Published : 24 Nov 2018 07:58 PM
Last Updated : 24 Nov 2018 07:58 PM

கோவை தினம்: எங்கே போனது பஞ்சாலைகள்?

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று புகழுக்குரிய நகரம் கோவை. இங்கிலாந்து நாட்டில் பருத்தி, பஞ்சு, நூல், துணி என சகலத்திற்கும் அச்சாரம் இட்ட நகரம் மான்செஸ்டர். அதுபோல இந்தியாவில் உருவான இரண்டே நகரங்கள் மும்பையும், அதற்கடுத்து கோவையும்தான். கடும் வெயிலும் இல்லாமல், கடுங் குளிரும் இல்லாமல் இருக்கும் மிதமான சீதோஷ்ண நிலை, மெலிதாக அடிக்கும் கூதக்காற்று, பருத்தி விளையும் கரிசல் மண், உழைப்புக்கு அஞ்சாத கிராமப்புற மக்கள்.

இவைதான் 1890ல் முதல் பஞ்சாலையான ஸ்டேன்ஸ் மில்லை தொடர்ந்து நூற்றுக்கணக்கான மில்கள் பெருக காரணமாக அமைந்தது. 1970 வாக்கில் கோவையின் பெரிய பஞ்சாலைகள், நூற்பாலைகள் 175ஐ தாண்டின. இதன் சார்பு மில்களான வேஸ்ட் காட்டன்களும் நூற்றுக் கணக்கில் பெருகின. அது மட்டுமா? இந்த பஞ்சாலை, நூலாலைகளுக்கு தேவையான உதிரிபாகங்கள், மோட்டார்கள், ஸ்டாட்டார்கள், டெக்ஸ்டைல் மிஷினரிகள் செய்வதற்கும் சிறு, குறு, பெரும் தொழிற்சாலைகள் உருவெடுத்தன.

அந்த வகையில் லட்சுமி மெஷின் ஒர்க்ஸ், டெக்ஸ்டூல் ஆலைகள் குறிப்பிடத்தக்கன. ஆலை முதலாளிகள், மானேஜர்கள், சூப்பர்வைசர்கள் பணம் படைத்தவர்களாக மாற, அவர்களுக்கான நான்கு சக்கர, இரண்டு சக்கர வாகனங்களுக்கான உதிரிபாகத் தொழிற்சாலைகள் உருவெடுத்தன. இவர்கள் அத்தனை பேரின் நுகர்வுக்கென மோட்டல்கள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், ஜவுளிக்கடைகள் என சகலமும் பெருக்கெடுத்தன.

1970களில் பெரிய ஆலைகளில் ஒரு ஆலைக்கு தலா 1000 பேர் முதல் 5 ஆயிரம் பேர் வரை பணியாற்றினர். அந்தக் காலத்தில் மில் தொழிலாளி என்பவன் மாதம் ரூ. 900 வாங்கிய காலத்தில் ஒரு பள்ளி ஆசிரியரின் சம்பளம் வெறும் ரூ. 150 முதல் ரூ. 300 தான். தவிர இந்த தொழிலாளி ஓவர் டைம், போனஸ், மருத்துவ லீவு சம்பளம் என கைநிறைய பெற்றான். ஒரு காலத்தில் 12 மணி நேர வேலை மேஸ்திரி எனப்படும் கங்காணிகள் சாட்டையை வைத்து அடித்து தொழிலாளியை வேலை வாங்கின காலம் மாறி, தொழிலாளர் போராட்டங்களின் மூலம் எட்டுமணிநேர வேலை. பிஎப், இஎஸ்ஐ, போனஸ், பெண்களுக்கு பேறு கால லீவு, மருத்துவவிடுப்பு என சகலமும் கிடைத்தன.

இதனால் வாங்கும் சக்தி அதிகரித்தது. 1980கள் வரை இதன் மூலம் பலன் பெற்றவர்கள் கோவை மாவட்டத்தில் 80 சதவீதம் பேர் (சுமார் 8 லட்சம் பேர்) பொருளாதார வளம் பெற்றனர். அன்றைக்கு பஞ்சாலைத் தொழிலாளி என்றால் மட்டுமே பெண் கொடுப்பது பழக்கமாகவே மாறியது. இப்படியாக இருந்த நிலை 1980 களில் எம்ஜிஆர் ஆட்சிக்கு பின்பு மாறியது. தொழிலாளர் சலுகைகள் முடக்கப்பட்டன. தொழிலாளர்கள் நசுக்கப்பட்டனர். அந்த அளவுக்கு தொழிலாளர் துறையில் லஞ்சமும் லாவண்யமும் பெருக்கெடுத்தது.

