Published : 04 May 2018 04:17 PM
Last Updated : 04 May 2018 04:17 PM

வடசென்னை: 2- ராயபுரம்; கனவுகளின் நகரம்

வடசென்னையின் பரபரப்பான நகரம்,  உழைக்கும்  மக்களை அன்போடு  அரவணைக்கும் இடம் என பல அடையாளங்களைக் கொண்ட ராயபுரத்தை பற்றித்தான் இந்தப் பகுதியில் பார்க்க இருக்கிறோம்.

பல்லவ மன்னர்கள் காலத்தில் ராயர்களுக்கு தானமாக வழங்கப்பட்ட பகுதி என்பதால் ராயர்புரம் என்று அழைக்கப்பட்டு அதுவே பின்னாளில் ராயபுரமாக மாறியுள்ளது. பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க ராயபுரம் தண்டையார்பேட்டை, பழைய வண்ணாரப்பேட்டை, காசிமேடு போன்ற பல முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

ராயபுரம் என்றாலே நம் அனைவரது நினைவுக்கு முதலில் வருவது ராயபுரம் ரயில் நிலையம்தான். 1856-ல் கட்டிமுடிக்கப்பட்டு சுமார் 150 வருடங்களுக்கு மேலாக கடந்த இந்த ரயில் நிலையத்தின் பெருமையை ராயபுரம் வாசிகள் நிச்சயம் கூற மறப்பதில்லை.

உதாரணத்துக்கு, நீங்கள் ராயபுரத்தில் வழி தெரியாமல் எங்கு சுற்றினாலும்  இந்த ரயில் நிலையத்தை ஒட்டியே உங்களுக்கான சரியான பாதைகள் விரிந்து கிடக்கின்றன என்கின்றனர் அப்பகுதி வாசிகள்.

 

 

உணவுக் கலாச்சாரத்தைப் பொறுத்தவரை இங்கு பர்மா உணவு வகைகளான அத்தோ வகைகள்தான் பிரதானமாக உள்ளன. குழந்தைகள் பெரியவர்கள்  எளிய, நடுத்தர குடும்பத்தினரும் வந்து செல்லும், 'அண்ணா பார்க்' கும் ராயபுரத்தின் முக்கியமான ஒரு பகுதியாக உள்ளது..

ஆடை அணிகலன்களின் கடைச் சாலைகள்

எளிய மக்கள் அதிக அளவு கொண்ட இப்பகுதிகளில் அவர்களின் பொருளாதாரத்துக்கு ஏற்றாற் போல் தரமான ஆடைகள், உணவுப் பொருட்கள், அணிகலன்கள் கிடைக்கும் இடமாக பழைய வண்ணாரப்பேட்டை உள்ளது.

இங்கு வட மாநிலத்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ளதால்  வட இந்திய கலாச்சாரம் சார்ந்த ஆடைகள் மற்றும் வண்ண மயமான அணிகலன்களின் கடைகள் நிறைந்த சாலைகள் இப்பகுதிகளில் ஏராளமாகக் காணப்படுகின்றன.

பழைய வண்ணாரப்பேட்டைக்கு சற்று முன்னதாக, தமிழகத்தின் சிறந்த அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனை உள்ளது.

 ”'நாங்க இருக்கோம்', என்று மருத்துவமனைக்கு விளம்பரங்கள் செய்யும் தனியார் மருத்துவமனைகளுக்கு மத்தியில் எங்களுக்காக இந்த அரசாங்கத்தால் ஒரே ஒரு பிரயோஜனமாக… இருக்கிறது இது மட்டுதான்..மா'' என்று ஸ்டான்லி மருத்துவமனைக்குச் செல்லும் தாய்மார்கள் பலரின் குரலாக  ஒலிப்பதைக் கேட்கலாம்.

 

ராயபுரம் பகுதிகளில் வடசென்னை மொழியின் மீதான  அநாயசமான காதலை பார்க்கலாம். அவை  நீங்கள் திரைப்படங்களில்  பார்க்கும் போலியான காட்சிகளிலிருந்து முற்றிலும் வேறுப்பட்டவை.

