Published : 05 Nov 2018 17:22 pm

Updated : 05 Nov 2018 17:23 pm

 

Published : 05 Nov 2018 05:22 PM
Last Updated : 05 Nov 2018 05:23 PM

செம்பங்குலம் தந்த மயிலம் தீபாவளி: சர்வ சமயத்தவரும் கொண்டாடும் ஆச்சரிய கிராமம்

வருஷத்தில் ஒருநாள் தீபாவளி கொண்டாடுவதற்குள்ளேயே குடும்பத் தலைவன் பாடு திண்டாட்டமாகிப் போய் விடுகிறது. கோவை பொள்ளாச்சி அருகே உள்ள வடசித்தூர் கிராமத்தில் தீபாவளியோடு வரும் இரண்டாவது நாளும் ஒரு தீபாவளியைக் கொண்டாடி வைக்கின்றனர் மக்கள். ‘ஏதாவது ஒரு வருடம் இதே தீபாவளி மூன்றாவது நாளும் நீடிப்பது உண்டு’ என்றும் சொல்லி அதிசயத்தில் ஆழ்த்துகிறார்கள். இந்த இரண்டாவது தீபாவளிக்குப் பெயர் மயிலம் தீபாவளி.

‘ஊரு, உலகத்திலேயே வாரத்தில் இரண்டு நாட்கள் மாட்டுச்சந்தை கூடுவது பொள்ளாச்சியில் மட்டும்தான். வியாழக்கிழமை கூடும் மாட்டுச்சந்தையில் பசு, காளை, எருமை, ஆடு என சகல கால்நடைகளும் இடம் பிடித்திருக்கும். அதற்கு அடுத்த நாள் கூடும் சந்தையில் வண்டிகளுக்குப் பூட்டும் மயிலைக் காளைகளாக இடம் பிடிக்கும். எனவே அந்த சந்தைக்குப் பெயர் மயிலம் சந்தை. இரண்டாவது நாளும் சந்தை நடப்பதால் அதற்கு மயிலம் சந்தை என்று வழங்கப்படுவதால், அதேபோல் இங்கே இரண்டாம் நாள் கொண்டாடும் தீபாவளி மயிலம் தீபாவளி எனப் பெயர் வைத்திருக்கிறார்கள் மூதாதைகள்!’ என்கிறார் இதைப் பற்றி வடசித்தூர் நண்பர் குழுவைச் சேர்ந்த பொன் இளங்கோ.


வடசித்தூரில் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. அவர்களில் 25 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். பெரும்பான்மை சமூகத்தில் செம்மங்குலம் உட்பிரிவினரே மிகுதி. இந்த செம்பங்குலத்தவர்கள் காலங்காலமாக செவ்வாய்க்கிழமைகளிலும், அமாவாசை தினத்தன்றும் அசைவ உணவு சாப்பிடுவதை தவிர்த்தே வந்துள்ளனர்.

பொதுவாகவே தீபாவளி பண்டிகை என்பது வெறுமனே பட்டாசு, மத்தாப்பு வெடிப்பதோடும், இனிப்பு பட்சணங்களோடும் கொங்கு மண்டல கிராமங்களில் நின்று போவதில்லை. முக்கியமாக கறி விருந்து என்பது அவர்கள் வீடுகளில் அமர்க்களப்படும். தீபாவளியன்று விடிய விடிய கசாப்புக்கடைகள் திறந்திருப்பதும், பல்லாயிரக்கணக்கான ஆடுகள் வெட்டுப்படுவதும், காலை, மதியம் இரவு என மூன்று வேளையும் விதவிதமான அசைவ உணவு வகைகள் உண்டுகளிப்பதும் தொன்று தொட்டு நடந்து வரும் ஒன்று.

