Published : 30 Jul 2018 02:50 PM
Last Updated : 30 Jul 2018 02:50 PM

ஒரே இடத்தில் ருத்திராக்ஷமும் சிலுவையும்: மனித நேயத்தில் மிளிரும் கர்நாடகத்தின் தேசானூர் மடம்

இயற்கை எழில் சூழ்ந்த தேசானூர் எனும் கிராமம் வட கர்நாடாகாவல் உள்ளது.. இங்குதான் இந்துமதமும் கிறிஸ்தவ மதமும் கைகோர்த்து அருள்பாலிக்கும் பெலகாவி ஸ்னானிகா அருளப்பனவர விக்கிரக மடம் உள்ளது. பழங்கால கல்கட்டிட அமைப்பில் ஆன சிவன் கோவிலும் புனித ஜான் பாப்டிஸ்ட் திருச்சபையுமாக இம்மடம் விளங்குகிறது.

வாரணாசி நகர பாணியில் இதன் கட்டட அமைப்பு உள்ளது. மதநல்லிணக்கத்திற்கான ஒரு எடுத்துக்காட்டாக இது காணப்படுகிறது. இக்கோவிலின் மையத்தில் ஒரு சிவலிங்கம் உள்ளது. சுற்றிலும் ஏசுநாதர் மற்றும் மேரி மாதா சிலைகள் அமைந்துள்ளன.

அதன் சுவர்கள் லிங்காயத் இயக்கத்தின் முக்கிய அடையாளமாகத்திகழும் பக்திக்கவிஞரான பசவேஸ்வரரின் பாடல்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளன, கவிஞர்-இசைக்கலைஞர் புரந்தரதாசரின் கீர்த்தனைகளும் இடம்பெற்றுள்ளன. அது மட்டுமின்றி பைபிள் வாசகங்களும் அங்கு எழுதப்பட்டுள்ளன.

ஏசுசபையை நடத்திவரும் பாதிரியார், மெனினோ கான்சல்வ்ஸ் எனும் ஸ்ரீ மெனினோ சுவாமி, காவி உடை அணிந்திருக்கிறார். இவரது கழுத்தில் ருத்திராக்ஷ மாலையுடன் சிலுவையும் தொங்கிக்கொண்டிருக்கிறது. பிரார்த்தனை வேளைகளில் பூஜையும் ஆராதனையும் செய்யும் இவர், தான் ஒரு ஆயுர்வேத மருத்துவர் என்றும் அறியப்படுகிறார்.

தேடலும் தீர்க்கமும் கொண்ட இச்சாமியார், ரிஷிகேஷ் மற்றும் ஹரித்வார் மட்டுமில்லை, வாடிகனுக்கும் சென்றுள்ளார். இவருக்கு எட்டு மொழிகள் தெரியும்.

கன்னடத்திலேயே பூஜை, பிரார்த்தனைகளை நடத்துகிறார். இந்த கிராமத்தில் கிறிஸ்தவர்கள் என்று யாரும் கிடையாது. ஆனாலும் ஞாயிறு திருச்சபை பிரார்த்தனைகளில் கூட்டம் நிறைந்துவிடுகிறது.

இதுகுறித்து ஸ்ரீ மேனினோ கூறுகையில், ''இப்படி செய்வதில் எனக்கு சங்கடமோ, என்னுடைய விசுவாசத்திற்கு அந்நியனாகவோ நான் உணர்வதில்லை.

கலாச்சாரங்களின் இந்த ஒருங்கிணைப்பையே இங்கு நான் கோருகிறேன். நான் என் நம்பிக்கைக்காக யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. சொல்லப்போனால், பிரசங்கமே என் வழக்கமான ஒரு சிறிய பகுதியாகும். கற்பித்தல், சிகிச்சைமுறை மற்றும் சமூக வேலைகளில்தான் பெரும்பாலான நேரங்களை செலவிடுகிறேன்.

