Published : 11 Mar 2019 05:03 PM
Last Updated : 11 Mar 2019 05:03 PM

இந்திய நீதித்துறையில் பாலின சமத்துவம் நிலவுகிறதா?

இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்திற்கு சரியாக ஒருநாள் முன்பு, மார்ச் 7-ம் தேதி இந்தியாவின் தலைமை நீதிமன்றமான உச்ச நீதிமன்றத்தில், ஒரு சம்பவம் நடைபெற்றது. அச்சம்பவம், 2019-லும் ஒரு பெண் பொதுச் சமூகத்தில் எப்படி அறியப்படுகிறார், எதன்பொருட்டு, யாரின் பெயரால், முன்னிறுத்தப்படுகிறார் என்பதை உணர்த்துவது போன்று அமைந்தது.

என்ன நடந்தது?

சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஸ்வர ராவ் நியமிக்கப்பட்டது குறித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்தை அவமதித்து விட்டதாக, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீது, அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும், மத்திய அரசும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்திருந்தன.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா மற்றும் நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில், பிரசாந்த் பூஷன் தரப்பில் ஒரு மனுதாரராக மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் தம்மை இணைத்துக் கொண்டார். இந்திரா ஜெய்சிங் தரப்பில் வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் ஆஜரானார். (ஆனந்த் குரோவர், இந்திரா ஜெய்சிங்கின் கணவர். புரிதலுக்காக).

அப்போது வழக்கறிஞர் ஆனந்த் குரோவர் தாம் இந்திரா ஜெய்சிங் சார்பில் வாதாடுவதாக நீதிபதியிடம் தெரிவித்தார். இதனை சரியாக உள்வாங்கிக் கொள்ளாத நீதிபதி அருண் மிஸ்ரா, "வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங் அல்லவே?" எனக் கேட்டார். அதற்கு, எதிர் தரப்பில் இருந்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், ஆனந்த் குரோவரிடம் "உங்கள் மனைவி என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதனால், எரிச்சலடைந்த இந்திரா ஜெய்சிங், "மிஸ்டர் அட்டர்னி, உங்கள் வார்த்தைகளை திரும்பப் பெறுங்கள். என் வேலைகளுக்காக/சொந்த உரிமைகளுக்காக அறியப்படுகின்ற நபர் நான். நாங்கள் இவருடைய மனைவி/கணவர் என்று அறியப்படுவதில்லை. அதனால் தான் நாங்கள் எங்களின் துணைப் பெயரைக் கூட மாற்றிக்கொள்ளக் கூடாது என முடிவெடுத்தோம். மிஸ்டர் அட்டர்னி, என்னை வழக்கறிஞராகப் பாருங்கள். யார் எனக்காக வாதாட வேண்டும் என தேர்ந்தெடுப்பது என்னுடைய விருப்பம்" எனத் தெரிவித்தார்.

அட்டர்னி ஜெனரல் கருத்துக்கு இந்திரா ஜெய்சிங் உடனடியாக எதிர்வினையாற்றினார். இருப்பினும், கடுமையாக நடந்துகொண்டதாக அட்டர்னி ஜெனரலிடம் மன்னிப்பு கோரினார் இந்திரா ஜெய்சிங். பதிலுக்கு, கே.கே.வேணுகோபாலும், இந்திரா ஜெய்சிங்கை 'சிறந்த வழக்கறிஞர்' என்று கூறி மரியாதையை வெளிப்படுத்தினார்.

இந்திரா ஜெய்சிங் மூத்த வழக்கறிஞர் மட்டுமல்ல, பெண்ணுரிமை, மனித உரிமைச் செயற்பாட்டாளரும் கூட. இந்தியாவின் முதல் பெண் சொலிசிட்டர் ஜெனரல். பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், மனித உரிமை மீறல் இவற்றுக்கு எதிராக நீதியின் குரலாக ஒலித்துக் கொண்டிருப்பவர் இந்திரா ஜெய்சிங். பார்ச்சூன் (fortune) இதழால் வெளியிடப்பட்ட உலகின் 50 சிறந்த தலைவர்களுள் 20-வது இடத்தை வகிப்பவர். 1980களிலிருந்து வழக்கறிஞராக உள்ள ஜெய்சிங், "என்னை வழக்கறிஞராக பாருங்கள்" என, அட்டர்னி ஜெனரலிடம் கூறுவது பெண்ணுரிமை குறித்தும், இந்திய நீதித்துறையில் பெண்கள் குறித்தும் பல கேள்விகளை  எழுப்பியுள்ளது.

