Published : 16 Apr 2019 05:49 PM
Last Updated : 16 Apr 2019 05:49 PM

தரக்குறைவாகப் பேசும் பழக்கம் எனக்கில்லை; தலைமைப் பதவிக்கு வரக்கூடிய தகுதியே எனக்கு இன்னும் வரவில்லை:  உதயநிதி தடாலடி பேட்டி

''தரக்குறைவாகப் பேசும் பழக்கம் எனக்கில்லை. தலைமைப் பதவிக்கு வரக்கூடிய தகுதியே எனக்கு இன்னும் வரவில்லை''... இறுதிக்கட்டப் பிரச்சாரத்தில் சுற்றிச் சுழன்று கொண்டிருந்த உதயநிதி சொன்ன வார்த்தைகள் இவை.

சூறாவளிப் பிரச்சாரத்துக்கு இடையே சில நிமிடங்கள் இடைவெளி விட்டவரை இந்து தமிழ் திசை இணையதளப் பேட்டிக்காக சந்தித்தோம்.

இத்தனை நாட்களாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தவர், திடீரென தொடர் பிரச்சாரங்களில் ஈடுபடுவது ஏன்?

முன்பு துறைமுகம் தொகுதியில் தாத்தாவுக்கு, ஆயிரம் விளக்கு தொகுதியில் அப்பாவுக்கு, மத்திய சென்னையில் தயாநிதி மாறனுக்கு, மேயர் தேர்தலில் அப்பாவுக்கு என தொடர்ச்சியாக வாக்கு சேகரித்திருக்கிறேன். சமீபத்தில் திமுக சார்பில் கிராமசபைக் கூட்டம் நடத்தினார்கள். அப்போது என்னை 8 கிராமங்களில் நடத்தச் சொன்னார்கள். அதற்கு நல்ல வரவேற்பு இருந்தது. கலைஞருடைய பேரன் என்று அன்பாகப் பேசினார்கள். தெரிந்த முகம் என்று வந்தவர்கள் 10%  இருக்கும். முக்கியமாக கலைஞர் பேரன் என்று வந்தவர்கள் தான் அதிகம். மேலும், பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் என கலந்து கொண்டுள்ளேன். அப்போது கிடைத்த உற்சாகம் என எல்லாம் சேர்த்துதான் இந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிரச்சாரம் செய்யலாம் என முடிவு பண்ணினேன். அப்பாவும் ஒரு தொகுதியில் உள்ள அனைத்து இடங்களும் செல்ல முடியாது.  நான் அப்பா செல்லாத இடங்களுக்குச் சென்று மக்களைச் சந்தித்தேன்.

பிரச்சாரக் களத்தில் தமிழக மக்களிடம் உங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பு இருந்தது?

ரொம்ப மகிழ்ச்சியுடன் பார்க்கிறார்கள். திமுக ஜெயிச்சாச்சுன்னு வைச்சுக்கோங்க தம்பி.. கிளம்புங்க என்று சொல்கிறார்கள். முக்கியமாக மத்திய ஆட்சி மீதும், மாநில ஆட்சி மீது மக்களுடைய கோபத்தைப் பார்த்தேன். வேலைவாய்ப்பு, பணமதிப்பு இழப்பு, ஜி.எஸ்.டி, புயல் வந்த போது தமிழகத்துக்கு வராதது என பிரதமர் மோடி மீது தான் கோபம் அதிகமாக இருக்கிறது. ஆனால், இப்போது தேர்தல் என்றவுடன் பிரச்சாரத்துக்கு வருவது எல்லாமே மக்களுக்குத் தெரிந்திருக்கிறது. அதிமுக பிரிந்த போது, பஞ்சாயத்து பேசி பிரதமர் மோடி தான் சேர்த்து வைக்கிறார் என்பதை சமூக வலைதளங்கள் மூலமாக உடனுக்குடன் தெரிந்துவிடுகிறது.

திடீரென பரப்புரைகளில்  மற்ற கட்சியினரை கடுமையாக விமர்சனம் செய்வது எப்படி?

நான் யாரை விமர்சனம் செய்தேன். 'டயர்நக்கி' என்று நான் சொல்லவில்லை. அன்புமணி ராமதாஸ்  ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ்ஸைப் பார்த்துச் சொன்னதை நான் குறிப்பிட்டேன். யாரையும் தரக்குறைவாகப் பேசும் பழக்கம் எனக்கில்லை. அன்புமணி ராமதாஸிடம் தான் ஏன் டயர்நக்கி என்று சொன்னீர்கள் என கேட்க வேண்டும். என்னிடம் அல்ல.

