Last Updated : 14 Feb, 2019 06:08 PM

 

Published : 14 Feb 2019 06:08 PM
Last Updated : 14 Feb 2019 06:08 PM

வானொலி காலம் கடந்தும் பயணிக்கும்

பிப்ரவரி 13 ஆம் தேதி உலகம்  முழுவதும் வானொலி தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் #WorldRadioDay என்ற  ஹாஷ்டேக்  உலக முழுவதும் டிரெண்ட் ஆகிக் கொண்டிருந்தது. நாடு முழுவதும்  வானொலி தொடர்பான ஏராளமான  நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டன.

இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இன்றைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக வானொலிகள்  இன்றைய தலைமுறையிடம்  சரியாக சென்றடையவில்லை என்ற பார்வை கடந்த சில ஆண்டுகளில் பரவி காணப்படுகிறது.

மேலும் அரசு வானொலி சார்ந்த நிதி ஒதுக்கீட்டிலும், வானொலி பயிற்சி நிறுவனங்கள் சார்ந்த நிலைப்பாட்டில்  மத்திய அரசின் நடவடிக்கை பாராட்டும்படி இல்லாத காரணத்தால் வானொலி இன்னும் நம்மிடமிருந்து வெகுதூரம் சென்று விட்டதா என்ற கேள்வி ஒரு சாமனியனுக்கு தோன்றும் எண்ணத்தில் தவறு ஏதும் இல்லை.

உண்மையில் வானொலிக்கும்  இன்றைய தலைமுறைக்குமிடையே பெரும் இடைவெளி ஏற்பட்டுவிட்டதா? அல்லது இது மிகைப்படுத்தப்பட்டிருக்கிறதா? என்பதை அறிய,

தொடர்ந்து வானொலிகள் குறித்து தொடர்ந்து புத்தகங்கள் எழுதி கொண்டிருக்கும் சென்னைப் பல்கலைகழக  இதழியல் துறை உதவி பேராசிரியர் ஜெய் சக்திவேலுடன் சிறிய உரையாடல்...

சமூக வலைதளங்களின் தாக்கத்தால் ஒரு குறிப்பிட்ட கூட்டத்தினரிடையேதான் வானொலியின் பயன்பாடு இருக்கிறது என்று கூறப்படுகிறதே அல்லது ரேடியோவை பயன்படுத்தும் மீடியம் மாறியிருக்கிறதா... இதுபற்றி உங்கள் பார்வை?

வானொலியை கேட்கும் ஊடகம் மாறியிருக்க வேண்டும் என்றுதான் கூறவேண்டும். இன்று தொலைக்காட்சியை பார்ப்பவர்கள் எண்ணிக்கையே  தற்போது குறைந்துவிட்டதே எல்லாம் இன்று மொபைலாக மாற்றப்பட்டுவிட்டது. செய்தித்தாள் படிப்பது, வானொலி கேட்பது, சினிமா பார்ப்பது என அனைத்தும் இன்றும்  நமது கைபேசிக்கு உள்ளே வந்துவிட்டது.  நாம் உதாரணத்துக்கு கைபேசியில் ஒருபடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலோ திடீரென டொங் என்ற ஒலியுடன் நமது கைபேசியில் ஒரு ஒலி வரும் நாம் அதனை நோக்கிச் சென்று விடுவோம். இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. வானொலிக்கான நேயர்கள் மட்டும் அல்ல இதன் மூலம் காட்சி ஊடகங்கள் சார்ந்த நேயர்களும் குறைந்துள்ளனர். இருப்பினும் வானொலிக்கான கூட்டம் இன்றளவும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

 

 

உதாரணம் சொல்ல வேண்டும்  நேற்று சென்னையில்  உலக வானொலிக்கான நாளில் நடத்தப்பட்ட நிகழ்வில் நேயர்கள் ஏராளமானோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கூடியிருந்தனர். இவர்கள் அனைவருமே வானொலியை கேட்பவர்கள். எனவே கேட்கும் வடிவம்தான் மாறியிருக்கிறது.

இருப்பினும் இளைஞர்களிடம் வானொலி இன்னும் கூடுதலாக சென்றடைய தொழில்நுட்பங்கள் சார்ந்த செய்திகளை இன்னும் கூடுதலாக வழங்க வேண்டும். இளைஞர்களிடம் தேடல் எதை சார்ந்து இருக்கிறது என்பதை கூடுதலாக கவனித்து எல்லாம் சார்ந்த நிகழ்ச்சிகளை வழங்கலாம்.

ஹாம் ரேடியோக்கள் இன்று பரவலாக உச்சரிக்கப்பட்டு வருகிறதே அதுபற்றி?

உண்மைதான், ஹாம் ரேடியோக்கள் பற்றிய விழிப்புணர்வு கிடைத்துள்ளது. அதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் சமீப ஆண்டுகளில் இயற்கை பேரிடர்கள் அதிகளவு ஏற்பட்டு வருகின்றன. அந்தக் காலக்கட்டங்களில்  நாம் இன்று பிரதானமாக கருதும் தொலைத் தொடர்பு சாதனங்கள் செயலற்று போய்விடும் அல்லவா... அப்போது இந்த ஹாம் ரேடியோக்கள் நமக்கு பெரும் உதவியாக இருக்கின்றன.

