Published : 18 Apr 2018 07:59 AM
Last Updated : 18 Apr 2018 07:59 AM

சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய்ச் செய்திகள்: உண்மையை ஆராய்ந்து உணர ஆர்வலர்கள் வேண்டுகோள்

சமூக ஊடகங்களில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் செய்திகளை பொதுமக்கள் அப்படியே நம்பாமல் உண்மைகளை ஆராய்ந்து உணர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப புரட்சியால் முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப், யூ-டியூப் போன்ற சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 50 கோடியை தாண்டியுள்ளது. செல்போனிலேயே சமூக ஊடகங்களை கையாள முடியும் என்பதால், செய்திகளைத் தெரிந்துகொள்வது போலவே, செய்திகளைப் பரப்புவதும் வெகு எளிதாகிவிடுகிறது.

சமூக ஊடகங்கள் அளித்துள்ள சுதந்திரத்தையும், வாய்ப்பையும் பயன்படுத்தி தனிநபர்களும், மதம், ஜாதி, இனம், மொழி ரீதியாக வெறுப்பை தூண்டுபவர்களும் திட்டமிட்டு பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர். சமீபகாலமாக இது அதிகமாகி, சமூகத்தில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்துகிறது. சில நேரங்களில் வன்முறைக்கும் அது வழிவகுக்கிறது.

காவிரி பிரச்சினையால் சென்னையில் ஐபிஎல் போட்டிக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த சூழலில், கடந்த 10-ம் தேதி சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டியை திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதியும், குடும்பத்தினரும் நேரில் பார்ப்பது போன்ற படங்கள் சமூக ஊடகங்களில் பரவியது. இதை உண்மை என்று நம்பிய ஆயிரக்கணக்கானோர் ஸ்டாலினையும், திமுகவையும் கடுமையாக விமர்சித்தனர். உண்மையில், இது 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐபிஎல் போட்டியின்போது எடுக்கப்பட்ட படம்.

கல்லூரி மாணவிகளை பேராசிரியை நிர்மலாதேவி தவறாக வழிநடத்திய ஆடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நிர்மலாதேவி பாஜக மகளிர் அணி நிர்வாகி என்று கூறி, அவர் பாஜக நிர்வாகிகளுடன் இருப்பது போன்ற படங்கள் கடந்த 2 நாட்களாக சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. உண்மையில், அந்தப் படத்தில் இருப்பவர் பாஜக மகளிர் அணி நிர்வாகி ஜெஸ்சி முரளிதரன் எனத் தெரியவந்தது. தன்னை நிர்மலாதேவி என செய்தி பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெஸ்சி முரளிதரன் போலீஸில் புகார் அளித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த மாதம் ராமராஜ்ய ரத யாத்திரை வந்தபோது அதை முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தொடங்கி வைக்க இருக்கிறார் என்று தனியார் செய்தி தொலைக்காட்சியில் ‘பிரேக்கிங் செய்தி’ வந்ததுபோலவே சித்தரித்து பொய் செய்தி பரவியது. பழனி அருகே மானூரில் அதிமுக கொடிக் கம்பத்தில் பாஜக கொடி ஏற்றப்பட்டது. ‘அதிமுக ஆட்சியையே நாங்கள் எடுத்து நடத்தும்போது அவர்கள் கொடிக்கம்பத்தில் பாஜக கொடியை பறக்கவிட்டதில் தவறில்லை’ என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியதாக தகவல் பரப்பப்பட்டது. ‘கர்நாடகாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் காவிரி நீரை தமிழகத்துக்கு கொடுத்துவிடுவார்கள்’ என கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பேசியதாக தனியார் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டதுபோல சித்தரித்து வீடியோவுடன் செய்தி வெளியானது. இவை எல்லாமே பொய்ச் செய்திகள்தான்.

வட மாநிலங்களில் ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நேற்று செய்தி வெளியான நிலையில், நாகாலாந்து பாஜக வேட்பாளர், தன் வெற்றியைக் கொண்டாட பணத்தை பால்கனியில் இருந்து வீசுவது போன்ற வீடியோ நேற்று ட்விட்டரில் வெளியானது. இது 2 மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டது.

பொய் செய்தியை உருவாக்குபவர்கள், இதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்பதற்காக, தனியார் டிவிகளின் லோகோவுடன் ‘பிரேக்கிங் செய்தி’ என்று இணைத்து பரப்புகிறார்கள். இதனால், பார்ப்பவர்களும் நம்பிவிடுகிறார்கள். தங்கள் வட்டாரத்தில் ‘பிரேக்கிங் செய்தி’ தருவதாக நினைத்து, அந்தச் செய்திகளின் உண்மைத் தன்மையை அறியாமல் உடனே பரப்பிவிடுகிறார்கள். இந்த அப்பாவித்தனம், அறியாத்தனம், பொய்ச் செய்தி உருவாக்குபவர்களுக்கு சாதகமாகிறது. அவர்கள் எதிர்பார்த்தபடியே அந்த பொய் செய்தி வேகமாக பரவிவிடுகிறது. இதேபோல, அரசு உத்தரவுகளைக்கூட தவறாக திரித்து அரசு முத்திரைகளைப் பயன்படுத்தி பரப்புகின்றனர். எனவே, எந்தவொரு செய்தியையும் பொதுமக்கள் உடனே நம்பக்கூடாது. உண்மையை ஆராய்ந்து உணர வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள், தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள். அரசு செய்திகளை அதிகாரப்பூர்வ இணையதளங்களில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இதுதொடர்பாக ‘நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ்’ அமைப்பின் கூடுதல் தலைமை இயக்குநர் எஸ்.அமர் பிரசாத் ரெட்டி கூறும்போது, “முகநூல், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களில், பயன்படுத்தும் முக்கிய நபர்களின் பெயருக்கு அருகே நீல நிறத்தில் ஒரு டிக் குறியீடு இருக்கும். குறிப்பிட்ட நபர்தான் அந்த பக்கத்தை பயன்படுத்துகிறார் என்பதைச் சரிபார்த்து வழங்கும் குறியீடு அது. எனவே, அவ்வாறு உள்ள பக்கங்களை நம்பலாம். அதேபோல, பிரபல ஊடக நிறுவனங்களின் அசல் பக்கங்களை நம்பலாம். ஆனால், தனி நபர்கள் தங்கள் விருப்பு, வெறுப்பு அடிப்படையில் பகிரும் தகவல்களை, அப்படியே நம்பக்கூடாது. பாதிப்பை ஏற்படுத்தும் செய்தி என்றால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவும் தயங்கக் கூடாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x