பொறிபறக்கும் பேச்சாளர்களுக்கென்றே பெயர் பெற்ற கட்சி திமுக. அவர்களுக்கு மத்தியில் உங்களை நீங்கள் எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்?

எனக்குத் தெரிந்ததைப் பேசுகிறேன். அனைத்து நட்சத்திரப் பேச்சாளர்களுமே அவர்களுக்கு இட்ட பணிகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். என்னுடைய பேச்சு எதுகை மோனையாக இல்லாமல், மக்களுடன் விவாதம் மாதிரி மாற்றிப் பேசுகிறேன். அது மக்களுக்குப் பிடித்திருக்கிறது. மற்ற பேச்சாளர்கள் எல்லாம் பேச வேண்டியதைப் பேசிவிட்டு போய்விடுவார்கள். நீங்கள் ஒருவர் தான் எங்களையும் பேசவைத்துக் கேட்கிறீர்கள் என பல இடங்களில் மக்கள் பாராட்டினார்கள்.

எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக கலைஞரின் பேரன் என்பதால் அரசியலுக்கு வந்துவிட்டார் என்கிறார்கள். இதற்கு உங்களுடைய பதில் என்ன?

பிறந்ததிலிருந்தே அரசியலில் தான் இருக்கிறேன். நான் திமுககாரன் இல்லை என்று சொல்ல இவர்கள் யார்?. கலைஞருடைய பேரன் என்பது மட்டுமே தகுதி கிடையாது. கலைஞருடைய பேரன் நிறையப் பேர் இருக்கிறார்கள். அதற்கான உழைப்பு, அர்ப்பணிப்பு உள்ளிட்டவை இருக்கணும். கட்சியின் கொள்கைகளை மக்கள்கிட்ட போய் எடுத்துச் சொல்லணும். எனக்கு என்ன திமுகவில் பதவி கொடுத்துவிட்டார்களா என்ன? நான் ஊர் ஊரா போய் ஓட்டு கேட்டுட்டு இருக்கேன். கலைஞருடைய பேரன் என்பதால் எனக்கு ஸ்பெஷல் சலுகைகள் எதுவும் திமுகவில் கொடுத்துவிட்டார்களா?. கலைஞருடைய பேரன் என்பது மக்களிடம் போய் ரீச்சாக முடிகிறது. அதைப் பார்த்து பலருக்கும் வயித்தெரிச்சல். அதனால் இப்படி பழிச்சொல் சொல்கிறார்கள். அதெல்லாம் கேட்டுட்டு இருந்தால், நம்மால் வேலை பார்க்க முடியுமா?

இந்த  நாடாளுமன்றத் தேர்தலில் முழு வீச்சாகப் பிரச்சாரத்தில் களமிறங்கி இருக்கிறீர்கள். கலைஞரின் பேரனாக அல்லாமல் உதயநிதியாக நீங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளீர்களா?

அது மே 23-ம் தேதி வரவுள்ள தேர்தல் ரிசல்ட்டைப் பார்த்து தானே சொல்ல முடியும். போன இடத்தில் எல்லாம் நல்ல வரவேற்பு இருந்தது. அது வாக்காக மாறியதா என்பதை மே 23-ம் தேதி தெரியும். இந்த முறை திமுக கண்டிப்பாக வெற்றி பெறும் என்று அபார நம்பிக்கை இருக்கிறது

பொதுவாக மக்களைப் பாதிக்கும் முக்கியப் பிரச்சினைகளாக நீங்கள் எதைக் கருதுகிறீர்கள்? மக்கள் பிரச்சினையைப் பேசாமல்  எதிர் வேட்பாளர்களைக் குறிவைத்துப் பேசுவது பலன் அளிக்குமா?

நாடாளுமன்றத் தேர்தல் என்பதால் நீட் தேர்வு, அனிதா தற்கொலை, ஜிஎஸ்டி திணிப்பு, பணமதிப்பு இழப்பு என மத்திய அரசால் வந்த தீமைகளைச் சொன்னேன். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓபிஎஸ் இருவருமே எப்படி முதல்வர், துணை முதல்வர் பதவிக்கு வந்தார்கள் என்பதைச் சொன்னேன். மோடியின் கன்ட்ரோலில் தான் இருவருமே இயங்குகிறார்கள் உள்ளிட்ட உண்மைகளைத் தான் பேசினேன். யாரையுமே தரக்குறைவாகவோ, குறிவைத்தோ பேசவில்லை. எங்கள் கூட்டணி கட்சிகளுடைய தேர்தல் அறிக்கையில் உள்ள லாபத்தைப் பேசினேன்.

