Published : 24 Feb 2018 06:23 PM
Last Updated : 24 Feb 2018 06:23 PM

யானைகளின் வருகை 135: ருக்குமணியின் தீரம்

இவரை விட எட்டிமடை உட்கண்டித் தோட்டத்தில் வசிக்கும் ருக்குமணியின் தீரம் மகத்தானது. அவரிடம் பேசினால், 'யானையா? தினமும்தான் வரும், போகும். நின்னு எங்களையும் பார்க்கும். நான் அதுகளை பேசியே அனுப்பிடுவேன்!' என சகஜமாகச் சொல்கிறார்.

தினந்தோறும் ஒற்றை யானை முதல் 20க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் வரை இந்த காட்டில் வலம் வருவது வாடிக்கை. மதுக்கரை- எட்டிமடை அருகே ரயிலில் அடிபட்டு பரிதாபமாக இறக்கும் யானைளைப் பற்றிய செய்திகளுக்கான சம்பவங்கள் பெரும்பகுதி இந்த சுற்றுவட்டாரத்தில் நிகழ்ந்தவைதான். இப்படிப்பட்ட பகுதியில் உட்கண்டித் தோட்டம் என்கிற வாழைப்படுகை அடர்ந்த காட்டுக்குள் இருக்கிறது. இங்கே செல்லும் ஒற்றையடிப் பாதையில் ஒற்றை குடிசை. இங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவு அய்யம்பதி என்கிற பழங்குடி கிராமம்.

''அங்கே அரசாங்கம் கட்டிக் கொடுத்த வீடு சுத்தமா இடிஞ்சு போச்சு. அதனால 10 வருஷத்துக்கு முன்னால இங்கே வந்து குடிசை போட்டோம். அப்பயிருந்து இப்ப வரைக்கும் இந்த குடிசைக்கு யானைகள் வராத நாளே இல்லை. அப்படி வந்தாலும் இந்தக் குடிசையில் ஒற்றை ஓலையை அது தொட்டதில்லை!'' என எடுத்த எடுப்பில் சொல்லி வியப்பூட்டுகிறார் இந்த ருக்குமணி.

''இதா இந்த மரத்தடியிலதான் இங்கே சுத்தற ஒத்தை யானை எப்பவும் வந்து நிற்கும். தண்ணி ஏதாச்சும் பாத்திரத்துல, பக்கெட்டுல வச்சா குடிக்கும். அங்கே இருக்கிற மூங்கில அப்படி இப்படி உரசிப் பார்க்கும். நான் இதே திண்ணையிலதான் உட்கார்ந்துட்டு உனக்கு என்னடா வேணும். நானும் உன்னை மாதிரிதானே? தன்னந்தனியா போக்கிடம் இல்லாம இங்கே வந்து குழந்தை குட்டிகளோட உட்கார்ந்துட்டே இருக்கேன். என்கிட்ட என்ன இருக்குன்னு வந்து எங்கிட்ட நிக்கிறேன்னு கேப்பேன். அதுல அது என்ன புரிஞ்சுக்குமோ? ஒரு பிளிறு பிளிறிட்டு, தும்பிக்கைய தூக்கி ஓர் ஆட்டு ஆட்டிட்டு ஓடும் பாருங்க. எனக்கே ஆச்சர்யமா இருக்கும்.

அப்படி ஓடறவன் அந்தப்பக்கம் இருக்கிற ரயில்ரோட்டை தாண்டி ஓடும்போது எனக்கே பயமா இருக்கும். எங்கே ரயில் வந்துடுமோ, அந்த ஒற்றையன் சிக்கிக்குவானோன்னு திக்கு திக்குனு அடிச்சுக்கும். அப்படித்தான் அது வந்து போகும். ரெண்டு மூணு தடவை அது ரயில்வே லைன் ஓரம் போகும்போது ரயிலும் வந்திருக்கு. 'டேய்.. போகாதீடா. ரயில்ல மாட்டிக்காதடா!'ன்னு இங்கேயிருந்தே கத்துவேன். அதுக்கு புரிஞ்ச மாதிரி அங்கேயே நின்னுக்கும். ரயில் போனதும் அப்புறம் ரயில்வே லைனை கடந்து ஓட்டம் பிடிக்கும் பாருங்க. ஓட்டம். அதைப் பார்க்கவே ஆயிரம் கண் வேணும். இதை நான் பலபேருகிட்ட பல தடவை சொல்லியிருக்கேன். யாருமே நம்ப மாட்டாங்க.

