Published : 13 Feb 2019 03:58 PM
Last Updated : 13 Feb 2019 03:58 PM

"எங்க பிள்ளைங்க எங்க விளையாடுவாங்க?": மைதானத்துக்காகப் போராடும் புளியந்தோப்பு கே.பி.பார்க் மக்கள்

"இங்க நின்னு போன் பேசாதீங்க. இது 'ஸ்லம்' ஏரியா. போனைப் பறிச்சிடுவாங்க"

வடசென்னையின் புளியந்தோப்பு பகுதியிலுள்ள கேசவ பிள்ளை பார்க் (கே.பி.பார்க்) பகுதியில் நின்றிருந்தபோது போலீஸ் ஒருவர் என்னிடம் கூறிய வார்த்தைகள் தாம் இவை.

கடந்த பிப்.6-ம் தேதி, அங்குள்ள விளையாட்டுத் திடலில் தற்காலிகமாக வசித்து வந்த 192 குடும்பங்களின் குடிசைகளை காலை 10 மணி முதல் இரவு வரை தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தினர் அகற்றினர். அதன்பிறகு, அந்தக் குடும்பங்கள், அதன் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள 10*10 அளவிலான தகர கூரை வீடுகளுக்கு இடம்பெயர்ந்தனர். தற்காலிகமாக அங்கு குடியமர்த்தப்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை கே.பி.பார்க் பகுதிக்குச் சென்ற போதுதான் போலீஸாரின் இந்த வார்த்தைகளைக் கேட்க நேரிட்டது.

அங்கிருந்து நகர்ந்து, அம்மக்கள் தங்கியுள்ள பகுதிக்குச் சென்றேன். குறுகலான வரிசையில் நெருக்கமாக அமைக்கப்பட்ட தகர கூரை வீடுகள். சில பெண்கள் வட்டமாக அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை முன்னேறி உள்ளே சென்றேன். அங்கு தங்கவைக்கப்பட்டு 5 நாட்களாகியும், அவர்களது உடைமைகள் மூட்டை, முடிச்சுகளாகக் கட்டப்பட்டு ஆங்காங்கே சிறிய வீடுகளுக்குள் வைக்கப்பட்டிருக்கின்றன. பெண்கள் பெரும்பாலானோர் வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தனர். வீட்டு உபயோகப் பொருட்கள் எதுவும் அந்தத் தகர வீட்டில் இன்னும் ஒழுங்குப்படுத்தப்படவில்லை.

"கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்த விளையாட்டுத் திடலில் தான் குடிசைகள் அமைத்து தங்கியிருந்தோம். அங்கிருந்து எங்களை அப்புறப்படுத்தி விட்டனர். நாங்கள் அதனை எதிர்த்தபோது போலீஸார் எங்களைத் தகாத வார்த்தைகளில் கேட்டனர். பெண்கள் என்று கூட பார்க்காமல், எங்களை போலீஸார் தாக்கினார்கள். கைது செய்து வண்டியில் ஏத்தினர்", என்கிறார், சித்ரா (35).

மைதானத்தில் போலீஸார் பாதுகாப்புடன் குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் குடிசைகளை அகற்றும்போது, தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றவர் சித்ரா. அதன்பிறகு, அக்கம்பக்கத்தினர் அவரைச் சமாதானப்படுத்தினர்.

1980-களில் கே.பி.பார்க் பகுதியில் சுமார் 1,000 குடும்பங்கள் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் அடுக்குமாடிக் கட்டிடங்களில் குடியமர்த்தப்பட்டனர். கடந்த 2008-ம் ஆண்டு அக்கட்டிடங்கள் மிகவும் இடிந்த நிலையில் இருந்ததால், அவையனைத்தையும் இடித்துவிட்டு புதிதாகக் கட்டிடங்கள் கட்ட தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் முடிவெடுத்தது. அதில், முதல்கட்டமாக, 4 கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், அங்கிருந்த பல குடும்பங்கள் யானைகவுனி சாலையில் உள்ள விளையாட்டுத் திடலில் தற்காலிக குடிசை அமைத்துத் தங்க அரசு அனுமதித்துள்ளது.

