Published : 11 Dec 2018 06:09 PM
Last Updated : 11 Dec 2018 06:09 PM

வந்தாள் வைஷாலி: இப்போது எப்படி இருக்கிறாள்?

மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஏழை இளம்பெண் வைஷாலி, குஜராத்தில் விபத்தில் சிக்கி சென்னையில் தன் வாழ்க்கையை மீட்டெடுத்தாள். கட்டிட வேலையின்போது லிஃப்டில் சிக்கிய வைஷாலியால் வாயைத் திறக்க முடியாமல் போனது. கண்பார்வையும் பறிபோனது.

கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்னதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் வழிகாட்டலால்  எதேச்சையாக 'இந்து தமிழ் திசை' அலுவலகம் வந்தாள் வைஷாலி. ஆசிரியரின் உதவியோடு புகழ்பெற்ற முகச்சீரமைப்பு நிபுணர் மருத்துவர் எஸ்.எம்.பாலாஜியை அணுகினோம்.

விபத்து நடந்ததில் இருந்து ஓராண்டுக்கும் மேலாக வைஷாலியின் வாய் திறக்கப்படாமலே இருந்ததால் அப்பகுதியில் ரத்த ஓட்டம் அறவே இல்லாமல் போனது. இதனால் வாய்க்குள் உள்ள மற்ற பகுதிகளில் இருக்கும் திசுக்களை எடுத்து அண்ணப்பகுதியில் உள்ள ஓட்டையை மூட முடியாத நிலை உருவானது. (அண்ணத்தில் ரத்த ஓட்டம் இல்லாததால், சிகிச்சை செய்து பொருத்தப்படும் திசுக்கள் உடைந்து மீண்டும் ஓட்டை ஏற்பட வாய்ப்புண்டு)

இவையனைத்தையும் கவனமாக ஆராய்ந்த மருத்துவர் பாலாஜி அண்ணத்தில் உள்ள ஓட்டையைத் தற்காலிகமாக அடைக்க, அண்ணத்தின் நிறத்திலேயே இருக்கும் அக்ரிலிக் ப்ளேட்டை (Obturator) பொருத்தினார். இதன் மூலம் வைஷாலியின் வாய்ப்பகுதி முழுமையாக சீரானது.

வயிற்றில் பொருத்தப்பட்டிருந்த ட்யூப் (Feeding Jejunostomy) மூலம் பழச்சாறு, பால், மோர் உள்ளிட்ட திரவங்களை மட்டுமே வைஷாலி பருகிவந்த நிலை மாறியது. மீண்டு வந்த வைஷாலி சாப்பிடவும் பேசவும் செய்தாள். இதுதொடர்பான செய்திகள் 'இந்து தமிழ் திசை' நாளிதழ் மற்றும் இணையத்தில் தொடர்ந்து வெளியாகின.

இது தொடர்பாக மருத்துவர் எஸ்.எம்.பாலாஜி கூறும்போது, ''வைஷாலியுடைய வாயின் மேல் அண்ணத்தில் தற்காலிகமாக அக்ரிலிக் ப்ளேட் மட்டுமே பொருத்தப்பட்டுள்ளது. வைஷாலி வாயில் இனி தொடர்ந்து இயக்கம் இருப்பதால், சில மாதங்களில் மீண்டும் ரத்த ஓட்டம் உண்டாக அதிக வாய்ப்புள்ளது. அப்போது வைஷாலியின் வாய்ப்பகுதியில் உள்ள திசுக்களை வைத்தே மீண்டும் அறுவை சிகிச்சை செய்துவிடலாம்'' என்று தெரிவித்திருந்தார். மீண்டும் குஜராத் சென்றாள் வைஷாலி.

இயல்பாக இருந்த வைஷாலிக்கு மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்பட்டது. வைஷாலியின் வாயில் பொருத்தப்பட்டது தற்காலிக அக்ரிலிக் ப்ளேட் என்பதால் தினசரி அதைக் கழற்ற வேண்டியுள்ளது. சில சமயங்களில் சாப்பிடும்போது உணவுத்துகள்கள் அதில் சிக்கிக் கொள்வதால், தொற்று ஏற்படுகிறது. அப்போதெல்லாம் வீக்கத்துடனும் வலியுடனும் வேதனைப்படுகிறாள் வைஷாலி.

 

இதை அறிந்து வைஷாலி மற்றும் வைஷாலியின் தாயை சென்னை வரவழைத்தோம். வைஷாலியை மீண்டும் பரிசோதித்த மருத்துவர் பாலாஜி தற்காலிக நிவாரணமாக வலி மாத்திரைகளை அளித்தார். இதை எடுத்துக்கொண்டதும் வைஷாலியின் வலி குறைந்தது. அதையடுத்து அறுவைசிகிச்சை குறித்துப் பேசினார் மருத்துவர் பாலாஜி.

''வாய்ப்பகுதியில் இன்னும் ரத்த ஓட்டம் இல்லை. மிகவும் சிக்கலான சிகிச்சை என்பதால் இதை ரத்த நாள நிபுணரும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணரும் இணைந்துதான் மேற்கொள்ள வேண்டும். நான் இதை மேற்கொள்ள முடியாது என்பதால் வெளியில்தான் சிகிச்சை செய்யவேண்டும். இதற்கு குறைந்தபட்சம் ரூ.2 லட்சம் தேவைப்படும்'' என்கிறார்.

*

கையில் கிடைக்கிற காசை வைத்து பழச்சாறுகள் வாங்கிப் பருகிய வைஷாலி, இன்று வயிராறச் சாப்பிடுகிறாள். வாயை அசைக்கக்கூட முடியாமல் இருந்த வைஷாலி, இன்று வாய் திறந்து பேசுகிறாள். இவையனைத்துக்கும் வாசகர்களாகிய நீங்கள்தான் காரணம். உங்களின் அன்பும், அக்கறையும், ஆதரவும், உதவியுமே இதற்குக் காரணம்.

 

வைஷாலியை முழுமையாக்குவதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் இரண்டுதான். சிக்கலான அறுவைசிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துமுடிக்க வேண்டும்.  பறிபோன கண் பார்வையை வைஷாலி திரும்பப் பெற வேண்டும். பார்வையைத் திரும்பப் பெற முடியாது என்று பல்வேறு மருத்துவர்கள் கைவிரித்துவிட்ட நிலையில் தொடர்ந்து முயன்று வருகிறோம். இவை இரண்டும் வாசகர்களாகிய உங்களால் நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறோம்.

 

தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

*

வைஷாலிக்கு உதவ விரும்புபவர்களுக்காக.. வைஷாலியின் வங்கிக் கணக்கு குறித்த விவரம்:

Acc Name: VAISALI MANOHAR PAWAR

Acc No: 916010031591536

AXIS BANK (METODA, GIDC)

IFSC Code- UTIB0000809

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x