Published : 05 Apr 2018 03:06 PM
Last Updated : 05 Apr 2018 03:06 PM

யானைகளின் வருகை 156: திரும்பிய பக்கமெல்லாம் திகில்

ஒரு காலத்தில் தாளியூர், கெம்பனூர், தொண்டாமுத்தூர், மாதம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரத்தில் யானைகள் வராதா, நம் கேமரா கண்களுக்கு கிடைக்காதா என்று ஏங்கிக்கிடந்தவன் நான். யானைகள் ஊருக்குள் புகுந்துவிட்டது என கிராமத்தவர்கள் போன் செய்து சொல்லும்போது அடித்துப் பிடித்துக் கொண்டு வண்டியை எடுத்துக்கொண்டு பறப்பேன். அதற்குள் யானைகள் அங்கிருந்து காடுகளுக்குள் போயிருக்கும். அதனால் அவற்றை படம் பிடிக்க முடியாது என்று ஏமாந்து திரும்பி வந்த நாட்கள் நிறைய உண்டு.

அப்படிப்பட்ட சமயங்களில் சம்பந்தப்பட்ட கிராமவாசிகள், 'எங்கள் ஊருக்கு இரவில் யானைகள் வரும். வேண்டுமானால் தங்கிப் பாருங்கள்!' என்று கேட்டுக் கொள்ளும்போது, என்னிடம் இருக்கும் கேமரா, அதில் கிடைக்கும் பிளாஷ் வெளிச்சம், இரவில் அதை வைத்து யானைகளை படம் எடுக்க முடியுமா என்ற சந்தேகம் ஆகியவை அந்தத் திட்டத்தைப் புறக்கணிக்கச் செய்துவிடும். அதனால் வெளிச்சம் இருக்கும்போதே யானைகளை தேடிப் படம் எடுத்து விட வேண்டும் என்ற வேட்கை நிறையவே இருந்தது. அதில் ஒன்றுதான் தூவைப்பதி மண்ணுக்காரன் தோட்டத்தில் குட்டிகளுடன் தொட்டியில் விழுந்த யானைகளைப் படம்பிடிக்கச் சென்று அதன் காலடியில் விழுந்து தப்பித்த நிகழ்வும் நடந்தது.

ஒரு முறை தொண்டாமுத்தூர் மாதம்பட்டி அருகே உள்ள கரும்புத் தோட்டத்தில் ஏழெட்டு யானைகள் புகுந்துவிட்டன. இரவெல்லாம் மக்கள் பட்டாசுகள், கொளுத்தியும், டமாரம் அடித்தும், ஓங்காரமெழுப்பியும் அவை நகரவில்லை. பகலிலும் அவை கரும்புத் தோப்புக்குள்ளேயே பதுங்கிவிட்டது. அதைப் புகைப்படம் எடுக்க அப்போதைய சன் டிவி நிருபர் மார்ட்டினுடன் நானும் சென்றிருந்தேன். காலை 9 மணிக்கு சென்றவர்கள் நாங்கள் மாலை 4 மணி வரை கரும்புத் தோட்டத்தில் நின்ற யானைகளைப் பார்க்க முடியவில்லை.

இடையிடையே அந்த கரும்புத் தோட்டத்தின், ‘உள்ளிருந்து யானை வந்து அடித்தால் அந்த வேகத்தில் ஓடி தப்பிக்க முடியுமா?’ என்ற சிந்தனை கூட இல்லாமல் குருட்டு தைரியத்தில், அந்த தோட்டத்து வரப்பை ஒட்டிச் செல்வதும், உள்ளே கரும்பு கடிக்கும் சப்தமும், யானைகளின் பெருமூச்சும் கேட்டு ஓடி வருவதுமாக இருந்தோம். கடைசியில் அங்கிருந்த ஒரு வீட்டின் மீது ஏறி நின்று கரும்புத்தோட்டத்தின் நடுவே முதுகை மட்டுமே காண்பித்தபடி நின்றிருந்த காட்டு யானைகளை மட்டும் படம் பிடித்து விட்டுத் திரும்பினோம்.

அப்படி யானைகளை தேடி அலையும் சுபாவம் கொண்ட நான் யானைகள் வந்து போகும் காலனி பகுதிக்கே குடிபெயர்ந்த பிறகு எப்படி இருந்திருப்பேன் என சொல்லவே வேண்டியதில்லை. இரவில் எப்போது விழிப்பு ஏற்படுமோ? அப்போதெல்லாம் கதவைத் திறக்க மாட்டேன். ஜன்னல் கண்ணாடிகளை கொஞ்சமாக திறந்துகொண்டு, பாத்ரூம் வெண்டிலேட்டர் வழியாக என விதவிதமாக கரிய இருட்டில் பார்வையை ஓட்டுவேன்.

