Published : 19 Jan 2019 15:33 pm

Updated : 19 Jan 2019 19:38 pm

 

Published : 19 Jan 2019 03:33 PM
Last Updated : 19 Jan 2019 07:38 PM

புத்தகத் திருவிழாவில் சினிமா தொடர்பாக எதை வாங்கலாம்? 6: கதை - திரைக்கதை

6

ஒரு சிறுகதை அல்லது நாவல் திரைக்கதையாக மாறிய விதத்தை சுவாரஸ்யமாகவும், நேர்த்தியாகவும் சொல்லும் நூல் கதை- திரைக்கதை. ஜா. தீபா எழுதியுள்ள இந்நூலை டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் வேடியப்பன் பதிப்பித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் சிறுகதை அல்லது நாவல் படமாக்கப்படுவது அரிதாகத்தான் நடக்கிறது. ஒப்பீட்டளவில் அந்தப் போக்கு கொஞ்சம் மாறி வருவது ஆரோக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், உலகளாவிய கண்ணோட்டத்தில் பார்க்கும் போது நாவல்கள் திரைப்படமாக்கப்படுவது புதிதல்ல.


மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்ற நாவல்கள் திரைப்படமாக மாறும்போது பல படங்கள் வெற்றி பெற்றுள்ளன, சில படங்கள் தோல்வியைத் தழுவியுள்ளன. அதே சமயம் கண்டுகொள்ளப்படாத நாவல்கள் திரைப்படங்களாக மாறும்போது வெற்றி பெற்றுள்ளன. இவை எல்லாவற்றுக்கும் காரணம் திரைக்கதைதான் என்பதை மறுப்பதற்கில்லை. இந்த சூழலில் ஒரு சிறுகதை அல்லது ஒரு நாவல் படத்துக்குரிய திரைக்கதையாக எப்படி பரிமாணம் அடைகிறது, நாவலின் முக்கிய அம்சங்கள் திரைக்கதையில் எப்படி கையாளப்படுகிறது என்பதை காட்சிகள், திருப்பங்கள், மாற்றங்கள், ஆய்வுகள் வழி நின்று தேர்ந்த மொழிநடையில் விவரித்துள்ளார் ஜா. தீபா.

மில்லியன் டாலர் பேபி, தி ஷைனிங், தி பெய்ண்டெட் வெய்ல், கான் கேர்ள், சைக்கோ, சென்ஸ் அண்ட் சென்ஸிபிலிட்டி, தி கலர் பர்பிள், கால் மீ பை யுவர் நேம், தி சைலன்ஸ் ஆஃப் தி லாம்ப், தி ஷஷாங்க் ரிடெம்ஷன், தி சோஷியல் நெட்வொர்க், தி புக் ஷாப், மெமரிஸ் ஆஃப் கெய்ஷா, தி பெர்ஸ்டீஜ், தி காட் ஃபாதர் என்று உலக அளவில் கொண்டாடப்படும் 15 படைப்புகள் திரைக்கதைகளாக மாறிய விதத்தை சுவாரஸ்யம் குறையாமல் பதிவு செய்திருக்கிறார்.

15 நாவல்களைப் படித்ததோடு அதற்குரிய படங்களைப் பார்த்த பிறகுதான் இப்படி ஒரு நூலை எழுதுவது சாத்தியம். அதற்கான கடும் உழைப்பைக் கொடுத்திருக்கும் ஜா.தீபாவுக்குப் பாராட்டுகள்.

ஒரு சிறுகதைத் தொகுதியில் உள்ள இரண்டு கதைகளை மையப்படுத்தி திரைக்கதையாக மாற்றி எடுக்கப்பட்ட படம் மில்லியன் டாலர் பேபி என்றால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். Rope Burns: Stories from the corner என்பது எஃப்.எக்ஸ்.டூல்ஸ் என்பவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பு. குத்துச்சண்டையில் முன்னேறிக்கொண்டு வரும் ஓர் இளம்பெண் குரூரமான எதிராளியால் விளையாட்டின் போது தாக்கப்பட்டு கழுத்து ஒடிக்கப்படுகிறார் என்பது டூல்ஸ் எழுதிய மில்லியன் டாலர் பேபி சிறுகதையின் கரு.

வெள்ளை இனத்தைச் சேர்ந்த வெகுளியான இளைஞன் ஒருவன் குத்துச்சண்டை பயிற்சி பெறும் சக கருப்பின மாணவனால் மோசமான வன்முறைக்கு உள்ளாகிறான் என்பது ஃப்ரஸோன் வாட்டர் கதை. இந்த இரண்டு கதைகளோடும் பால் ஹக்கிஸ் தன் வாழ்க்கை அனுபவத்தையும் இணைத்து எழுதிய திரைக்கதைதான் மில்லியன் டாலர் பேபி திரைப்படம். அது எப்படிச் சாத்தியம் என்பதை சான்றுகளுடன் நிறுவுகிறார் ஜா.தீபா.

நாவலில் இருந்து திரைக்கதைக்காக மாற்றும்போது வசனப்பகுதிகளை அப்படியே பயன்படுத்திக்கொள்வது வழக்கம்தான். ஆனால், தி ஷைனிங் படத்தை இயக்கிய ஸ்டான்லி குப்ரிக் அதை விரும்பவில்லை. நாவலில் உள்ள வசனங்களை அப்படியே பயன்படுத்தினால் காட்சி வடிவமான திரைப்படம் மேடை நாடகத்தன்மையில் இருக்கும் என்று கருதுகிறார். அதனால் ஒலியையும், காட்சியையும் கொண்டே பார்வையாளர்களுக்கு தான் சொல்ல விரும்புவதைப் புரியவைத்து விடுகிறார்.