மடத்தை நிறுவிய ஸ்ரீ அனிமானந்தா சுவாமி

இங்கு மத நல்லிணக்கத்தை தொடங்கிவைத்தவர், மடத்தின் தந்தை ஆர்மடோ அல்வார்ஸ், அவர் தன்னை ஸ்ரீ அனிமானந்தா சுவாமி என்று அழைத்துக்கொண்டவர். இவர்களது மூதாதையர்கள் கோவாவிலிருந்து வந்தவர்கள். ஆனால் அவர் பிறந்தது ஆப்பிரிகாவில், அங்கு அவரது தந்தை 1903ல் ஓர் அரசு ஊழியராக பணியாற்றி வந்தார்.

அவர் 1947ல் சுதந்திரத்திற்கு பிறகு, பெலகாவி மடத்தில் ஒரு ஆசிரியராகத்தான் வந்தார். பின்னர் தேஷனூரில் குடியேறினார். 1950 ஆம் ஆண்டில் ஏழை சிறுவர்களுக்கான ஒரு வீட்டையும், 1953ல் பெண்களுக்கான கன்னட-நடுத்தரப் பள்ளிக்கூடத்தையும் தொடங்கினார். தற்போது 50 சிறுவர்களுக்கான ஆதரவற்றோர் இல்லமும் உடன் 350க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இருபாலர் கல்வி நிறுவனமாக இப்பள்ளிக்கூடம் திகழ்கிறது.

கிராம மக்களின் பெருந்தன்மை

இந்த அறுபதாண்டுகளுக்கும் பழைமையான இந்த சர்ச்-கோவில், எந்தவித தொய்வும் இன்றி தொடர்ந்து செயல்பட்டுவருவதைப் பற்றி ஸ்ரீமெனினோ கூறுகையில்,

''நம்பிக்கை வேறுபாடுகள் இருந்தபோதிலும் இங்கு நாங்கள் இந்த சர்ச்-கோவிலை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்கிவரும் அவர்களின் பெருந்தன்மைதான் இதற்கு முக்கிய காரணம்'' என்றார்.

இந்த கான்வென்ட்டைப் பற்றி கிராமவாசிகள் குறிப்பிடும்போது, பத்ரி மடம் மற்றும் கோவில், சர்ச் குடி என்கிறார்கள். மகரசங்கராந்தி மற்றும் கிறிஸ்துமஸ் தினங்களில் ஒரு பெரிய கிராம சந்தைபோல மொத்த கிராமமும் இங்கு கூடிவிடுகிறது.

மதமாற்றம் தேவையில்லை

ஸ்ரீ மெனினோ கூறுகிறார், "நாம் அனைவரும் மனிதர்களாக இருக்க வேண்டும் என்று இயேசு கிறிஸ்து விரும்புகிறார். இந்துக்கள் நல்ல இந்துக்களாகவும், முஸ்லீம்கள் நல்ல முஸ்லீம்களாகவும் மற்றும் கிறிஸ்தவர்கள் நல்ல கிறிஸ்தவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

நான் மத மாற்றத்தை பரிந்துரைக்கவில்லை. ஒரு கிறிஸ்தவ இளைஞரை ஒரு இந்து பெண் திருமணம் செய்து கொள்ள விரும்பினால் இந்து திருமண சட்டத்தின்கீழ் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுதான் நான் அறிவுரை கூறுகிறேன். நீடித்த திருமண வாழ்க்கையை உறுதிப்படுவத்துவது மதம் அல்ல - காதல்'' என்கிறார் இந்த நவீன ஆன்மீகவாதி.

ருத்திராக்ஷமும் சிலுவையும் ஒரே இடத்தில் இருப்பது மட்டுமல்ல; எண்ணற்ற ஏழைக் குழந்தைகளின் எதிர்காலத்தை வடிவமைப்பதிலும் மனிதநேயத்தோடு மிளிரும் மதநல்லிணக்கம் என்பதுதான் இம்மடத்தின் சிறப்பு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x