அந்த இருட்டில் அடுத்ததாக இருந்த காட்டில் கருமுசுன்னு யானை நின்றிருந்தால் எப்படித் தெரியும். நிச்சயம் தெரியாது. வீட்டிற்கு குடி வந்த பிறகு அதிகாலை எங்கள் வீட்டின் பின்புறம் (மேற்கில்) 100 மீட்டர் தொலைவில் பத்திருபது பேர் கொண்ட கூட்டம் தெரிந்தது. போய்ப் பார்த்தால் அங்கிருந்த கம்பிவேலியும், பத்துக்கும் மேற்பட்ட கம்பிவேலி கட்டப்பட்ட பத்துக்கும் கற்களும் உடைந்து சரிந்து கிடந்தது. இரவு 11 மணிக்கு யானைக்கூட்டம் ஒன்று இதை உடைத்துக் கொண்டு அப்பால் உள்ள தென்னந்தோப்புக்குள் புகுந்து சென்றதாகச் சொன்னார்கள்.

அதற்குப் பிறகு ஒருமுறை பச்சாபள்ளியில் ஒற்றை யானை புகுந்து விட்டதாக அலறினார்கள். இன்னொரு முறை எங்கள் வீட்டிற்கு தெற்குப் புறத்தில் உள்ள வாழைத்தோப்பில் உள்ளே புகுந்து நூற்றுக்கணக்கான வாழைகளை கபளீகரம் செய்து விட்டு சென்றிருந்தன 8 யானைகள் கொண்ட கூட்டம் ஒன்று. ஒரு நாள் இரவு 9 மணிக்கு பச்சாபள்ளியில் உள்ள பால்காரர் வீட்டில் யானைகள் புகுந்துவிட்டது.

அந்த நேரத்தில் பால்காரரின் வயதான அப்பா வீட்டு முற்றத்தில் படுத்துக் கொண்டிருந்திருக்கிறார். அவரின் மகன், மருமகள், பேரன் பேத்திகள் உள் அறையில் இருந்திருக்கின்றனர். இந்த கூரை வீட்டின் முகப்பில்தான் ஏழெட்டு ஆடுகளும், நான்கைந்து மாடுகளும், கன்றுக்குட்டிகள் இரண்டும் கட்டப்பட்டிருந்தன. அதையொட்டி உள்ள திண்ணையில் பருத்திக் கொட்டை, புண்ணாக்கு, நெல்லந்தவிடு மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. இங்கிருந்து சற்று மேற்கே ஒரு பர்லாங் தொலைவில்தான் பால்காரர் குத்தகை பார்க்கும் நிலம் உள்ளது. அதில் தக்காளியோ, வெண்டையோ பயிரிடுவது அவர்கள் வழக்கம். அது அறுவடை செய்து விட்ட நேரம். எனவே காட்டுக்கு தண்ணீர் பாய்ச்ச வேண்டிய அவசியம் இல்லை. பால்காரர் அந்த தோட்டத்தில்தான் இரவில் தங்குவார். கூடவே வளர்ப்பு நாய்களும் அங்கே இருக்கும். அன்றைக்கு தோட்டத்தில் வேலை எதுவும் இல்லாததால் வீட்டிற்கு வந்துவிட்டார். வளர்ப்பு நாய்களோ பழக்க தோஷத்தில் அங்கேயே இருந்துவிட்டன.

அந்த நேரத்தில்தான் அங்கே நான்கைந்து யானைகள் இருட்டைக் கிழித்துக் கொண்டு வந்துள்ளது. அதை தன் மோப்ப சக்தியில் அறிந்து கொண்ட இரண்டு நாய்கள் குரைத்துக் கொண்டே ஓட்டம் பிடித்திருக்கிறது. பொதுவாகவே காட்டு யானைகள் வளர்ப்பு நாய்களைக் கண்டால் ரெளத்திரம் கொண்டு விடும். யானைகள் தேடி வந்தது தண்ணீரை. தொட்டியில் தண்ணீர் இல்லை. குரைத்துக் கொண்டே சென்ற நாயைத் துரத்த, அந்த நாய்கள் நேரே பால்காரர் வீட்டுக்கே வந்துவிட்டது.

அவ்வளவுதான். பெரிய மலை திடுதிடுவென வீட்டு வாசலுக்கு ஓடிவந்தால் எப்படியிருக்கும்? வந்த வேகத்தில் அவை வாசலில் எரிந்து கொண்டிருந்த ட்யூப் லைட்டை நொறுக்கியிருக்கிறது. வந்த நாய்கள் வேறு திக்கில் பாய, அங்கே கட்டுத்தறியில் கட்டப்பட்டிருந்த மாடுகள் துள்ளிக்குதித்து கயிற்றை பிய்த்துக் கொண்டு ஓடியிருக்கிறது. ஆடுகளால் தம் கயிற்றை அறுத்துக் கொள்ள முடியவில்லை. பீதியால் விழிபிதுங்கி காத்திருக்க, யானைகள் நேரே அங்கே இருந்த சோளத் தட்டுப் போரை உருவியிருக்கிறது.

