Published : 04 Mar 2019 17:11 pm

Updated : 05 Mar 2019 10:36 am

 

Published : 04 Mar 2019 05:11 PM
Last Updated : 05 Mar 2019 10:36 AM

மதுரையும் அரசியலும்: காந்தி தொடங்கி கமல் வரை...

மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது. தேசிய அரசியலாக இருக்கட்டும்...மாநில அரசியலாக இருக்கட்டும்... இரண்டிலுமே மதுரை மண்ணின் வாசம் இருக்கத்தான் செய்கிறது. இன்றளவும் அது தொடர்கிறது.

மகாத்மா காந்தி தொடங்கி, அண்ணாயிஸத்தை அறிவித்த எம்.ஜி.ஆரைக் கடந்து, மக்கள் நீதி மய்யத்தின் கமல்ஹாசன் வரை மதுரையுடன் அரசியல் தொடர்பை ஏற்படுத்தி மதுரை அரசியல் வரலாற்றின் பக்கங்களைக் கூட்டிக் கொண்டே செல்கின்றனர்.


அது ஏன் மதுரை மட்டும்?

வேறு எந்த நகருக்கும் இல்லாத அளவுக்கு மதுரைக்கு மட்டும் ஏன் இத்தகைய சிறப்பு என அரிய முற்பட்டபோது சில சுவாரஸ்யத் தகவல்கள் கிடைத்தன.

அரசர் காலத்திலிருந்து இதனைத் தொடங்குவோம். பாண்டிய மன்னர்களின் தலைநகராக மதுரை இருந்தது. தலைநகரம் என்றால் அதில் சிறப்பான கட்டமைப்பு இருக்க வேண்டும். அதன் நிமித்தமாகவே அனைத்து தொழில் சமூகத்தினரும் மதுரை நகரில் குடியேறினர். சிலர் மன்னர்களால் குடியேற்றப்பட்டனர். வெளியூர்களில் இருந்துகூட கைவினைக் கலைஞர்கள் குடியமர்த்தப்பட்டனர்.

தொழில்வளம் சிறந்து வாணிபம் வளர கலாச்சாரம் செறிவு கண்டது. சங்கம் வைத்து தமிழ் மொழி வளர்க்கப்பட்டது. அதனாலேயே இயல்பாகவே மதுரை மக்களுக்கு இயலும், இசையும், நாடகமும் அனுபவிப்பது சாத்தியமாயிற்று. கலையைக் கொண்டாடினர் மதுரை மக்கள். கலைஞர்களை உருவாக்கியது மதுரை மண். கலாச்சாரம் மேலோங்க மேலோங்க விழிப்புணர்வும் அதிகமானது.

நாடகம் ஊட்டிய விடுதலை வேட்கை:

மன்னராட்சி எல்லாம் முடிந்த பின்னரும்கூட நாடகங்கள் மதுரை மக்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அம்சமாக இருந்தது. விடிய விடிய நாடகங்கள் நடந்தேறிய ஊர் மதுரை. வெறும் புராணக் கதைகள் மட்டும்தான் அரங்கேறின என்று நினைக்க வேண்டாம்.

நாடகக் கலைஞர் எஸ்.எஸ். விஸ்வநாத தாஸ் போன்றோர் தெய்வீகத்தில் தேசபக்தியைக் கலந்து மக்களுக்குக் கொடுத்தனர். மகாத்மா காந்தியுடனான சந்திப்புக்குப் பின்னர் தனது நாடகங்களில் தேசபக்தியை கலந்த விஸ்வநாததாஸ் இதற்காக சிறை சென்றும் வந்தார்.

மதுரை ஒரிஜினல் பாய்ஸ் நாடகக் கம்பெனியை 1910-ம் ஆண்டில் எஸ்.எம். சச்சிதானந்தம் பிள்ளை தொடங்கினார். இளைஞர்களை (பால்யர்கள்) கொண்டே இதை இயக்கினார். இவரது நோக்கம் மக்கள் சீர்திருத்தமாகவே இருந்தது. தேசபக்தியையும் அவர் விதைக்கத் தவறவில்லை.

சங்கரதாஸ் சுவாமிகளும், நவாப் ராஜமாணிக்கமும் மதுரை மண்ணில் நாடகங்களை அரங்கேற்றினார்கள். நாடகங்கள் வாயிலாக விடுதலை வேட்கையை அதிகமாகப் பெற்ற மண் மதுரை.