 வடசென்னை மொழி பற்றிய திரைப்படங்களும், உயர் சமூகங்களும் தவறுதலான கற்பிதங்களை பிறரிடம் தந்துள்ளன என்கிறார்  சமூக செயற்பாட்டாளரான இசைஅரசு, "வடசென்னை மொழியைப் பொறுத்தவரை அது ஒரு மொழிக் கலப்பு. கிழக்கிந்திய கம்பெனி காலத்தில் யாரெல்லாம் இங்கு வந்து குடியேறினார்களோ, அவரவர்களின் மொழியான உருது, தெலுங்கு ஆகியவற்றுடன் தமிழைக் கலந்து வடசென்னை மொழி பேசப்படுகிறது. ஆனால் அது எங்கு இழிவுபடுகிறது என்றால், மக்களை வைத்து வடசென்னையில் வசிப்பவர்கள் என்றால் அவர்கள் கருப்பாக இருப்பார்கள், ரவுடிகளாக இருப்பார்கள் என்ற பொதுவான எண்ணத்தின் தொடர்ச்சியாக மொழியை கொச்சைத் தன்மையுடையதாக பார்க்கப்படுகிறது. இங்கு மொழி என்பது தொழிலாளிக்கு ஒருவித மொழியாகவும், முதலாளிக்கு ஒருவித மொழியாகவும் ஆண்டைக்கு ஒருவித மொழியாகவும் அடிமைக்கு வேறுவித மொழியாகவும் பார்க்கப்படுகிறது. அவ்வாறு எடுத்து கொண்டால் மொழியின் பெருமிதம் வர்க்கம் மற்றும் சாதியத்தை வைத்து தீர்மானிக்கப்படுகிறது.

வடசென்னை என்பது உழைக்கும் மக்களுக்கான அடையாளம். அந்த மனிதன் யாருடன் உரையாடுகிறானோ அங்கிருந்து அந்த மொழியை எடுத்துக் கொள்கிறான். பார்க்கிற, கேட்கிற விஷயம் அவன் மொழியாக கலந்து இருக்கிறது. தமிழில் ஆங்கிலம் கலந்து பேசுவது போல, அவன் அவனுக்கு நட்பான மொழிகளிலிருந்து வார்த்தைகளை எடுத்துக் கொள்கிறான்.

உழைக்கும் மக்களின் பார்வை என்பது அது மொழி, தேசியம் என அனைத்தையும் கடந்தது.  இதை கொச்சைப்படுத்துவதற்கு யாருக்கும் எந்தத் தகுதியும் இல்லை.

கொச்சைப்படுத்தி பார்க்கும் மனப்பான்மையை சாதியும், அவர்களது பொருளாதார மனப்பான்மையும்தான் தீர்மானிக்கின்றன.

இதில் சினிமா முக்கிய பங்கு வகிக்கிறது என்றுதான் கூறுவேன். பொதுவாக சினிமா எடுப்பவர்கள் பெரும்பான்மையாக தெற்கைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இயக்குனர் எந்த சாதியோ  அதனை அடிப்படையாக வைத்துதானே படம் எடுப்பார்கள். அவர்கள் சாதியம் சார்ந்து எதனைக் கற்கிறார்களோ அதைத்தானே படங்களில் காண்பிப்பார்கள். அவர்களிடம் அதைத்தான் எதிர்பார்க்க முடியும்" என்று பளீர் என முடித்தார்.

குட்டி தொழில் நகரம்

ராயபுரத்தைப் பொறுத்தவரை அது சென்னையின் குட்டி தொழில் நகரமாகவே பிரதிபலிக்கிறது. கோணி, பாய்கள் போன்றவற்றைத் தயாரிக்கும் தொழிலாளர்கள் பலர் இங்கு குழுக்குழுவாக வாழ்ந்து வருகின்றனர்.

ராயபுரம் தொகுதியின் ஒரு பகுதியான வால்டாக்ஸ் சாலையில் கற்களைக் கொண்டு பாய் பின்னிக் கொண்டிருக்கும் சிமெண்ட் வீடுகளைக் கொண்ட குடும்பங்களை நீங்கள் பார்க்கலாம்.

காலையில் பதினொரு மணிக்கு இவர் தங்கள் பணியைத் தொடங்கினார்கள் என்றால், மாலை 6 மணிவரை பணி நீளுமாம்….