ஒவ்வொரு தொகுதிக்கும் செல்லும் போது, அங்குள்ள பிரச்சினைகள் மற்றும் மாநில அரசு செய்யாமல் விட்ட பணிகள் உள்ளிட்டவற்றை மட்டுமே கேட்டுத் தெரிந்து கொள்வேன். மற்றவை அனைத்துமே நானே பேசிவிடுகிறேன். சென்னையில் பிரச்சாரம் செய்யும் போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் பற்றி பேசு என்கிறார்கள். இன்றைய மக்களுக்கு அனைத்து ஏரியா பிரச்சினைகளும் தெரிந்துள்ளது.

சினிமா நடிகர் என்பதால் கூட்டம் கூடுகிறது என்கிறார்களே...

சினிமா நடிகர் என்பதால் வந்த கூட்டம் மாதிரி தெரியவில்லை. நான் போனது எல்லாமே கிராமங்கள், குக்கிராமங்கள். என் பேச்சைக் கேட்க வந்தவர்களில் பலர் 60 வயதைத் தாண்டியவர்கள். அவர்கள் சினிமா பார்க்கும் கூட்டம் அல்ல. 10% வேண்டுமானால் சினிமா நடிகர் என்பதால் வந்த கூட்டமாக

இருக்கலாம். அதிமுகவிலிருந்தும் நிறையப் பேர் பிரச்சாரத்துக்கு செல்கிறார்களே? அவர்களுக்கும் கூட்டம் கூட வேண்டுமே.. ஏன் கூடவில்லை?

நீங்கள் சட்டப்பேரவை தேர்தலில் நிற்பதற்கான வெள்ளோட்டமாக பிரச்சாரக் களத்தைப்  பயன்படுத்திக் கொள்கிறீர்களா?

பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான நேரம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். 20 வருடங்களாக இதையே சொல்கிறார்கள். நான் என் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

மூன்றாம் கலைஞர் என்ற அடைமொழி உங்களுக்குக் கூச்சத்தை ஏற்படுத்துகிறதா?

எப்போதுமே கலைஞர் ஒருவர் தான். அவருக்கு ஈடு இணை யாருமே கிடையாது. அவர் ஒரு சகாப்தம். சிலர் ஆர்வக் கோளாறில், என் மீதுள்ள அன்பில் போட்டுவிடுகிறார்கள். பலரையும் கூப்பிட்டுத் திட்டுகிறேன். எதிரணியில் இருப்பவர்கள் வேறு எந்தவொரு வழியிலும் என்னைக் குறை சொல்ல முடியாமல் இதைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். மூன்றாம் கலைஞர் என்று ஒட்டிய போஸ்டர்களை எல்லாம் நான் போய் உட்கார்ந்து கிழித்துக் கொண்டிருக்க முடியுமா? அழைத்து திட்டத்தான் முடியும்.

சினிமா போல பிரச்சாரக் களத்துக்கும் ரிகர்சல் பார்த்தீர்களா?

பிரச்சாரம் என்ன சினிமா ஷூட்டிங்கா?. சினிமா என்றால் எத்தனை ஒன் மோர் வேண்டுமானாலும் போய்க்கொள்ளலாம். இங்கு உச்சி வெயிலில் மக்களைப் போய் சந்திக்கிறேன். அந்தந்த மாவட்டத்துக்குப் போகும் போது, மாவட்டச் செயலாளரிடம் போய் தெரிந்து கொள்வேன். அதற்கு தகுந்தாற் போய் அந்தத் தொகுதியில் பேசுவேன்.

வாரிசு அரசியல் என்று திமுகவை விமர்சிப்பவர்களுக்கு உங்களுடைய பதிலடி என்ன?

தலைவரையே இன்னும் வாரிசு அரசியல் என்று புதிதாக அரசியலுக்கு வந்திருப்பவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். புதிதாக அரசியலுக்கு வந்திருப்பவருக்கு தலைவரைப் பற்றி தெரியவில்லை போல. அப்பாவுக்கே இந்த நிலை என்றால், என்னையும் பேசத்தான் செய்வார்கள். தேனிக்கு வந்து மோடி பிரச்சாரம் செய்த போது, 'வாரிசு அரசியலை ஒழிப்போம்' என்று பேசினார். அப்போது மேடையிலிருந்த வேட்பாளர் துணை முதல்வர் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத். இதை என்னவென்று சொல்வது?. இன்னொரு விஷயம், அமைச்சர் ஜெயக்குமார் எல்லாம் பேசவே கூடாது. அவருடைய மகன்  தென்சென்னை  வேட்பாளர் ஜெயவர்தன்.

