Last Updated : 28 Mar, 2019 05:03 PM

 

Published : 28 Mar 2019 05:03 PM
Last Updated : 28 Mar 2019 05:03 PM

கொங்கு மண்டலம் அதிமுகவுக்கு என்பதெல்லாம் அப்போது; பணநாயகம் இந்தத் தேர்தலில் பலத்த அடி வாங்கும்: திருப்பூர் வேட்பாளர் கே.சுப்பராயன் பேட்டி

கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்பதெல்லாம் அப்போது; பணநாயகம் இந்தத் தேர்தலில் பலத்த அடி வாங்கும் எனக் கூறுகிறார் திருப்பூரில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன்.

பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிச்செட்டிப்பாளையம், திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கியது திருப்பூர் மக்களவைத் தொகுதி. கோவைக்கும் ஈரோட்டுக்கும் இடையே இருக்கும் திருப்பூர் தொழில்நகரமாக உள்ளது. பின்னலாடை நிறுவனங்களும் அது சார்ந்த பிரச்சினைகளும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பிரச்சினைகளும் பிரதானமாக இருக்கின்றன.

இத்தொகுதியில் அதிமுக சார்பில் எம்.எஸ்.எம்.ஆனந்தன் களமிறக்கப்பட்டுள்ளார். கடந்த முறை சத்யபாமா இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். வேட்புமனுக்கள் பரிசீலனை முடிந்து பிரச்சாரம் பரபரப்பாகியுள்ள நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் கே.சுப்பராயனை அணுகினோம்.

இந்தத் தேர்தலில் உங்கள் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது?

மிகவும் பிரகாசமாக இருக்கிறது. திருப்பூரில் பின்னலாடை தொழில்தான் பிரதானம். அதேபோல் இங்கு 93% வேலைவாய்ப்புக்கள் சிறு, குறு, நடுத்தர தொழில்துறையால்தான் உருவக்கப்படுகிறது. வெறும் 3% வேலைவாய்ப்புகள்தான் பெரிய தொழிற்சாலைகளால் கிடைக்கிறது. ஆனால், மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் இங்கு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

பண மதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மட்டுமல்லாமல் புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரில் இவர்கள் கடைபிடிக்கும் கார்ப்பரேட் ஆதரவு பெரும் பாதிப்பை சிறு,குறு,நடுத்தர தொழில்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு என்ன சொன்னாலும் செய்தாலும் இந்த மாநில அரசு தலை ஆட்டுகிறது. மத்திய, மாநில அரசுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்களின் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.

ஆனால், கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டை என்ற பார்வை நிலவுகிறதே?

அதெல்லாம் அந்தக் காலம். இப்போது மாநில அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொள்ளாச்சி சம்பவம் வேறு கிராமங்கள் வரை அதிர்வை ஏற்படுத்தியிருக்கிறது.

அப்போது அதிமுகவில் ஜெயலலிதா தலைமை இருந்தது. அவர் மறைந்துவிட்டார். கட்சியும் இரண்டாகிவிட்டது. இனியும் கொங்கு மண்டலத்தை அதிமுக கோட்டை என்று சொல்ல முடியாது.

களத்தில் கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பு எப்படி இருக்கிறது?

திமுக, காங்கிரஸ், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்கு மக்கள் தேசியக் கட்சி என்று கூட்டணிக் கட்சிகளும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிட கழகம் ஆகிய தோழமை அமைப்புகளும் எங்களுக்கு ஆதரவாக களத்தில் எங்களோடு இணைந்து பணியாற்றுகின்றன. ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கிறது.

கடந்த தேர்தலில் அதிமுக தானே இங்கு வென்றது?

கடந்த தேர்தலில் திமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மட்டுமே கூட்டணியில் இருந்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிக, மதிமுக ஆகிய கட்சிகள் மக்கள் நலக் கூட்டணியில் இருந்தன. காங்கிரஸ் தனித்து போட்டியிட்டது. இப்போது நாங்கள் அனைவரும் ஓரணியில் நிற்கிறோம். கடந்த தேர்தலிலேயே 89 இடங்களை திமுக வென்றது. இந்தத் தேர்தலில் வெற்றி என்பது திருப்பூரில் மட்டுமல்ல 40 நாடாளுமன்றத் தொகுதியிலும் உறுதி.

அதிமுக - பாஜக கூட்டணி குறித்து..

அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகளைப் பாருங்கள் பாஜக, பாமக. பாஜகவின் பொருளாதார கொள்கைகளால் பாதிக்கப்பட்ட திருப்பூர் மக்கள் ஏற்கெனவே அதிருப்தியில் இருக்கின்றனர்.

பாமக ஊழல் அமைச்சர்கள் என்று ஆளுநரிடம் பட்டியல் கொடுத்தது அப்புறம் திராவிட கட்சிகளுடன் கூட்டணி சேர்வதை மிக மோசமான வார்த்தைகளால் விமர்சித்தது. இப்படியான கட்சிகள் சேர்ந்த கூட்டணியை திருப்பூர் மக்கள் அருவருப்புடன்தான் பார்க்கிறார்கள்.

