Published : 15 Mar 2019 12:24 PM
Last Updated : 15 Mar 2019 12:24 PM

பொள்ளாச்சி கொடூரம்: ஆபாச தளங்களை ப்ளாக் செய்வது எப்படி, இணையத்தில் அடையாளத்தை மறைத்து வாழ முடியுமா?- சைபர் செக்யூரிட்டி நிபுணர் பேட்டி

பொள்ளாச்சியில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ்குமார், வசந்தகுமார் ஆகியோர் சமூக வலைதளங்களில்,  நண்பன் என்ற போர்வையில் பெண்களை ஏமாற்றி, அழைத்துவந்து ஆபாச வீடியோக்கள் எடுத்து மிரட்டிய சம்பவம், தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 

அதில் சில வீடியோக்கள் வெளியான நிலையில், சைபர் குற்றங்கள் குறித்தும் ஆபாச வீடியோக்களைத் தடை செய்வது பற்றியும் இணையப் பாதுகாப்பு நிபுணர் சையது முகமதுவிடம் விரிவாகப் பேசினோம்.

எல்லோருக்கும் எடுத்தவுடனே தோன்றும் கேள்வி இதுதான். சைபர் குற்றம் என்றால் என்ன?, அதில் என்னென்ன வகைமைகள் இருக்கின்றன?

''இணையத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து குற்றச்செயல்களும் சைபர் குற்றத்துக்குள் வரும். இதில் பொதுவான சில பிரிவுகள் இருக்கின்றன. அவை

வசைபாடல் (Trolling)

முறைகேடாக நடத்துதல் (Abusing)

மிரட்டுதல் (Threatening)

பின் தொடர்தல், கண்காணித்தல் (Stalking)

அவதூறு பரப்புதல் (Defame)

பழிவாங்கும் எண்ணத்தில் அந்தரங்கப் படங்களை வெளியிடல் (Revenge Porn)

மார்பிங் (Morphing)

ட்ராலிங்கும் சைபர் குற்றத்தில் வருமா?, எந்தப் புள்ளியில் கிண்டல் குற்றமாக மாறுகிறது?

என்ன மாதிரியான ட்ரால் என்பதைப் பொறுத்து மாறும். தனி மனித கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் ட்ராலிங் செய்வதும் , ஆபாசமாகக் கிண்டல் செய்வதும் குற்றமே. இதற்கென தனியாகச் சட்டப்பிரிவு இல்லை. அதே நேரத்தில் ஐபிசி 1860 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் 2008-ன் கீழ் இதைப் பதிவு செய்து, தண்டனை வாங்கித் தரமுடியும்.

அந்தரங்க மற்றும் நிர்வாணப் படங்களை முறைகேடாகப் பயன்படுத்துபவர்களுக்கு என்ன தண்டனை?

சைபர் குற்றங்களில் பிரதானமாக இருப்பது இதுதான். அந்தரங்கங்களை அம்பலப்படுத்துவது. இதற்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க சட்டத்தில் இடமுண்டு.

இணையத்தில் கை தவறி சொடுக்கினால் ஆபாச இணையதளப் பக்கங்கள் தானாகவே கடைவிரிக்கின்றன. எப்படி இதைத் தவிர்ப்பது? அவற்றுக்குத் தடை விதிக்க தொழில்நுட்பத்தில் இடம் இருக்கிறதா?

இணையத்தின் ஆபத்துகளில் ஆபாசம் முக்கியமானது. தனிப்பட்ட வகையில் நம் இல்லக் கணினிகளில் இவற்றை 3 வழிகளில் திட்டமிட்டுத் தவிர்க்க முடியும். ஒன்று பிரத்யேக செயலிகள் மூலமாக. இரண்டாவது விண்டோஸ் 10-ல் உள்ள பெற்றோர் வழிகாட்டி (Parental Guide), மூன்றாவது டிஎன்எஸ் சர்வர் வழியாக இவற்றைத் தடுக்கலாம்.

இதில் Qustodio, Net Nanny, Norton Family Premier, Kaspersky Safe Kids, FamilyTime உள்ளிட்ட செயலிகள் மூலம் நமக்குத் தேவையில்லாத வலைதளங்களை ப்ளாக் செய்துகொள்ளலாம். விண்டோஸ் 10-ல் Parental Guide-ஐ Enable செய்வதன் மூலம் வயதுக்குத் தகுந்த வகையில் குழந்தைகளோ, இளைஞர்களோ இணையத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முடியும்.

