Last Updated : 05 Dec, 2018 09:48 AM

 

Published : 05 Dec 2018 09:48 AM
Last Updated : 05 Dec 2018 09:48 AM

வாட்ஸ்அப் பேத்தல்ஸ்

தகவல் பரிமாற்றத்தை மாபெரும் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக் கிறது வாட்ஸ்அப். கூடவே, பேத்தல்களையும்!

‘‘வேன் கவிழ்ந்து எல்கேஜி குழந்தைகள் 33 பேர் படுகாயம்..’’, ‘‘புகைப்படத்தில் இருக் கும் இந்த பிள்ளைகளைக் காணவில்லை..’’, ‘‘ஓ பாசிட்டிவ் ரத்தம் தேவை...’’ என்பதாகப் பட்ட பரபரப்பு தகவல்கள், 2009 பிப்ரவரி 24-ம் தேதி சுபயோக சுபதினத்தில் வாட்ஸ் அப் தனது சேவையைத் தொடங்கிய நாள் முதல் சராசரியாக 2 வாரத்துக்கு ஒரு முறை உலா வந்துகொண்டிருக்கும் ‘JUST IN முக்கியச் செய்திகள்’. ஒரு சுவாரஸ்யத் துக்காக கூடூர், கூடுவாஞ்சேரி, கூத்தம் பாக்கம், கூத்தாநல்லூர் என்று ஊர் பெயரை மட்டும் அவ்வப்போது மாற்றிப் பரப்புவார்கள்.

கருணையே வடிவான ஆஞ்சநேயர், சாய் பாபா படங்களைப் போட்டு, கூடவே ‘‘பதினஞ்சு குரூப்புக்காவது அனுப்பாவிட் டால் ரத்தம் கக்குவாய்’’ என்று மிரட்டும் ரகங்கள் சில.

‘‘திருநள்ளாறு சனி பகவான் கோயிலுக்கு மேலே பறக்கும் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையம் மற்றும் செயற்கைக் கோள்கள் எல்லாம் ஒரு விநாடி அப்படியே நின்றுவிட்டு, பிறகு பயணத்தை தொடர்கின்றன...’’ என்பது போன்ற ஆன்மிக பேத்தல்கள் தனி.

இது ஒரு பக்கம் என்றால், மூளைக்கு வேலை கொடுக்கும் பேத்தல்கள் தனி ரகம்.

வரிசைக்கு மூன்று என மூன்று வரிசை யில் மொத்தம் 9 எண்கள் கொடுக்கப்பட்டிருக் கும். ‘இதில் ஏதாவது ஒரு நம்பரை நெனைச்சுக்கோங்க. அது மறைஞ்சு போறதைப் பார்த்து மலைச்சு நில்லுங்க’ என்று கூறப்பட்டிருக்கும். என்ன அதிசயம்... கண்ணை மூடித் திறந்தால், நாம் நினைத்த நம்பர் மறைந்து போயிருக்கும். ‘அட, நாம் நினைத்த நம்பர் இந்த வாட்ஸ்அப்காரனுக்கு எப்படி தெரிஞ்சுது?’ என்று முதலில் சற்று வியக்கத்தான் வைக்கும். உண்மை என்னவென்றால், முதலில் காட்டப்பட்ட எந்த நம்பருமே 2-வது செட்டில் இருக்காது. அதுதான், எந்த நம்பர் நினைச்சாலும் மறைந்துபோகும் சூட்சுமம்.

இதுபோல, ‘மூளைக்கு வேலை’ டிசைனில், லேட்டஸ்ட்டாக வைரலாகிக் கொண்டிருக்கும் மெசேஜ் இது...

‘‘2018. இது ஓர் அற்புதமான ஆண்டு. 1,000 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இதுபோன்ற அதிசயம் நிகழும். உங்கள் வயதையும், நீங்கள் பிறந்த ஆண்டையும் கூட்டினால், ‘2018’ வரும். அதெப்படி, எல்லோருக்கும் மிகச்சரியாக ‘2018’ வருகிறது என்பது உலகின் மிகச் சிறந்த கணித வல்லுநர்களால்கூட கண்டுபிடிக்க முடியாத புதிராக இருக்கிறது. நீங்களும் கூட்டிப் பாருங்கள். வியந்துபோவீர்கள். இனி, இதுபோன்ற அற்புத ஆண்டு 1,000 ஆண்டுகள் கழித்துதான் மீண்டும் வரும்.’’

இதைப் பார்த்த பிறகு, பலருக்கும் முதல் வேலை பென்சிலை தேடி எடுத்து, கூட்டிப் பார்த்து, ‘அட, 2018 வருகிறதே’ என்று வியப்பதுதான். அடுத்த வேலை, இந்த ‘அறிவுபூர்வ’ மெசேஜை ஒட்டுமொத்த குரூப்புகளுக்கும் அனுப்பி வைப்பது!

நடப்பு ஆண்டில் இருந்து, பிறந்த ஆண்டை கழித்தால் வருவதுதான் வயது. ஆக, பிறந்த ஆண்டுடன் வயதைக் கூட்டி னால் நடப்பு ஆண்டுதான் வரும் என்று மூணாங்கிளாஸ் குழந்தைகூட சொல்லி விடும்.

‘அற்புத’ மெசேஜை பார்த்த ஆச்சரியத் தில், பலரும் இப்படி சிந்தித்துப் பார்ப் பதில்லை. ‘யான் பெற்ற ஆச்சரியம் பெறுக இவ்வையகம்’ என்று அந்த பேத்தலை அப்படியே ஃபார்வர்டு செய்கிறோம். பேத்தல்களை வைரலாக்கி விடுகிறோம்.

தகவல் பரிமாற்றமே சிரமமாக இருந்த காலகட்டத்தைவிட, இதுபோன்ற தகவல் குப்பைகளுக்கு நடுவில்தான் நாம் இன்னும் உஷாராக இருக்க வேண் டும். கவனமாக இருப்போம். பேத்தல் மெசேஜ்கள் வைரலாகாமல் இரும்புக்கரம் (ஆள்காட்டிவிரல்) கொண்டு ‘டெலீட்டு வோம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x