அந்தக் காலத்தில் நாடகங்கள் நடத்தப்பட்ட இடங்கள்தான் பின்னாளில் திரையரங்குகள் அமைக்கும் இடமாகத் தேர்வு செய்யப்பட்டதாகவும். சாந்தி, பத்மா போன்ற திரையரங்குகள் அதன் அடிப்படையிலேயே அந்த இடங்களில் நிறுவப்பட்டன என்ற தகவலும் உள்ளது.

நாடகத்தைப் பார்த்து ரசித்து விமர்சித்து வந்த மதுரை மக்கள் பின்னாளில் சினிமாவுக்கு அதே வரவேற்பை அளித்தனர். அதனாலேயே அந்தக் காலத்தில் ஒரு படம் வெற்றிப்படமா என்பதைத் தீர்மானிக்க மதுரை முடிவு முக்கியமாகக் கருதப்பட்டது. கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் போன்ற இயக்குநர்கள் தங்கள் படத்துக்கான வரவேற்பை மாறுவேடத்தில் வந்து கண்ட காலமும் உண்டு.

தூங்காநகரம்:

மதுரைக்கு தூங்காநகரம் என பெயர் பெற்றுத்தந்ததில் ஊரில் அமைந்த மதுரா கோட்ஸ், மீனாட்சி மில் போன்ற தொழிற்சாலைகளுக்கு முக்கியப் பங்கு உண்டு. மூன்று ஷிப்டில் வேலை செய்யும் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லும் முன்னரோ அல்லது பணி முடிந்து வரும்போது நாடகமும் சினிமாவும் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டிருந்தனர். அவர்களுக்காகவே இரவு நேர உணவகங்களும் களைகட்டத் தொடங்கின.

சித்திரைத் திருவிழாவும், மாசி சிவராத்திரி திருவிழாக்களும், சிறு தெய்வங்கள் விழாக்களும் மதுரையைத் திருவிழாக்களின் நகரமாக வளர்த்தெடுத்தது. திருவிழா சார்ந்த தொழிலும் திருவிழாவைச் சிறப்பிக்க நடத்தப்படும் கூத்தும், நாடகமும், நாட்டியமும் மதுரை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை அந்தக் காலம் தொட்டே விதித்திருந்தது.

உத்வேகம் தந்த ஞாயிறு படிப்பகங்கள்...

மதுரையின் முக்கிய தொழில் வீதிகளில் ஞாயிறு விடுமுறை தினத்தன்று அரசியல் கட்சிகளும் சில கடை அதிபர்களும் கடை வாசல்களில் படிப்பகங்கள் அமைப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ரிக்‌ஷாக்காரர்கள் கொண்டாடிய படிப்பகங்கள் அவை. அடிமட்டத்திலிருந்து அரசியல் அலசி ஆராயப்பட்ட இடம் அந்தப் படிப்பகங்கள். தானப்பமுதலி தெருவில் லால்பகதூர் சாஸ்திரி படிப்பகம் இருந்தது. காங்கிரஸ் செய்திகளை அங்கே படிக்கலாம். பேச்சியம்மன் படித்துறை பகுதியில் கம்யூனிஸ்ட் படிப்பகம் இருந்தது. கல்பனா தியேட்டர் அருகே ஒரு படிப்பகம் இருந்தது. இந்தப் படிப்பகங்கள் மதுரை மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் மிக முக்கியப் பங்காற்றியது.

காந்தி துறந்த மேலாடை:

மதுரைக்கு மகாத்மா காந்தி 5 முறை வந்திருப்பதாக வரலாற்றுக் குறிப்புகள் சொல்கின்றன. 22-9–1921ல் அவர் மதுரை வந்தபோது மேலமாசிவீதியில் தங்கியிருந்தார். தனது அறையிலிருந்து வெளியில் பார்க்கும்போது பலரும் மேலாடையின்றி இருப்பதைக் கவனித்துள்ளார். அன்று தான் அவர் அரை ஆடைக்கு மாறினார். அடுத்த நாள் அவர் மதுரையில் முதன்முறையாக உரையாற்றினார். அவர் உரையாற்றிய இடம் இன்றளவும் காந்தி பொட்டல் என்று அறியப்படுகிறது. காந்தி காலத்திலேயே அரசியலில் மதுரை முக்கியத்துவம் பெற்றுவிட்டது.

 

 

மதுரை ஆலயப் பிரவேசத்தை வெறும் சமூகப் புரட்சியாக மட்டுமே பார்த்துவிடமுடியாது. அதன் பின்னர் அரசியலும் இருந்தது. மதுரை ஆலயப் பிரவேசத்தை காந்தியடிகள் 'ஓர் அற்புதம்' என்றே வர்ணித்தார்.

