தடகளத்தில் அதகளம்: குறைகளை தாண்டி உயரம் தொட்ட கார்த்திக்

தடகளத்தில் அதகளம்: குறைகளை தாண்டி உயரம் தொட்ட கார்த்திக்
Updated on
2 min read

ரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சியைச் சேர்ந்தவர் கார்த்திக். பிறவியிலேயே காது கேளாத, வாய் பேச முடியாதவர். தடகளப் போட்டிகளில் அதகளம் செய்து, கொத் துக் கொத்தாக வாங்கிய பதக்கங்களால் வீட்டை நிறைத்து வைத்திருக்கிறார்.

தந்தை சரவணன் மாட்டு வண்டித் தொழிலாளி. காது கேளாத, வாய் பேச முடியாத கார்த்திக், படித்தது தோட்டக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில். பாடங்களை கேட்கவும் முடியாது. அதுபற்றி வாய் திறந்து பேசவும் முடியாது. கரும்பலகையில் ஆசிரியர் எழுதிப்போடுவதை பார்த்து எழுத, படிக்க ஆரம்பித்தார்.

கார்த்திக்கின் திறமைகளை கணித்த ஆசிரியர் ஒருவர், அவருக்கு போல்வால்ட் பயிற்சி அளித்து, பொதுப் பிரிவு விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளச் செய்தார். அவர் கணிப்பு பொய்க்கவில்லை. மாவட்ட அளவில் 2 முறை முதலிடம், கோட்ட அளவில் 3-ம் இடம் என கார்த்திக்கின் சாதனைப் பயணம் தொடங்கியது. போல்வால்ட் டில் 3 மீட்டர் உயரம் வரை தாண்டி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

தொடர்ந்து போல்வால்ட் பயிற்சி பெற போதுமான வசதியில்லாததால் உயரம் தாண்டுதல், தடை தாண்டும் ஓட்டத்தில் கவனம் செலுத்தத் தொடங்கினார். பொதுப் பிரிவில் உயரம் தாண்டுதலில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றார். தடை தாண்டும் ஓட்டத்தில் 3-ம் இடத்தைப் பிடித்து அசத்தினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான கபடி, குண்டு எறிதல் போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம். 100 மீ, 200 மீ, நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் 2-ம் இடம். 7-வது தமிழ்நாடு காது கேளாதோருக்கான உயரம் தாண்டுதலில் தமிழக அளவில் முதலிடம். பின்னர் 8-வது தமிழ்நாடு காது கேளாதோருக்கான போட்டியில் போல்வால்ட், தடை தாண்டும் ஓட்டம், ட்ரிபிள் ஜம்ப் ஆகியவற்றில் முதலிடம் என வெற்றிகளை நோக்கி ஓட ஆரம்பித்தார் கார்த்திக்.

கடந்தாண்டு நடைபெற்ற காது கேளாதோருக்கான தேசிய போட்டி யில் உயரம் தாண்டுதலும் (1.90 மீட்டர்) அதேபோட்டியில் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் தங்கம் வென்றார். கடந்தாண்டு டிசம்பரில் நடந்த தேசிய காது கேளாதோருக்கான போட்டியில் உயரம் தாண்டுதலிலும் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்திலும் 2 வெள்ளிப் பதக்கம் இவர் வசமானது.

மாவட்ட, மாநில, தேசிய அளவில் செய்த சாதனையால் கார்த்திக் சர்வதேச அரங்குக்குச் சென்றார். துருக்கியில் கடந்தாண்டு ஜூலையில் நடைபெற்ற சர்வதேச டெஃப்லிம்பிக் (காது கேளாதோருக்கான) போட்டியில், 1.85 மீட்டர் உயரம் தாண்டி 8-ம் இடத்தைப் பிடித்தார். உரிய வசதியும் அதற்கான பயிற்சியும் இல்லாத எளிய குடும்பத்தைச் சேர்ந்த கார்த்திக், சர்வதேச அளவில் போட்டியில் பங்கேற்றதே பெருமைக்குரிய விசயம் என்றாலும், உரிய பயிற்சி கிடைத்திருந்தால் நிச்சயம் பதக்கப் பட்டியலில் இடம் பெற் றிருப்பார்.

பிளஸ் 2 முடித்த பிறகு திருச்சி கல்லூரி ஒன்றில் பட்டப்படிப்பில் சேர்ந்தவரால் படிப்பையும் தொடர முடியவில்லை. இதையறிந்த கரூர் கொங்கு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் அவர் விரும்பிய பாடப்பிரிவில் இடம் வழங்கி அவருக்கு தேவையான பயிற்சிகள் அளிப்பதாக உறுதி கூறியுள்ளது. மீண்டும் படிப்பும் பதக்க வேட்டையும் தொடரும் என எதிர்பார்க்கலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in