அதன்பிறகு, 10 கட்டிடங்கள் இடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 21 கட்டிடங்கள் ஒரே கட்டமாக இடிக்கப்பட்டதாக அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான குடும்பங்கள் அங்கிருந்து சென்று நகரின் பல பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கியுள்ளனர். ஆனாலும், சுமார் 200 குடும்பங்கள் விளையாட்டுத் திடலிலேயே குடிசைகள் அமைத்து வசித்து வந்துள்ளனர். அந்த மைதானத்திலேயே அங்குள்ள குழந்தைகள் பெரும்பாலானோர் கால்பந்து விளையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். அந்த விளையாட்டுத் திடலில் குடிசை மாற்று வாரியத்தின் இரண்டாம் கட்ட கட்டிடங்கள் கட்டப்படவிருப்பதால், அவர்கள் அங்கிருந்து அகற்றப்பட்டதாக, குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

"குடிசை மாற்று வாரியக் கட்டிடங்களை இடித்தபோது, பசங்க விளையாடும் மைதானத்தில் எங்களைத் தற்காலிகமாக தங்க வைத்தனர். அங்கு எங்கள் வசதிக்கு ஏற்றாற்போல் குடிசைகளைக் கட்டி தங்கியிருந்தோம். ஒன்றரை வருடத்தில் வீடுகள் கட்டித் தருவதாக குடிசை மாற்று வாரிய அதிகாரிகள் சொன்னாங்க. ஆனால், இரண்டரை வருடம் ஆகிடுச்சு. தற்காலிகமாக தங்கியிருக்கும் மைதானத்திலிருந்தும் அப்புறப்படுத்துறாங்க" என்கிறார், சித்ரா. அவரது கணவர் கூலி வேலை செய்து வருபவர்.

தற்போது இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். மற்ற சமூகத்தினர் சிலரும், ஓரிரு முஸ்லிம் குடும்பத்தினரும் உள்ளனர். கூலி வேலை, ரிக்‌ஷா, ஆட்டோ ஓட்டுவது போன்ற வேலைகளில் பெரும்பாலான ஆண்கள் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் பெரும்பாலானோர் பிராட்வே, சவுகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் வீட்டு வேலைக்குச் செல்கின்றனர்.

"குடிசைகளை அகற்றுவதற்கு முன்பு எங்களிடம் சொல்லவில்லை. போதுமான கால அவகாசம் கொடுக்கவில்லை" என்கிறார், சித்ராவின் சகோதரி தேவி. கணவரை இழந்த தேவி, வீட்டு வேலை செய்து வருகிறார்.

தற்காலிகமாக அமைக்கப்பட்ட தகர கூரை வீடுகளில் போதுமான கழிப்பறை வசதி, தண்ணீர் வசதி, கழிவுநீர் வடிகால் வசதி, மின்சாரம் உள்ளிட்டவை இல்லை என்கின்றனர் அங்குள்ள மக்கள்.

"இந்த வீட்டில் எப்படி குடும்பம் நடத்துவது? தரைகள் உடைந்து கிடக்கின்றன. பொருட்களை அப்படியே போட்டுவிட்டு உட்கார்ந்திருக்கோம். ஞாயிற்றுக்கிழமை கூட ஒண்ணும் சமைக்கவில்லை. பெண் பிள்ளைகள் இருக்கின்றனர். வரிசையின் கடைசியில் 4 கழிப்பறைகள் இருக்கின்றன. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அவ்வளவு தூரம் செல்வது மிகவும் சங்கடமாக இருக்கிறது. இரவில் கழிப்பறை செல்லதும் சிரமம்" என்கிறார் தேவி.