அவ்வாறே நான் பணி முடிந்து அங்கு சென்றபோது தொடந்து அவர்கள் பாய் பின்னும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்களை தொந்தரவு செய்ய வேண்டுமா என்று தயக்கத்துடன்  நின்று கொண்டிருக்கையில் 'என்னமா வேண்டும்' என்று கேட்டார் 70 வயதான மகாதேவன்.

அவரின் முன்கதைச் சுருக்கத்தைக் கேட்டேன்.

"நாங்கள் இப்பகுதிக்கு வந்து 45 வருடங்கள் ஆகின்றன. 1975 ஆம் ஆண்டு பிராட்வே பூக்கடை பேருந்து நிலையம் அருகில் வசித்த எங்களை அப்போது ஆட்சி செய்த அரசாங்கம் இங்கு அனுப்பியது. அன்றுமுதல் இங்கு குடும்பம் குடும்பமாக வசித்து வருகிறோம்.

என்னைப் பற்றிக் கூற வேண்டும்  என்றால், வழக்கமான கதைதான்... குடும்ப வறுமை காரணமாக படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள். நான் எட்டு வயதிலிருந்து இந்தத் தொழிலை செய்து வருகிறேன்"  என்று படபடவென பேசும் மகாதேவனிடம் தமிழக அரசு மீதும் தமிழகத்தை ஆட்சி செய்துவரும் அரசியல் கட்சிகள் மீதும் கோபம் இருப்பதை நம்மால் உணர முடிக்கிறது. அதற்கான காரணத்தை அவரே கூறுகிறார்,

 "நாங்கள் பின்னும் பாய்கள் இங்கிருக்கும் தனியார் கடைகள்தான் வந்து வாங்கிச் செல்கின்றன. ஏப்ரல், மே மாதங்களில்தான் எங்களுக்கான வியாபாரம். அதன் பிறகு கூடை பின்னிதான் நாங்கள் காலத்தை ஓட்ட வேண்டும்.

வங்கிக் கடன் உட்பட அரசாங்க உதவிகள் ஏதும் எங்களுக்கு கிடைப்பதில்லை.  சொல்லப் போனால் எங்களை இங்கிருந்து காலி செய்ய ஆணையிட்டிருக்கிறார்கள். இங்கிருந்து காலி செய்துவிட்டால் எங்கள் தொழில் மிகுந்த பாதிப்புக்குள்ளாகும். தற்போது இரண்டு வேளை ஏதோ நிம்மதியா சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். அதுவும்  பறிப்போகும்.

வெறும் தேர்தல் காலங்களில் மட்டும் இங்கு வந்து விளம்பரம் தேடிக் கொள்ளும் அவர்களுக்கு எங்கள் கஷ்டம் எப்படி புரியும்.  எங்களை இந்தப் பகுதியிலிருந்து காலி செய்யும் முடிவை அரசாங்கம்  மாற்றிக் கொள்ள வேண்டும்"  என்றவரிடம், 

''அரசாங்கம் சார்ந்து கைவினைப் பொருட்கள் தொடர்பான கண்காட்சிகளில் பங்கேற்று உள்ளீர்களா....'' என்று கேட்டதற்கு "அதைப்பற்றி நீங்கள் சொல்லித்தான் தெரியும்'' என்று மகாதேவனின் பின்னால் பாய் நெய்தலில் ஈடுபட்டிருந்த பெண்  சிரித்துக் கொண்டே கூற ".. நிச்சயம் எங்கள் பிள்ளைகள் இந்தத் தொழிலை எதிர்காலத்தில் செய்யப் போவதும் இல்லை. நாங்கள் அனுமதிக்கப் போவதும் இல்லை. இது எங்களுடன் முடியப் போகிறது" என்று தேநீருடன்  விடைபெற்றார் மகாதேவன்.

 

காசிமேடு மீனவ சமூகம்

ராயபுரத்தைப் பற்றிக் கூறும்போது காசிமேட்டைப் பற்றி கூறாமல் இருக்க முடியுமா?..