தொழில் முனைவோருக்கான சட்டங்கள் திருத்தப்பட்டன. சிறு மில்கள் ஊக்கப்படுத்தப்பட்டன. குறைந்த ஊதியம், நிறைந்த உற்பத்தி என வரும் சிறுமில்களுக்கு கிடைக்கும் லாபம் பெருமில்களை குப்புற சாய்த்தன. அதைத் தொடர்ந்து வந்து புதிய பொருளாதார கொள்கை. தாராளமயமாக்கல் இந்த துறையை வளர்த்ததோ இல்லையோ தொழிலாளர் நல சலுகைகளை புதை குழிக்கே இட்டுச் சென்றன. பெரிய மில்கள் எந்த வகையிலான தரமுள்ள நூல்களை உற்பத்தி செய்கிறதோ, அதே வகை நூல்களை சிறுமில்களும் தயாரிக்கலாம் என்ற நிலை ஏற்பட பெரிய மில்கள் அதோ கதிக்கு சென்றன.

வரிசையாய் பெரு மில்கள் பூட்டப்பட, சிறு மில்கள் பெருக்கெடுத்தன. பெரு மில் தொழிலாளர்கள் லே ஆப் என கூட்டம் கூட்டமாக வெளியேற்றப்பட, சிறு மில்கள் கேம்ப் கூலி சிஸ்டத்தில் தென்மாவட்டத்திலிருந்து 14-15 வயது சிறுமிகளை கூட புரோக்கர்கள் மூலம் அழைத்து வந்து அடிமைகளை போல தங்க வைத்தனர். அவர்களை 8 மணி நேரம் என்றில்லை; பனிரெண்டு, பதினாறு மணி நேரம் கூட வேலை வாங்க ஆரம்பித்தனர்.

உண்டி, உறையுள், மாதம் ஒரு சிறு தொகை கொடுப்பதோடு, மூன்று வருடம் கழிந்ததும் ரூ. 30 ஆயிரம் திருமணச் செலவுக்கு தரப்படும் என்று ஆசை வார்த்தை காட்டப்பட்டனர். அதற்கு மாங்கல்யத் திட்டம் என்றும் பெயரிட்டனர். இப்படி மூன்று வருடம் பயிற்சியாளராகவே உழைப்பு வாங்கப்பட்ட பெண்கள் பின்னர் திருமணமாகி புருஷன் வீட்டிற்கு செல்ல அந்த ரூ. 30 ஆயிரம் பயன்பட்டதோ இல்லையோ, அவர்களின் நெஞ்சுக்குழிக்குள் சிக்கிய பஞ்சுப் புகை மண்டலம், அதனால் ஏற்பட்ட ஆஸ்துமா, டி.பி உள்ளிட்ட நோய்கள் பாடாய் படுத்தின. இதிலிருந்து இன்னும் சிலர் தப்பிப்பிழைத்தாலும் வறுமையும் கொடுமையும் அவர்களை விடவில்லை.

மறுபடியும் மூன்றாண்டு கால ஒப்பந்தம். மறுபடி அட்வான்ஸ் தொகை. மறுபடி விரட்டல், வேலை வாங்கல் என புறப்பட்டனர். இதன் மூலம் மில் தொழிலாளி என்பவன் தொழிலாளி என்ற நிலை மாறி அத்துக்கூலி நிலைக்கும், அடிமைக்கூலி நிலைக்கும் மாற்றப்பட்டனர். இதில் சங்கம் சேர்க்கவோ, நியாயம் கேட்கவோ வாய்ப்பில்லை. அன்றைக்கு தொழிலாளியின் உரிமைக்காக போர்தொடுத்து குரல் கொடுத்த தொழிற்சங்கவாதிகள் எல்லாம் பெரிய அரசியல்வாதிகளாக மாறி விட்டனர்.

அதையும் மீறி நேர்மையாக சங்கம் வைக்கவும், சங்கம் நடத்தவும், சங்கத்தை தொடரவும் இருந்தவர்களை முதலாளிகள் உருவாக்கின பெயர் அளவு சங்கங்கள் இறுக்கி முடக்கி நசுக்கி கொன்றன. பஞ்சாலை என்றால் கைநிறைய சம்பளம் என்ற நிலை மாறி, பஞ்சாலை என்றால் கேம்ப் கூலி என்பதுதான் நிஜம் என்றே மக்கள் நம்ப ஆரம்பித்தனர்.