இவர்களுக்கான குடிசை மாற்று வாரியக் கட்டிடங்கள், இவர்கள் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டிருக்கும் இடத்தின் பின்புறத்திலேயே கட்டப்பட்டு வருகின்றன. அதன் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பதில் அதிகாரிகளிடம் இருந்து தெளிவான பதிலில்லை என்கின்றனர் மக்கள்.

"3 மாதங்களில் முடிந்துவிடும் என்கின்றனர் அதிகாரிகள். ஆனால், இன்னும் கட்டிட வேலைகள் நிறைய இருக்கின்றன" என்கிறார் தேவி.

"வீடுகள் எப்போது தயாராகும் என அதிகாரிகளிடம் இருந்து தெளிவான பதில் வரவில்லை. புதிதாக அமைக்கப்பட்ட வீடுகள் எங்களுக்கு கிடைக்குமா என்பதிலும் சந்தேகம் நிலவுகிறது" என 60 வயதைக் கடந்த அபரஞ்சிதம் கூறுகிறார்.

"குருவிக்கூட்டைக் கலைத்தது போன்று கலைத்துவிட்டார்கள். இங்கு வந்து அல்லல்படுகிறோம். பொருள்களை முழுவதுமாக எடுப்பதற்குள் பொக்லைனை வைத்து குடிசைகளை அகற்றிவிட்டனர்" என்கிறார், அன்னம்.

"இங்கு சரியான கழிப்பறை வசதியில்லாமல் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திற்கும் செல்ல முடியவில்லை. டிரைனேஜ் வசதியில்லை. வீடுகளுக்குள் பல்பு மட்டும் போட்டுக் கொடுத்தனர். நாங்க அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாகத் தான் பரவலாகப் பேசுகின்றனர். அது உண்மையில்லை. ஒவ்வொரு குடும்பத்திலும் 3-4 பிள்ளைகள். கதவு சரியில்லை. ஆடை மாற்றுவதற்கு கூட பயமாக இருக்கிறது" என அங்குள்ளை நிலைமையை தெரிவிக்கிறார், பொன்மணி.

"குடிசை மாற்று வாரிய கட்டிடங்களை இடிக்கும்போது கொஞ்சம் வசதி உள்ளவர்கள் வெளியில் வாடகைக்குச் சென்றுவிட்டனர். இல்லாதவர்கள் விளையாட்டு மைதானத்திலேயே தங்கிக்கொண்டனர். வீட்டைக் கட்டி முடிக்காமலேயே அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துகின்றனர். இந்த இடமே இரண்டு நாட்களுக்கு முன்பு முள்ளிவாய்க்கால் போன்று இருந்தது. சொந்த இடத்திலேயே அகதிகளாகி விட்டனர். தகர வீடுகளில் வரும் வெயில் காலத்தில் எப்படி இருக்க முடியும்? சின்னம்மை உள்ளிட்ட நோய் தாக்குதல்கள் இனி இங்கு அதிகரிக்கும்" என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த தேவராஜ்.

அப்புறப்படுத்தப்பட்ட குடும்பங்களில் சுமார் 175 குடும்பங்கள் மட்டுமே இங்கு தங்க வைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ளவர்கள் வியாசர்பாடி முல்லை நகரில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு இன்னும் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இங்குள்ளவர்களுக்கு குடிசை அகற்றப்பட்டதைவிட பெரும் கவலை அந்த மைதானம் தங்களுக்கு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலை தான். தங்கள் குழந்தைகள் போதை உள்ளிட்ட தீய பழக்கங்களுக்கு ஆளாகாமல் கால்பந்து விளையாட்டில் கவனம் செலுத்துவதற்கு அந்த மைதானம் தங்களுக்கு வேண்டும் என்று  வலியுறுத்துகின்றனர்.

"அந்த மைதானம் எங்களுக்கு வேண்டும். இதற்காக நாங்கள் இப்போது போராடினால் தான் எங்களுடைய பிள்ளைகளுக்கு நாளை அந்த மைதானம் கிடைக்கும்" என்கிறார் அங்குள்ள பெயர் தெரிவிக்க விரும்பாத நபர்.