இந்தியாவின் முக்கியத் துறைமுகப் பகுதியாக உள்ள காசிமேடு துறைமுகத்தில் தினசரி நண்டு, மீன், இறால் உள்ளிட்ட கடல்உணவுகளின் விற்பனை மட்டுமே சுமார் 150 டன்களுக்கு மேலாக நடக்கிறது. இதில் 30 சதவீதம் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

மீனவ சமூக மக்களால் நிறைந்து காணப்படும் காசிமேட்டில் விடியற்காலையில் மீனவச் சந்தைக்குள் நுழைந்து பாருங்கள் நிச்சயம் வேறு ஒரு உலகம் அறிமுகமாகும். பரபரப்பான காலைப் பொழுதுகளில் சிறுவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்க, சிலர் வலைகளில் ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பர்.

இன்னொரு பக்கம், மீன்களை வரிசையாக அடுக்கி கணீர் குரலில் பேரம்  ஒருபுறம் நடந்துகொண்டிருக்க, கூடைகளை தாங்கிக் கொண்டு வரிசையாக நிற்கும், ஏராளமான பெண்களைக் காணலாம்.  இங்கிருந்து மீன்களை வாங்கிக்கொண்டு சென்னையின் பிரதான இடங்களில் விற்பனை செய்யும் இவர்கள்தான் அவர்களது குடும்பத்தின் தூண்களாக இருக்கிறார்கள்.

 

''உங்களுக்கான பொழுது போக்குகள் என்ன?'' என்று கும்பலாக அமர்ந்தவர்களிடம் கேட்டேன்..

''பொழுதுபோக்குலாம் ஒண்ணு இல்லமா.. காலையில கூடையத் தூக்குனா இந்த வெயில்ல இருந்து தப்பிச்ச்சு வீடுவீடா விக்கறதுக்கே சரியா இருக்கும். காலை நேரத்துல மீன் வாங்குறதுக்கு முன்ன,  இப்படி ஒண்ணா உட்காந்து கொஞ்சம் நேரம் எங்களுக்குள்ள பேசிக்கறது மட்டும்தான் எங்களுக்கான ஆறுதல்….'' என்று கூறிவிட்டு அமர்ந்திருந்தவர்கள் கலைந்ததும் அங்கிருந்த சிரிப்பு சத்தமும்  நின்றுவிட்டது.

தெருவோர நாயகிகள்…

கடந்த பதினைந்து வருடங்களில் வடசென்னை வாசியாக பலரது வாழ்க்கை அனுபவங்களைக் கடந்து வந்திருக்கிறேன். அவர்கள் தொடர்ந்து வாழ்வாதாரத்துக்கான  தங்களது போராட்டத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்தப்படாமல் சிக்கிக் கொண்டிருப்பதை பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன்.

குறிப்பிட்டு கூறினால், சாலையோரம் வசிக்கும் தங்கள் குடும்பத்தினருடன் வாழும் சிறுவர் சிறுமிகள்…

திறமைகள் இருந்தும் வறுமையினால் அவர்கள் தொடர்ந்து மழுங்கடிக்கப்படுகின்றனர்.

தங்களுக்கான திறமைகளைக் கண்டறிவதற்கு முன்னதாகவே வேலைக்குச் சென்றுவிடும் சிறுவர் சிறுமிகள் இங்கு ஏராளம். இந்த சிறுவர் சிறுமிகளின் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை நீங்கள் வால்டாக்ஸ் சாலையில் காணலாம். அங்கிருக்கும் பாத்திரக் கடைகளில் உடல் முழுவதும் கரும்புகையினால் வண்ணம் தீட்டப்பட்டத்துடன் வேலை நேர இடைவெளிகளில் வெளியே நாம் செல்லும் பேருந்துகளை வேடிக்கைப் பார்க்கும்  மிளிரத் தவறிய நட்சித்திரங்களையும் காணலாம்.

இருப்பினும் இவர்களுக்கான  ஒளி ஊட்டும் சக்தியாக,  சில தன்னார்வ அறக்கட்டளைகள் செயல்பட்டு வருவது சற்று ஆறுதலாக இருக்கிறது.

சென்னையின் தெருவோரங்களில் வசிக்கும் குழந்தைகள் தத்தெடுத்து அவர்களின்  கல்வி மற்றும் விளையாட்டுத் திறனை கண்டறிந்து அதனை ஊக்கப்படுத்தி வருகிறது தண்டையார் பேட்டையில் அமைந்துள்ள 'கருணாலயா அறக்கட்டளை' என்ற தொண்டு நிறுவன அமைப்பு.

