Last Updated : 28 Mar, 2019 05:45 PM

 

Published : 28 Mar 2019 05:45 PM
Last Updated : 28 Mar 2019 05:45 PM

பட்டியலில் இருந்து நீக்கக் கோரும் கிருஷ்ணசாமி பொதுத் தொகுதியில் போட்டியிடலாமே?- விளாசும் தென்காசி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய்

ஆறு பிரிவுகளாக உள்ள பட்டியல் இனத்தவர்களை ஒரே இனமாக தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்று கோரும் கிருஷ்ணசாமி பொதுத் தொகுதியில் தானே போட்டியிட்டிருக்க வேண்டும் என காட்டமாக கேட்கிறார் தென்காசி தொகுதி அமமுக வேட்பாளர் பொன்னுத்தாய்.

தென்காசி (தனி) தொகுதியை அதிமுக கூட்டணிக் கட்சியான புதிய தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ளது. கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். திமுக சார்பில் தனுஷ் எம்.குமார் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு அத்தொகுதியில் 9 ஆண்டு கால வெற்றி வரலாறு இருந்தாலும்கூட தொகுதியை தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டுள்ளது திமுக. கிருஷ்ணசாமிக்கு சாதி வாக்குகள் இருந்தாலும்கூட ஒருமுறை அதிமுக, ஒருமுறை திமுக என்று அவர் கூட்டணி தாவிக் கொண்டே இருப்பதும் அவரது பாஜக ஆதரவு நிலைப்பாடும் தொகுதிக்குள் அவருக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஏ.எஸ்.பொன்னுத்தாய் அதிமுக வாக்குகளை கனிசமான அளவில் பிரிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தி இந்து தமிழ் திசைக்கு அமமுக வேட்பாளர் அளித்த பேட்டியில் தென்காசி தொகுதி தங்களுக்கே என்றும் இந்தத் தேர்தல் கிருஷ்ணசாமியின் தேர்தல் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் கூறுகிறார்.

தென்காசி தொகுதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அதிமுகவே வெற்றி பெற்றிருக்கிறது. முதன்முறையாக களமிறங்கும் அமமுகவுக்கு வரவேற்பு எப்படி இருக்கிறது?

எங்கள் கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் வழிகாட்டுதலின்படி நாங்கள் செய்யும் பிரச்சாரத்துக்கு தென்காசி மக்கள் பேராதரவு தெரிவிக்கின்றனர். செல்லுமிடமெல்லாம் டிடிவி தினகரனுக்கு ஆதரவு குவிகிறது. நாங்கள் மக்களோடு கூட்டணி அமைத்துள்ளோம். அதனால் இது வெற்றிக் கூட்டணி.

அதிமுக கூட்டணி வேட்பாளர் கிருஷ்ணசாமியை களமிறக்கியுள்ளது. எப்படி எதிர்கொள்ளவிருக்கிறீர்கள்?

தென்காசி தொகுதி பட்டியல் இனத்தவருக்கான தனித் தொகுதி. கிருஷ்ணசாமியின் கொள்கை என்ன? ஆறு பிரிவுகளாக உள்ள பட்டியல் இனத்தவர்களை ஒரே இனமாக தேவேந்திர குல வேளாளர் என அறிவிக்க வேண்டும் என்பது. பட்டியல் இனத்துக்கு எதிராக இருப்பவர் தனித் தொகுதியில் நிற்காமல் பொதுத் தொகுதியில்தானே நின்றிருக்க வேண்டும். அவரது அரசியல் என்ன மாதிரியானது என்பதை பொது மக்கள் புரிந்து கொண்டிருக்கின்றனர். அவரது தேர்தல் அரசியலுக்கு விரைவில் தென்காசியில் முற்றுப்புள்ளி வைக்கப்படும். ஆளுங்கட்சியின் ஆதரவு இருந்தாலும்கூட மக்கள் ஆதரவு எங்களுக்கு இருப்பதால் கிருஷ்ணசாமியால் எங்களுக்கு பாதிப்பு இல்லை.

உங்களுக்கு 32 வயதுதான் ஆகிறது. இளம் அரசியல்வாதி. எம்.பி. தேர்தல் போட்டியை எப்படி உணர்கிறீர்கள்?