வாரிசு அரசியல் குறித்த கேள்வி வரும்போது, கட்சியில் இருக்கும் வாரிசுகள் ஏன் வரக்கூடாது என்ற வாதம் தற்போது சாதாரணமாக வைக்கப்படுகிறது.  கட்சிகளில் உயர் மட்டத்திலிருப்பவர்கள் பிள்ளைகள்தானே வர முடிகிறது?

கண்டிப்பாக. கடினமான உழைப்பு இருந்தால் வரமுடியும். கட்சிகளுக்கு அவர்களுடைய உழைப்பு, வெற்றிவாய்ப்பு இதெல்லாம் தான் வேட்பாளரைத் தேர்வு செய்ய வைக்கிறது. அவர்களுக்கு எல்லாம் கட்சியில் எந்தவொரு பதிவியும் கொடுக்கப்படவில்லை. முதலில் மக்களவைத் தேர்தலில் மக்களைs சந்தித்து ஓட்டு வாங்கி ஜெயித்துவிட்டு வாருங்கள். மக்கள் முடிவு பண்ணட்டும். இதைத் தான் தலைவர் ஸ்டாலினும்  'தகுதியைப் பாருங்கள். ரத்தப் பரிசோதனை எல்லாம் பண்ணாதீர்கள்' என்று சொல்லியிருக்கிறார்.

திராவிட இயக்கத்துக்கென திரையுலகில் இயக்குநர்கள், கதாநாயகர்கள் இல்லாத இந்த இடைவெளியை ஏன் நீங்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை?  சினிமாவை வணிகத்துக்காக மட்டுமே நீங்கள் பயன்படுத்திக் கொண்டது ஏன்?

நான் சினிமாவை எதற்குமே பயன்படுத்திக் கொள்ளவில்லை. படம் நடிக்க வந்ததே ஒரு விபத்து தான். முதல் படம் நல்ல வெற்றி. தொடர்ச்சியாக படங்கள் பண்ணினேன். சில படங்கள் நஷ்டமும் ஆகியிருக்கு, லாபமும் வந்திருக்கு. சினிமாவை சினிமாவாக பார்த்தேன். நல்ல படங்கள் பண்ணனும்னு நினைத்தேன். கருத்துள்ள படங்கள் பண்ணனும் என்று கையைச் சுட்டுக்கிட்டது தான் பலன். நல்ல படங்கள் பண்ணும் போது ஒரு மனத்திருப்தி கிடைக்கிறது. அரசியலுக்கு வந்துவிட்டாலும், தொடர்ச்சியாக படங்கள் பண்ணுவேன். ஆனால், குறைவாக...! சினிமாவில் கட்சியுடைய கொள்கைகளை திணிக்கக் கூடாது என நினைக்கிறேன். இப்போது அதை மக்கள் விரும்புவதில்லை.

தலைமைப் பதவிக்கு வரும் வாய்ப்புள்ள உங்களிடம் மக்கள் எதை எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?

தலைமைப் பதவிக்கு வரக்கூடிய தகுதியே எனக்கு இன்னும் வரவில்லை. அந்தத் தகுதியை வளர்த்துக் கொண்டிருக்கிறேன்.

கலைஞர், ஸ்டாலின், உதயநிதி இவர்களிடையே உள்ள ஒற்றுமை வேற்றுமைகள் மூன்றைச் சொல்ல முடியுமா?

அவர்களுடன் முதலில் என்னை ஒப்பிடுவதே தவறு. தாத்தாவுடன் அப்பாவை ஒப்பிடுவதும் தவறு, இருவருடன் என்னை ஒப்பிடுவது மிகப்பெரிய தவறு. இருவருமே பெரிய சகாப்தங்கள். இருவருமே உழைத்து வளர்ந்தவர்கள். நான் இப்போது தான் முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன்.

அதிமுக ஆட்சியின் ஐம்பெரும் சாதனைகள், வேதனைகள் என்னென்ன? பட்டியிலிடுங்கள்

ஒரு சாதனையுமில்லை. ஜெயலலிதா  எப்படி இறந்தார் என்பதே இன்னும் தெரியாமல் இருப்பது மட்டுமே சாதனை.

கலைஞர் பிரச்சாரம் இல்லாத முதல் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம். உணர்வுரீதியாக எப்படிப் பார்க்கிறீர்கள்?

கண்டிப்பாக அது ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவர் மறைந்தவுடன் அவருக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மக்கள் மறந்துவிடவில்லை. இந்த அதிமுக அரசு அவருக்கு மெரினாவில் இடம் கொடுக்கக் கூடாது என்று என்னவெல்லாம் சதி செய்தார்கள் என்பதை மக்கள் ஞாபகம் வைத்துள்ளனர். இதற்கு பதிலடியாக மே 23-ம் அன்று வரவுள்ள தேர்தல் வெற்றி இருக்கும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x