இந்தச் சம்பவம் நடந்த மறுநாள், மகளிர் தினத்தையொட்டி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இந்திரா ஜெய்சிங் கடிதம் எழுதினார். அதில், நீதித்துறையில்  பாலினப் பாகுபாடு எந்தளவுக்கு பரவியுள்ளது என்பதை உணர்த்தியுள்ளார். அந்தக் கடிதத்தின் சாராம்சத்தை சுருக்கமாக அறிந்துகொள்வது அவசியமாகிறது.

"ஒரு வழக்கறிஞராக நான் எத்தனையோ முறை நீதிமன்றத்தில் ஆணாதிக்க சிந்தனை கொண்ட வார்த்தைகளை எதிர்கொண்டுள்ளேன். அப்போதெல்லாம் நீதிமன்றம் எதிர்வினையாற்றியதில்லை. சமீபத்தில் நான் வழக்கறிஞர் என்று அழைக்கப்படாமல், இன்னாரின் 'மனைவி' என அழைக்கப்பட்டேன். அப்போது நீதிபதி எதிர்வினையாற்றவில்லை. அது ஆணாதிக்க சிந்தனையுடன் சொல்லப்பட்டது எனக் குறிப்பிடப்படவில்லை.

உரிமைக்காகவோ சமத்துவத்திற்காகவோ போராடும்போது, போராடுபவர்களையே பாதிக்கப்பட்டவர் போன்றோ, அல்லது அவர்கள் தாங்கிக்கொள்ள வேண்டும் என்பது போன்றோ பார்க்கும் மனநிலை உள்ளது.  ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் நடைக்கூடத்தில் வைத்து நான் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்பதைப் பதிவு செய்துள்ளேன். 50 ஆண்டுகாலம் வழக்கறிஞராக இருக்கும் நான், ஆண்கள் அதிகமாக உள்ள இந்தத் துறையில் எந்த முன்னேற்றத்தையும் காணவில்லை. நீதித்துறையில் பெண்கள் அதிக அளவில் வந்தாலும், குறிப்பாக யாருடைய மனைவியாகவோ மகளாகவோ அரசியல் பின்புலத்தில் இருந்து வந்தாலேயன்றி பொதுத்தளத்தில் மற்றவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள்" என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்திய நீதித்துறையில் பெண் வழக்கறிஞர்கள், நீதிபதிகள் எப்படி அனுகப்படுகிறார்கள் என்பது குறித்து உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கிருபா முனுசாமியிடம் பேசினோம்.

"ஒரு வழக்கறிஞராக இந்திரா ஜெய்சிங்குக்கு இல்லாத தகுதி, ஒருவரின் மனைவியாக இருக்கும்போது கிடைப்பதாக நினைக்கும் ஆண்மயச் சிந்தனையின் வெளிப்பாடுதான் இது. பெண்களின் பிரச்சினையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளும் மனநிலை இங்கு இல்லை. அட்டர்னி ஜெனரல் இந்தக் கருத்தைச் சொல்லிவிட்டு அடுத்த வழக்குகளுக்கு எளிதில் நகர்ந்துவிட முடியும். அதனால், அவருக்கு என்ன பாதிப்பு? ஆக, பெண்கள் சமமாக நடத்தப்படாததால் ஆண்களுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் தான் எதிர்வினை ஆற்றுவார்கள். இல்லையென்றால், இது தனிநபர் பிரச்சினையாகத் தான் பார்க்கப்படும். அதுவரை இதனை பாலியல் பாகுபாடு என ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்றார், கிருபா முனுசாமி.

இத்தகைய பாகுபாடுகளை தாமும் நிறைய சந்தித்துள்ளதாகத் தெரிவிக்கிறார் கிருபா முனுசாமி.

"இந்திய நீதித்துறையே பொதுவாக ஆண்மயப்படுத்தப்பட்டது தான். சென்னை உயர் நீதிமன்றத்தில் திருநங்கைகள் உரிமை தொடர்பான வழக்கு ஒன்றில் நான் வாதாடினேன். அப்போது, என் வாதத்தைக் கேட்காமல், நீதிபதி அங்கிருந்த மூத்த வழக்கறிஞர்களை குறிப்பாக ஆண் வழக்கறிஞர்களை அழைத்து வழக்கு தொடர்பாக கருத்து கேட்டார்.