மேங்காட்டு பொட்டலும் திலகர் திடலும்..

1950-களில் மதுரையில்தான் எம்.ஜி.ஆர். தனது முதல் ரசிகர் மன்றத்தைத் தொடங்கினார். அப்போதே அவருக்கு மதுரை மக்கள் மத்தியில் அதீத செல்வாக்கு ஏற்பட்டுவிட்டது. எம்.ஜி.ஆரின் திரைப்படங்களுக்கு ஹாட்ரிக் வெற்றி தந்த திரையரங்குகள் மதுரையில்தான் இருக்கின்றன. கதாநாயகராக எம்.ஜி.ஆரைக் கொண்டாடிய மதுரை மக்கள் அரசியல்வாதியாகவும் அவரைக் கொண்டாடத் தவறவில்லை. அவரை ஆதரித்து மேங்காட்டு பொட்டலில் நடந்த கூட்டம் அதற்கு ஒரு முக்கிய சாட்சி.

1972 அக்டோபர் 14-ம் தேதி எம்.ஜி.ஆர். திமுகவிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார். மூன்றே நாட்களில் அக்டோபர் 17, 1972-ல் அதிமுகவை எம்.ஜி.ஆர் நிறுவினார்.

அதற்கு முன்னதாக மதுரையில் மேங்காட்டுப் பொட்டல் என்ற இடத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர்கள் அனுதாபிகள் இணைந்த மாபெரும் கூட்டத்தை நடத்தினர். எம்.ஜி.ஆர் நீக்கத்தைக் கண்டித்தும் அவர் தனிக்கட்சி தொடங்க வலியுறுத்தியும் அந்தக் கூட்டம் நடைபெற்றது. இப்படியாக, எம்.ஜி.ஆர் அரசியலுக்கு வித்திட்டதும் மதுரை மண் தான்.

 

 

இதே மண்ணில்தான் 1974-ல் எம்.ஜி.ஆர் எனது கொள்கை அண்ணாயிஸம் என அறிவித்தார். 1980 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக மேங்காட்டுப் பொட்டலில் இரவு 2.45 மணி முதல் 3.45 மணி வரை எம்.ஜி.ஆர் ஆற்றிய தேர்தல் பிரச்சார உரை அவரது வெற்றிக்கு வித்திட்டது. மதுரை மேற்கு தொகுதியில் போட்டியிட்ட எம்.ஜி.ஆர் அமோக வெற்றி பெற்றார்.

1980-ம் ஆண்டு மே மாதம் 28 முதல் 31 வரை நடைபெற்ற தேர்தலில் அதிமுக 129 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியைக் தக்க வைத்துக்கொண்டது. அவரது கூட்டணியில் இடம்பெற்றிருந்த கட்சிகள் 33 இடங்களை வென்றன. திமுக தலைமையிலான அணியில் திமுக 37 இடங்களையும், காங்கிரஸ் 31 இடங்களையும் பெற்று படுதோல்வி அடைந்தன. இதைத் தொடர்ந்து 9.6.1980 அன்று 2-வது முறை முதல்வராகப் பதவியேற்றார் எம்.ஜி.ஆர்.

தேர்தல் வெற்றிக்கு வித்திட்ட பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பல கூட்டங்கள் நடைபெற்ற மெய்காட்டும் பொட்டல் என்ற பெயரே மேங்காட்டுப் பொட்டல் என்று மருவியது. மதுரையின் கான்சாமேட்டுத் தெருவின் முனையில் (பழைய நியூ சினிமா எதிரில்) முன்பு ஜான்சிராணி பூங்காவாக இருந்த இந்த இடம் இன்று வணிக வளாகமாக இருக்கிறது.

இதேபோல் பல அரசியல் தலைவர்களின் பேச்சுக் களமாக இருந்த திலகர் திடலும் மிக மதுரை அரசியலில் மிக முக்கியமானது. அண்ணா தொடங்கி பல தலைவர்கள் திலகர் திடலில் தங்கள் பொதுக்கூட்டங்களை நடத்தியிருக்கின்றனர். கக்கன் அரசிலையும் பார்த்திருக்கிறது எம்.ஜி.ஆர் அரசியலையும் பார்த்திருக்கிறது.

