

சொ
ம், தண், துங்கதை, நுட்பதம், தும்பரம், துவனி, துலி, தெச, தெல்லி இதெல்லாம் எந்த மொழியாக இருக்கும் என யோசிக்கிறீர்களா. அத்தனையும் அச்சு அசல் தூய தமிழ்ச் சொற்கள்தான். நாம்தான் அவற்றை பயன்படுத் துவதில்லை.
உலக மொழிகளில் 10 கோடிக்கும் அதிகமானோர் பேசும் மொழி தமிழ். ஆனால், உலக அளவில் அழிவை நோக்கிப் பயணிப்பதில் 8-வது இடத்தில் உள்ளதாக யுனெஸ்கோவின் ஆய்வு நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், தமிழ் மொழியில் பிறமொழிச் சொற்கள் கலப்பதுதான். நாகரிகம் எனக் கருதி, தமிழ் மொழி யில் ஆங்கிலத்தைக் கலந்துபேசி, தனித்தமிழ் சொற்களையே பயன்பாட்டிலிருந்து அகற்றி வரும் பணியைத் தமிழர்கள் பலரும் தமக்கே தெரியாமல் செய்து வருவதுதான் இந்த நிலைக்கு காரணம்.
இதனால் தமிழில் உள்ள வளமையான சொற்களின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவிட்டது என்று தமிழறிஞர்கள் பலர் கவலையில் இருக்க, அணில் அளவேனும் தமிழ் காக்கும் பணியை செய்து வருகிறார் மன்னார்குடியைச் சேர்ந்த ஒரு பெட்டிக் கடைக்காரர். வழக்கொழிந்து வரும் தூய சொற்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியை சப்தமில்லாமல் செய்கிறார்.
மன்னார்குடி சிவானந்தா பேருந்து நிறுத்தம் எதிரே பெட்டிக்கடை நடத்தி வரும் கார்த்திகேயன்தான் அவர். படிப்பு என்னவோ 10-தான். ஆனால் தமிழ் மீதான சிந்தனை பிஎச்டியை தாண்டும். தினமும் கடையைத் திறந்தவுடன் செய் யும் வேலை, கடை வாசலில் வைக்கப்பட்டுள்ள கரும்பலகையில் 4 தனித்தமிழ் சொற்களை எழுதி அதற்கு அர்த்தத்தையும் எழுதி வைத்துவிடுவதுதான். நாள் ஒன்றுக்கு 4 வார்த்தைகள் வீதம் இவர் எழுதி வைத்து அர்த்தம் கூறிய வார்த்தைகள் கடந்த 17 ஆண்டுகளில் 10 ஆயிரத்துக்கும் மேல். இவர் கரும்பலைகைக்கென தனி வாசகர் வட்டாரமே உள்ளது. தமிழ்ப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், தமிழார்வலர்கள் எனப் பலரும் இவரை பாராட்டிச் செல்கின்றனர். இதுவரை 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு இவர் பரிந்துரைத்த தமிழ்ப் பெயர்களை பெற்றோர் சூட்டியுள்ளனர்.
அவரைச் சந்தித்தோம். அப்போது அவர் கூறும்போது, “வழக்கொழிந்து வரும் சொற்களை மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருந்தால் அந்தச் சொற்கள் நம்மைவிட்டு மறைந்து விடாது எனக் கருதியதால், கரும் பலகையில் செம்மையான தனித்தமிழ்ச் சொற்களை எழுதத் தொடங்கினேன்” என்றார்.
‘நீதித்தேரை ஊர்கூடி இழுத்தால் உன்குடியும், ஊர்குடியும் உயரும்’ இதுபோன்ற 150 புதுக்குறள்களையும் (திருக்குறள் பாணியில்) எழுதியுள்ளார். பெட்டிக்கடை நடத்தினாலும் மொழியின் மீது நேசம் கொண்ட கார்த்திகேயனை வாழ்த்தலாம்.