Last Updated : 23 May, 2018 06:55 PM

 

Published : 23 May 2018 06:55 PM
Last Updated : 23 May 2018 06:55 PM

ஆபத்தில் 900க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகள்: என்ன சொல்கிறது அரசு?

மாணவர் எண்ணிக்கையைக் காரணம் காட்டி 900க்கும் மேற்பட்ட அரசுத் தொடக்கப் பள்ளிகளை தமிழக அரசு மூட இருப்பதாக வெளியான ஒரு தகவல் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு, அரசு நிதியுதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி நிலவரப்படி உள்ள மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்வது குறித்த அரசாணைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யும் போது அவ்வப்போது வெளியிடப்பட்ட அரசாணைகள், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009-ல் வகுக்கப்பட்ட நெறிமுறைகள் மனிதவள மேம்பாட்டுத் துறையின் வழிகாட்டுதல்கள் ஆகிய அனைத்தையும் பரிசீலித்து தற்போதைய நிலையில் மாணவர்களின் கல்வித் தரத்தையும், கற்பித்தலை மேம்படுத்துவது குறித்தும் கருத்தில் கொண்டு ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்திட வேண்டும்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள பிரிவுகளுக்கு 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், 60 மாணவர்கள் வரையில் 2 ஆசிரியர்களும், 61 முதல் 90 மாணவர்கள் இருந்தால் 3 ஆசிரியர்களும், 91 முதல் 120 மாணவர்கள் இருந்தால் 4 ஆசிரியர்களும் இதேபோன்று ஒவ்வொரு 30 மாணவர்களுக்கும் ஒரு ஆசிரியர் கூடுதலாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 அடிப்படையில் நடுநிலைப்பள்ளிகளில் அதாவது 6 முதல் 8-ம் வகுப்பு வரையில் குறைந்தபட்சம் 3 ஆசிரியர் பணியிடங்களை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் 37,211 அரசுப் பள்ளிகளும், 8,403 அரசு உதவி பெறும் பள்ளிகளும், 12,419 தனியார் சுயநிதி பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இவற்றில் ஒரு கோடியே 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கல்வி பயில்கின்றனர்.

தொடக்கக் கல்வித்துறையின் கீழ் 529 அரசுப் பள்ளிகளும், 436 மாநகராட்சிப் பள்ளிகளும், 839 நகராட்சிப் பள்ளிகளும், 6,589 நிதி உதவிபெறும் பள்ளிகளும், 28 ஆயிரத்து 42 ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளும்,1471 நலத்துறைப் பள்ளிகளும், 6,308 நர்சரி பிரைமரிப் பள்ளிகளும் உள்ளன. இந்தப் பள்ளிகளில் 36 லட்சத்து 99 ஆயிரத்து 826 மாணவர்கள் படிக்கின்றனர்.

ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் 18 லட்சத்து 32 ஆயிரத்து 403 மாணவர்கள் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலும் படிக்கின்றனர். நர்சரி பிரைமரிப் பள்ளிகளில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 639 மாணவர்கள் படிக்கின்றனர்.

அவற்றிலும் குறிப்பாக ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 2 லட்சத்து 81 ஆயிரத்து 621 மாணவர்களும், 2-ம் வகுப்பில் 2 லட்சத்து 74 ஆயிரத்து 332 மாணவர்களும், 3-ம் வகுப்பில் 2 லட்சத்து 99 ஆயிரத்து 997 மாணவர்களும், 4-ம் வகுப்பில் 3 லட்சத்து 25ஆயிரத்து 699 மாணவர்களும், 5-ம் வகுப்பில் 3 லட்சத்து 24 ஆயிரத்து 82 மாணவர்களும் படித்து வருகின்றனர்.

