Published : 20 Oct 2018 07:24 PM
Last Updated : 20 Oct 2018 07:24 PM

தேசத்தின் பன்மைத்துவத்தைக் காட்டும் புத்தகங்கள்!

தென்னகத்தில் மிக முக்கியமான இலக்கியத் திருவிழாவாக வளர்ந்து வருகிறது ‘தி இந்து’ ஆங்கில இதழ் நடத்தும் ‘லிட் ஃபார் லைஃப்’ நிகழ்வு. 2010-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், நாட்டின் மிக முக்கியமான எழுத்தாளர்கள் சங்கமிக்கின்றனர். அதோடு சிறந்த படைப்புகளுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

ஒன்பதாவது ஆண்டாக, 2019 ஜனவரியில் இத்திருவிழா நடைபெற உள்ளது. அப்போது, சிறந்த படைப்புகளுக்காக வழங்கப்படும் புத்தகங்களின் இறுதிப் பட்டியல் (ஷார்ட் லிஸ்ட்) கடந்த வாரம் சென்னையில் அறிவிக்கப்பட்டது. ‘தி இந்து பிரைஸ் ஃபார் பிக்‌ஷன்’ எனும் விருது, இந்த இலக்கியத் திருவிழாவின் தொடக்க காலத்திலிருந்தே வழங்கப்பட்டு வருகிறது. இது, இந்திய ஆங்கில எழுத்தாளர்களால், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது இந்திய மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட சிறந்த புனைவுப் படைப்புக்கு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு இந்த விருதுக்கு அமிதவா பாக்சியின் ‘ஹாஃப் தி நைட் இஸ் கான்’, அஞ்சும் ஹசனின் ‘எ டே இன் தி லைஃப்’, அனுராதா ராயின் ‘ஆல் தி லைவ்ஸ் வீ நெவர் லிவ்ட்’, நீலம் சரண் கவுரின் ‘ரெக்வியம் இன் ராக ஜானகி’, பெருமாள் முருகனின் ‘பூனாச்சி’, ஸ்ரீஷெந்து முக்கோபாத்யாயின் ‘தி ஆண்ட் ஹூ வுட்டிண்ட் டை’ ஆகிய 6 புத்தகங்கள் இறுதிப் பட்டியலில் உள்ளன.

இரண்டு முக்கியமான மொழிபெயர்ப்புகள்

இவற்றில் அஞ்சும் ஹசனின் புத்தகம், 14 கதைகளைக் கொண்ட சிறுகதைத் தொகுப்பு. இந்தியாவில் 1880-1934 காலகட்டத்தில் வாழ்ந்த இந்துஸ்தானி இசைக் கலைஞர் ஜானகி பாய் இலாஹாபதியின் வாழ்க்கையைத் தன் புத்தகத்தில் புனைவாகச் சொல்லியிருக்கிறார் நீலம் சரண் கவுர். அமிதவா, அனுராதா ராய் ஆகியோருடையது, நாவல்கள்.

பெருமாள் முருகன், ஸ்ரீஷெந்து முக்கோபாத்யாயா ஆகியோருடைய நாவல்கள் முறையே தமிழ், வங்க மொழிகளில் வெளியாகி, அவற்றை கல்யாண ராமன், அருணவா சின்ஹா ஆகியோர் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். இவர்கள் இருவரும் தத்தமது தாய்மொழிகளிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கிற மிக முக்கியமான மொழிபெயர்ப்பாளர்களாகக் கருதப்படுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை, மொழிபெயர்ப்பு படைப்பு தேர்வாகும் பட்சத்தில், அந்த விருது எழுத்தாளருக்கும் மொழிபெயர்ப்பாளருக்கும் சமமாகப் பிரித்து வழங்கப்படும்.

எழுத்தாளர் பால் சக்கரியாவின் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட குழு, இந்தப் புத்தகங்களைத் தேர்வு செய்துள்ளது. இறுதிப் பட்டியலுக்குத் தேர்வாகியிருக்கிற புனைவுப் படைப்புகள் தேர்வு செய்யப்பட்ட விதம் பற்றி பால் சக்கரியா நம்மிடம் தெரிவித்தபோது, “ஜூலை 2017 முதல் ஜூன் 2018 வரையில் வெளியான சுமார் 100-க்கும் மேற்பட்ட படைப்புகளிலிருந்து இந்த 6 புத்தகங்களைத் தேர்வு செய்திருக்கிறோம். கதை நடக்கும் காலம், அது பேசும் பொருள் மற்றும் அது கையாண்டிருக்கிற உத்தி ஆகிய மூன்று விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு புத்தகங்களைத் தேர்வு செய்தோம். இந்தப் புத்தகங்கள் அனைத்துமே நாட்டில் உள்ள பன்மைத்துவத்தைப் பிரதிபலிப்பதாக இருக்கின்றன” என்றார்.