"அந்த மைதானத்தில் கால்பந்து விளையாடிய பிள்ளைகள் பெரும்பாலும் அரசு வேலைகளில் இருக்கின்றனர். இப்போது அந்த மைதானம் இல்லாததால், அதிகாலையில் எழுந்து பக்கத்து மைதானத்துக்குச் சென்று கால்பந்து பயிற்சி எடுக்கின்றனர்" என்கிறார் பொன்மணி.

இம்மக்களுக்கு கால்பந்து விளையாட்டும், அந்த மைதானமும் ஏன் முக்கியம் என்பது குறித்து, கறுப்பர் நகரம், அறுபடும் விலங்கு உள்ளிட்ட நாவல்கள் மூலம் தொடர்ச்சியாக வடசென்னை மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்து வரும் எழுத்தாளர் கரன் கார்க்கியிடம் பேசினேன்.

"நானும் கே.பி.பார்க் பகுதியில் தான் பிறந்து வளர்ந்தேன். தற்போது அங்குள்ள மாநகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் தொடங்கி பேசின் பிரிட்ஜ் வரை அங்கு பூர்வகுடிகள் இருந்தனர். 1930-களில் இருந்து 1980-கள் வரை இருந்தனர். 1984 இல் ஓரிரவில் அந்த குடிசைப் பகுதிகளை அகற்றினர்.

அங்கு வடபகுதியில் உள்ள மாநகராட்சி அலுவலகம், தென்பகுதியில் அரசு கையகப்படுத்திய ஐஸ் ஃபேக்டரி தவிர்த்து மற்ற பகுதிகள் அனைத்தும் அங்குள்ள மக்களுக்குச் சொந்தமானது தான். அது அவர்களின் பயன்பாட்டுக்கானது தான். மைதானத்திற்கான அவர்களின் போராட்டம் நியாயமானது. அந்த மைதானம் விளையாட்டுத் திடல் அல்லது சமூக நலக்கூடமாக மக்கள் பயன்பாட்டுக்கு இருக்க வேண்டும்.

குடிசை மாற்று வாரிய வீடுகளின் அமைப்பு அநீதியானது. 40 வயதைத் தாண்டாத என் பெற்றோர், எங்கள் வீட்டில் என்னுடன் சேர்த்து 5 பிள்ளைகள் என எல்லோரும் ஒரே அறையில் இருந்தோம். அப்போது எனக்கு 18 வயது. நான் என் நண்பர்களின் வீட்டில் வசிக்க ஆரம்பித்தேன். ஆனால், எத்தனை பேரால் அப்படிச் செல்ல முடியும்? இளம் வயது பிள்ளைகள் பெற்றோருடன் உறங்க வேண்டும் என்பது அநீதி. கலாச்சாரமற்ற, பண்பற்ற அமைப்புகள் தான் இங்கு அரசாங்கங்களாக இருக்கின்றன.

குடிசைகளை அகற்றியதால் மட்டும் அதனைப் பார்த்து நெஞ்சு வெடித்துவிடாது. எனக்கு அதனைப் பார்த்து சலித்துவிட்டது. மிகக் கொடூரமான அமைப்பு அது. 10*10 அமைப்பில் வீடு. சிறிய சமையலறை, அதையொட்டிய கழிப்பறை. அந்த கழிப்பறையும் ஒழுங்காக இயங்காது. அடிப்படையில் பொங்கினால் தான் மாற்றங்கள் நிகழும்.

கே.பி.பார்க் முழுக்க கால்பந்து விளையாட்டு தான். கால்பந்தாட்டத்தை பிடுங்கிவிட்டால் அவன் என்ன செய்வான்? அவர்களை திருடர்கள்,கொள்ளைக்காரர்கள் என்கின்றனர். அவர்களை கூண்டுக்குள் அடைத்துவிட்டால் என்ன செய்வார்கள்?" என கேள்வி எழுப்புகிறார் கரன் கார்க்கி.