ஓப்பன் டிஎன்எஸ் சர்வரில் (Open DNS Server) நம்முடைய ஐபி முகவவரியைக் கொடுத்தும் தேவைப்படும் வலைதளங்களை ப்ளாக் செய்யலாம். ஆபாச வலைதளங்கள் என்றில்லை வன்முறையைத் தூண்டும் விளையாட்டுகள், மோசடி இணையதளங்கள், ஃபிஷ்ஷிங் (Phishing), சூதாட்ட தளங்கள் ஆகியவற்றையும் இவற்றின் மூலம் தடை செய்யலாம்.

தனிப்பட்ட முறையில்தான் இவற்றை நீக்க முடியுமா, அரசால் ஒட்டுமொத்த ஆபாசத் தளங்களையும் தடை செய்ய முடியாதா?

செய்யலாம். செய்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்பு இந்திய அரசு அனைத்து ஆபாச தளங்களையும் தடை செய்தது. ஆனால் அவர்கள் சில நாட்களிலேயே வேறு பெயர்களில் வந்துவிட்டனர். உதாரணத்துக்கு .com என்ற பெயரில் இருக்கும் தளத்தைத் தடை செய்தால் .net என்ற பெயரில் அதே தளம் இயங்கும். இவற்றைத் தடை செய்வது ஒருமுறை மட்டுமேயான செயல்பாடாக இருக்காது. தொடர்ச்சியாக அவை உருவாகும்போதெல்லாம் அவற்றை நீக்கிக்கொண்டே இருக்கவேண்டும். அதற்கான அரசு ஆணைகள் முறையாகப் பிறப்பிக்கப்பட வேண்டும்.

கார்ப்பரேட்டுகள் அப்படித்தான் தங்களுடைய அலுவலகங்களில் ஆபாசத் தளங்களுக்கு எதிராக தொடர்ச்சியான செயல்பாட்டை மேற்கொண்டுள்ளனர்.

கலாச்சார ரீதியில் மிகவும் முற்போக்கானவர்கள் வெளிநாட்டினர். ஆடைகளிலும் குடும்பக் கட்டமைப்புகளிலும் சுதந்திர மனப்பான்மையைக் கொண்டவர்கள். இந்தியா மாதிரியான கட்டுக்கோப்பான சூழலைக் கொண்ட நாடுகளோடு ஒப்பிடும்போது அங்கே நிகழும் சைபர் குற்றங்கள் எப்படி இருக்கின்றன?

அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில், பாலியல் ரீதியான சைபர் குற்றங்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றன. ஆனால் நிதி செயல்பாடுகள், நிறுவனங்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகமாக உள்ளன.

இணையத்தில் தன்னுடைய அடையாளத்தை மறைத்து ஒருவர் தொடர்ந்து இயங்க முடியுமா?

நிச்சயமாக முடியாது. இணையத்தில் ரகசியம் என்று எதுவுமே கிடையாது. யாரும் தன்னை நிரந்தரமாக மறைத்து வாழ முடியாது. தேவைப்படும் நேரத்தில், உரிய சைபர் செக்யூரிட்டி நிபுணர்களால் எதை வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் ட்ரேஸ் செய்யமுடியும். பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குற்றவாளிகளை நிச்சயம் கண்டுபிடிக்க வேண்டும்.

பாலியல் தொந்தரவுகளை பெண்களை மட்டுமே எதிர்கொள்வதில்லை அல்லவா? ஆண்களும் இதுபோன்ற நிகழ்வுகளைச் சந்தித்திருப்பார்களே...

சைபர் குற்றங்களைப் பொறுத்தவரையில் பெண்களே முக்கிய இலக்கு. கருத்து மற்றும் மத நம்பிக்கை சார்ந்து வேண்டுமானால் ஆண்கள் தாக்கப்படுகிறார்கள். ஆனால் பாலியல் சார்ந்த தொந்தரவுகள் ஆண்களுக்கு மிக மிகக் குறைவாகவே இருக்கிறது.

எதனால் இணையக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன?

இணையவெளியில் மனிதர்கள் தங்களை மனிதர்களாகவே உணர்வதில்லை. நிஜ உலகத்துக்கும் சைபர் உலகத்துக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. நிஜத்தில் கையில் பணத்தோடு செல்லும் வயதானவரை அடித்துப் போட்டுவிட்டு, பணத்தைப் பிடுங்கிச் செல்ல பெரும்பாலானோர் யோசிப்பர். சமூகம் நம்மைப் பார்த்துவிட்டால் அசிங்கமாகிவிடுமே என்று தயங்குவார்கள்.