 

மேலும் வெவ்வேறு களங்களில் ஹாம் ரேடியோக்கள் பற்றி விவாதிக்கப்படுவது முக்கிய காரணமாகும். உதாரணத்துக்கு 'வண்டு நெட்டு' என்ற அமைப்பு ஒன்று உள்ளது. இதனை நண்பர்கள் சிலர் ஒருங்கிணைந்து கிளப்பாக வைத்துள்ளனர். இவர்களின் சந்திப்பு வருடம் வருடம் நடைபெறும்.. இந்த சந்திப்பு கடந்த வாரம் நடந்தபோது அதில் வந்திருந்தவர்கள் 80% இளைஞர்கள்தான். இது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை அளித்தது. இவர்களில் பாதிபேர் ஹாம் ரேடியோ மூலம் இந்தக்குழுவில் வந்தவர்கள்.

அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளில் குடும்பத்துக்கு ஒருவராவது ஹாம் ரேடியோ வைத்திருப்பார்கள். அங்ககேயும் இயற்கைப் பேரிடர்கள் எதிர்பாராத காலங்களில் ஏற்படுவதால் ஹாம் ரேடியோ அவர்களால் தவிர்க்க முடியாததாகிவிட்டது.  இது தற்போது இந்தியாவுக்கும் பரவி உள்ளது.

இணையம் மூலம் பலரும் யூ டியூப் சேனல், போன்றவற்றை சொந்தமாக ஆரம்பித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள், இதில் வானொலியில் இப்படி?

இந்தியாவில் இதற்கு உங்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. சீனாவில்  இதற்கு கட்டுப்பாடுகள் உள்ளன. நினைத்த உடனெல்லாம் உங்கள் பேரில் வானொலியை ஆரம்பித்துவிட முடியாது. எண்களினால் உங்களுக்கு பெயர்கள் வழங்குவார்கள். தொடர்ந்து உங்கள் நம்பகத்தன்மை சோதிக்கப்படும். இதனைத் தொடர்ந்துதான் உங்கள் வானொலிக்கான பெயர் வழங்கப்படும். ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை உங்கள் இணைய வானொலியால் நீங்கள் பெருந்தொகையை சம்பாதித்தால் மட்டுமே பிரச்சனை ஏற்படும். தற்போது நம் இளைஞர்கள் இணைய வானொலி, மொபைல் வானொலி. வாட்ஸ் அப் வானொலி என்று பல கட்டத்தை அடைந்திருக்கிறார்கள். வாட்ஸ் அப் வானொலியில் பட்டிமன்றம் எல்லாம் நடந்துகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

அகில இந்திய வானொலிக்கான நிதி ஒதுக்குவதை அரசு குறைத்துவிட்டதாக கூறப்படுகிறதே?

அரசு வானொலிக்கான நிதி ஒதுக்குவதில் பல பிரிவுகள் உள்ளன. குறிப்பாக அரசின் திட்டங்கள் இதன் வழியாகத்தான் மக்களிடையே கொண்டு செல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாது வெளிநாடுகளுடன் இந்திய உறவை பேணுவதில் அகில இந்திய வானொலிகள்தான் முக்கிய பங்கு வகிக்கிறது. வெளிநாடுகள் நமது நாட்டை பற்றியும், நமது திட்டங்கள் அறிவதற்காக இது ஒலிப்பரப்பு செய்யப்படுகிறது.  இதில்  20 வெளிநாட்டு மொழிகளில் ஒலிபரப்பப்படுகிறது. இதற்கான நிதி, வெளியுறவுத் துறை அளிக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஒருகட்டத்தில் வெளியுறவுத் துறை அளிப்பதாக கூறிய நிதியை வழங்கவில்லை. இதானால் அகில இந்திய வானொலி நிதியை அளித்தால் நிகழ்ச்சிகள் தொடங்க முடியும். இதனால் நிறுத்த வேண்டிய கட்டாயத்துக்கு ஏற்பட்டுவிட்டோம் என்று விளக்கம் அளித்தது. இதுதான் இதில் நிலவும் பிரச்சனை.

லக்னோ, திருவனந்தபுரம், அகமதாபாத் உள்ளிட்ட ஐந்து நகரங்களில் அகில இந்திய வானொலி மையங்கள் மூடப்படுவதாக அரசு அறிவித்தது விமர்சனத்துக்குள்ளாகியதே?

அந்த நகரங்களில் உள்ள வானொலிக்கான பயிற்சி மையங்களைத்தான் மூடி இருக்கிறார்கள். இருப்பினும்  அந்த பயிற்சி மையங்களை சரியாக செயல்பட்டிருக்கலாம். செயல்பட்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது என்ற வருத்தம் உண்டு. ஆனால் இதனை மூடுவதால் வானொலி நிலையத்துக்கு எந்த பாதிப்புமில்லை.

என்னைப் பொறுத்தவரை மனித குலம் இருக்கும்வரை வானொலி இருக்கும் அதற்கான வடிவம் மட்டுமே மாறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x