Last Updated : 16 Jan, 2019 08:33 PM

Published : 16 Jan 2019 08:33 PM
Last Updated : 16 Jan 2019 08:33 PM

புத்தகத் திருவிழாவில் சினிமா தொடர்பாக எதை வாங்கலாம்? 1-  மாதர் திரையுலகு

உலக அளவில் இயங்கும் 15 பெண் இயக்குநர்கள் குறித்தும் அவர்களின் படைப்புகள் குறித்தும் மாதர் திரையுலகு நூலில் மிக நேர்த்தியாகவும் விரிவாகவும் எழுதியுள்ளார் ஜா. தீபா.

பத்திரிகையாளர், எழுத்தாளர், உதவி இயக்குநர் எனப் பல்வேறு முகங்கள் கொண்ட ஜா.தீபா எழுதியுள்ள மாதர் திரையுலகு நூலை டிஸ்கவரி புக் பேலஸ் சார்பில் பதிப்பாளர் வேடியப்பன் வெளியிட்டுள்ளார்.

ஜேன் காம்பியன், கிளேர் டெனிஸ், மீரா நாயர், ஈவ டூவர்னே, எசிம் உஸ்டாக்லு, சோஃபியா கொப்பல்லோ, யமினா பெங்குய்குய், சாரா பாலி, அபர்ணா சென், லோன் ஸ்கெர்ஃபிக் , மெர்சியா மெஷ்கினி, லுக்ரிஸியா மார்ட்டெல், கேத்ரின் பிக்லோ, நவோமி கவேஸ், ஆன் ஹூய் என 15 இயக்குநர்கள் குறித்து இந்நூலில் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, துருக்கி, ஜப்பான், ஈரான் என்று நாடுகள் வேறுபட்டாலும் பிரச்சினை ஒன்றுதான். திருமண வாழ்க்கையோ அல்லது புறச்சூழலோ பெண்களுக்கு மிகப்பெரிய தடைக்கல்லாக இருக்கும்,  அதனால் பெண் இயக்குநர்கள் சில படங்களை மட்டுமே இயக்கியிருப்பார்கள் என்று எண்ணத்தோடு இப்புத்தகத்தைப் படித்தால் உங்கள் எண்ணம் தவறானது என்ற உண்மை உங்களுக்குப் புலப்படும்.

உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால், சீன இயக்குநர் ஆன் ஹூய் இதுவரை 27 படங்களை இயக்கியுள்ளார். மூன்று தலைமுறைகளைத் தாண்டியும் அவரது திரைப்பயணம் தொடர்கிறது. 69 வயதிலும் திரைப்படங்கள் மீது தணியாத தாகம் கொண்டவராகச் செயல்பட்டு வரும் ஆன் ஹூய் சீன அரசின் கொள்கைகளை எதிர்த்துப் படம் இயக்கியவர் என்பதும் கவனிக்கத்தக்கது. ஹாங்காங் அரசு ஒரே ஒரு பெண் இயக்குநருக்கு மட்டும்தான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியுள்ளது. அந்தப் பெண் இயக்குநர் ஆன் ஹூய்  என்பது அவருக்குக் கிடைத்த கவுரவம்.

இப்படி 15 பெண் இயக்குநர்கள் குறித்து நம்ப முடியாத ஆச்சர்யத் தகவல்களை அளித்துக்கொண்டே இருக்கிறது மாதர் திரையுலகு நூல்.

* மானுடவியல் சார்ந்த ஆய்வில் ஈடுபட வேண்டும் என்று நினைத்த ஒரு பெண் பின்னாளில் திரைப்படத்துறைக்குத் தரப்படுகிற உயரிய விருதுகளில் ஒன்றான பாமி டோர் விருது பெற்றுள்ளார். ஆஸ்கருக்குப் பரிந்துரைக்கப்பட்ட சில பெண் இயக்குநர்களில் இவரும் ஒருவர். அவர் யார்?

* கறுப்பின மக்களுக்காகவே படம் எடுக்கிற ஈவ டூவர்னேவை ஏன் அமெரிக்காவே உற்று கவனிக்கிறது?

* அப்பாவும், அம்மாவும் சண்டை போடுவதைத் தடுக்க கட் என்று சொல்லிக் கத்திய 3 வயதுக் குழந்தை பின்னாளில் இயக்குநராகி தங்கச்சிங்கம் விருதை வென்றார் என்றால் நம்ப முடிகிறதா?

* தெளிவான ஒரு கதை சொல்லல் முறையை இவர் படத்தில் பார்க்க முடியாது. ஆனால், இவரின் படம்தான் பிரெஞ்சு திரைப்படத்துக்கே ஒரு மைல் கல் என்று கொண்டாடப்பட்டது. அது எப்படிச் சாத்தியம்?  யார் அந்த இயக்குநர்?

* கட்டிட வடிவமைப்பாளராக 10 ஆண்டுகள் வேலை செய்த எசிம் உஸ்டாக்லுவின் வாழ்க்கைப் பயணம் பயணங்களாலும், அவர் இயக்கிய திரைப்படங்களாலும் மாறுகிறது. குர்து இனத்தவர் அடக்குமுறைகளால் அல்லல்படுவதை திரைப்படமாக எடுத்த முதல் இயக்குநர் எசிம்தான். ஆனால், துருக்கியில் திரையிட அந்நாட்டு அரசு வழிவிடவில்லை. ஒரு வருடத்துக்குப் பிறகு துருக்கி அரசே எசிம் இயக்கிய படத்தை வெளியிட அனுமதித்தது. இதற்கிடையே என்ன நடந்தது?

* இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த இரு பெண் இயக்குநர்கள் அழுத்தமாகத் தடம் பதித்த விவரங்களும் உள்ளன. யார் அந்த இருவர்?

இந்தக் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகப் பதில் அளிக்கிறது மாதர் திரையுலகு நூல். இந்த நூலை எழுதுவதற்கு அதிக அளவிலான உழைப்பைக் கொடுத்திருக்கும் ஜா.தீபாவுக்குப் பாராட்டுகள்.

அமெரிக்கா போன்ற நாடுகளில் மட்டுமல்ல பரவலாகப் பெயர் அறியாத நாடுகளில் இருந்தும் பெண் இயக்குநர்கள் தங்கள் முத்திரையைப் பதித்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அதிகாரத்தை நோக்கி கேள்வி எழுப்பும் அதே தருணத்தில் கருணையை, மனிதநேயத்தைப் பற்றி மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார்கள்.

சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதே பெரும்பாலான இயக்குநர்களின் வாழ்க்கை நமக்குச் சொல்லும் செய்தியாக உள்ளது. அறுபது வயதைக் கடந்தும் அவர்கள் தொடர்ந்து திரைப்படம் இயக்குகிறார்கள்.

திரைப்படத் துறையில் இயங்குபவர்கள், புதிதாக நுழைய நினைப்பவர்கள், அழுத்தமாகத் தடம் பதிக்க விரும்பும் பெண்கள் என யாராக இருந்தால் வாசிக்க வேண்டிய நூல் மாதர் திரையுலகு என்றால் அது மிகையல்ல.

நூலின் பெயர்: மாதர் திரையுலகு

நூலாசிரியர்: ஜா.தீபா

விலை: ரூ.110

தொடர்புக்கு: டிஸ்கவரி புக் பேலஸ்

                           பாண்டிச்சேரி கெஸ்ட் ஹவுஸ் அருகில்,

                           கே.கே.நகர் மேற்கு,

                           சென்னை - 78.

                           போன்: 044- 4855 7525

                           செல்பேசி: 8754507070

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x