Last Updated : 20 Jun, 2018 09:45 AM

 

Published : 20 Jun 2018 09:45 AM
Last Updated : 20 Jun 2018 09:45 AM

விடாப்பிடி விவசாயம்: நகருக்கு நடுவில் இருபோகம்

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை பச்சைப்பசேல் என்றிருந்த வயல் பகுதிகள், வீட்டு மனைகளாகி தற்போது குடியிருப்புகளாகவும் மாறிவிட்டன. நகர்ப்புறங்களை ஒட்டிய கிராமப் புறங்களிலும் ஏராளமான விளைநிலங்களில் இப்போது கான்கிரீட் கட்டிடங்கள் விளைந்து நிற்கின்றன. திருச்சி மாநகரின் முக்கிய பகுதி ஒன்றில், சுற்றிலும் கட்டிடங்கள் வந்துவிட்டாலும், நிலம் நல்ல விலைக்கு போகும் என்றாலும் உறுதியுடன் இன்றும் விவசாயத்தை விடாப்பிடியாக தொடர்கிறார் 80 வயது விவசாயி ஆர்.சீனிவாசன்.

திருச்சி புத்தூர் அக்ரஹாரத்தை சேர்ந்த சீனிவாசனுக்கு, வயலூர் ரோட்டில் சீனிவாசா நகர் மற்றும் அதையொட்டிய பகுதியில் ஒன்பதரை ஏக்கர் நிலம் உள்ளது. இதில் கண்ணும் கருத்துமாக விவசாயம் செய்து வருகிறார். ஒருகாலத்தில் இந்தப் பகுதி வளமாக நெல் விளைந்த பூமி. நகரமயமாதல் காரணமாக விளைநிலங்கள் எல்லாம் கட்டிடங்களாக மாறின. ஒரு கட்டத்தில் அந்தப் பகுதியின் முழு தோற்றமும் கட்டிடங்களாக மாறி நிற்க, சீனிவாசனின் ஒன்பதரை ஏக்கர் மட்டும் விவசாய பூமியாக தங்கி நிற்கிறது.

இந்தப் பகுதியில் ஒரு சதுர அடி ரூ.6 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை (சந்தை மதிப்பில்) விற்கப்பட்டு வருகிறது. நகரம் விரிவடைந்ததாலும் இவரது நிலத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் வந்துவிட்டதாலும் பலரும் சீனிவாசனை அணுகி இடத்தை விலைக்கு கேட்க, அதையெல் லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் விவசாயத்தை தொடர்கிறார் சீனிவாசன்.

இதுகுறித்து அவர் நம்மிடம் கூறியது: என்னோட தாத்தா காலத்தில் இருந்து இங்க விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கோம். நான் சுமார் 50 வருசத்துக்கு மேல விவசாயத்தை கவனிச்சுட்டு வர்றேன். முன்ன இந்த பகுதியில 22 ஏக்கர்ல விவசாயம் செஞ்சுக்கிட்டு இருந்தோம். இந்தப் பகுதியில வீடு கட்டுறவங்க எண்ணிக்கை அதிகமாகிக்கிட்டே போச்சு. இருந்தாலும் விவசாயத் தொழில விடக்கூடாதுங்குற வைராக்கியத்துல, இப்பவும் ஒன்பதரை ஏக்கர் நிலத்துல விவசாயம் செஞ்சுகிட்டு இருக்கேன். மெயின் ரோட்டை ஒட்டி ரெண்டரை ஏக்கர், கொஞ்சம் தள்ளி ஆனந்தம் நகர்ல ஏழு ஏக்கர்ல விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கேன். 3 பசங்க. ஒரு மகன் ரமேஷ். விவசாயத்துக்கு உதவியா இருக்காரு. மத்த 2 பேரும் பிசினஸ் பண்றாங்க. வருடத்துக்கு 2 போகம் சம்பா சாகுபடி பண்றேன். பம்ப் செட் இருக்கு. வாய்க்கால்ல தண்ணி வந்தா, அதுலயும் பாசனம் செய்வோம். தண்ணிக்கு தட்டுப் பாடு இல்லை.

அதிகமாக உரம், பூச்சிக்கொல்லி மருந்து பயன்படுத்துறது இல்ல. அடியுரமா டிஏபி (ஒரு ஏக்கருக்கு 3 மூட்டை) மேலுரமா பொட் டாஷ் (ஒரு ஏக்கருக்கு 2 மூட்டை) போடுறேன். தழைச்சத்து இயற்கையாவே எங்க நிலத்துல இருக்குறதால யூரியா போட மாட்டேன். பயிர்கள்ல பூச்சிகள் தாக்காம இருக்க, ஒரு தடவ மட்டும் பூச்சிக்கொல்லி மருந்து அடிக்கிறேன். முறையாக விவசாயம் செய்யுறதால ஏக்கருக்கு 40 முதல் 50 மூட்டை வரை மகசூல் கிடைக்குது. உழைப்புக்கு ஏத்த லாபமும் கிடைக்குது” என்றார்.

நகரத்துக்கு நடுவுல இவ்வளவு பெரிய இடத்தை யாரும் கேட்கவா இல்லை என கேட்டதற்கு, “மாசத்துக்கு பத்துப் பதினஞ்சு போராவது வந்து கேக்குறாங்க. நான் விக்கிறதா இல்லன்னு தீர்மானமா சொல்லிடுறேன். என் உசிரு இருக்குற வரைக்கும் நான் விவசாயத்தை விட மாட்டேன். என் பையனும் தொடர்ந்து விவசாயம் செய்வார்ங்கிற நம்பிக்கை இருக்கு” என்கிறார் தீர்க்கமாக.

கிராமத்துல கூட விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைப்பது சிரமமா இருக்கும் நிலையில் இவரிடம் 10 பேர் வேலை பார்க்கிறார்கள். 80 வயதிலும் உற்சாகமாக இருக்கிறார். அதற்கு காரணமே, வயலை பார்க்கும்போது கிடைக்கும் மகிழ்ச்சியும், இடைவிடாத விவசாயமும்தான் என்கிறார் சீனிவாசன். விவசாயம் உலகை மட்டுமல்ல அதில் ஈடுபடும் ஒவ்வொருவரையும் தனிப்பட்ட முறையில் காக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x