Published : 29 Oct 2018 11:13 AM
Last Updated : 29 Oct 2018 11:13 AM

தலை துண்டிக்கப்பட்ட ராஜலட்சுமிக்கு #MeTooவில் என்ன இடம்?

தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தலை வெளியே சொன்னதால் தலை துண்டாக்கப்பட்டு, நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்குக் கொடூரமாக கொலை செய்யப்பட்ட 13 வயது தலித் சிறுமி ராஜலட்சுமிக்கு ‘மீ டூ’ கிடையாதா?

இந்தக் கேள்வியை கேட்பதாலேயோ அல்லது இயல்பாக இந்தக் கேள்வி எழுவதாலேயோ ‘மீ டூ’ நோக்கத்தை களங்கப்படுத்திவிட்டதாகவோ, அதன் நோக்கத்தை சிதைத்துவிட்டதாகவோ எண்ண வேண்டாம். ஏனென்றால், சிறுமி ராஜலட்சுமியின் கதறல், சமூக வலைதளங்களில் ஓங்கி ஒலிக்கும் பெண்களின் ‘மீ டூ’ குரல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டதாக இருக்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தளவாய்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேன் டிரைவர் சாமிவேல். இவரது மனைவி சின்னப்பொண்ணு. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். கடைசி மகள் தான் 13 வயது சிறுமி ராஜலட்சுமி. அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

சாமிவேல் வீட்டு அருகே வசித்து வருபவர் தினேஷ் குமார். நெல் அறுவடை இயந்திரத்தில் டிரைவராகப் பணியாற்றி வந்தார். அவரது மனைவி சாரதா. இவர்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களது வீட்டுக்கு சிறுமி ராஜலட்சுமி தண்ணீர் பிடிக்க அவ்வப்போது சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த சில தினங்களாக, தினேஷ் குமார் சிறுமி ராஜலட்சுமியிடம் பாலியல் ரீதியாக துன்புறுத்தி, வன்புணர்ச்சியில் ஈடுபட முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. சமீபத்தில் ஆயுதபூஜை தினத்தன்று, ஏதோ பொருள் ஒன்றை வாங்குவதற்காக ராஜலட்சுமி தினேஷ் குமார் வீட்டுக்குச் செல்லவே, அங்கு தினேஷ் குமார் மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது, அவர் சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இதனை வெளியே சொல்லாமல் தனக்குள்ளேயே அழுதுகொண்டும் சாப்பிடாமலும் இருந்துள்ளார் ராஜலட்சுமி. கடந்த 22 ஆம் தேதி மாலையில் தான் தன் தாய் சின்னப்பொண்ணுவிடம் கூறியுள்ளர். அப்போதுதான், கையில் கத்தியுடன் வந்த தினேஷ் குமார், சின்னப் பொண்ணுவை தள்ளிவிட்டு சிறுமி ராஜலட்சுமியின் தலையை தனியாக துண்டாக்கிப் படுகொலை செய்துள்ளார். அதன்பிறகு காவல் நிலையம் சென்று சரணடைந்துள்ளார்.

தனக்கு நிகழ்ந்த பாலியல் சீண்டலை ராஜலட்சுமி வெளியே சொன்னதால் ஏற்பட்ட ஆத்திரத்திலும் தன் ‘மானத்திற்கு’ இழுக்கு வந்துவிட்டதென்ற நினைப்பினாலும் தினேஷ் குமார் இத்தகைய படுகொலையை நிகழ்த்தியுள்ளார். இந்தக் கொடூரமான கொலை குறித்தோ, ராஜலட்சுமிக்கு நிகழ்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்தோ கனத்த மவுனத்தை பொதுச்சமூகம் சாதிக்கிறது. ஒருவேளை, ராஜலட்சுமியின் தாய் சின்னப்பொண்ணு என்ன நடந்தது என அவரின் வார்த்தைகளிலேயே விவரித்தால், ராஜலட்சுமியின் கொலை சாதாரணமானது அல்ல என்பது புரியக்கூடும் என்பதால், அவரது தாயிடம் பேசினேன்.

அழுகையுடன் தான் பேசத் தொடங்குகிறார்.

