Published : 03 Jul 2018 10:26 AM
Last Updated : 03 Jul 2018 10:26 AM

காவிரிக் கரையில் கலங்கரை விளக்கம்: கும்பகோணம் ஆசிரமத்தின் கதை

1951-ம் ஆண்டு. போதிய வசதியில்லாததால் படிக்க முடியாமல் தவித்த தங்களின் 3 நண்பர்களை படிக்க வைக்க வேண்டும் என்று தீர்மானிக்கின்றனர் அவர்களின் நண்பர்கள் 3 பேர். இதற்காக ஆளுக்கு ஒருவரை தத்தெடுத்து, உணவு உள்ளிட்டவற்றை வழங்கி படிக்க வைத்தனர். அவர்கள் ராமதாஸ் அண்ணா, பிச்சைமுத்து என்கிற நெய்க்கார அண்ணா, காத்தமுத்து ஆகியோர். இந்த 3 பேருக்கு உதவியது போதாது, இவர்களைப் போல இன்னும் ஏராளமானோரை படிக்க உதவ வேண்டும் எண்ணிய நெய்க்கார அண்ணா, தான் வசித்த பகுதியில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று சமைப்பதற்கு அரிசி எடுக்கும்போது, ஒரு பிடி அரிசியை அள்ளி தனியாக வைக்க கேட்டுக் கொண்டார். அப்படி வீடுகளில் எடுத்து வைத்த அரிசியை 2 நாட்களுக்கு ஒரு முறை வீடுகளுக்குச் சென்று பெற்றுவந்து சமைத்து, வசதியில்லாத மாணவர்களுக்கு உணவு வழங்கினார். இப்பணி நாளுக்கு நாள் விரிவடைந்தது.

பின்னர், கும்பகோணம் சக்கரப் படித்துறையில் ஸ்ரீசண்முகானந்தா ஆசிரமம் என்று தொடங்கி ஆதரவற்ற மாணவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தனர். அங்கு சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், 1954-ல் கும்பகோணம் கொட்டையூர் காவிரி ஆற்றின் கரைக்கு ஆசிரமம் இடம் மாறி யது.

வட இந்தியாவின் பானிப்பட் நகரைச் சேர்ந்த ராமசாது என்பவர் தென்னிந்தியா வில் பல ஊர்களுக்குச் சென்றுவிட்டு கும்பகோணம் வந்தார். அவரையே தன் குருவாக ஏற்றுக்கொண்ட ராமதாஸ் அண்ணா, அவரை ஆசிரமத்தில் தங்கச் செய்தார். திருமணமே செய்து கொள்ளாத ராமதாஸ் அண்ணா, ஆதரவற்ற மாணவர்களுக்காகவே வாழத் தொடங்கினார். அவருக்கும் அவரது நண்பர்கள் இருவருக்கும், கிடைத்த பெரிய மனிதர்களின் நட்பைக் கொண்டு, ஆசிரமத்தில் தங்கியுள்ள மாணவர்களுக்கு கல்வி போதிப்பதற்காக வள்ளலார் கல்வி நிலையம் என்ற பாடசாலை தொடங்கினர்.

தாய் அல்லது தந்தையை இழந்த கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த ஏழை குழந்தைகளுக்கு தங்க இடமளித்து, உடைகள் தந்து, கல்வி போதித்து அரவணைக்கத் தொடங்கியது ஆசிரமம். அன்று தொடங்கிய இந்த கல்விப்பணி பணி இன்றளவும் தொடர்கிறது.

ஆரம்பக் கல்வியுடன் தொடங்கப்பட்ட இந்த கல்வி நிலையம், மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்ந்து நிற்கிறது. 3,810 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த கல்வி நிலையத்துக்கு விதைபோட்ட ராமதாஸ் அண்ணா கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் காலமானார். தற்போது அவரது நூற்றாண்டு விழா இக்கல்வி நிலையத்தில் கொண்டாப்படுகிறது. இந்த ஆசிரமத்தில் படித்த பலர், இதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகின்றனர்.

பலரும் ஆசிரமத்துக்கு பல உதவிகளைச் செய்திருந்தாலும், கும்பகோணம் நகராட்சியின் முன்னாள் உறுப்பினரான சுவாமிநாதன் செட்டியார் தானமாக கொடுத்த 20 ஏக்கர் நிலம் பள்ளியின் பிரம்மாண்ட வளர்ச்சிக்கு காரணமாக அமைந்தது. வள்ளலாரின் ஒழுக்கத்தை கடைபிடித்து வரும் இந்த ஆசிரமம், வள்ளலார் கல்வி அறநிலையமாக தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்த ஆசிரமம் எந்த 3 பேருக்காக தொடங்கப்பட்டதோ, அவர்களில் ஒருவர்தான் சுந்தரேசன். அவருக்கு இப்போது 71 வயது. அவர் கூறும்போது, “இந்த ஆசிரமத்தால்தான் நான் கல்வி பயின்று வங்கி மேலாளராக பணியாற்றும் அளவுக்கு உயர்ந்தேன்” என்கிறார் பெருமையுடன். தற்போது, இவர்தான் இப்பள்ளியின் செயலாளர். இவரைப்போல இங்கு படித்து பல்வேறு பணிகளுக்குச் சென்ற பலரும் பணி ஓய்வுபெற்றபின் இங்கு சேவை செய்து வருகிறார்கள்.

ஆசிரமத்தின் நிர்வாகி எம்.சாந்திலால் கூறும்போது, “ராமதாஸ் அண்ணாவோடு சேர்ந்து கொடுமுடியைச் சேர்ந்த செங்கோடக் கவுண்டர், பெரும் பொருள் உதவி செய்து மாணவர்களுக்கான பள்ளியைத் தொடங்கினார். இப்பகுதி மக்களுக்கான மருத்துவ சேவையையும் வழங்கி வருகிறோம். அண்ணா, காமராஜர், தந்தை பெரியார், கிருபானந்தவாரியார், குன்றக்குடி அடிகளார், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் குருஜி என ஏராளமானோர் பள்ளிக்கு பல உதவிகளை வழங்கியுள்ளனர்” என்றார்.

3 பேரின் கல்விக்காக உருவான இந்த ஆசிரமம் பெரும் கல்வி நிறுவனமாக உயர்ந்து நிற்கிறது, சிறு விதையில் இருந்து தளிர்க்கும் பெரும் ஆலமரத்தைப் போல. வறுமைக் கடலில் தத்தளித்தும் ஏழை மாணவர்களை கலங்கரை விளக்கமாக இருந்து இதுவரை 20 ஆயிரம் மாணவர்களுக்கு கல்விச் செல்வத்தை கொடுத்து கரைசேர்த்திருக்கிறது இந்த கும்பகோணத்து ஆசிரமம்.

தன்னலமற்ற 3 மனிதர்கள் ராமதாஸ் அண்ணா, பிச்சைமுத்து என்கிற நெய்க்கார அண்ணா, காத்தமுத்து ஆகியோர் உண்மையான கல்வி வள்ளல்களுக்கு உதாரணமாக உயர்ந்து நிற்கின்றனர். அவர்களை நினைவுகூர்வது காலத்தின் கட்டாயம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x