Published : 17 Jan 2019 17:23 pm

Updated : 18 Jan 2019 19:19 pm

 

Published : 17 Jan 2019 05:23 PM
Last Updated : 18 Jan 2019 07:19 PM

புத்தகத் திருவிழாவில் சினிமா தொடர்பாக எதை வாங்கலாம்? 2-  திரைக்கதை A-Z

2-a-z

திரைக்கதை எழுதுவதில் உள்ள மொத்த சாரம்சத்தையும் அதன் படிநிலைகளையும் 120 குறிப்புகளில் சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்கிறது திரைக்கதை A-Z. மரியோ ஓ.மெரேனோ மற்றும் அந்தோனி கிரிகோவின் எழுத்தை தமிழில் தீஷா மொழி பெயர்த்துள்ளார். தமிழ் ஸ்டுடியோ அருண் பேசாமொழி பதிப்பகம் சார்பில் இந்நூலை பதிப்பித்து வெளியிட்டுள்ளார்.

திரைக்கதை எழுதுவதற்கு முன் ஏற்படும் மன நெருக்கடி என்ன, அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பற்கு தீஷா உளவியல் பூர்வமாகவே தீர்வை முன்வைத்துள்ளார்.


திரைக்கதை எழுதுவதற்கான முதல் மேஜிக் ஃபார்முலா முதலில் நீங்கள் எழுதுவதற்காக அமர வேண்டும். அவ்வளவுதான். திரைக்கதை எழுத உட்கார்ந்துவிட்டீர்கள். ஆனால், எழுதுவதற்கான மனநிலை இல்லையென்று காரண காரியம் தேடிக்கொண்டிருக்கிறீர்களா? அல்லது எழுதுவதற்கான மனநிலையை வரவழைக்க முடியாமல் திணறுகிறீர்களா? உங்களுக்கு தீஷா சொல்லும் ஐடியா மிகச்சரியாக உதவும்.

உங்களுக்குப் பிடித்த இசையை, பின்னணி இசைக் கோர்வையை, கிளாஸிக் இசையைக் கேளுங்கள். அதிலிருந்து உங்களுக்கு எழுதுவதற்கான மனநிலை கிடைக்கும். க்வண்டின் டொராண்டினோ இம்முறையைப் பின்பற்றுகிறார் என்று தீஷா சொல்கிறார். இனி திரைக்கதை எழுத நினைப்பவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம்.

ஆண் எழுத்தாளர் ஒரு பெண் கதாபாத்திரத்தை உருவாக்கும்போது முழுமையடையவில்லை என்று நினைக்கும் இளம் எழுத்தாளர்களுக்கும், அந்தக் கதாபாத்திர வார்ப்பில் திருப்தி இல்லை என்று உணர்பவர்களுக்கும் தீஷா முன்வைக்கும் ஆலோசனை ஆரோக்கியமான அறிகுறியாகவே தென்படுகிறது. அவர் சொல்வது இதுதான்: ஒரு பெண் கதாபாத்திரத்தை ஆண் கதாபாத்திரம் போலவே எழுதுங்கள். அவர்களுக்கான இலக்கு, நடவடிக்கை என்று எல்லாம் எழுதி முடித்துவிட்டு பெயரை மட்டும் பெண்ணின் பெயரில் வையுங்கள் என்கிறார்.

நீங்கள் எவ்வளவு முயற்சித்தும் திரைக்கதை ஒரு நல்ல வடிவத்தை அடையவில்லையா? இப்போது மாற்றுங்கள். பிரதான கதாபாத்திரம் கதையின் ஆரம்பத்திலிருந்து இறுதி வரை ஒரே மாதிரியாக இருந்தால் அது பார்வையாளர்களுக்கு சலிப்பை உண்டாக்கும். அதனால் ஆரம்பத்தில் காட்டப்படுகிற கதாநாயகனுக்கும் இறுதியில் காண்பிக்கப்படும் கதாநாயகனுக்கும் வித்தியாசம் இருக்கும்படி கதாபாத்திரத்திடம் மாற்றத்தை நிகழ்த்துங்கள். தைரியம், துணிச்சல் இல்லாதவன் இறுதியில் துணிச்சல் பெறுபவனாகக் காட்டப்பட வேண்டும் என்று திரைக்கதை எழுதுவதற்கான ஆர்வத்தை விதைக்கிறார்.

ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே மூச்சில் எழுத முயற்சி செய்ய வேண்டாம். வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நேரங்களில் எழுதும்போது மாறுபட்ட கண்ணோட்டமும், பல பரிமாணங்களும், முன்னோக்குப் பார்வையும் கிடைக்கும் என்று அறிவுறுத்தும் தீஷாவின் அணுகுமுறை எளிமையாக உள்ளது.

பலவிதமான கதைக் கருக்களும், ஐடியாக்களும் இருக்கும்போது எதை முதலில் எழுதுவது என்ற சந்தேகம் வருகிறதா? உங்களுக்கு கடைசி வாய்ப்பு கொடுக்கப்பட்டால் உங்கள் திறமையை நிரூபிக்க எந்தக் கதையை திரைக்கதையாக மாற்றுவீர்கள். அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்றும் ஒரு தோழனைப் போல ஊக்குவிக்கிறார்.

பெயர்களில் ஏற்படும் குழப்பங்களைத் தவிர்த்தல், எளிதான சிக்கலை கதாநாயகனுக்கு ஏன் கொடுக்கக்கூடாது, கதாபாத்திரங்களுக்கு தனித்திறன்கள் ஏன் அவசியம், கதாபாத்திரத்தை செயலின் வழியாக அறிமுகப்படுத்துவதற்கான தேவை என்ன, திரைக்கதையின் பிரதியை ஏன் மீண்டும் மீண்டும் திருத்த வேண்டும் உள்ளிட்ட திரைக்கதை எழுதுவதற்கு அவசியமான 120 குறிப்புகளை அழகாகக் கொடுத்துள்ளார்.

திரைக்கதையில் ஏற்படும் சந்தேகங்களைப் போக்கி, நுட்பமாக திரைக்கதை எழுத, நல்ல கதையை சிறந்த திரைக்கதையாக கட்டமைக்க திரைக்கதை A-Z என்ற புத்தகம் முழுமையாக உதவும்.

நூல்: திரைக்கதை A-Z

நூலாசிரியர்: தீஷா (தமிழில்)

விலை: ரூ.100

 

தொடர்புக்கு:

பேசாமொழி பதிப்பகம்,

பியூர் சினிமா புத்தக அங்காடி,

7, சிவன் கோயில் தெரு,

வடபழனி (கமலா திரையரங்கம் அருகில்),

சென்னை - 26.

044-48655405

9840644916புத்தகத் திருவிழாசினிமாதிரைக்கதைதிரைக்கதை A-Z

Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x