Published : 10 Apr 2018 09:44 AM
Last Updated : 10 Apr 2018 09:44 AM

காளாச்சேரி டூ வாஷிங்டன்: நம்பிக்கை தந்த நடுநிலைப் பள்ளி மாணவி

மா

தவிடாய் காலம் என்பது பெண்களுக்கு துயர காலம். அவர்கள் சந்திக் கும் அயற்சிமிக்க ஓர் அனுபவமாகவே கடந்து போகும். அதைப்பற்றி விவரிப் பது என்பது நமக்கு ஒரு தகவலாகத் தான் பதிவாகும். ஆனால் அனுபவிக் கும் பெண்களுக்குத்தான் தெரியும் அதன் வலியும் அது சார்ந்த உளவியல் பிரச்சினைகளும். அதிலும் பூப்பெய்த புதிதில் பெண் குழந்தைகள் சந்திக்கும் மனஉளைச்சல் சொல்லி மாளாது. அச்சம், வலி, மனப்பதற்றம், சடங்கு சாங்கியம் என்ற பெயரில் வீட்டில் இருப்பவர்களின் அணுகுமுறை என அந்தக் காலகட்டம் ஒரு சாபக்கேடாகவே வந்து போகும்.

அப்படி ஒரு அனுபவத்தை உடல் ரீதியாகவும் மனதளவிலும் சந்தித்த 8-ம் வகுப்பு மாணவி பானுப்பிரியா, ஆய்வறிக்கையாக சமர்ப்பிக்க, அதை அப்படியே ஏற்றுக்கொண்ட சர்வதேச அமைப்பு ஒன்று அவருக்கு பரிசையும் கொடுத்து வாஷிங்டன்னுக்கு அழைப் பும் விடுத்திருக்கிறது.

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனம் அகில இந்திய அளவில் கல்வி மற்றும் சமுதாய செயல் திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியை நடத்தியது. இந்த ஆண்டு வரப்பெற்ற 4,300 பள்ளிகளைச் சேர்ந்த அறிக்கைகளில், 19 மட்டுமே சிறந்தவையாகத் தேர்வு செய்யப்பட்டன. இதில் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் காளாச்சேரி (மேற்கு) ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் ஒன்று. இதில்தான் பானுப்பிரியா 8-ம் வகுப்பு படிக்கிறார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்கு மார்ச் 28-ம் தேதி டெல்லி குர்கானில் நடந்த நேர்காணலில் பானுப்பிரியா சமர்ப்பித்த ‘மாதவிடாயும் மூட நம்பிக்கைகளும்’ என்ற செயல் திட்ட அறிக்கை தனிப்பிரிவில் முதலிடத்தை பிடித்தது.

இதற்காக ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசு மற்றும் தங்கப் பதக்கம் வழங்கியதுடன் அமெரிக்காவின் வாஷிங்டன்னில் நடைபெறவுள்ள சர்வ தேச கருத்தரங்கில் பங்கேற்கவும் பானுப்பிரியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக வரும் ஏப்ரல் 26-ம் தேதி டெல்லியில் இருந்து வாஷிங்டன் பறக்கிறார் பானுப்பிரியா.

பெற்றோர் சதாசிவமும் கோமதியும் பெருமையில் மிதக்கின்றனர். விவசாய கூலித் தொழிலாளியின் மகள், பள்ளிக்குச் செல்வதையே பெருமையாக நினைக்கும் குடும்பத்துக்கு, மகள் வாஷிங்டன் செல்கிறாள் என்றால் சொல்லவா வேண்டும்.

பானுப்பிரியாவை சந்தித்தோம். அவர் பேசும்போது, “ஆங்கில ஆசிரியர் ஆனந்த் சார் மூலமாக இந்த போட்டியில் பங்கேற்றோம். கடந்த 6 மாதமாக எதிர்கொண்டு வரும் இந்த மாதவிடாய் நாட்களை நினைத்தாலே எனக்குள் ஒருவித அச்சமும், பயமும் தொற்றிக் கொள்கிறது. அதுபோன்ற நாட்களில் என்னை குடும்பத்தாரும் மற்றவர்களும் நடத்தும் விதம், குறிப்பாக பெண்களே மூட நம்பிக்கைகளை சாமிகளின் பெய ரால் நடைமுறைப்படுத்துவதையும் எனது அறிக்கையில் பதிவு செய்தேன்.

நேர்காணலில் என்னிடம் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கு எளிதில் பதிலளித்தேன், நான் எதிர் கொண்டு வரும் பிரச்சினை என்பதால் என்னால் எளி தாக பதிலளிக்க முடிந்தது. என் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு நன்றி” என்று கூறினார்.

இதுகுறித்து ஆசிரியர் ஆனந்த் கூறியபோது, “இந்த வெற்றிக்கு முதல் காரணமாக அமைந்திருப்பது ஆங்கில மொழியில் பேசும் திறன்தான். இதற் கான பயிற்சியை 7 ஆண்டுகளாக எங்கள் பள்ளியில் செய்து வருகிறோம். மேலும் கடந்த 3 ஆண்டுகளாக தங்கப்பதக்கம் வென்று வருகிறோம் ” என்றார்.

தலைமையாசிரியர் வி.திலகம் கூறியபோது, “எங்கள் பள்ளி மாணவர்கள் அனைவருமே விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களின் குழந்தைகள்தான். அவர்களுக்கு முறையான பயற்சி அளித்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்கச் செய்து வெற்றிபெறச் செய்கிறோம். அவர்களும் வெற்றிபெறுவதுடன் பள்ளியையும் மேம்படுத்தியுள்ளனர்”என்கிறார் பெருமையுடன்.

பானுப்பிரியா தவிர இதே பள்ளி யைச் சேர்ந்த மாணவ மாணவிகள் எஸ்.ஹரிஹரன், எஸ்.புஷ்பலதா, ஏ.வித்யா, ஆர்.தேவிகா, பி.சரோஜினி ஆகியோர் சமர்ப்பித்த ‘ரசாயன உரங்களைக் கையாளும் விவசாயிகளுக்கு ஏற்படும் அபாயகர நோய்த் தாக்குதல்கள்’ என்ற செயல் திட்ட அறிக்கை குழுப் போட்டியில் 2-ம் இடத்தையும் பெற்று வெள்ளிப் பதக்கத்தை பெற்றது.

புதிய இந்தியாவுக்கான நம்பிக்கை இவர்களைப் பார்த்துதான் பிறக்கிறது. வாழ்த்துக்கள் செல்லங்களே!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x