பத்து ஆண்டுகளுக்காவது நிற்கும் புத்தகங்கள்

இந்த ஆண்டு முதல் இந்திய ஆங்கில எழுத்தாளர்களால் எழுதப்பட்ட சிறந்த அபுனைவுப் படைப்புகளுக்கு ‘தி இந்து பிரைஸ் ஃபார் நான் ஃபிக்‌ஷன்’ எனும் விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதுக்கான இறுதிப் பட்டியல் புத்தகங்களை சமூகவியலாளர் ஷிவ் விஸ்வநாதன், பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் எழுத்துகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த பேராசிரியர் சந்தன் கவுடா, ‘பெங்குவின் இந்தியா’ பதிப்பகத்தின் ஆசிரியர் காமினி மகாதேவன் ஆகியோர் அடங்கிய ஐவர் குழு தேர்வு செய்திருக்கிறது.

மனோரஞ்சன் வியாபாரியின் ‘இன்ட்டரோகேட்டிங் மை சண்டல் லைஃப்’, சுதீப் சக்கரவர்த்தியின் ‘தி பெங்காலிஸ்’, அன்சல் மல்ஹோத்ராவின் ‘ரெம்னெண்ட்ஸ் ஆஃப் எ செபரேஷன்’, முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷின் ‘இந்திரா காந்தி: எ லைஃப் இன் நேச்சர்’, ஸ்ரீநாத் ராகவனின் ‘தி மோஸ்ட் டேஞ்சரஸ் பிளேஸ்’ ஆகிய 5 புத்தகங்கள் இறுதிப் பட்டியலில் தேர்வாகியுள்ளன.

இவற்றில் மனோரஞ்சன் வியாபாரியின் புத்தகம் ஒரு தலித்தின் சுயசரிதை ஆகும். வங்காளிகளைப் பற்றிய ஓர் இன வரலாறாக உள்ளது சுதீப் சக்கரவர்த்தியின் புத்தகம். இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின்போது, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடம்பெயர்ந்த குடும்பங்கள் சிலவற்றைச் சந்தித்து, அப்போது அவர்கள் தங்களோடு கொண்டு வந்த மிக முக்கியமான பொருட்களின் வழியே பிரிவினை வரலாற்றைச் சொல்கிறது அன்சல் மல்ஹோத்ராவின் புத்தகம். இந்திரா காந்தியின் சூழலியல் அக்கறையை வெளிப்படுத்துவதாக உள்ளது ஜெய்ராம் ரமேஷின் புத்தகம். 18-ம் நூற்றாண்டிலிருந்து இப்போது வரை, இந்தியாவுடனான அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகளின் வரலாற்றைச் சொல்கிறது ஸ்ரீநாத் ராகவனின் புத்தகம்.

இந்தப் புத்தகங்கள் குறித்து காமினி மகாதேவன் நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, “இந்தப் புத்தகங்கள் ஒவ்வொன்றும் தலித்தியம், இன வரலாறு, மானுடவியல், சுற்றுச்சூழல் என ஒவ்வொரு துறை சார்ந்து இருக்கின்றன. ஜூன் 2017 முதல் ஜூன் 2018 வரையில் வெளிவந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட புத்தகங்களிலிருந்து இவை தேர்வு செய்யப்பட்டுள்ளன. அடுத்த ஒரு 10 ஆண்டுகளுக்காவது இந்தப் புத்தகங்கள் மிகப் பொருத்தமாக இருக்கும். நாம் வாழும் காலத்துக்குத் தேவையான படைப்புகள் இவை” என்றார்.

இந்தப் பரிசுகளுக்கான வெற்றியாளர்களின் பெயர்கள், அடுத்த ஆண்டு நடக்கும் இலக்கியத் திருவிழாவில் அறிவிக்கப்படும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x