உச்ச நீதிமன்றத்தில் ஒருநாள் நான் ப்ரீ ஹேரில் (free hair) சென்றுவிட்டேன். அதற்கு நீதிமன்ற அறையிலேயே நீதிபதி, "உங்கள் வாதத்தை விட உங்கள் சிகை அலங்காரம் தான் என்னைக் கவர்கிறது. இப்படி வருவதை நான் விரும்ப மாட்டேன்" என்றார். அதற்கு நான், இப்படி வரக்கூடாது என பார் கவுன்சில் விதிகளில் இல்லையே எனக் கூறினேன். அதற்கு அவர் தன்னுடைய விருப்பத்தைக் கூறியதாகத் தெரிவித்தார்.

அதேபோன்று, உச்ச நீதிமன்றத்தில் ஜூனியர் வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் ஒருவரிடம் பணியாற்றியபோது மாதவிடாய் வயிற்றுவலி காரணமாக அவரிடம் ஒருநாள் விடுப்பு கேட்டேன். அதற்கு, "இதற்குத்தான் நான் பெண்களை ஜூனியராக பணிக்கு வைப்பதில்லை. இப்படி மாதம் மாதம் விடுப்பு கேட்பீர்கள். நீ வீட்டில் மாப்பிள்ளை பார்க்கச் சொல்லி கல்யாணம் செய்துகொள்" என்றார். அதன்பிறகு நான் ஒரு மாதத்தில் அவரிடம் பணியிலிருந்து விலகிக்கொண்டேன். இப்படிப்பட்ட கருத்துகளால் எத்தகைய விளைவு ஏற்படும் என்பது கூட அவர்களுக்குத் தெரியவில்லை.", என்கிறார் கிருபா முனுசாமி.

இந்திய உச்ச நீதிமன்றத்தில் 3 நீதிபதிகள் தான் பெண் நீதிபதிகள். "ஆனால், அமெரிக்காவில் 9 நீதிபதிகள் என்றால், மூன்று நீதிபதிகள் பெண்கள். அவர்களின் நீதித்துறை அமைப்பே, பெண்கள், கறுப்பினர் என அனைவரையும் உள்ளடக்கி பன்முகத்தன்மை வாய்ந்ததாக உள்ளது. ஆனால், இந்திய நீதித்துறையில் அத்தகைய பன்முகத் தன்மையே கிடையாது. நெதர்லாந்தில் அதிகப்படியாக பெண் நீதிபதிகள் இருப்பதால், சிறிது காலத்திற்கு பெண்களை நீதிபதிகளாக பணியமர்த்தக் கூடாது என்ற நிலைமை உள்ளது. இவற்றுடன் ஒப்பிட்டால் இந்தியா மிகவும் பின்தங்கியுள்ளது.

அமிக்கஸ் க்யூரி (amicus curiae) என்று ஒன்று உள்ளது. சட்ட ரீதியாக சிக்கல் உள்ள வழக்குகளில் நீதிமன்றத்திற்கு ஆலோசனைகள் வழங்க வழக்கறிஞர் ஒருவரை நீதிமன்றம் நியமிக்கும். அதிலும், பெண் வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவது குறைவு தான்.

பொதுமக்கள் மனநிலையும் மாறவில்லை.  குற்ற வழக்குகளில் "உங்களுக்கு தெரிந்த ஆண் வழக்கறிஞர் யாராவது சொல்லுங்கள்" என்று தான் கேட்பார்கள். சொத்துப் பிரச்சினைக்குக் கூட பெண் வழக்கறிஞரிடம் வர மாட்டார்கள்" என்கிறார், வழக்கறிஞர் கிருபா.

இத்தகைய ஆண்மயச் சிந்தனையுடன் நீதிபதிகளோ வழக்கறிஞர்களோ வழக்குகளை அணுகுவதால் எத்தகைய விளைவு ஏற்படும் என்று விளக்குகிறார் கிருபா முனுசாமி.

"இதே ஆண்மயச் சிந்தனையுடன் வழக்குகளை அணுகுவதால் தான் பெண்களுக்கு எதிரான கருத்துகளையோ, தீர்ப்பையோ நீதிபதிகள் சொல்கிறார்கள். வரதட்சணை தடுப்புச் சட்டம் வருவதற்கு ஒரு பெண்ணின் போராட்டம் இருந்திருக்கிறது. ஆனால், "வரதட்சணை தடுப்புச் சட்டத்தை பெண்கள் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்" என உச்ச நீதிமன்ற நீதிபதியால் எளிதில் சொல்ல முடிகிறது. அதேபோன்று பஞ்சாபில் சட்டக் கல்லூரி மாணவி, நண்பர்களுடன் கேளிக்கை விருந்துக்கு சென்றபோது தன்னை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்ததாக தொடுத்த வழக்கில், நீதிபதி பாதிக்கப்பட்ட அந்த பெண்ணின் ஒழுக்கம் குறித்து கேள்வி எழுப்புகிறார்.