இன்னொரு பக்கம் அங்கே வளர்ந்த நின்ற வாழை மரத்தை பிய்த்து உதறியிருக்கிறது. இதை பால்காரர் குடும்பம் ஜன்னல் வழியே நடுங்கிக் கொண்டே பார்த்திருக்கிறது. ஒருவரும் மூச்சு விடவில்லை. விட்டால் ஓட்டுக்கூரையும், மண் சுவரும் யானை மூச்சவிட்டாலே பொல, பொலவென உதிர்ந்துவிடும். அப்புறமென்ன ஒரே மிதிதான். அந்த அச்சம் இவர்களைத் தாக்க, அக்கம் பக்கத்து வீடுகள் விழித்துக் கொண்டன.

பட்டாசுகளும், சியர்ச் லைட்டுகளும் சத்தமும், மினுக்கமும் காட்ட, அந்த ஏரியாவே விசில் சத்தத்தால் அதிர்ந்தது. சில நிமிடங்களில் திரண்ட மக்கள் ஓங்காரமெடுத்து யானைகளை விரட்ட ஆரம்பிக்க, யானைகள் அவர்களுக்கு எதிர் திசையில் ஓடின. அதில் கடைசியாக சென்ற யானை ஒரு புண்ணாக்கு, பருத்திக் கொட்டை மூட்டை ஒன்றை துதிக்கையில் தூக்கிக் கொண்டே சென்றது வேடிக்கையுடன் கூடிய பீதி மிகுந்த காட்சி.

இந்தக் களேபரங்கள் எல்லாம் நடந்து முடிந்து, அதன் ஈரம் உலராத நிலையில் நானும் அங்கிருந்தேன். பால்காரரின் அப்பாவுக்கு வயது தொண்ணூறைக் கடந்திருந்தது. படு சுருக்கம் கண்ட உடம்பு. அப்படியே நடுநடுங்கிக் கொண்டிருந்தார். அவரால் பேசவே முடியவில்லை. அவருக்கு அப்பால் கட்டப்பட்டிருந்த ஆடுகள் தொடைகள் கிடுகிடுக்க, கண்கள் பிதுங்கிட நின்றிருந்தன. இரண்டு மாடுகள் திரும்பி வந்துவிட்டன. இன்னும் இரண்டு மாடுகள் பயத்தில் எங்கே பிய்த்துக் கொண்டு ஓடியது என்றே தெரியவில்லை. (இதில் ஒரு மாடு இரண்டு நாள் கழித்துத்தான் வீட்டிற்கு வந்தது).

இதற்குப் பிறகு ஒரு முறை எங்கள் வீட்டிற்கு கிழக்கே மூன்று வீடு தள்ளி இரவு 8 மணிக்கே 3 யானைகள் நின்றன. எங்கள் வீட்டுப் பக்கத்து வீட்டுப்பெண்மணி அந்த திக்கில் பார்த்துக் கொண்டு தன் கணவரிடம் ஏதோ பேசிக் கொண்டிருக்க, நாங்கள் என்ன, என்ன என்று கேட்க, ‘அதோ யானை நிக்குது!’ என சொல்ல, நாங்கள் திரும்பிப் பார்ப்பதற்குள் காணாமலே போய்விட்டன. அப்புறம் கொஞ்ச நேரத்தில் பச்சாபள்ளியில் விசில் சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது. அதற்குப் பிறகு பார்த்தால் தொடர்ச்சியாக யானைகள்தான். அவை மூலைக்கொன்றாக திரிந்து காட்டுக்குள் நகர்ந்தன.

இன்னொரு முறை இரவு 3 மணிக்கு வந்த 11 யானைகள் எங்கள் வீட்டிற்கு தென்புறம் உள்ள வேலியை உடைத்துக்கொண்டு வடபுறம் உள்ள சில வீடுகளின் பூவும் பிஞ்சுமாக இருந்த வாழை மரங்களை சின்னாபின்னப்படுத்தியிருக்கிறது. ஒரு வீட்டு மாங்கொம்பை உடைத்திருக்கிறது. அதைத் தாண்டி இருந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டுச் சுற்றுச்சுவருடன் பதிக்கப்பட்ட இரும்புக் கதவை ஒரே முட்டு, இரும்புக் கதவு நெளிசல் கண்டு திறந்து விட, ஒரு பக்கச்சுற்றுச்சுவர் இடிந்து விழ, உள்ளே புகுந்த யானைகள் அங்கிருந்த வாழை மரங்களை கபளீகரம் செய்ய ஆரம்பித்து விட்டன.

- மீண்டும் பேசலாம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x