“பாப்பா தண்ணி பிடிக்க தினேஷ் குமார் வீட்டுக்குத்தான் போகும். அப்போது, பாப்பாகிட்ட தப்பா நடந்துக்கிட்டானா என்னன்னு தெரில, ரெண்டு நாளா சாப்பிடவேயில்ல. அழுதுக்கிட்டேயிருந்தா. அவங்க அப்பா திங்கள்கிழமை வேலைக்குப் போனா செவ்வாய்க்கிழமைதான் வீட்டுக்கு வருவாரு. பள்ளிக்கூடத்துக்கும் போகல. ஏன்னு கேட்டா எதுவும் சொல்லல. அழுதுக்கிட்டேதான் இருந்தா. அதுக்கப்புறம் தான் சாயந்தரமா சொன்னா. அந்த அண்ணன் என் கையப் பிடிச்சு இழுத்தாருமான்னு. சொல்லி 5 நிமிஷம் கூட ஆகியிருக்காது. கத்தி எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்தான். உனக்கும் எங்களுக்கும்தாம் சண்டை ஏதும் இல்லையே ஏன் கத்தி எடுத்துக்கிட்டு வந்தன்னு கேட்டன். அதுக்கு என்ன சாதியைச் சொல்லி அசிங்கமா திட்டுனான். அடிச்சுக் கீழே தள்ளி விட்டான். என் பொண்ணு தலைய அறுத்தான்.

‘நான் என்னண்ணா தப்பு செஞ்சன், ஏன்னா என்ன வெட்டுறன்னு’ என் மக அலறுனா. நான் எழுந்திருக்கிறதுக்குள்ளயே என் பொண்ண ஆட்ட அறுக்குற மாதிரி வெட்டி வடக்குபக்கம் காலும், தெற்குபக்கம் தலையும் இருந்துச்சு. பக்கத்துலயேதான் அவங்க வீடு. அவன் பொண்டாட்டி இங்க ஏண்டா தலையக் கொண்டு வர்ற? அங்கயே போட்டு வர வேண்டியதுதானேன்னு சொன்னா. நான் வெளிய வந்து பாக்குறப்ப தலையில்லாத என் பொண்ணு உடம்பு துடிச்சுக்கிட்டு இருந்துச்சு. என் பொண்ணு துடிக்கிறதைப் பார்த்து எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல” என சின்னப்பொண்ணு நடந்த சம்பவத்தைக் கூறும்போது ஒருவித பதட்டமும் அச்ச உணர்வும் தொற்றிக்கொண்டது.

“என் வீட்டு ஓட்டைப் பாத்தாலே என் பொண்ணு நியாபகம் தான். பாப்பாவ அடிக்கவே மாட்டோம். செல்லமா வளர்த்தோம்” எனக்கூறிவிட்டு பெருங்குரலெடுத்து அழத் தொடங்குகிறார் சின்னபொண்ணு.

செல்போன் அதிர்கிறது. அழுகுரல் தரும் சமூகக் குற்றவுணர்வால் அவரிடம் என்ன பேசுவதென்று தெரியவில்லை. பதற்றத்தோடு நன்றி சொல்லி, தொலைத்தொடர்பை துண்டித்தேன்.

படுகொலையைப் பற்றி சின்னப்பொண்ணுவின் உறவினர்தான் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். ஆனால், அதற்கு முன்னதாகவே தினேஷ் குமார், தன் தம்பி சசிகுமார் தயாராக வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் ஏறி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். சம்பவ இடத்திற்கும் காவல் நிலையத்திற்கும் 5 கி.மீ. தொலைவுதான். ஆனால், காவல் துறையினர் வருவதற்கு 2 மணிநேரம் ஆனது என சின்னப்பொண்ணு தெரிவிக்கிறார்.

“தினேஷ் குமார் மனைவி சாரதாவையும் தம்பி சிவகுமாரையும் விசாரிக்கணும். எல்லாரும் சேந்துதான் செஞ்சிருக்காங்க. இன்னும் அவங்க யாரையும் போலீஸ் விசாரிக்கல” என்கிறார் சின்னப்பொண்ணு.

ஆனால், காவல் துறை மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுக்கிறார் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான டி.எஸ்.பி பொன்.கார்த்திக்.

“விசாரணை நடைபெற்று வருகிறது. கொலை செய்தவரை கைது செய்திருக்கிறோம். சிறுமியின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வாங்கி தந்திருக்கிறோம். பாலியல் துன்புறுத்தல் நடக்கவில்லை. விசாரணையில் தெரியவந்தால் போக்சோ சட்டம் போடுவோம். சமூக வலைதளங்களில் இந்த விஷயம் பெரிதுபடுத்தப்படுகிறது, பரபரப்பாக்கப்படுகிறது. எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் கொலை வழக்கு பதிந்திருக்கிறோம். இவற்றின் கீழ் கடுமையான தண்டனைகள் வாங்கித் தரப்படும். கொலை செய்ததை தினேஷ் குமார் ஒப்புக்கொண்டுள்ளார். விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும். சேலம் எஸ்.பி. கண்காணிப்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தில் தினேஷ் குமாரின் மனைவியின் தலையீடு இல்லை. விசாரணையில் தெரியவந்தால் அவரும் விசாரிக்கப்படுவார். கொலையாளிக்கு தூக்கு தண்டனை வாங்கித்தர போலீஸ் தரப்பில் முயற்சி செய்கிறோம்” என்கிறார் பொன்.கார்த்திக்.