அப்படியிருக்க தீபாவளி என்பது அமாவாசை, செவ்வாய்க்கிழமை போன்ற நாட்களில் வர, அந்த நாளுக்கான கறி விருந்தை அடுத்த நாளுக்கு மாற்றி வைத்திருக்கின்றனர். அப்படி வெறுமனே கறி விருந்து சாப்பிட்டால் போதுமா? கேளிக்கைகளும் இருக்க வேண்டாமா? வாண வேடிக்கை, கோலாட்டம், கும்மியாட்டம் என கிராமியத் திருவிழாவுக்கு என்னென்ன அடையாளங்கள் உண்டோ, அதையெல்லாம் இதிலும் புகுத்தி விட்டனர். ஆக, தீபாவளியன்று பட்டாசு, மத்தாப்பு வெடி வெடித்து இனிப்பு பலகாரங்களோடு பாதி தீபாவளியை கொண்டாடி முடித்த மக்கள், அடுத்த நாள் கறி விருந்துகளால் அமர்க்களப்படுத்த ஆரம்பித்திருந்திருக்கிறார்கள்.

தீபாவளி திங்கட்கிழமை வந்து, அடுத்தநாளே செவ்வாய்க்கிழமை வந்து விட்டால் அந்த நாளில் கறி சமைக்காமல் அதை புதன்கிழமைக்கு மாற்றி விடுகிறார்கள். இதன் மூலம் திங்கட்கிழமை தீபாவளி வரும் வருடங்களில் மூன்று நாள் தீபாவளி கொண்டாட்டங்கள் இங்கே நிறைந்திருக்கும். அந்தக் காலத்தில் விவசாயமே பிரதான தொழில் மற்றவை எல்லாம் அதன் சார்புத் தொழில். செம்பகுலத்தவர்கள் எல்லாம் நிலம், நீச்சு வைத்து விவசாய பரிபாலனை புரிந்து, பண்டிகையையும் மாற்றிக் கொண்டாடியதால் அதைச் சார்ந்து நின்ற மற்ற சமூகமும் அதையே பின்பற்ற ஆரம்பித்து அதுவே இரட்டை தீபாவளி கொண்டாடும் கிராமமாகவே இது மாறிப்போனது. இந்த ஆண்டு மயிலம் தீபாவளிக்கும் வடசித்தூர் தயாராகிக் கொண்டிருக்க அங்குள்ள மக்கள் சிலரை சந்தித்துப் பேசினேன்.

‘எம் பூர்வீகமே இதுதாங்க. நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து ரெண்டு தீபாவளியைக் கொண்டாடிட்டு இருக்கேன். தீபாவளியன்னைக்கு ஊட்ல நாலுபேர்தான் இருப்போம். அதுவே மயிலம் தீபாவளி அன்னெய்க்கு மக்க, மருமக்க, பேரன் பேத்தி, மாமன், மச்சினனுகன்னு பத்திருபது பேர் வந்து ஊரே நிறைஞ்சிருக்கும். இப்பத்தான் இந்த மயிலம் தீபாவளிக்கு அர்த்தம் என்னன்னவோ சொல்றாங்க. ஆனா எங்க ஊட்டு பெரிசுக எனக்கு வேற கதையைச் சொல்லியிருக்காங்க. அதாவது அந்தக் காலத்துல தீபாவளி அன்னெய்க்கு பண்ணை ஆளுக வேலைக்கு வரமாட்டாங்க. அதனால ஊட்டுல இருக்கிற எளந்தாரி பசங்க தோட்டங்காட்டு காவலுக்கு போயிருவாங்க. அடுத்தநாள் அந்த மைனர்களுக்குன்னே இந்தத் தீபாவளியை கொண்டாடினதால மைனர் தீபாவளின்னு ஆச்சாம்!’ என புதுவியாக்கியானம் சொன்னார் ராஜதுரை என்பவர்.