குப்ரிக் நாவலின் கிளைமேக்ஸை படத்தில் அப்படியே வைக்கவில்லை. மாற்றியமைத்தார். ஆனால், அந்த கிளைமாக்ஸும் நாவலில்தான் இருந்தது. ஆக, நாவலை அப்படியே திரைக்கதை ஆக்காமல் எழுத்தாளர் தான் விரும்பும் வண்ணம் மாற்றினாலும் ஹிட்டடடிக்க முடியும் என்பதை குப்ரிக் நிரூபித்தார். அதை தீபா எழுத்தில் வடித்திருக்கும் விதம் மேஜிக்.

தி பெய்ண்டெட் வெய்ல் என்பது பிரிட்டிஷ் எழுத்தாளர் சொமர்செட் மாம் எழுதிய பிரபலமான நாவல். இந்நாவல் மூன்று முறை திரைப்படமாக்கப்பட்டது. 1934-ம் ஆண்டு தி பெய்ண்டெட் வெய்ல் என்ற பெயரில் வெளிவந்த படம் தோல்வியைச் சந்தித்தது. 1957-ம் ஆண்டு செவன்த் சின் என்ற பெயரில் இதே நாவல் படமாக வந்தும் தோல்விதான். ஆனால், 2006-ல் அதே நாவல் படமாகி மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. காரணம், நாவல் திரைக்கதையாக மாற்றம் பெற்றதின் வித்தியாசம்தான் என்பதை முழுமையாக அலசி இருக்கிறார் தீபா.

கான் கேர்ள் நாவலை திரைப்படமாக்க நினைத்ததற்குக் காரணம் அந்த நாவலைப் படிக்கும்போது அது எனக்குள் ஒரு திரைப்படமாகவே ஓடிக்கொண்டிருந்தது என்கிறார் இயக்குநர் டேவிட் ஃபிஞ்சர். திரைக்கதைக்கான முக்கியக் கூறுகள் நாவலில் உள்ளன என்பதே அவரின் கண்ணோட்டம்.

அவள் மேரியைக் குத்துகிறாள். பிறகு தலையை வெட்டுகிறாள். இது சைக்கோ நாவலில் கொலையின் கொடூரத்தைச் சொல்லும் முக்கியமான வரிகள். ஆனால், படத்தில் ஹிட்ச்காக் எப்படிக் காட்டுவது? எந்தவொரு முன்னறிவிப்பும் இல்லாத கொலையின் உச்சபட்ச அதிர்ச்சியை ஒளிப்பதிவு உத்தி மற்றும் படத்தொகுப்பு உத்தியால் ஹிட்ச்காக் மிரட்டியதற்குக் காரணம் என்ன என்பதை சைக்கோ திரைக்கதை வலுவாக உணர்த்துகிறது.

சென்ஸ் அண்ட் சென்ஸிபிலிட்டி நாவல் குறித்தும், அதன் கதையம்சம் திரைக்கதையானது குறித்தும் தீபா விவரித்துக் கொண்டே செல்லும்போது கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படம் நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

நாவலில் இருந்து படமாக்கும் போது எதை நோக்கி கதை அமைய வேண்டும், எதை நீக்க வேண்டும், எது நிச்சயம் திரைக்கதையில் இடம்பெற வேண்டும் என்பதில்  தி கலர் பர்பிள் திரைக்கதை ஆசிரியர் மென்னோ மேயஸ் தெளிவாக இருந்ததை தீபாவின் எழுத்துகளின் மூலம் அறிய முடிகிறது.

ஸ்டீபன் கிங்கின் Rita Hayworth and Shawshank Redemption நாவலில் மூன்று சிறைக் காப்பாளர்கள் பற்றி சொல்லப்பட்டிருக்கும். ஆனால், தி ஷஷாங்க் ரிடெம்ஷன் படத்தில் ஒரே ஒரு சிறைக் காப்பாளர் மட்டுமே இறுதிவரை வருவார். காரணம், மூன்று சிறைக் காப்பாளர்கள் பற்றி வருவது அனாவசிய பாரத்தை ஏற்படுத்தும் என்பதை திரைக்கதை ஆசிரியர் நன்கு உணர்ந்துள்ளார்.

நாவலில் உள்ள காட்சிகளை திரைக்கதையில் எங்கு இணைத்தால், எங்கு இடைவெட்டினால் விறுவிறுப்பாக இருக்கும் என்பதை தி சோஷியல் நெட்வொர்க் படம் பார்த்து அறிந்துகொள்ளலாம் என்று ஆலோசனை வழங்குகிறார் நூலாசிரியர் தீபா.

சொல்லவந்த கதைக்குத் தேவைப்படாத கதாபாத்திரங்கள், சம்பவங்கள் திரைக்கதையில் சேர்க்கப்படவில்லை என்பது தி காட் ஃபாதர் படம் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம் என்பதையும் குறிப்பிடுகிறார்.

ஒரு கதை திரைக்கதையாவதின் நுட்பங்களை வாசகர்களுக்கும் கடத்திய விதத்தில் தீபா வெற்றி பெற்றுள்ளார்.

நூல்: கதை- திரைக்கதை

ஆசிரியர்: ஜா.தீபா

விலை: ரூ.110

தொடர்புக்கு:

டிஸ்கவரி புக் பேலஸ்

பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,

கே.கே.நகர் மேற்கு,

சென்னை - 78.

போன்: 044- 4855 7525

செல்பேசி: 8754507070

 கதை- திரைக்கதைஜா.தீபாநாவல்சிறுகதைகதை திரைக்கதையாக மாறும் விதம்தி பெய்ண்டெட் வெய்ல்மில்லியன் டாலர் பேபிசைக்கோ தி காட் ஃபாதர்கான் கேர்ள்தி கலர் பர்பிள்

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x