ஆனால், இந்த வழக்கில் ராஜலட்சுமியின் பெற்றோருக்கு சட்ட ரீதியான உதவிகளைச் செய்துவரும் ‘எவிடென்ஸ்’ அமைப்பைச் சேர்ந்த கதிர் இந்த வழக்கை காவல் துறை கையாண்ட விதம் குறித்தும், மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியம் குறித்தும் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்.

“சம்பவம் நிகழ்ந்து 2 மணிநேரம் கழித்தே போலீஸ் வருகின்றனர். விசாரணையில் தினேஷ் குமார் தனக்கு மனநலன் பாதிப்படைந்தது போன்று நடிக்கிறார். கொலை நிகழ்ந்து, அவருடைய மனைவியும், தம்பியும் தான் தினேஷ் குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். ராஜலட்சுமியின் வீட்டில் பாதுகாப்புக்காக பெயரளவுக்கு இரண்டு போலீஸ் மட்டுமே உள்ளனர். எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டால், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரிக்க வேண்டும். ஆனால், இன்னும் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தவில்லை” என்கிறார் எவிடென்ஸ் கதிர்.

தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் பலவற்றுக்கு சட்ட ரீதியான உதவிகளை செய்துவரும் கதிர், ஒரு சிறுமிக்கு எதிராக நடந்த இந்த இத்தகைய வன்முறையை நினைத்துக்கூட பார்த்ததில்லை என்கிறார்.

“இந்த மாதிரி மோசமான சம்பவத்தை நான் பார்த்தது இல்லை. குழந்தையின் தலை துண்டித்து வீசப்பட்டிருக்கிறது. குழந்தைக்கு எதிரான இந்த வன்முறைக்கு நாம் பதற்றப்பட வேண்டும். ஊடகம், சமூகம் எதுவும் கண்டுகொள்ளவில்லை. நாம் எல்லோரும் சேர்ந்து மிகப்பெரிய குற்றம் இழைத்திருக்கிறோம்.

பொதுச்சமூகம் இவ்வளவு அமைதியாக இருக்கிறது. இந்த அமைதியை எப்படி உடைப்பது? பாலியல் துன்புறுத்தல்களை வெளியே சொல்வது மட்டும்தான் மீ டூவா? அதனை வெளியே சொல்வதால் கொலை செய்யப்பட்ட சிறுமிக்கு ‘மீ டூ’ கிடையாதா?

பொதுச்சமூகம் இதற்கு எதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். 2002-ல் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தையொட்டி நிகழ்ந்த பில்கிஸ் பானு எனும் முஸ்லிம் பெண் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், 15 ஆண்டுகள் கழித்து 2017-ல் தான் தீர்ப்பு வருகிறது. குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. மறுநாள் நிர்பயா வழக்கின் தீர்ப்பு வருகிறது. குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது. பாதிக்கப்பட்டவரை சார்ந்து மட்டுமல்ல, குற்றவாளியின் சாதி, மதம், பொருளாதார பின்புலம் சார்ந்தே நீதியின் அளவுகோல் மாறுபடுகிறது.

அரியலூர் நந்தினிக்கு நாம் குரல் கொடுக்கவில்லை. ராஜலட்சுமி நகரத்தில் இருந்திருந்தால் இந்நேரம் அனைத்து பெண் அமைப்புகளும் போராட்டம் நடத்தியிருக்கும். காட்டில் படுகொலை செய்யப்படும் பெண்கள் என்ன அநாதைகளா? தகுதி பார்த்து நாம் போராடினால் அது நீதிக்கான போராட்டமே கிடையாது” என்கிறார் ‘எவிடென்ஸ்’ கதிர்.

பெண்ணிய அமைப்புகள், பொதுச்சமூகம் மட்டுமல்ல, எதற்கெடுத்தாலும் காட்டமான பதிவுகளுடன் ஒரு பிரச்சினையை முதலில் வெளிக்கொண்டு வரும் இணைய உலகமும், சமூக வலைதள உலகமும் இதில் அதிர்வற்றுக் கிடக்கிறது.

சமூக வலைதளத்தில் எவையெல்லாம் விவாதிக்கப்பட வேண்டும் என்பதும், எவையெல்லாம் விவாதிக்கப்படக்கூடாது என்பதும் திட்டமிடப்பட்டதுதான் என்கிறார் உமா மகேஸ்வரன்.