குடிசைகள் அகற்றப்பட்டு இத்தனை நாட்களாகியும் தங்கள் எம்எல்ஏ கே.சி.ரவிச்சந்திரன் தங்களை வந்து பார்க்கவில்லை என்பது அம்மக்களுக்கு கோபம் தரக்கூடியதாக உள்ளது.

குடிசைகளை அகற்றிய அன்றும், மறுநாளும் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அம்மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.

இதுகுறித்து திமுக எம்எல்ஏ கே.சி.ரவிச்சந்திரன் பேசினேன்.

"கடந்த டிசம்பர் மாதமே காலி செய்வதாக மக்களே உறுதியளித்தனர். ஜனவரியில் அதற்கு மறுத்தனர். ஆனால், ஏற்கெனவே அப்புறப்படுத்தப்பட்டவர்களில் 800 பேர் வெளியில் ரூ.5,000 அளவில் வாடகை கொடுத்து தங்கியுள்ளனர். இவர்கள் மைதானத்திலிருந்து வெளியேறினால் தான் இரண்டாம் கட்ட கட்டிடங்கள் கட்டி, அனைவரையும் குடிசை மாற்று வாரிய கட்டிடங்களில் தங்க வைக்க முடியும். வெளியில் தங்கியுள்ளவர்கள், வீடு எப்போது தயாராகும் என்கின்றனர்.

கட்டிடப் பணிகள் நிறைவடைந்து ஜூன் மாதத்தில் அரசிடம் ஒப்படைக்கப்படும் என ஒப்பந்ததாரர்கள் உறுதியளித்துள்ளனர். மே மாதத்தில் தேர்தல் விதிமுறைகளில் அமலில் இருப்பதாம் அம்மாதம் ஒப்படைக்க இயலாது.

இப்போது அவர்கள் தங்கும் இடத்தில் எந்த வசதியுமில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன், ஆனால், அவர்களுக்கு அந்த இடமே கிடையாது. அரசாங்க விதிப்படி அப்புறப்படுத்தப்படும் மக்களுக்கு கொடுக்கும் ரூ.8,000 வாங்கிக்கொண்டு வெளியில் தான் தங்க வேண்டும். மாநகாராட்சி அந்த விளையாட்டுத் திடலை மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வகை மாற்றம் செய்து குடிசை மாற்று வாரியத்திற்கு கொடுத்து விட்டனர்.

நான் எதுவுமே செய்யவில்லை என மக்கள் கோபமாக உள்ளனர். இது மிக சிக்கலான பிரச்சினை. என்னால் முடிந்தவரை அரசிடம் பேசுகின்றேன். அரசாங்கம் காலி செய்வதை நான் எப்படி தடுப்பது? எல்லா இடங்களிலும் இது நடக்கிறது. இவர்கள் ஒத்துழைத்தால் தான் எல்லோருக்கும் வீடு கிடைக்கும். குடிசை மாற்று வாரிய வீடுகளை 225 சதுர அடியிலிருந்து 450 சதுர அடியாக  மாற்றி கட்ட நான் தான் சட்டப்பேரவையில் பேசினேன்" என்றார் கே.சி.ரவிச்சந்திரன்.

குடிசைகள் எப்போது தயாராகும் என்பது குறித்துப் பேசிய குடிசை மாற்று வாரிய அதிகாரிகள், "அனைத்து வீடுகளும் கட்டி முடியும் தருவாயில் உள்ளன. இன்னும் மூன்று மாதங்களில் தயாராகிவிடும். குடிசைகளை அகற்றும்போது போலீஸ் மக்களைத் தாக்கவில்லை" என தெரிவித்தனர்.

மக்களைச் சந்தித்து விட்டு திரும்புகையில், அவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் கூறியது "மைதானம் மட்டும் எங்க பிள்ளைகளுக்கு நிச்சயம் வேண்டும்" என்பது தான்.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x