பாலியல் வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்களையே நீதிமன்றத்தில் குற்றம் சுமத்துவது நிறைய நடக்கிறது. ஏனென்றால், சமூகத்தில் உள்ள அதே ஆணாதிக்கச் சிந்தனையுடன் தானே நீதிபதிகளும் வருகிறார்கள். பாலியல் வன்கொடுமைகள், விவாகரத்து போன்ற வழக்குகளில் ஒரு பெண்ணின் பார்வையில் அணுகுவதற்கு பெண் நீதிபதியோ வழக்கறிஞரோ இருக்க வேண்டும். மாவட்ட அளவிலான மகளிர் நீதிமன்றங்களில் தான் பெண் வழக்கறிஞர்கள் அதிகம் உள்ளனர். உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் அத்தகைய நிலைமை இல்லை. அத்தகைய வழக்குகளைக் கையாளும் அமர்வில் பெண் நீதிபதி இருக்க வேண்டும்.

நான் எல்லா ஆண்களையும் குறை சொல்லவில்லை. உதாரணத்திற்கு, சபரிமலை தீர்ப்பில், ஆண் நீதிபதிகள் பெண்களுக்கு சார்பாக தீர்ப்பு வழங்கியபோது, பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்" எனக் கூறுகிறார் கிருபா முனுசாமி.

இத்தகைய நிலைமை மாற, வழக்கறிஞர்கள், நீதிபதிகளுக்கு, பாலினம் குறித்த புரிதலோடு வழக்குகளை அணுகுவது பற்றி பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் கிருபா.

அதேபோன்று இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சென்னை உயர் நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் சுதா ராமலிங்கம், "எல்லா துறைகளிலும் எப்படி ஆணாதிக்கம் இருக்கிறதோ, அதேபோன்று தான் நீதித்துறையிலும் இருக்கிறது. பெரிய வித்தியாசம் இல்லை. பெண்களை ஒருமையில் பேசுவதோ, பெண் வழக்கறிஞர்கள் தவறாக ஏதேனும் சொன்னால் அதை பெரிதுபடுத்துவதோ நடக்கிறது.

பெண் வழக்கறிஞர்கள் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள ஆண்களை விடக் கூடுதலாக வேலை செய்ய வேண்டியுள்ளது. ஆனால், நியாயமாகப் பார்த்தால் நீதித்துறையில் இத்தகைய பாலினப் பாகுபாடு இருக்கக் கூடாது. அரசியலமைப்புச் சட்டம் ஆணும் பெண்ணும் சமம் என்கிறது. அந்த சமத்துவம் வந்துவிட்டதா என்றால், இன்னும் முழுமையாக வரவில்லை. குரலை உயர்த்தக் கூடாது, அமைதியாகப் பேச வேண்டும் என பெண் வழக்கறிஞர்களிடம் சொல்வார்கள். நிச்சயம் பாகுபாடு உள்ளது. முன்பு, மொத்தமாக ஆண்கள் தான் நீதித்துறையில் இருப்பார்கள். இப்போது பெண்கள் வரத் தொடங்கியுள்ளனர். அரசு வழக்கறிஞர்களாக பெண்கள் வர வேண்டும். நமது கல்வி முறையில், வளர்ப்பு முறையில் மாற்றம் வர வேண்டும். இதை விவாதப் பொருளாக்க வேண்டும்", என்றார் சுதா ராமலிங்கம்

இந்திரா ஜெய்சிங் தலைமை நீதிபதிக்கு எழுதிய கடிதத்திலும் நீதித்துறையில் கொண்டு வர வேண்டிய மாற்றங்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் முக்கியமானவை:

"வழக்கறிஞர்கள், நீதிபதிகள், நீதிமன்றத்திலோ, வெளியிலோ தாங்கள் பேசுவதை உணர்ந்து, பாலினப் பாகுபாடு அன்றி கவனத்துடன் பேச வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நீதிமன்றங்களில் குழந்தைகள் காப்பகம், கழிப்பறைகள் ஆகியவற்றுடன் பெண்கள் மரியாதையுடனும் பாதுகாப்புடனும் வேலை செய்வதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டும். தீர்ப்புகளில் பாலினப் பாகுபாடு, ஆணாதிக்கம் கொண்ட வார்த்தைகள், சொல்லாடல்கள் இருப்பதைக் கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைக்க வேண்டும்".

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x