அந்த அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் வசந்த் நம்மிடையே, "கருணாலயா அறக்கட்டளை 1995 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தெருவோரம் வசிக்கும் குழந்தைகளை மீட்டு அவர்களது திறமைகளை ஊக்கப்படுத்துவதுதான் கருணாலயா அறக்கட்டளையின் முக்கிய நோக்கமாகும். இந்த அறக்கட்டளையில் சுமார் 30 பேர் பணியாற்றி வருகிறோம்.

2014 ஆம் ஆண்டு பிரேசிலில் நடந்த தெருவோரக் குழந்தைகளுக்கான உலகப் கோப்பை கால்பந்து சிறுவர்கள் பங்கேற்று விளையாடினார்கள். அந்த வகையில் 2018 ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெறும் தெருவோரக் குழந்தைகளுக்கான உலகக் கோப்பை போட்டியில் கருணாலயா அறக்கட்டளையின் மூலமாக 5 சிறுமிகள் பங்கேற்கவுள்ளனர்.

அவர்கள் அனைவருமே தெருவோரமாக வசித்த குழந்தைகள்தான். இவர்களில் குறிப்பிட்டுக் கூற வேண்டும் என்றால் சங்கீதா என்ற சிறுமி குடும்ப வறுமை காரணமாக குழந்தைத் தொழிலாளியாக வால்டாக்ஸ் சாலையிலிருந்து மீட்டோம். பின்னர் அவரை மீண்டும் படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தி தற்போது இவர் கல்லூரி முதலாம் ஆண்டு படித்து வருகிறார். தற்போது மே மாதம் மாஸ்கோவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக்கான கால்பந்து போட்டிக்குச் செல்லும் மகளிர் அணிகளில் சங்கீதாவும் ஒருவராக கலந்து கொள்கிறார்.

இவ்வாறு தொடர்ந்து நாங்கள் தெருவோரத்தில் வசிக்கும் குழந்தைகளின் நலனுக்காக பணியாற்றி வருகிறோம்" என்றார்.

 

தெருவோர குழந்தைகளுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பது குறித்து சங்கீதா, "மூன்று தலைமுறைகளாக  நாங்கள் தெருவில்தான் வசித்து வருகிறோம்.  குடும்ப வறுமை காரணமாக 8 ஆம் வகுப்பிலேயே எனது பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டு வால்டாக்ஸ் சாலையில் வேலைக்குச் செல்ல ஆரம்பித்தேன். அங்கு கருணாலயா அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் என்னை சந்தித்து படிக்குமாறு அறிவுறுத்தினார்கள். இருந்தாலும் படிக்கச் சென்று விட்டால் குடும்பத்தை யார் பார்ப்பது என்ற உறுத்தல் இருந்து கொண்டு இருந்தது. எனினும் அவர்களின் அறிவுறுத்தலில் படிக்கச் சென்றேன். அப்போது எனக்கு கால்பந்தாட்டத்தின் மீது ஆர்வம் ஏற்பட்டது.

கருணாலயா சார்பாக ஆண்களுக்கு கால்பந்தாட்டப் பயிற்சி தொடங்கினார்கள். நானும் அவர்கள் பயிற்சி செய்வதைப் பார்ப்பேன். எனக்குள் இருக்கும் ஆர்வத்தை அவர்கள் புரிந்து கொண்டார்கள். அதனைத் தொடர்ந்து நானும் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன் அதன்பிறகு என்னைப் போன்று சில சிறுமிகளும் கால்பந்தாட்டப் பயிற்சியில் கலந்து கொண்டார்கள். இதனைத் தொடர்ந்து சென்னையில் நடந்த  ’ஸ்லம் சார்கர்’  போட்டிகளில் கலந்துகொண்டேன். இதில் சிறந்த பிளேயருக்கான விருதையும் நான் வென்றேன். தொடர்ந்து கால்பந்தாட்டத்தில் ஆர்வம் அதிகரித்தது. கூடவே படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்று எண்ணினேன். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வும் வந்தது.