சமூக வலைதளங்களின் போக்கைத் தொடர்ந்து கவனித்து வருபவருமான உமா மகேஸ்வரன் கூறுகையில், ''சமூக வலைதளங்களின் போக்கை யார் தீர்மானிக்கிறார்கள்? திட்டமிட்டு கும்பலாக ஒரு ஹேஷ்டேகை உண்டாக்கி டிரெண்ட் செய்வது ஒருவகை. யாராவது ஒருவர் பதிவிடுவார். அதைச் சார்ந்து மற்றவர்கள் பதிவிடுவர். சமூக வலைதளங்களில் பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் (Social Media Influencers), சமூக வலைதள நட்சத்திரங்கள் இவர்கள் மொத்தமாகவே 50-60 பேர் தான் இருப்பார்கள். அவர்கள் எதைப் பேசுகிறார்களோ, எதைப் பேச வேண்டும் எனத் தீர்மானிக்கிறார்களோ அதுதான் பேசப்படும். குறிப்பாக நாஸ்டால்ஜியா போன்ற விஷயங்கள் ட்ரோல் செய்யப்படும். மற்றவர்கள் முக்கியமானதைப் பேசினாலும், அது பரவலாக கவனிக்கப்படுவதில்லை” என்கிறார்.

இதில் பெண்ணிய அமைப்புகள் ஏன் எதிர்வினையாற்றவில்லை என்பதற்குப் பதிலளித்த உமா மகேஸ்வரன், “ஒரு விஷயத்தில் கள்ள மவுனம் காப்பவர்களையும் கையறு நிலையில் இருப்பவர்களையும் ஒரே நிலையில் வைக்கக் கூடாது. ‘உயர்’ சாதி அல்லது பொருளாதாரத்தால் உயர்ந்த நிலையிலுள்ள பெண்கள் காக்கும் அமைதி தான் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியது. ‘மீ டூ’ நல்ல இயக்கம். அத்தியாவசியமானதுதான், பிரச்சினை இல்லை. ஆனால், சின்மயிக்கு கிடைக்கும் கவனம் மற்றவர்களுக்கு ஏன் கிடைப்பதில்லை?

பெண்களுக்கு எதிரான பாலியல் தாக்குதல்களுக்கு மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமா? அல்லது பாலியல் வன்புணர்வு செய்தால் மட்டும்தான் குரல் கொடுப்பேன் என்கிறார்கள். அப்போது, வெட்டிச் சாய்த்தால் பரவாயில்லை, ஆனால் உன்னை யாரும் பாலியல் வன்புணர்வு செய்துவிடக் கூடாது என்று கற்பு என்ற கற்பிதத்திற்குள் போய் ஒளிந்துகொள்கிறார்கள். உயிர்தானே போய்விட்டது, மானம் இல்லையே என்ற கற்பிதத்தால் தான் இது விளைந்தது. ஒரு பெண்ணைப் பாலியல் ரீதியாக சீண்ட எப்படி யாருக்கும் உரிமை இல்லையோ அதேபோன்று அவளைக் கொலை செய்யவும் யாருக்கும் உரிமையில்லை. மானம் தான் பெரிது, உயிர் போவது பிரச்சினையில்லையா? இவ்வளவு கொடூரமாக கொலை செய்யப்பட்டபோது அந்தக் குழந்தைக்கு எவ்வளவு வலித்திருக்கும்” என்று முடிக்கிறார் உமா மகேஸ்வரன்.

பல ஆண்டுகளுக்கு முன் நடந்த அத்துமீறல்களை ‘மீ டூ’ என பெண்கள் பதிவுசெய்தபோது பலமணிநேரம் விவாதித்த நாம், நம் கண்ணுக்கு முன்னால் வெட்டப்பட்டுக் கிடக்கும் ராஜலட்சுமியின் தலைக்கு முன்னால் மவுனமாக சாதிக்கிறோம். கள்ளம் கடைபிடிக்கிறோம்.

நம் கள்ள மவுனத்தின் முன்னால் சாதிக்குற்றங்களின் அரிவாள் முனைகளில் தலை துண்டாக்கப்பட்ட ராஜலட்சுமிகள் #MeToo என முனகிக் கொண்டிருக்கிறார்கள். அது சாதி வன்மத்தின் நீண்ட வரலாற்றுக்கு எதிரான #MeToo. ‘பெரியார் மண்ணில்’ நிச்சயம் பேசப்படவேண்டிய #MeToo.

தொடர்புக்கு: nandhini.v@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x