அதே வேகத்தில் பேசிய சின்னதுரை என்பவர், ‘கோயில் திருவிழா போல ஊருக்குள்ளே ராட்டாந்தூரி, கோலாட்டம், மயிலாட்டம், கும்மியாட்டம் எல்லாம் நடக்கிறதால, அதுக்கு மைனர்களே நிறைய கூடினதாலதான் மயிலம் தீபாவளி மைனர் தீபாவளின்னு ஆச்சே ஒழிய வேறொன்றுமில்லை!’ முந்தையவர் கூற்றை மறுத்தார்.

வெட்டுக்காட்டு மயில்சாமி பேசும்போது, ‘எனக்கு நினைவு தெரிஞ்ச நாளிலிருந்து மயிலம் தீபாவளிக்கு 50 பேருக்கு குறையாம சொந்த பந்தங்க சேர்ந்துடும். ரெண்டு சேவக்கோழி, ஒண்ணு ரெண்டு வெடக்கோழி, அது போக கிடாகறின்னு அந்த நாள்ல மொடாமொடாவா கறிதான் வேகும். இந்த வருஷமும் அதுக்கு குறைவிருக்காது!’ என்றார்.

‘பனப்பட்டி, மெட்டுவாவி, கரியாம்பாளையம், மன்றாம்பாளையம், குரும்பபாளையம், காரச்சேரி, செல்லப்பகவுண்டன்புதூர், மாதேகவுண்டன்புதூர், கொண்டம்பட்டி, ஆண்டிபாளையம், அரசம்பட்டின்னு சுத்தியும் 18 பட்டியும் அன்னைக்கு எங்க ஊருக்குள்ளேதான் இருக்கும். இதுல முஸ்லிம், கிறிஸ்டியன்னு பாகுபாடெல்லாம் கிடையாது. எங்க வீட்டுலயும் கறிவேகும். அவங்க வீட்டுலயும் வறுவல் மணக்கும். எங்கே போனாலும் யார் வேணும்னாலும் சாப்பிட்டுக்கலாம். அசலூர்க்காரங்க யார் வந்தாலும் ஏதாச்சும் ஒரு வீட்ல கறி சோறு சாப்பிடாம இங்கிருந்து தப்பிக்க முடியாது!’ என்றவர் சாட்சாத் ஓர் இஸ்லாமியர். அவர் பெயர் சுல்தான் காதர்.

அபிராமி பேசும்போது, ‘நான் பொறந்த ஊர் ஆழியாறு பக்கம். கட்டிக் கொடுத்ததுதான் வடசித்தூர். எங்க ஊர்ல இருக்கிற வரைக்கும் மயிலம் தீபாவளின்னா என்னன்னு தெரியாது. தலை தீபாவளிக்கு பொறந்த ஊருக்கு போய் தீபாவளி கொண்டாடினேன். அடுத்தநாளே இங்கே வந்து மயிலம் தீபாவளி கொண்டாடினேன். அதுக்கப்புறம் வருஷம் தவறினாலும் தவறும் ரெண்டு தீபாவளி கொண்டாடறது நிக்கவேயில்லை. எங்கூர்ல இருந்து இங்கே அந்தநாள் வந்துடுவாங்க. இந்த ஊர்லயிருந்து வெளியூருக்கு, வெளிநாட்டுக்கு கட்டிக் கொடுத்த பொண்ணுகளை கூட மயிலம் தீபாவளியன்னைக்கு இங்கே பார்க்கலாம்!’ என்று உணர்வு பொங்கிடப் பேசினார்.