எனக்கு வயது குறைவுதான். ஆனால் 18 வயதிலேயே அரசியலுக்கு வந்துவிட்டேன். அதிமுகவின் இளம் பெண்கள் பாசறை ஒன்றியச் செயலாளராக இருந்துள்ளேன். அதனால் அரசியல் அனுபவம் இருக்கிறது. உள்ளாட்சி பொறுப்புகளில் அப்பா இருந்திருக்கிறார். குடும்பத்தில் அரசியல் பின்புலம் இருக்கிறது. இளம் வேட்பாளராக வெற்றி பெறும் ஆவலுடன் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறேன்.

உங்கள் தொகுதியின் பிரதான பிரச்சினை என்ன? அதற்கு நீங்கள் வைத்திருக்கும் செயற் திட்டம் என்ன?

எங்கள் தொகுதி மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதி. இங்கு விவசாயமே பிரதானம். விவசாயிகள் தண்ணீர்ப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றனர். இதனை சீர் செய்ய பிரத்யேக திட்டங்கள் தேவை. நாளை தொகுதிக்கான தேர்தல் அறிக்கையை வெளியிடவுள்ளேன். அப்போது எங்களின் செயற்திட்டம் தெரியவரும்.

திமுக 28 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணி பலத்துடன் களமிறங்கியுள்ளது? உங்கள் கணிப்பு என்ன?

திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் பற்றி ராஜபாளையம் மக்கள் நன்றாக அறிவார்கள். அவரது தந்தை, தாய் என அனைவரும் கட்சிப் பதவி வகித்தவர்கள். ஆனால் அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்கள் செய்த அடாவடிகளை மக்கள் மறக்கவில்லை. அதிகாரிகளைக்கூட அடிபணிய வைத்தனர். அந்த அச்சம் மக்களை எங்கள் பக்கம் ஈர்த்துள்ளது. தனுஷ்குமாரை நாங்கள் போட்டியாகவே கருதவில்லை.

உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும்கூட சில பிரச்சினைகளை சுட்டிக் காட்டுகின்றனரே?

அது 2015-ல் எழுந்த சர்ச்சை. முட்டை ஒப்பந்தம் ஒதுக்குவதில் எழுந்த புகார். ஆனால் அப்போது தவறு ஒப்பந்ததாரர் மீதுதான் என்று போலீஸ் மூலம் நிரூபணமாகி வழக்கு முடித்துவைக்கப்பட்டது. இப்போது அதை வேண்டுமென்றே கிளறி சர்ச்சையைக் கிளப்புகின்றனர். எனக்கும் எனது தந்தைக்கும் இடையேயான மோதல்கூட குடும்ப ரீதியானதுதான்.

உங்கள் பெயரிலேயே நிறைய சுயேட்சை வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளார்கள். உங்களுக்குத் தெரியுமா?

ஆமாம். செய்தியில் வந்தது. ஜி.பொன்னுத்தாய், எஸ்.பொன்னுத்தாய் என்று முன்னெழுத்து மட்டும் மாறி ஒரே பெயர் கொண்ட சுயேட்சைகள் நிறுத்தப்பட்டுள்ளனர். இது திமுகவினரின் உள் வேலை என்பதைத் தெரிந்து கொண்டோம். அவர்கள் எத்தனை சுயேட்சைகளை இறக்கினாலும் எங்கள் அண்ணன் டிடிவி-க்கு என்று ஒரு சின்னம் வரும் அந்த சின்னம் தான் தேர்தலில் முகமாக நிற்கும். பொன்னுத்தாயைவிட சின்னமே பிரதானம். அதுவே எங்கள் அடையாளம்.

அப்படியென்றால் குக்கர் சின்னம் இல்லாதது பாதிப்பு இல்லையா?

சின்னம் முக்கியம் என்றுதான் சொன்னேனே தவிர குக்கர் சின்னம்தான் முக்கியம் என்று சொல்லவில்லை. ஏற்கெனவே தொப்பி சின்னத்திலும் எங்கள் அண்ணன் வெற்றி பெற்றிருக்கிறார். எந்த சின்னம் கொடுத்தாலும் அதை அண்ணன் பிரபலமாக்கிவிடுவார். அந்த சின்னம் எங்களின் வெற்றிச் சின்னமாகிவிடும். இந்தத் தேர்தலில் 40க்கு 40, 18-க்கு 18 என அமமுக தடம் பதிக்கப் போகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு: bharathi.p@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x