக எந்தக் கட்சித் தலைவரிடமிருந்து சிறிய கண்டனங்களோ, வருத்தமோ தெரிவிக்கப்படவில்லை. இது குறித்து வாய் திறக்காத இவர்கள்தான் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து தேர்தல் பிரச்சாரங்களில் குரல் கொடுத்துக் கொண்டு வருகின்றனர். இது எத்தகைய முரண்?

தேர்தலில் குழந்தைகளுக்கு எதிரான இந்தச் சூழல் சென்னை மட்டுமில்ல... தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஏன் இந்தியா முழுவதும் இதே நிலைதான் நீடிக்கிறது.

கேரளாவில் கடந்த வாரம் தேர்தல் பிரச்சாரங்களில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து தேர்தல் ஆணையமும், குழந்தைகள்  நல அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்தன.

ஆனால், தமிழகம் போன்ற முன்னோடி மாநிலங்களில்  இது தொடர்பாக எந்த எதிர்ப்புக் குரலும் இதுவரை வலுவாக ஒலிக்கப்படவில்லை.

தேர்தல் காலங்களில் குழந்தைகளின் மீதான இத்தகைய சுரண்டல்கள் மீதான எதிர்வினைகள் நிச்சயம் பதிவு செய்யப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுக்க வேண்டும் என்கிறார் தோழமை தொண்டு நிறுவன அமைப்பின் இயக்குனர், குழந்தைகள் உரிமைச் செயற்பாட்டாளர் தேவநேயன்

குழந்தைகளைச் சுரண்டாதீர்கள்

''என்னைப் பொறுத்தவரை எல்லாவற்றிலும் குழந்தைகளின் நலன் என்ற லென்ஸை வைத்துதான் பார்க்க வேண்டும். இது குழந்தைகளுக்கான தேசியக் கொள்கையாக இருக்கலாம் அல்லது இளம் சிறார் நீதிச் சட்டமாக இருக்கலாம். இவ்வாறு எல்லாவற்றிலும் குழந்தைகளின் நலனைப் பேணுவதாகவே இருக்க வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகளின் உரிமைகளுக்கான  உடன்படிக்கையிலும் இதுதான் கூறப்பட்டிருக்கிறது. இந்த உடன்படிக்கையின் முதல் ஆரம்பமே குழந்தையின் சிறந்த நலனைப் பேணுவதாக நாம் இருக்க வேண்டும். இதன்படி இந்த அரசியல் பிரச்சாரக் கூட்டங்களில் குழந்தைகள் பயன்படுத்தப்படுவதை எடுத்துக் கொள்வோம். இதைக் குழந்தை விரும்புகிறதா? குழந்தைக்குத் தேவையானதா? குழந்தையின் சிறந்த நலமா? என்று பார்த்தோம் என்றால், முதலில் இது குழந்தைகளின் சிறந்த நலனுக்கு எதிரானது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு எதிரானது.

இரண்டாவது இம்மாதிரியாக கட்சிகளின் கொடிகளை பிடித்துச் செல்லும்போது ஏதாவது வன்முறையோ, சண்டையோ ஏற்படுகிறது என்று வைத்துக் கொள்ளுங்கள். இதில் முதலில் பாதிக்கப்படுவது குழந்தைகள் தானே. இப்படி கட்சி பிரச்சாரக் கூட்டங்களுக்கு குழந்தைகளை அழைத்துச் சென்று 100 ரூபாயோ 50 ரூபாயோ கொடுப்பது குழந்தைகளை பொருளாதார ரீதியாகச் சுரண்டுவதுதானே. 14 வயதுக்குக் கீழ் குழந்தைகள் வேலை செய்யக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இவ்வாறு இருக்கையில் அரசியல் கட்சிகளின் இந்தச் செயலை எப்படி ஏற்றுக் கொள்வது?

அடிப்படையில் இம்மாதிரியான கட்சிப் பேரணிகளில் குழந்தைகள் கலந்துகொள்வதன் மூலம் குழந்தைகளுக்கிடையே பிளவுகள் உண்டாகும்.