அன்றைய காலத்தில் இருந்த 175 பெரிய மில்களை துவம்சம் செய்த சிறிய இன்றைய கணக்குக்கு கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் மட்டும் 20 ஆயிரத்தை தாண்டும் என கணக்கிடப்படுகிறது. அவற்றில் சுமார் 15 லட்சம் பேர் வரை கூட பணிபுரியக்கூடும். அதில் கேம்ப் கூலிகளாக வருபவர்கள் மட்டும் 90 சதவீதம் பேருக்கும் மேலே.

அவர்களுக்கான மொத்த ஊதியம் என்று கணக்கிட்டால் மாதம் ரூ. 5 ஆயிரம் தாண்டினால் அதிசயமே. ரூ. 300 ஒரு அரசு பள்ளி ஆசிரியர் மாத ஊதியம் வாங்கும்போது, ரூ. 1000 மாத ஊதியம் பெற்ற பஞ்சாலைத் தொழிலாளி, இன்றைக்கு ரூ. 70 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியருக்கு சம்பளம் இருக்கும் நிலையில் பஞ்சாலை தொழிலாளி -அதுவும் இளம்பெண்கள் பயிற்சி என்ற பெயரில் வெறும் ரூ. 5 ஆயிரத்திற்கு அடக்கமாக வழங்கப்பட்டு நசுக்கப்படுகிறார் என்றால் இதை கொடுமை என்பதா, வளமை என்பதா?

இதோ சில பஞ்சாலைகள் பள்ளி இடைநிற்றலோடு வரும் இளம் பெண்களை தன் இருப்பிடத்திலேயே தங்க வைத்து 8 மணி நேர வேலை வாங்கிக் கொள்வதோ, அப்படியே கல்லூரியில் படிக்க வைப்பதாக சொல்கிறது. அதன் மூலம் ப்ளஸ்டூ, டிகிரி, முதுநிலை பட்டம் எல்லாம் கொடுத்து தன்னை பேருபகார வாதியாகக் காட்டிக் கொள்கிறது. அதை பெருமை பொங்க, இதுவல்லவோ பஞ்சாலை என்றெல்லாம் கொண்டாடுகிறார்கள் சில மேலோட்ட சிந்தனாவாதிகள்.

ஒரு இளம்பெண்ணை கசக்கி பிழிந்து தினம் எட்டுமணி நேரம் வாங்குதலின் மூலம் ஒன்றுக்கு நான்கைந்து மடங்கு கூலியையே சுரண்டிக் கொழுக்கும் ஆலை நிர்வாகங்கள் வருடத்திற்கு ரூ. 5 ஆயிரம் , ரூ. 10 ஆயிரம் செலவழித்து படிக்கவைக்கிறேன் என கிளம்புவது பேரதிசயமா என்ன?

ஒரு காலத்தில் ஒரு தொழிலாளி பல குடும்பங்களை வாழ வைத்து, தன் குடும்பத்தையும் பிழைக்க வைத்து, தன் குழந்தைகளையும் படிக்க வைத்தான். இன்றைக்கோ தொழிலாளியாகப்பட்டவன்/ள் அடிமைத் தொழிலாளியாக பஞ்சாலையிலேயே தங்கி, பணிபுரிந்து அவர்கள் கொடுக்கும் சோற்றையும், சாற்றையும் உண்டு, அவர்கள் கொடுக்கும் படிப்பையும் படித்து பிறகுதான் திருமணம் செய்து அன்றாட வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் தொழிலாளி முறையே எங்கோ இடிக்கிறதே.

அந்த இடித்தலுக்குள்தான் பஞ்சாலைகள் சிக்கித் தவிக்கின்றன. இங்கே பஞ்சாலைகள் உண்டு. அதுவும் முந்தையதை விட பலமடங்கு உற்பத்தி, பல மடங்கு தரத்துடன் கூடிய பல மடங்காக பஞ்சாலைகள் பெருகியிருக்கின்றன. ஆனால் தொழிலாளிதான், அன்றாடக் கூலியாகி காணாமலே போய்விட்டான். அதை சரிப்படுத்த சட்டங்களும், திட்டங்களும் சரியாக வேலை செய்ய வேண்டும். அதற்கான சரியான அரசியல் தலைவர்கள் வரவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x