கக்கன், மவுலானா சாஹிப், கே.பி.ஜானகிஅம்மா, சொர்னத்தம்மாள், என்.எம்.ஆர்.சுப்புராமன், மாயாண்டி பாரதி, மதுரை முத்து, பி.நெடுமாறன், ஆண்டித்தேவர், சுப்பிரமணியன் சுவாமி, விஜயகாந்த் என மதுரை மண்ணின் மைந்தர்கள் பலர் இருக்கின்றனர். 

தேர்தல் அரசியல் மட்டுமல்லாமல் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் பலவும் மதுரையில் நடந்திருக்கிறது.

கட்சி தொடங்கிய விஜயகாந்த்

மதுரையில் பிறந்த விஜயகாந்த் தனது அரசியல் கட்சியான தேமுதிகவை 2005-ல் மதுரையில் தொடங்கினார். மதுரையில் கட்சி தொடங்கியதிலிருந்து 6-வது ஆண்டில் அதாவது 2011 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டது. 29 இடங்களில் வெற்றி பெற்று விஜயகாந்த் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரானார்.

 

இன்றளவும் தேமுதிக கூட்டணி அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த கட்சியாக இருக்கிறது.

மு.க.அழகிரியை மறக்க முடியுமா?

மதுரை தேர்தல் அரசியலைப் பற்றி பேசும்போது மு.க.அழகிரியைக் குறிப்பிடாமல் கடந்துவிட முடியாது. திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த அழகிரி தென் மாவட்டங்களில் திமுகவுக்கு பலம் சேர்ப்பதில் வாக்கு வங்கியை பலப்படுத்துவதில் பல்வேறு வியூகங்களைச் செயல்படுத்தினார்.

2009-ல் திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., வீர இளவரசன் (மதிமுக) மறைந்துவிட அங்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பணப்பட்டுவாடாவுக்கு அதற்கும் பிந்தைய வரலாறு இருக்கிறது என்றாலும்கூட திருமங்கலம் ஃபார்முலா என்ற பெயர் திமுக அந்த இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஓர் அடையாளமாக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய சூத்திரத்துடன் அழகிரி இன்றளவும் தொடர்புபடுத்தப்பட்டாலும் தேர்தல் அரசியலில் அவருடைய இன்னும் சில வியூகங்கள் திமுகவுக்கு தென் மாவட்டங்களில் பலமாகவே இருந்துள்ளது.

அதுபோல், போஸ்டர்களும் பேனர்களும் அரசியலின் மிக முக்கியமான அங்கமாக மாற அழகிரியைப் புகழ்ந்து மதுரையை நிரப்பிய போஸ்டர்களும் ஒரு காரணம். அழகிரிக்கு வைக்கப்பட்ட அளவு பேனர்களும் போஸ்டர்களும் மதுரையில் வேறு யாருக்கும் வைக்கப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே.

திமுக தென் மாவட்டங்களில் வெற்றி பெற எனது ஆதரவு இல்லாமல் முடியாது என்ற சவால் விடுப்பவராகத்தான் அழகிரி இன்று நிற்கிறார். தீவிர அரசியலில் அவர் இப்போது இல்லாவிட்டாலும்கூட மு.க.அழகிரியை மறக்க முடியாது.

மதுரையில் தொடங்கிய மக்கள் நீதி மய்யம்..

எம்.ஜி.ஆர்., தொடங்கி பல்வேறு அரசியல் பிரமுகர்களும் மதுரை மக்களின் அரசியல் ஆர்வத்தைப் புரிந்து கொண்டே அங்கு மாநாடுகளும் பொதுக்கூட்டங்களும் நடத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அந்த மரபில்தான் விஜயகாந்த் சொந்த ஊர் என்பதைத் தாண்டியும் அரசியல் வரலாற்றின் காரணமாக மதுரையில் தனது கட்சியைத் தொடங்கினார்.

 

 

அதே வழியில் தனது கட்சியை மாநாட்டுடன் மதுரையில் தொடங்கினார் கமல்ஹாசன். மக்கள் நீதி மய்யம் மதுரையில் உருவானது.

எம்.ஜி.ஆருக்கு மதுரை மீது தீராக் காதல்..

'மதுரை அரசியல்' என்ற புத்தகத்தை எழுதிய ப.திருமலை மதுரையின் அரசியல் வாசம் குறித்து தனது கருத்துகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.

