Published : 30 May 2018 09:41 AM
Last Updated : 30 May 2018 09:41 AM

‘மழை நீர் தேவராஜ்உயிர் நீர்’: மழை நீரை மட்டுமே அருந்தும் மனிதர்

ரோடு சூரம்பட்டிவலசில் வசிப்பவர் தேவராஜ். கடந்த 5 ஆண்டுகளாக வீட்டில் சேகரிக்கப்படும் மழை நீரை மட்டும் குடித்து வரும் அதிசயப்பிறவி. நிலத்தடி நீரை நினைத் துக்கூட பார்ப்பதில்லை.

ஓடுகளால் ஆன கூரையில் விழும் மழை நீரை வீட்டின் தாழ்வாரத்தில் சேகரிக்கும் வகையில் ஏற்பாடு செய்துள்ளார். அவ்வாறு சேகரிக்கப்படும் மழை நீரை வீட்டினுள் பெரிய பாத்திரத்தில் துணி யால் வடிகட்டி வைக்கிறார். ஒவ்வொரு பாத்திரத்தின் மீதும், மழை நீர் பிடிக்கப்பட்ட தேதி ஒட்டப்பட்டுள்ளது. இதுபோக 84 நாள் ஆன மழை நீரை, ஆய்வகத்தில் கொடுத்து, இது குடிப்பதற்கு ஏற்ற நீர்தான் என்பதற்கான சான்றிதழையும் வாங்கி வைத்திருக்கிறார்.

மழை நீரை மட்டுமே பருகும் இந்த அதிசய மனிதரை சந்தித்தோம். ‘இதுவரை நீங்க இதுபோன்ற நீரைக் குடித்து இருக்க மாட்டீர்கள்’ என்று சொல்லியபடி, ஒரு பாட்டில் நீரை கொடுத்தார். அந்த பாட்டிலில் 29-7-2017 என தேதி குறிப்பிடப்பட்டு இருந்தது. பிடித்து 150 நாட்களைக் கடந்தும், கல்கண்டாய் இனித்தது மழை நீர்.

அவர் தனது நெற்றியில் ‘மழை நீர் - தேவராஜ் - உயிர்நீர்’ என்ற பச்சை குத்தி இருந்தார். “மழைநீரின் சிறப்பை என்னை பார்த்து அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்தேன். அதற்காக போன வருடம் பச்சை குத்திக்கொண் டேன்’ என்றார்.

“2013 மே 31-ம் தேதி. அன்றைய தினம் நல்ல மழை. தெருவெல்லாம் வெள்ளம் வழிந்து ஓடியது. இவ்வளவு நீரை வீணாக்கிட்டு, குழாயில் தண்ணீர் எப்போது வரும் என காத்திருக்கிறோமே என்ற எண்ணம் தோன்றியது.

அதோடு, மழை நீரை மட்டுமே குடித்து நாம் வாழ்ந்து காட்டினால் என்னன்னு நினைத்தேன். அப்போது ஆரம்பித்ததுதான். இப்போது வரை மழை நீரை மட்டும்தான் பருகி வருகிறேன். சுமாரா 300 லிட்டர் மழை நீர் இப்போது என் சேமிப்பில் இருக்கிறது.

காலடி படாத கூரையில் இருந்து கிடைக்கும் தேவாமிர்தமான, மழை நீரை சேகரிச்சு, குடிக்க பயன்படுத்தலாம். நிலத்தின் தன்மைக்கேற்ப நீரின் தன்மை மாறுபடும். ஆனால், மழைநீர் என்றும் மாறாது” என்கிறார் தேவராஜ்.

இவர், வெளியில் சென்றாலும் மழைநீரை பாட்டிலில் எடுத்துச் செல்கிறார். இந்த மழை குடிநீர் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய அரசு தன்னை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என விரும்புகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x