Published : 02 May 2018 09:58 AM
Last Updated : 02 May 2018 09:58 AM

மரம் வளர்த்தால் பரிசு: கால்நடை மருத்துவரின் புதிய முயற்சி

கொ

ளக்காநத்தம் ஊராட்சியில் கால்நடை மருத்துவ அலுவலராக இருக்கிறார் ராஜேஷ்கண்ணா. சில கிராமங்களில் நிழலுக்கு ஒதுங்கக் கூட மரங்கள் இல்லாததைக் கண்டவர் அந்த பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்க முடிவு செய்தார். இதையடுத்து குரும்பாபாளையம் கிராமத்தை தத்தெடுத்து மரம் வளர்க்க ஆரம்பித்தார். சுமார் 450 மரங்கள் சூழ்ந்து பசுமையாக மாறியது கிராமம்.

இதுதவிர பணி நிமித்தமாக அவர் செல்லும் கிராமங்களுக்கெல்லாம் மக்களிடம் பேசி மரம் வளர்ப்பை ஊக்குவித்தார். இதற்காக தனது சொந்த செலவில் மரக்கன்றுகளை வாங்கி கொடுக்கத் தொடங்கினார்.

மரக்கன்றுகளை நட்டால் போதுமா, அவற் றைப் பராமரித்து வளர்த்தெடுக்க வேண்டுமே. இதற்காக அவர் சில உத்திகளைக் கையாள்கிறார். மரம் வளர்க்க முன் வரும் பள்ளி மாணவர்களுக்கு பேனா, பென்சில், ஜாமெண்ட்ரி பாக்ஸ், பரீட்சை அட்டை போன்ற கற்றல் உபகரணங்களை பரிசாக அளிக்கிறார்.

இதனால் மாணவர்களுக்கு இயல்பாகவே மரம் வளர்க்கும் ஆர்வம் துளிர்க்கிறது. அவர்கள் வளர்க்கு்ம மரக்கன்றுகளுக்கு மாணவரின் பெயரோ அல்லது அவரது குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு பிடித்த பெயரைச் சூட்டுகிறார். இதனால் மரக்கன்று அந்த மாணவனுக்கு நெருக்கமாகிவிடுகிறது. பிறகென்ன பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பு அந்த மாணவரின் வாழ்நாள் கடமையாகி விடுகிறது.

ஒரு வருடம் கழித்து மரக்கன்றுகளை வழங்கிய கிராமங்களுக்குச் சென்று பார்வையிடுகிறார் ராஜேஷ் கண்ணா. மரத்தை நன்றாக வளர்த்தவர்களுக்கு சிறப்பு பரிசும் அனைவருக்கும் பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழும் வழங்குகிறார். இதற்கு ஆகும் செலவுக்காக தனது வருமானத்தில் ஒரு பகுதியை ஒதுக்குகிறார். ராஜேஷ்கண்ணாவின் இந்த முயற்சியால் பெரம்பலூர் மாவட்டத்தில் அகரம், கல்பாடி, பனங்கூர், குரும்பாபாளையம், கொட்டரை, இலுப்பைக்குடி, பிலிமிசை, கூடலூர், குளத்தூர், கொளக்காநத்தம், காரை, புதுக்குறிச்சி, சிறுவாச்சூர், தீரன் நகர், விளாமுத்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சுமார் பத்தாயிரம் மரங்களுடன் பசுமையை தக்க வைத்துள்ளன.

இதுகுறித்து ராஜேஷ்கண்ணா கூறும்போது, “மரங்கள் எவ்வித எதிர்பார்ப்புமின்றி நாம் உயிர் வாழ தேவையான ஆக்சிஜன் காற்றை உற்பத்தி செய்து வழங்குகின்றன. கூடுதலாக நிழல் தருதல், பூமி வெப்பமயமாவதை தடுத்தல் என பூமியின் உயிர் மரங்களில்தான் அடங்கியுள்ளன. இதனால் தினமும் 10 மரக்கன்றுகளை கொடுத்து வளர்க்கச் செய்கிறேன். எனது காரில் பெட்ரோல் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயம் சில மரக்கன்றுகள் இருக்கும்” என்றார் நெகிழ்ச்சியுடன். மரம் வளர்த்தால் பரிசளித்து ஊக்குவிக்கும் கால்நடை மருத்துவரின் பணி மெச்சத் தகுந்ததுதான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x