யானைகளோட என்னதான் பழகினாலும் எப்பவும் பயம் உள்ளுக்குள்ளே இருந்துட்டே இருக்கும். ஒரு நாள் சாயங்காலம் 7 மணி இருக்கும். ஆடெல்லாம் ஓட்டிட்டு வந்து பட்டியில அடைச்சுட்டேன். கிழக்கால திரும்பிப் பார்த்தா மொசுமொசுன்னு ஆட்டு மந்தைக மாதிரி புழுதி கிளப்பிட்டு யானைகள் கூட்டம். எங்க குடிசையை பார்த்துதான் அத்தனையும் வருது. நான் அப்பத்தான் வந்து படுத்திருந்த என் புருஷனைக் கூப்பிடறேன். அதா அங்கே பாரு. எத்தனை யானைக வருது. பட்டாசு வெடிச்சுப் போடு. அந்தப் பக்கம் போகட்டும்னு சொல்றேன். அவரு காதுல போட்டுக்கல. இந்நேரத்துக்கு எங்கே யானைகள்னு கேட்டுட்டே வந்தவர் வெளியே வந்து பார்த்துட்டு பதறிட்டார். ஒரு ஓலை வெடிய தீயைப் பத்தி வீசினார். உடனே அத்தனையும் திசைமாறிப் போச்சு.

மொத்தம் 21 யானைகள். அப்புறம் என்ன தோணுச்சோ, ரயில் ரோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கிற தென்னந்தோப்புல மொத்தம் 170க்கு மேல தென்னை மரங்களை உடைச்சு, தாம்பு கட்டிடுச்சு. அதோட நூத்துக்கணக்குல வாழைகளும் நாசம். அது மாதிரி சேதம் அதுக்கு முன்னாடியும் யானைகள் பண்ணினதில்லை; பின்னாடியும் செஞ்சதில்லை. அன்னைக்கு எட்டிமடை ஊருக்குள்ளே கோயில் திருவிழா. வானவேடிக்கை பட்டாசுன்னு அமர்க்களமா இருந்துச்சு. அதுல பயந்து போன யானைகள்தான் அத்தனையும் கோபமா போய் தென்னந்தோப்பையும், வாழைத்தோட்டத்தையும் நாசம் பண்ணிடுச்சுன்னு ஜனங்களே பேசிட்டாங்க.

இவ்வளவு ஏன்? போனவாரம். என் பையன். 6-ம் வகுப்பு படிக்கிறான். பக்கத்துல உள்ள கரட்டு மேட்டுக்கு போயிருக்கான்.

அங்கே புளியமரத்துல புளியங்காய்க நிறைய காய்ச்சு தொங்கிருக்கு. அதைப் பறிச்சு வீட்டுக்கு வரலாம்னு மரத்துல ஏறி புளியங்காய்களை உதிர்த்து கீழே போட்டிருக்கான். கீழே போடப்போட புளியங்காய்களை காணோம். என்னடான்னு பார்த்தா மரத்துக்கு கீழே ஒரு குட்டி யானை. புளியங்காய்களை இவன் போடப்போட பொறுக்கிப் பொறுக்கி தின்னுட்டே இருந்திருக்கு. இவன் பயந்துட்டு கீழேயே வராம இருக்க, அதுவும் புளியங்காய் பூராவும் பொறுக்கித் தின்னுட்டு அந்தப் பக்கம் போயிடுச்சு. இவனும் இந்தப் பக்கம் இறங்கி ஓடி வந்திருக்கான். இப்படியெல்லாம் யானைகளும், நாங்களும் ஒண்ணாவே வாழ்ந்து பழகிட்டோம். ஒரு நாள் கூட என் குடிசையில் ஒரு ஓலையை பிரிச்சதில்லீங்க!' ருக்குமணி சொல்லும்போதே நெகிழ்ச்சி இழையோடுகிறது.

