Published : 31 Oct 2018 11:58 AM
Last Updated : 31 Oct 2018 11:58 AM

அன்பாசிரியர் 39: செங்குட்டுவன்- இந்தியா முழுக்க சொந்த செலவில் மாணவர்களை போட்டிகளுக்கு அழைத்துச்செல்லும் ஆசிரியர்!

| மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்லடையாள அணிவகுப்புத் தொடர் இது. |

11 முறை 5 மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து விருது, 13 விஞ்ஞானிகளிடம் விருது, பாராட்டு, 5 அமைச்சர்களிடம் இருந்து விருது இவையனைத்தும் அன்பாசிரியர் செங்குட்டுவனுக்குக் கிடைத்தவை அல்ல. தன் மாணவர்கள் இந்த விருதுகளைப் பெற தனியொருவராக இருந்து தகுதிப்படுத்தியவர் அவர்.

''சிறுவனாக இருந்தபோது தினமும் காலையில் 8 கி.மீ. நடந்து பள்ளிக்குச் செல்வேன் , மாலையில் மீண்டும் 8 கி.மீ. நடக்க வேண்டும். அறிவியலில் அதீத ஆர்வம் கொண்டிருந்த எனக்கு, ஒருமுறை அறிவியல் கண்காட்சிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 15 ரூபாய் இல்லாத காரணத்தால் அதற்குச் செல்ல முடியவில்லை. அந்த ஏக்கமும் வலியும்தான் இன்று இந்தியா முழுக்க என்னுடைய சொந்த செலவில் ஏராளமான மாணவர்களை அறிவியல் கண்காட்சிகளுக்கு அழைத்துச் செல்ல உந்துகிறது என்கிறார்'' செங்குட்டுவன்.

''எனக்குக் கிடைக்காமல் போனது, ஒருபோதும் என் மாணவர்களுக்குக் கிடைக்காமல் போகக் கூடாது'' என்னும் அன்பாசிரியர் செங்குட்டுவன், கடந்த 8 ஆண்டுகளில் ஒரு நாள் கூட பள்ளிக்கு விடுமுறை எடுத்ததே இல்லை. காலம் தவறாமையைப் பின்பற்றும் அவர், பெரும்பாலான சனி, ஞாயிறுகளில் பள்ளிகளில் மாணவர்களுடன் செலவழிப்பதாய்ச் சொல்கிறார். ''விடுமுறை எடுக்காமல் சென்றதில் பெருமை இல்லை, அதைக் கொண்டு மாணவர்களைச் சாதனையாளர்கள் ஆக்கியதில்தான் பெருமை'' என்கிறார்.

தனது நெடும் பயணத்தை அவரே விவரிக்கிறார்...

''2005-ல் அரசுப் பணி கிடைத்து, அரியலூர் மாவட்டம், தேவாமங்கலம் நடுநிலைப் பள்ளியில் அறிவியல் ஆசிரியர் ஆனேன். சில நாட்களிலேயே அங்கிருந்த மாணவர்களை அறிவியல் புத்தாக்கக் கண்காட்சிக்காக அரியலூர் அழைத்துச் சென்றேன். முறையாக பயிற்சி எடுத்து, நாங்களே உருவாக்கிய அறிவியல் உபகரணங்களோடு போட்டியில் பங்கெடுக்கத் தயாரானோம்.

முதல் வெற்றி

பேருந்தில் பயணித்ததால் குழுவில் இருந்த மாணவனுக்கு தலைசுற்றல், வாந்தி ஏற்பட்டது. பள்ளிக்குச் சென்றுவிட்டதால் மாற்று உடை வாங்க முடியவில்லை. அங்கேயே அதைத் துவைத்துக் காயவைத்தேன். மாணவனுக்கு ஆறுதல் சொல்லிப் போட்டியில் பங்கேற்க வைத்தேன். அன்று அறிவியல் போட்டியில் அந்த மாணவனுக்கு மாவட்டத்தில் முதலிடம் கிடைத்தது. அதுதான் எங்களின் முதல் வெற்றி.