அதிமுக தமிழகத்தில் பல்வேறு ஊழல் புகாரில் சிக்கியுள்ளது. பாஜக மத்தியில் ரஃபேல் ஊழலில் சிக்கியுள்ளது. இந்த இரண்டு ஊழல்களுக்கு சேர்ந்த கூட்டணியாக வாக்காளர்கள் முன் அதிமுக கூட்டணி காட்சியளிக்கிறது.

திருப்பூர் மக்கள் 18-ம் தேதிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். கொங்கு மக்களின் முன்னால் அதிமுக மைனஸாகவும் திமுக கூட்டணி ப்ளஸாகவும் உள்ளது.  தமிழகத்தில் அதிமுகவும் தேசிய அளவில் பாஜகவும் வெற்றி பெற வாய்ப்பே இல்லை. போன முறை எங்கு பார்த்தாலும் மோடி அலை என பேசப்பட்டது. அப்போது கூட வெறும் 31% வாக்குகளையே பாஜகவால் பெற முடிந்தது. எஞ்சிய 69% வாக்குகள் சிதறியதால் ஆட்சி அமைத்துக் கொண்டது. இந்த முறை மோடி அலை இல்லை எதிர்க்கட்சிகள் சிதறியும் இல்லை.

தேர்தலில் பணபலம் இருக்கும் என நினைக்கிறீர்களா?

இந்தத் தேர்தலில் பணநாயகத்துக்கு பலத்த அடி விழும். அடுத்த தேர்தலில் இருந்து வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்க மறுக்கும் சூழல் உருவாகும். அதிமுக சரியான பாடம் கற்றுக் கொள்ளும்.

அவிநாசி - அத்திக்கடவு திட்டம் பற்றி சொல்லுங்கள்..

அவிநாசி - அத்திக்கடவு பாசனத் திட்டம் என்று இப்போது ஆளுங்கட்சி கூறி பிரச்சாரம் செய்வது மோசடி. உண்மையில் இந்த திட்டம் நான் 94-ல் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது கலைஞர் சட்டப்பேரவையில் நிலத்தடி நீர் ஆதார மேம்பாட்டு திட்டம் என்று அறிவித்த திட்டம். அத்திக்கடவு தொடங்கி ஈரோட்டில் உள்ள பாலத்தொழுவு எனும் ஊரில் உள்ள கடைசிக்குட்டை வரை மண் வாய்க்கால் மூலம் நீரைக் கொண்டு செல்லும் திட்டம். பவானியில் இருந்து வரும் உபரி நீரை மண் வாய்க்கால் மூலம் கொண்டு செல்வதால் வழி எங்கும் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தும் திட்டம். ஆனால், இப்போது அதிமுகவினர் சொல்லியிருப்பது குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம். அவர்கள் முன்வைத்துள்ளது மோசடி திட்டம். இந்த மோசடியை மக்களிடம் எடுத்துச் சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்.

சாயக்கழிவு பிரச்சினைக்கு உங்களிடம் என்ன செயல் திட்டம் இருக்கிறது?

தமிழகத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் என்று ஒன்று இருக்கிறது. ஆனால் அது மாசு கட்டுப்பாட்டு வாரியம் அல்ல. லஞ்சம், ஊழலால் மாசடைந்துள்ள வாரியம். சாயப்பட்டறைகளுக்கு அனுமதி கொடுப்பதற்கு முன்னதாகவே எஃப்லுவென்ட் வாட்டர் ட்ரீட்மென்ட் வசதி இருக்கிறதா என்பதை உறுதி செய்துவிட்டல்லவா கொடுக்க வேண்டும். ஆனால், காசை வாங்கிக் கொண்டு எவ்வித சோதனையும் இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டு விடுகின்றன. இத்தகைய தொழிற்சாலைகளால்தான் நொய்ய ஆறு இன்று சீரழிந்துள்ளது.

திருப்பூரில் நடந்த மோடி கூட்டத்துக்கு நல்ல வரவேற்பு இருந்ததே?

அந்தக் கூட்டத்துக்கு அழைத்து வரப்பட்டவர்களில் 30% பேர் பின்னலாடை நிறுவனங்களில் வேலை செய்யும் வெளிமாநிலத்தவர். கூட்டத்தை வைத்து வாக்கை கணக்கிட முடியாது. மேலும், அந்த 30% பேரில் இங்கு வாக்குரிமை கொண்டவர்கள் யார்? பின்னலாடை நிறுவனர்கள் பலரும் ஆர்.எஸ்.எஸ்., பாஜக பின்னணி கொண்டவர்களாக இருக்கின்றனர். இவர்கள் வெளிமாநிலத்தவரை வேலைக்கு அழைத்துவந்து கொத்தடிமைகள் போல் வைத்துள்ளனர். அவர்களுக்கான அடிப்படை வசதிகள்கூட செய்து தரப்படுவதில்லை. சட்டங்கள் இருக்கின்றன. ஆனால் அவை அமல்படுத்தப்படுவதில்லை. மோடி ஆட்சியில் நாடெங்கும் நிலவும் ஒரு விசித்திர உண்மை இது. திருப்பூரில் வெற்றி பெற்றால், புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான அடிப்படை உரிமைகளைப் பெற்றுத் தருவோம்.

தொகுதி மக்களுக்கான உங்களின் வாக்குறுதி?

நான் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டால் மக்களின் வாழ்வாதார நிலையையும் வேலை செய்யும் சூழலையும் மனிதநேயத்தின் அடிப்படையில் மேம்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x