ஆனால் இதுவே ஆன்லைனில் யாருடைய பாஸ்வேர்டாவது கிடைத்தால், அதைக் கொண்டு பணத்தைத் திருடுவது மனதை அத்தனை உறுத்துவதில்லை. 'நமக்கு முன்னால் யாரும் இல்லை, நம்மை யாரும் பார்க்கவில்லை' என்ற தைரியம் முதல் காரணம். 'நாலு சுவருக்குள் நடக்கும் விஷயம்; நான்தான் இதைச் செய்தேன் என்று கண்டுபிடிக்க முடியாது' என்ற எண்ணம் அடுத்த காரணம்.

இணையத்தின் முக்கியப் பிரச்சினையே அடையாளங்களை மறைத்துக் களமாடுவதுதான். அத்தகையோரை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? அவர்களுக்கு தண்டனை வாங்கித் தரமுடியுமா?

சைபர் பிரிவில் அதற்கென உயரிய தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் சம்பந்தப்பட்ட நபர் வைத்திருக்கும் கணக்கு எங்கிருந்து பயன்படுத்தப்படுகிறது என்பதைக் கண்காணித்து அவர்களைக் கையும் களவுமாகப் பிடிக்கமுடியும். அவர்களுக்கு ஐபிசி 507-ன் கீழ் இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனை அளிக்க முடியும். முறையான பெயர், முகவரி, புகைப்படம் இல்லாமல் மறைந்திருந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்காகவே இப்பிரிவு செயல்படுகிறது.

தன்னுடைய புகைப்படங்களோ, வீடியோக்களோ முறைகேடாக, தவறான இடங்களில் பயன்படுத்தப்பட்டது தெரிய வரும்போது பெண்கள் என்ன செய்யவேண்டும்?

முதலில் பெண்கள் இதுகுறித்து பயப்படவோ, வேதனைப்படுவதோ கூடாது. இதுபற்றிப் பேசவும் தயங்கக்கூடாது. இதுபற்றிப் பெற்றோர்களிடமோ, நண்பர்களிடமோ பேசுவது அவசியம். அடுத்ததாக சைபர் பிரிவில் புகார் கொடுக்க வேண்டும். இதன்மூலம் இரண்டு விஷயங்கள் நடக்கும். நமக்கு எதிராக நடக்கும் குற்றத்தையும் தடுக்கிறோம். குற்றவாளியைக் காட்டிக் கொடுப்பதன் மூலம் அடுத்து சமூகத்தில் நிகழவிருக்கும் குற்றங்களையும் தடுக்கிறோம்.

முதல் முறை தவறு செய்பவர்களாக இருந்தால், நம்முடைய புகாரின் மூலமாக அவர்கள் திருந்தி நல்வழிக்குத் திரும்பவும் வாய்ப்புண்டு.

சமூக ஊடகங்களையும் இணையத்தையும் தொடர்ந்து பயன்படுத்தும் பெண்களுக்கு ஏதேனும் ஆலோசனைகள் சொல்ல விரும்புகிறீர்களா?

எந்தக் காரணத்தைக் கொண்டும் உங்களுடைய அந்தரங்க நேரங்களைப் புகைப்படமாகவோ, வீடியோவாகவோ எடுக்காதீர்கள். உங்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும் வகையிலும் எந்தப் படத்தையும் எடுக்க அனுமதிக்க வேண்டாம். அது உங்களுடைய தோழராகவோ, காதலராகவோ, கணவராகவோ இருந்தாலும்கூட.

ஏனெனில் டிஜிட்டல் வடிவில் இருக்கும் எதுவுமே பாதுகாப்பானது அல்ல. இந்தக் கணத்தில் நாம் எடுக்கும் புகைப்படத்தை எந்தக் கணத்திலும் உலகமே பார்க்கமுடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். மற்றவர்கள் புகைப்படங்கள் எடுக்கும்போதோ அல்லது உங்களை நீங்களே எடுத்துக்கொள்ளும்போதோ, இதில் நான் சரியாக இருக்கிறேனா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். அவ்வளவுதான்!'' என்றார் சைபர் பாதுகாப்பு நிபுணர் சையது முகமது.

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x