அடுத்த முறை மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்தோம். அதற்கடுத்த தடவை 2013-ல் மாநிலத்தில் முதல் பரிசு பெற்று, தங்கப் பதக்கத்தைப் பெற்றோம். தேசிய அளவிலான போட்டியில் மொழிப் பிரச்சினை ஏற்பட்டாலும் சிறப்புப் பரிசு கிடைத்தது. 2014-ல் மத்திய அரசு நடத்திய தேசியக் குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் கலந்துகொண்ட 5 மாணவர்கள் 'இளம் விஞ்ஞானி' விருது பெற்றனர். ‘ரேஷன் கடைகளில் கம்பு, சோளம் உள்ளிட்ட சிறு தானியங்களை விநியோகித்து, மக்களின் சர்க்கரை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கலாம்’ என்ற செயல் திட்டத்துக்கு அந்த விருது கிடைத்தது.

அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்கள்

அனைத்துப் போட்டிகளிலும் மாணவர்களைப் பங்குபெறச் செய்ய வேண்டும் என்பது என்னுடைய இலக்கு. இதற்காகவே நன்றாகப் பேசும் மாணவனை பேச்சுப் போட்டியிலும் கையெழுத்து சிறப்பாக இருப்பவர்களைக் கட்டுரைப் போட்டியிலும் பங்குகொள்ள உத்வேகமூட்டுவேன். அதேபோல ஓவியம், பாட்டு, விளையாட்டு, யோகா என அனைத்துப் போட்டிகளிலும் எங்கள் மாணவர்கள் பங்கேற்பர்.

இதற்கான முன் தயாரிப்புகளுக்கு சனி, ஞாயிறுகளைப் பயன்படுத்திக் கொள்கிறேன். மாணவர்களும் முகம் சுளிக்காமல் பள்ளிக்கு வருகின்றனர். போட்டிகளில் பங்கெடுப்பதாலேயே பரிசு பெற வேண்டும் என்று மாணவர்களிடம் சொல்வதில்லை. அதே நேரம் எங்களின் கடுமையான பயிற்சி மற்றும் முயற்சியால் அவர்கள் பரிசு வாங்காமல் திரும்பியதில்லை.

மாவட்ட அளவிலான போட்டிகள், மாநிலப் போட்டிகளுக்கு என்னுடைய சொந்த செலவிலேயே மாணவர்களை அழைத்துச் சென்றுவிடுவேன். தேசிய அளவில் தேர்வாகும்போது பெரும்பாலும் உதவித்தொகை கிடைத்துவிடும். இல்லாதபட்சத்தில் நானே செலவழித்துவிடுவேன், பணத்தால் மாணவர்களின் முயற்சி தடைபட்டு விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

சொந்த செலவில் அறிவியல் ஆய்வகம், மூலிகைத் தோட்டம்

பள்ளியில் என்னுடைய சொந்த செலவில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் அமைத்தேன். ஆசிரியப் பணிக்கு முன்னால் மெக்கானிக்காக இருந்ததால், பள்ளிக்கான வயரிங் வேலையை நானே செய்துவிடுகிறேன். மாணவர்களுக்கு விவசாயத்தில் ஆர்வத்தை உருவாக்க மூலிகைத் தோட்டம் உருவாக்கினோம். ரூ.16 ஆயிரம் செலவு செய்து, நானே குழிதோண்டி, காய்கறிச் செடிகள், கீரைகள், மூலிகைகள் ஆகியவற்றைப் பயிரிட்டேன்.

தொடர் முயற்சிகளால் ஆங்கிலத்தில் பெயரை எழுதக்கூட சிரமப்பட்ட மாணவர்கள் பலர், இன்று அறிவியலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண் எடுக்கிறார்கள். அவர்களை மற்ற பள்ளிகள் தத்தெடுத்துக் கொள்கின்றன. என்னிடம் படித்த மாணவர் கதிரவன் இப்போது எம்பிபிஎஸ் படிப்பை முடித்துவிட்டார். ஏராளமானோர் இளங்கலை, முதுகலைப் படிப்பை முடித்துப் பணியில் இருக்கின்றனர். மெல்ல மெல்ல தேவாமங்கலம் பள்ளி தலைசிறந்த பள்ளியாக உருமாறியது.