''மதுரைக்கும் தமிழக அரசியலுக்கும் பல தொடர்புகள் இருக்கின்றன. மதுரையில்தான் எம்.ஜி.ஆர் தனது ரசிகர் மன்றத்தை நிறுவினார். மதுரையில் நடந்த நாடோடி மன்னன் வெற்றி விழாவில் எம்.ஜி.ஆருக்கு தங்க வாள் அளிக்கப்பட்டது. மதுரை மாவட்ட திமுக மாநாட்டில் தான் ஓரங்கட்டப்பட்டதாக எம்.ஜி.ஆர் உணர்ந்ததே பின்னாளில் அவர் புதிய கட்சி தொடங்க வித்திட்டது. அதிமுகவை உருவாக்கிய பின்னர் இரட்டை இலை சின்னம் கிடைப்பதற்கு முன்னதாக அண்ணா படம் கொண்ட கொடி உருவாக்கப்படுவதற்கு முன்னதாக தாமரைப்பூ பொறித்த கொடியை மதுரையில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஏற்றினர்.

எம்.ஜி.ஆருக்கு மதுரை மீது தீராக் காதல் உண்டு. 1980-ல் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி ஏற்பட்டபோது தனது கட்சியை வலிமைப்படுத்த தனது பிம்பத்தைக் கட்டமைக்க மாநாடு நடத்தத் திட்டமிட்டார் எம்.ஜி.ஆர். அதற்காக அவர் தேர்வு செய்த இடம் மதுரை. அகில உலக எம்.ஜி.ஆர் மன்ற மாநாடு நடத்தினார். இந்த மாநாடு அவருக்கு பெரும் செல்வாக்கை ஈட்டித் தந்தது. எம்.ஜி.ஆர் தேர்தலில் போட்டியிட அருப்புக்கோட்டை, ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு என மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளையே தேர்வு செய்தார்.

 

 

மதுரையில்தான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்துக்கான அறிவிப்பை வெளியிட்டார். மதுரையில் 1981-ல் நடந்த உலகத் தமிழ் மாநாடு அரசியல் ரீதியாக ஜெயலலிதாவுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

எம்.ஜி.ஆர் மட்டுமல்ல சிவாஜி கணேசனும் மதுரையில்தான் கட்சியைத் தொடங்கினார். தமிழ் மாநில காங்கிரஸும் காங்கிரஸ் கட்சியும் இணைந்தது மதுரையில்தான். இப்படி மதுரையுடன் தொடர்புபடுத்த நிறைய அரசியல் சம்பவங்கள் உள்ளன.

மதுரைக்கும் அரசியலுக்கு ஏன் இப்படி ஒரு நெருக்கம் உருவானது என்பதற்கு நான் சில காரணங்களைப் பட்டியலிடுவேன். மதுரை நகரம் மற்ற நகரங்களைப் போல் அல்ல.

2500 ஆண்டுகாலம் பழமை வாய்ந்தது. மதுரையும் காஞ்சியும் மட்டும்தான் தமிழகத்தில் பழமையான நகரங்கள். மதுரை கலாச்சார தலைநகரமாக இருந்ததாலேயே அங்கு சினிமாவும் அரசியலும் கொண்டாடப்பட்டது. எம்.ஜி.ஆர் அரசியல் ரீதியான வெற்றிகளுக்கு மதுரை தொடர்புபடுத்திப் பார்த்ததாலேயே அவருக்குப் பின் வந்த அரசியல்வாதிகளும் எம்.ஜி.ஆர் போல் வெற்றி பெற வேண்டும் என்று மதுரை மீது தனிக்கவனம் செலுத்தினர்.

எம்.ஜி.ஆர் மதுரை வந்தால் 3,4 நாட்களாவது அங்கு தங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடைசியாக அவர் மறைந்த வருடம்கூட ஜனவரி 1 புத்தாண்டை மதுரையில்தான் கொண்டாடினார். மதுரை மீதான எம்.ஜி.ஆரின் காதல்தான் தொன்றுதட்டு தமிழக அரசியலில் கடத்தப்படுகிறது என்று நான் கூறுவேன்''.

இவ்வாறு 'மதுரை அரசியல்' நூலாசிரியர் ப.திருமலை கூறினார்.

இப்படியாக பாண்டிய மன்னர்கள் காலம் தொடங்கி, சங்கம் வைத்து தமிழ் வளர்த்த காலம் தொட்டு, நாடகம், சினிமா என மாறிய காலம் வரை அரசியல் விழிப்புணர்வு மதுரை மக்களுக்கு எக்காலமும் கிட்டிக்கொண்டே இருந்ததாலோ என்னவோ மதுரையும் அரசியலும் பிரிக்க முடியாததாகவே இருக்கிறது.


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x