நாங்கள் தெருவோரத்தில் தங்கி இருப்பதால் இரவு நேரங்களில் போதுமான வெளிச்ச வசதி இருக்காது. வண்டிகள் சென்று வருவதுமாய் சத்தமாய் இருக்கும். அமர்ந்து படிக்கவும் முடியாது. மழை, வெயில் இரண்டும் எங்களுக்கு கஷ்டம்தான். சூழ்நிலையிலும் என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டேன். எங்களது சூழ்நிலை மாறவேண்டும் என்றால் நான் படித்தே தீர வேண்டும் என்று படித்தேன். பத்தாம் வகுப்பில் 351 மார்க் எடுத்தேன். எல்லா வசதிகளுடன் படிப்பவர்கள் 500 எடுத்தாலும் திருப்தி அடைய மாட்டார்கள். ஆனால்  எனது மதிப்பெண் எனக்கு முழு நிறைவைத் தந்தது. இருப்பினும் நான் விரும்பிய கம்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு எனக்கு கிடைக்கவில்லை.  விருப்பம் இல்லாத எனக்கு கிடைத்த குரூப்பை படித்துக் கொண்டிருந்தேன். தொடர்ந்து கால்பந்தாட்டத்தில் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.

பிறகு இந்தியாவில் நடந்த பல்வேறு கால்பந்தாட்டப் போட்டிகளில் பங்கேற்றேன்.

வீடில்லாதவர்களுக்கான உலகக் கோப்பைக்கு இந்தியா சார்பாக பங்கேற்கும் மகளிர் அணியைத் தேர்வு செய்ய  நாடு முழுவதும் நடந்தப்பட்ட போட்டிகளில் இறுதி 8 பேரில்  நானும் தேர்வு செய்யப்பட்டேன்.

ஸ்காட்லாந்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக இந்தப் பயணத்துக்கு, பாஸ்போர்ட் கிடைக்க வீடு, சாதிச் சான்றிதழ் இல்லை. இக் காரணத்திற்காக பலமுறை அலைக்கழிக்கப்பட்டேன். பின்னர் ஒருவழியாக கருணாலயா உதவியுடன் பாஸ்போர்ட் கிடைத்தது ஸ்காட்லாந்துக்கு சென்றேன்.

இதில் இந்தியாவுக்கு ஏழாவது இடம் கிடைத்தது. ஆனால் இதில் பங்கேற்ற பிறகும் எனது வாழ்வில் எந்த மாற்றமும் நடக்கவில்லை.

நான் தெருவில் தங்கி இருந்ததால் யாரும் என்னை மதிக்கவில்லை. கால்பந்து ஆட்டம் மட்டுமே எனது அடையாளமாக, மதிப்பாகவும் இருந்தது. தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தேன். இருப்பினும் எனது குடும்ப சூழ்நிலையும், எனது இருப்பிடமும் பல தடைகளை ஏற்படுத்தின.

 

இருப்பினும் எல்லாவற்றையும் கடந்து தற்போது மாஸ்கோவில் மே மாதம் நடைபெறும் உலகப் கோப்பைப் போட்டியில் பங்கேற்க தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளேன்”

”அரசாங்கம் நினைத்திருந்தால் எனது பாட்டி காலத்திலேயே தெருக்களில் மக்கள் வசிப்பதை தடுத்து இருக்கலாம். ஆனால் அவர்கள் தவறிவிட்டனர். விளைவு என் தலைமுறையும் ரோட்டில் வசிக்கிறது. இனி அடுத்த தலைமுறை தெருக்களில் வசிக்கக் கூடாது என்று கூறும் சங்கீதாவின் கனவு ஐஏஎஸ் ஆவது.

சமூகத்தாலும், அரசாங்கத்தாலும் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, தங்கள் கனவுகளைத் தொலைத்த தெருவோரங்களில் வசிக்கும் பல இளம் பெண்களுக்கு சங்கீதா எதிர்காலத்தில் உந்து சக்தியாக இருக்கப் போகிறார். இந்த பீனிக்ஸ் பறவை  நிச்சயம் உயரப் பறக்கும்.

பயணங்கள் தொடரும்...

இந்து குணசேகர்,

 தொடர்புக்கு: indumathy.g@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x