அதையே ஆமோதித்த மகேஸ்வரி, விஜயகமலம், லட்சுமி ஆகியோர், ‘இங்குள்ள பெண்களுக்கு சாதாரண தீபாவளியை விட மயிலம் தீபாவளிதான் பிடிக்கும். ஏன்னா பிறந்த ஊரு, புகுந்த ஊருன்னு எல்லா இடத்திலும் அவங்கவங்க தீபாவளியைக் கொண்டாடிடுவாங்க. மத்த ஊருக்கு வரமுடியாது. அதிலும் ஓர் ஊரிலிருந்து கட்டிக் கொடுக்கப்பட்ட பொண்ணுக, தலை தீபாவளிக்கு மட்டும்தான் பிறந்த ஊருக்கு வர முடியும். அப்புறம் புகுந்த வீட்லதான். ஆனா இங்கே அந்த மரபு உடையுது. எங்கே கட்டிக் கொடுத்திருந்தாலும் அந்த பொம்பளைப் புள்ளை இந்த மயிலம் தீபாவளிக்கு புறப்பட்டு இங்கே வர முடியுது. அதேபோல இங்கே கல்யாணமாகி வந்த பொண்ணு முதல் வருஷம் மட்டுமல்ல, எல்லா வருஷமும் அவங்க அப்பன், அம்மா, கூடப் பொறந்தவங்களை கூப்பிட்டு மயிலம் தீபாவளிக்கு கறி விருந்து போட முடியுது. இப்படி சொந்த பந்தங்களோட ஒற்றுமையா ஒரு தீபாவளியைக் கொண்டாட முடியுமா? அது மயிலம் தீபாவளிக்கு மட்டும்தான் கொடுத்து வச்சிருக்கு. இந்த வருஷமும் நாங்க சொந்த பந்தங்க அத்தனைபேரையும் ஒவ்வொரு ஊர்லயிருந்தும் எதிர்பார்த்துட்டு இருக்கோம்!’ என்றனர்.

வருஷா வருஷம் மயிலம் தீபாவளிக்கு கூட்டம் சேர்த்து கும்மியாட்டம் போடும் அங்குசாமிக்கு மட்டும் மயிலம் தீபாவளியில் சற்று வருத்தம். ‘ராட்டாந்தூரி, குடைதூரி எல்லாமே ஊருக்குள்ளே பத்திருபதுன்னு வந்துடுது. கேளிக்கை விளையாட்டுகள், பொம்மைப் பொருட்களும் கடைவீதியில நிறைஞ்சிடுது. ஆனா கும்மியாட்டம், கோலாட்டம் மட்டும் மெல்ல மெல்ல குறைஞ்சிட்டே வருது. ‘நான் எளந்தாரியா இருக்கும்போது கும்மியாட்டம், கோலாட்டம் போட நூறு, இருநூறு பேர் சேருவார்கள். அவங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுப்பேன். வட்டமும் பெரிசா போயிட்டே இருக்கும். இப்ப அஞ்சாறு வருஷமா அதுக்கு இருபது முப்பது பேர் மட்டுமே சேர்றாங்க. வட்டமும் சிறிசாயிட்டே போகுது!’ என்கிறார் இவர்.

ஊருக்குள் மயிலம் தீபாவளியை ஒட்டி ஒவ்வொருவரிடமிருந்தும் ஒவ்வொரு கருத்துகள் புறப்படுகின்றன. அதையெல்லாம் மீறி, இந்த மயிலம் தீபாவளி கிராமத்தைச் சுற்றி சுற்றி நான் வந்தபோது, அவர்களிடம் பேசி விடைபெற்ற போது, ‘இந்த வருஷம் மயிலம் தீபாவளிக்கு நீங்களும் வாங்க. எங்க வீட்டு கறிசோறை நீங்க ருசி பார்த்துத்தான் ஆகணும்!’ என்று அழைக்காதவர்களே இல்லை. சாதி, மதம், இனம், ஏற்றத்தாழ்வு இல்லாமல் இப்படி அழைக்கப்படும் விருந்தோம்பலுக்குப் பெயர்தான் மயிலம் தீபாவளி என்றால் இதை விட பெரிய சிறப்பான தீபாவளி பண்டிகை ஒரு ஊரில் மட்டுமல்ல, நாட்டிலும் உலகத்திலும் கூட இருக்க முடியாது.



Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

More From this Author

x