Last Updated : 19 Jan, 2019 11:41 AM

 

Published : 19 Jan 2019 11:41 AM
Last Updated : 19 Jan 2019 11:41 AM

சீக்கிரம் எழுந்து வாங்க கேப்டன்!

ஜெயலலிதாவும் கருணாநிதியும் மருத்துவ சிகிச்சையில் இருந்த அதே காலகட்டத்தில் விஜயகாந்த் உடல்நிலையும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டது. 

இதற்காக அவ்வப்போது வெளிநாடு சென்று சிகிச்சை எடுத்து வந்தார். கருணாநிதி இறந்த நேரத்தில் சிகிச்சைக்காக அமெரிக்காவில் இருந்ததால் கருணாநிதியின் இறுதிச் சடங்கில் விஜயகாந்தால் கலந்துகொள்ளமுடியவில்லை. அங்கிருந்தபடியே கண்ணீர் அஞ்சலி செலுத்தியவர், சிகிச்சை முடிந்து சென்னை திரும்பியதும் நேராக மெரினாவில், கருணாநிதியின் சமாதிக்குச் சென்று மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அப்போது, கம்பீரமாகப் பார்த்தே பழகிப்போன விஜயகாந்த், நடக்கவே சிரமப்பட்டு, பிரேமலதாவின் துணையோடு மெதுவாக நடந்துவந்த காட்சியைக் கண்ட அவரது அபிமானிகள் சோகத்தில் துவண்டார்கள். 

இந்நிலையில், மீண்டும் உயர் சிகிச்சைக்காக, கடந்த டிசம்பர் 18-ம் தேதி இரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் விஜயகாந்த். அவருடன் அவரது மனைவி பிரேமலதா, 2-வது மகன் சண்முக பாண்டியன் ஆகியோரும் சென்றுள்ளனர். அமெரிக்காவில் ஒரு மாத காலம் தங்கியிருந்து மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள இருக்கிறார் விஜயகாந்த்.

எப்படித்தான் இருக்கிறார் கேப்டன் என்ற கேள்விக்கு கவலையும் நம்பிக்கையும் ஒருசேர பதில் தருகிறார்கள் தேமுதிக பொறுப்பாளர்கள். “கேப்டன் சிரமப்பட்டுத்தான் நடக்கிறார்.  அடிக்கடி போரூர் ராமச்சந்திராவில் டயாலிஸில் செய்ய வேண்டி இருந்தது.  சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைதான் தீர்வு என்று மருத்துவர்கள் சொல்லவே, அமெரிக்கா சென்றிருக்கிறார். அங்கு அவருக்கான  சிகிச்சை இன்னும் முழுமையாக முடியவில்லை.  அண்ணி பிரேமலதா எதிர்பார்க்கும் சிகிச்சையைக் கொடுக்க, குறைந்தபட்சம் 2 வாரங்களாவது கேப்டனை அப்சர்வேஷசனில் வைத்திருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

உடனே ஆபரேஷன் செய்வது அவரது உடல்நிலைக்கு நல்லதல்ல என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதனால்தான் மிகத் தெளிவாகத் திட்டமிட்டு டிசம்பரில் கிளம்பினார்கள். ஜனவரி 17-ம் தேதி கேப்டனுக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து பழையபடி கம்பீரமாக கட்சி அலுவலகம் வருவார் எங்கள் கேப்டன்” என்கிறார்கள் அவரது விசுவாசிகள்.

சீக்கிரம் எழுந்து வாங்க கேப்டன்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x