

பெ
ரம்பலூர், அரியலூர், கடலூர் மாவட்டங்களைச் சேர்ந்த இலக்கிய ஆர்வலர்களை ஆளுமைமிக்க படைப்பாளிகளாக உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது பதியம் இலக்கியச் சங்கமம் எனும் அமைப்பு.
நூல் திறனாய்வு, விமர்சனம், வாசித்தல், உரையாடல் என தனது செயல்பாடுகளை சுருக்கிக் கொள்ளும் இலக்கிய அமைப்புகளுக்கிடையே நூலாசிரியர்கள், சொற் பொழிவாளர்கள், படைப்பாளுமைகளை உருவாக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது பதியம் இலக்கியச் சங்கமம். பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, தனது அண்டை மாவட்ட இலக்கிய ஆர்வலர்களுக்கும் உரிய பயிற்சியளித்து சிற்பியாகச் செயல்பட்டு அவர்களைச் செதுக்கி சிறந்த இலக்கிய படைப்பாளிகளாக வளர்த்தெடுக்கிறது.
அரியலூர் அரசுக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக பணிபுரியும் தமிழ்மாறன் மற்றும் இலக்கிய ஆர்வம் கொண்ட அவரது நண்பர்கள் சிலரைக் கொண்டு கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது தான் பதியம் அமைப்பு. ஆரம்ப காலத்தில் இந்த அமைப்பினர் மாதம் ஒருமுறை (இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை) ஒன்று கூடி நூல் விமர்சனம், திறனாய்வு, இலக்கிய நிகழ்வுகள் குறித்து விவாதித்து வந்தனர். பின்னர், இலக்கியத்தில் ஆர்வம் உள்ளவர்களை அடையாளம் கண்டு அவர்களை படைப்பாளிகளாக வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பதியம் அமைப்பின் சார்பில் தமிழகத்தின் சிறந்த இலக்கிய ஆளுமைகளை அழைத்து வந்து கவிதை எழுதும் பயிற்சி, விமர்சனக் கட்டுரை, ஆய்வுக் கட்டுரை, திறனாய்வுக் கட்டுரை எழுதும் பயிற்சி, பேச்சுக்கலைப் பயிற்சி என சாமானியர்களை ஆளுமைகளாக உருவாக்கும் பயிற்சி அளிக்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டன. பங்கேற்பாளர்கள் படைப்புகளை உருவாக்க ஊக்கப்படுத்தப்பட்டனர். அவர்களது படைப்புகளை வெளியிட ‘அடம்பு’ எனும் மாத இதழ் ஒன்றும் தொடங்கப்பட்டது.
இந்த அமைப்பின் முயற்சியால் உருவாகும் புதிய படைப்பாளிகள், அவர்களது கவிதை, கட்டுரை, சொற்பொழிவுகளை பதியம் அமைப்புக் கூட்டங்களில் அரங்கேற்றம் செய்து வெள்ளோட்டம் பார்த்த பிறகு, பொதுவெளியில் களமிறக்கப்படுகின்றனர். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட படைப்பாளுமைகளை உருவாக்கியுள்ளது பதியம் அமைப்பு.
இதில் சுமார் 25 பேர் புத்தகங்கள் பதிப்பித்துள்ளனர். மலர்க்கொடி, கதிர்மதி, ராமானுஜம், சுரேஷ், செல்வக்குமார், அஞ்சுகம், வெங்கடேசன், சுரேஷ் குமார், தமிழரசி முனியமுத்து, சண்முகசுந்தரம் என பதியம் அமைப்பு பதியமிட்ட நூலாசிரியர்கள் பட்டியல் நீளமானது. 10-க்கும் மேற்பட்டோர் தமிழகம் முழுவதும் அறிந்த சொற்பொழிவாளர்களாக இலக்கிய மேடைகளில் பேச்சாளர்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இன்னும் பலர் ஆய்வுக் கட்டுரைகள், திறனாய்வுக் கட்டுரைகள், கவிதைகள் படைத்துக் கொண்டிருக் கின்றனர்.
“திறமைமிக்க படைப்பாளிகள் பலர் வாய்ப்பு கிடைக்காமல் அல்லது தயக்கம் காரணமாக தங்களை பொதுவெளியில் வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் முடங்கிக் கிடக்கின்றனர். அதுபோன்ற திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதும் ஒரு இலக்கிய அமைப்பின் பணி எனக் கருதினோம். இதையடுத்து நண்பர்களின் ஆலோசனையைப் பெற்று படைப்பாற்றல் பயிற்சி அளிக்கும் நடவடிக்கையில் பதியம் அமைப்பு இறங்கியது” என்கிறார் பதியம் அமைப்பைத் தோற்றுவித்த பேராசிரியர் தமிழ்மாறன்.
அண்மைக் காலமாக போட்டித் தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளையும், தமிழ் இலக்கண பயிற்சி வகுப்புகளையும் பதியம் அமைப்பு நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பதியமிட்டு செடி, கொடிகளை வளர்க்கலாம். இலக்கியவாதிகளைக் கூடவா வளர்க்க முடியும் என்று கேட்டால், ஆமாம் என்கிறது இந்த பதியம் இலக்கிய சங்கமம் அமைப்பு.