Published : 01 Dec 2018 07:48 PM
Last Updated : 01 Dec 2018 07:48 PM

நம்பிக்கை முகங்கள்: 5 - பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்

டெல்டா மாவட்டங்களை ‘கஜா’ புயல் புரட்டிப்போட்டு 14 நாட்களாகிவிட்டன. இந்தப் புயலால் 63 பேர் மரணமடைந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. லட்சக்கணக்கான மரங்கள் அழிந்துவிட்டன. ஏராளமான ஆடு, மாடுகளும் இறந்துவிட்டன.

டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பாலானவர்களின் வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்கள் அழிந்து, எல்லோரையும் மீளாத் துயரில் ஆழ்த்திவிட்டன. இந்த மரங்கள் அத்தனையையும் மறுபடியும் வளர்த்தெடுக்க முடியுமா என்பது சந்தேகமே.

இவர்களின் துயர் துடைத்தவர்களில் முக்கியப்பங்கு வகித்தவர்கள், வெளிநாடுகளில் வசிக்கிற, வேலை பார்க்கிற தமிழர்கள். அதில் குறிப்பிடத்தக்கது, பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்.

‘பஹ்ரைன் வாழ் தமிழர்களுக்காக, தமிழகம் வாழ் உணர்வாளர்களுக்காக’ என்ற கோட்பாடுடன் செயல்படும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம், மனாமா இந்தியன் கிளப் வளாகத்தில் நிவாரணப் பொருட்கள் சேகரிப்பு மையத்தை, சங்க விளையாட்டுத்துறை இணைச் செயலாளர் தாமரைக்கண்ணன் பொறுப்பில் அமைத்தது.

செவ்வாய்க்கிழமை முதல் வியாழக்கிழமை வரை மூன்று நாட்களுக்குப் பொருட்கள் சேகரிக்கப்பட்டன. பால் பவுடர், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள், எல்இடி விளக்குகள், பெண்கள் - குழந்தைகள் நாப்கின், ஆண், பெண், குழந்தைகளுக்கான உடைகள், போர்வைகள், துண்டுகள் அடங்கிய சுமார் 35 லட்சம் இந்திய ரூபாய் மதிப்புடைய 2,200 கிலோ பொருட்கள் முறையாக அட்டைப்பெட்டிகளில் அடைக்கப்பட்டு, அனைத்தும் விமானத்தில் கொரியர் மூலம் துபாய் வழியாக சென்னை வந்து, பின்பு லாரிகளில் நாகப்பட்டினம் சென்றடைந்தது.

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க உறுப்பினர்கள், இந்தியன் கிளப், செந்தமிழர் பாசறை, கலாலயா, தெலுங்கு கலா சமிதி, ரஜினி மக்கள் மன்றம், டாஸ்கா தமிழ் மன்றம், டிஸ்கா திருவள்ளுவர் மன்றம், விஜய் மக்கள் இயக்கம், கேரளிய சமாஜம், அல் கானா நிறுவன ஊழியர்கள், அல் அயாம் நிறுவன ஊழியர்கள், அப்ரியல் நிறுவன ஊழியர்கள், பூர்ணா கார்ப்பரேஷன், சர்ச் ஒப் கிறிஸ்ட் தமிழ் மற்றும் பஹ்ரைன் வாழ் தமிழர்கள் ஆகியோர் இந்த நிவாரணப் பொருட்களைத் தந்தனர்.

பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்க வளர்ச்சித்துறை செயலாளர் பஞ்சு ராஜ்குமார் மற்றும் வேலைவாய்ப்புத்துறை துணைச் செயலாளர் பிரதீப் ஆகியோர் நேரடியாகக் களத்திற்குச் சென்று, உள்ளூர் மக்கள் உதவியுடன் இன்றுவரை நிவாரணப் பொருட்கள் கிடைக்காத, பொருட்கள் சென்று சேராத கிராமங்களுக்கு சிறிய வண்டிகள் மூலம் விநியோகம் செய்தனர். பொருட்களைப் பெற்றுக்கொண்ட பாதிக்கப்பட்ட மக்கள், கண்ணீருடன் அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

சமீபத்தில் கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கத்தின் மூலம் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டது. கடல் கடந்து இருந்தாலும், ‘கஜா’ புயலின் துயர் துடைத்திருக்கிறது பஹ்ரைன் தமிழ் உணர்வாளர்கள் சங்கம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x