அவர்களது குழந்தைப் பருவத்தை மகிழ்ச்சியாக அனுப்பவிக்கவிடாமல்  கைகளில் கொடி பிடித்து கோஷம் எழுப்புவதும், போராடுவதும் குழந்தைப் பருவ இழப்பு தான். எதற்கு 18 வயதுக்கு மேல் வாக்குரிமையை அளிக்கின்றோம்.  எது சரி, எது தவறு என்பது பற்றிய சிறிய புரிதல் அந்த வயதில் இருக்கும் என்றுதான். அப்படி பார்க்கையில் பக்குவம் இல்லாத வயதில் செய்வதை ஏற்றுக் கொள்வீர்களா. இது உண்மையில் குழந்தைகள் மீதான திணிப்புதான். இதுவும் ஒரு வகையான வன்முறைதான்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு பள்ளிகளில் விருந்தினர்கள் வரும்போது குழந்தைகள் சாலைகளில் நின்று அவர்களை வரவேற்கக் கூடாது என்று தமிழக அரசு  தடை செய்தது. ஏன் அதனைக் கூறினார்கள் என்றால், குழந்தைகள் வெயிலில் நிற்கும்போது பாதிப்பு ஏற்படுகிறது. மயக்கம் போட்டு விழுகிறார்கள். இதை தடை செய்தவர்கள் ஏன் தேர்தல் பிரச்சார ஊர்வலம், பேரணிகளில் குழந்தைகளை ஈடுபடுத்துவதை பார்த்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

தேர்தல் ஆணையம் நிச்சயம் இம்மாதிரியான விஷயங்களைக் கண்டுகொண்டு தடை செய்ய வேண்டும். கட்சிப் பேரணிகளில் குழந்தைகளைப் பயன்படுத்துவது அவர்களை துன்புறுத்துவதற்குச் சமம். எனவே இதனைக் கருத்தில் கொண்டு குழந்தைகளைப் பயன்படுத்தும் கட்சியினரைத் தண்டிக்க வேண்டும்.

இது நிச்சயம் ஆரோக்கியமான சூழல் இல்லை. நாளை தேர்தல் முடிந்ததும் அனைவரும் சென்றுவிடுவார்கள். இரண்டு வெவ்வேறு கட்சிப் பேரணிகளில் கலந்துகொண்ட சிறுவர்களோ, சிறுமிகளோ சந்தித்துக் கொள்ளும்போது அவர்களது மனநிலை என்னவாக இருக்கும். 

குழந்தைகள் குழுவாக இணைந்து குழுவாகச் செயல்பட வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் ஒரு பக்கத்தில் இவர்களே பிரச்சினையை உருவாக்குகிறார்கள். தேர்தல் நடத்தை விதிமுறைகளைப் போடும்போதே குழந்தைகளின் பாதுகாப்பு சார்ந்த விதிமுறைகளைக் கொண்டு வந்துவிட வேண்டும். இதுபற்றி யாரும் சிந்திப்பது இல்லை.

 

 

வேளச்சேரி தேர்தல் பிரச்சாரங்களில் சிறுவர்கள் கையில் கத்தியுடன் சென்றதாகவும் இது தொடர்பான வழக்கு பள்ளிக்கரணை போலீஸ் நிலையம் வரை சென்றுள்ளது. இது அதிகபட்ச வன்முறையைத்தான் ஏற்படுத்தும். இதை எப்படி ஏற்றுக்கொள்வது?

இதை தடுப்பதற்கான நடைமுறைகளை நிச்சயம் உருவாக்க வேண்டும்'' என்றார் தேவநேயன்.

நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்

கட்சிகளின் தேர்தல் பிரச்சாரக் களங்களில் குழந்தைகள் சுரண்டப்படுவது குறித்து சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி பிரகாஷை 'இந்து தமிழ் திசை’ சார்பாக தொடர்பு கொண்டேன்.

''இதுபற்றி தகவல் ஏதும் தேர்தல் ஆணையத்துக்கு இதுவரை வரவில்லை. தகவல் அளித்தால் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நிச்சயம் நடவடிக்கைகளை எடுப்போம்'' என்று பிரகாஷ் உறுதியளித்திருக்கிறார்.

 

 

பிரச்சாரங்களில் குழந்தைகள் பங்கேற்பதைத் தடுப்பது வெறும் தேர்தல் ஆணையத்தின் பணியாக மட்டும் விட்டுவிடாமல், குழந்தைகளின் உரிமைகளைச் சுரண்டும்  இதுபோன்ற செயல்களுக்கு எதிராகவும் இனிவரும் தேர்தல்களில் இது நிச்சயம் தவிர்க்கப்படும் என்று அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலுவான குரலைப் பதிவு செய்ய வேண்டும் என்பதே குழந்தைகள் நலனை விரும்பும் பலரது கோரிக்கை.

இது குழந்தைகளுக்கான அரசு என்பதையும் உணர்ந்து  செயல்படுவார்களா அரசியல் கட்சித் தலைவர்கள்?

தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x