ஆனால் அதேநேரத்தில் நர்சரி பிரைமரி பள்ளிகளில் 1-ம் வகுப்பில் 2 லட்சத்து 167 மாணவர்களும், 2-ம் வகுப்பில் 1 லட்சத்து 64 ஆயிரத்து 962 மாணவர்களும், 3-ம் வகுப்பில் 1 லட்சத்து 53 ஆயிரத்து 330 மாணவர்களும், 4-ம் வகுப்பில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 776 மாணவர்களும், 5-ம் வகுப்பில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 135 மாணர்களும் படித்து வருகின்றனர் என தொடக்கக் கல்வித்துறையின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் அரசுப் பள்ளிகளில், நிர்ணயிக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின்படி மாணவர்கள் எண்ணிக்கை குறித்த விவரங்களையும், மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறை அண்மையில் உத்தரவு பிறப்பித்தது. இதைத்தொடர்ந்து, மாணவர் சேர்க்கை குறைந்த பள்ளிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு மாணவர் கூட இல்லாமல் 29 தொடக்கப்பள்ளிகள் உள்ளன. 892 தொடக்கப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட்டது. இந்தப் பள்ளிகளில் பெரும்பாலும் தலைமை ஆசிரியர் மட்மே பணியாற்றி வருகிறார். ஒரு சில பள்ளிகளில் மட்டும் ஒரு தலைமை ஆசிரியரும், ஒரு இடைநிலை ஆசிரியரும் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை மூடும் முடிவில் தமிழக அரசு இருப்பதாகவும் செய்தி வெளியானது. அந்தப் பள்ளி மாணவர்களை அருகிலுள்ள பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்க முடுவெடுத்திருப்பதாகவும் சொல்லப்பட்டது.

இதுபோன்ற மாணவர் சேர்க்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள அரசுப் பள்ளியுடன் இணைப்பதற்கான நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலின் படி தொடக்கக் கல்வித்துறை தொடங்கி உள்ளதாக தகவல் வெளியானது. வேறு பள்ளியுடன் இணைக்கும் போது அந்தப் பள்ளியின் மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு பேருந்து வசதி ஏற்படுத்தி தருவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவதற்கு முக்கியக் காரணம் அங்கு போதுமான அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது ஆகும். மாணவர்கள் தங்களின் பிள்ளைகள் ஆங்கிலத்தில் பேசுவதை விரும்புகின்றனர் என அரசு காரணம் கூறினாலும், கிராமப்புறங்களில் உள்ள எந்த தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களும் சரளமாக ஆங்கிலம் பேசுவது கிடையாது என்பதுதான் உண்மை.

இந்த சூழலில் நாம் இன்னொன்றையும் கூர்ந்து கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

தமிழகத்தில் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் ஆரம்ப வகுப்பில் 25 சதவீதம் மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதன்படி, 2013- 14 ஆம் கல்வி ஆண்டில் 49,864 மாணவர்களும், 2014-15 ஆம் கல்வி ஆண்டில் 86,729 மாணவர்களும், 2015-16 ஆம் கல்வியாண்டில் 94,811 மாணவர்களும், 2016-17 ஆம் கல்வியாண்டில் 98,474 மாணவர்களும், 2017-18 ஆம் கல்வியாண்டில் 90,607 மாணவர்களும் படித்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது 2018- 19 ஆம் கல்வியாண்டில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்காக 1,32,000 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

2013-14 முதல் 2016- 17 ஆம் கல்வியாண்டு வரை இலவச கட்டாய கல்விச்சட்டத்தின் 25% இட ஒதுக்கீட்டின் சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத் தொகை ரூ.401.98 கோடி மாநில அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 900க்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளை அருகில் உள்ள பள்ளியுடன் இணைப்பதை தவிர்த்து, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்திற்கு அளிக்கும் நிதியைக் கொண்டோ அல்லது அரசுப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்த அதிக நிதியையோ பள்ளிக் கல்வித்துறைக்கு ஒதுக்கலாம் என்று கல்வி ஆர்வலர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் இல்லை: செங்கோட்டையன்

''அரசுப் பள்ளிகளை மூடும் நோக்கம் அரசுக்கு இல்லை. அனைத்துப் பள்ளிகளும் இயங்கும். தற்போது பள்ளிகளில் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச சீருடைகள் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் மூலம் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்'' என்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்.

அரசின் நோக்கம் சரியானதுதான். ஆனால், அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதும், நர்சரி பிரைமரிப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளதையும் அரசு கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். மாணவர் சேர்க்கை குறைவதற்கான காரணங்களை ஆய்வு செய்து கண்டறிய வேண்டும். அரசுப் பள்ளிகளில் கூடுதலாக எப்படி மாணவர்களைச் சேர்ப்பது, எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்கு எப்படி வழி வகை செய்யலாம் என்பதை அரசு பரிசீலிக்க வேண்டியது அவசியம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x