இப்போது அங்கிருந்து ஜெயங்கொண்டம், புதுச்சாவடி பள்ளிக்கு கேட்டு வாங்கி மாறுதல் பெற்றுள்ளேன். இங்குள்ளவர்களில் பெரும்பாலானோர் கம்பளத்தார் (குடுகுடுப்பைக்காரர்கள்) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாடோடிகளாக இருப்பதால் அவர்களின் குழந்தைகள் முறையாகப் பள்ளிக்கு வருவதில்லை. பெண்களையும் படிக்க வைப்பதில்லை. இதை மாற்ற எண்ணி செயலாற்றி வருகிறேன். அதன் ஒருபகுதியாக பள்ளிக்கு மாற்றலான ஒரே மாதத்தில் மாணவர்கள் சிலரை லக்னோவில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றேன். கண்காட்சி முடிந்த பிறகு குடியரசுத் தலைவரைச் சந்தித்துப் பேசினோம்.

88 ஆண்டு வரலாற்றில்...

அச்செய்தி பல்வேறு நாளிதழ்களில் வந்தது. பள்ளியின் 88 ஆண்டுகால வரலாற்றில், இதுதான் செய்தித்தாள்களில் வருவது முதல்முறை என்று பொது மக்கள் நெகிழ்ந்தனர். அதைத் தொடர்ந்து பள்ளிக்காக 5 மின்விசிறிகள், 5 லைட்டுகளை அளித்தனர்.

அதேபோல லக்னோ சென்றுவந்த கம்பளத்தார் சமூக மாணவன் ஒருவனை, அவனின் குடும்பத்தைச் சேர்ந்த 30 பேர் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். இப்போது என் மேல் பொதுமக்களுக்கு நம்பிக்கை துளிர்த்திருக்கிறது. அதைக் கொண்டு அங்குள்ள மாணவிகளை முதல் தலைமுறைப் பட்டதாரிகளாக்க வேண்டும். சிதிலமடைந்து கிடக்கும் பள்ளிக் கட்டிடங்களைப் புதுப்பிக்க வேண்டும். தண்ணீர் இல்லாமல், அதே நேரம் மழை வந்தால் ஒழுகும் கழிப்பறைகளைச் சீர்படுத்த வேண்டும்.

சீரமைக்கவேண்டிய தேவையில் புதுச்சாவடி அரசு நடுநிலைப் பள்ளி

வரமான குடும்பம்

''இன்னும் வாடகை வீட்லதான் இருக்கார்; இவருக்கு பென்ஷன் கூடக் கிடையாது. இப்படி வேலை செய்றதால இவருக்கு சிலையா வைக்கப் போறாங்க?'' என்று சக ஆசிரியர்களின் கேலிக்கு உள்ளாகி இருக்கிறேன். என் மனைவியும் ஆசிரியர் என்பதால் என்னுடைய மனநிலையைப் புரிந்துகொள்கிறார். என் பிள்ளைகள் அவர்களாகவே படித்துக் கொள்கிறார்கள். என் குடும்பம் எனது வரம்.

என் மாணவர்கள்தான் என்னுடைய முதலாளி, எஜமானர், நீதிபதி எல்லாமே. எக்காரணத்தை முன்னிட்டும் என் மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் கிடைக்காமல் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' தீர்க்கமாய்ச் சொல்கிறார் அன்பாசிரியர் செங்குட்டுவன்.

க.சே.ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in

அன்பாசிரியர் செங்குட்டுவனின் தொடர்பு எண்: 8248474808

முந்தைய அத்தியாயம்: அன்பாசிரியர் 38: ராஜ ராஜேஸ்வரி- ரூ.5 லட்சம் சொந்த செலவில் பள்ளியை நவீன வசதிகளுடன் மாற்றி அமைத்த ஆசிரியை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x