இவர்கள் இப்படி நெகிழ்ச்சி ததும்பும் இந்த நேரத்தில் இதற்கு நேர்மாறான கருத்தோட்டத்தை விவசாயிகளிடம் காண்கிறேன். குறிப்பாக, கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடக்கும் விவசாயிகள் கூட்டத்திற்கு அடிக்கடி போவதுண்டு. அதில் விவசாயிகளின் பிரதான பிரச்சினையாக காட்டு யானைகள் இருந்து வருவதை நீண்ட காலமாகவே காண்கிறேன்.

''20 ஆண்டுகளுக்கு மேலாகவே யானைகளைக் கொல்வதில்லை. அரசின் கடும் நடவடிக்கைகளால் வேட்டைக்காரர்களும் அருகி விட்டார்கள். தவிர மனிதர்கள் வேலைத் தேவைக்கு பிடித்து பழக்கப்படுத்துவதும் இல்லை. அதனால் காடுகளில் யானைகள் உற்பத்தி பெருகிவிட்டது. அதற்கேற்றபடி தீவனம் காடுகளில் இல்லை. எனவேதான் அவை ஊருக்குள் வருகின்றன. ஒன்று அவற்றைப் பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும். இல்லாவிட்டால் பட்டா நிலத்திற்குள் வரும் காட்டு யானைகளையாவது சுட்டுக் கொல்ல வேண்டும்.. அல்லது சுட்டுக் கொல்ல விவசாயிகளுக்கு அனுமதிக்க வேண்டும்!'' என அவர்கள் கோரும்போதெல்லாம் மனசு வலிக்கும்.

காட்டோடு வாழும் பழங்குடியினரைக் கவனியுங்கள். குறிப்பாக பழங்குடியினப் பெண்களை கவனியுங்கள். அவர்களின் காதிலோ, கழுத்திலோ ஒரு பொட்டுத் தங்கம் கிடப்பதை நான் கண்டதில்லை. எந்த இடத்திலும் பொன்னி அரிசி சாதம் அவர்களுக்கு கிடைத்ததில்லை. மழை பெய்தால் காடோடி பருப்பு, பயிறு வகைகளை விளைவிக்கிறார்கள். மலை, முகடு என்று அலைந்து மூலிகைகள், தேன், சீமார் புல் என கொண்டு வருகிறார்கள். சந்தையில் போட்டு விற்கிறார்கள். வனத்துறையினருக்கு அடிமையினும் கீழாய் பணிபுரிகிறார்கள். தன்னுடைய, தன் பிள்ளைகளுடைய வயிறு வளர்க்கும் பாட்டை தவிர வேறு ஒன்றை நான் அவர்களிடம் கண்டதில்லை. அவர்கள் எப்போதும் காட்டு மிருகங்களுடனே ஜீவிக்கிறார்கள். அதனிடம் நிறைய பாதிப்புக்கும் உள்ளாகிறார்கள். அவர்களுக்கு காட்டு விலங்குகளிடம் இருக்கும் நேசமும், நெகிழ்ச்சியும் ஏன் நம்மிடம் இல்லை. அட, நேசமும், நெகிழ்ச்சியும் வேண்டாம், நமக்குள் ஏன் இந்த வன்மம்?

இந்த மையத்தில் நான் சிந்தனை வயப்படாத நாளில்லை. இந்த தொடரின் முதல் அத்தியாயங்களில் சொன்ன அனுபவத்தில் மட்டுமல்ல; இன்னும் பல இடங்களில் நான் காட்டு யானைகளின் நெருக்கத்தில் இருந்து தப்பித்திருக்கிறேன். அப்படிப்பட்ட நேரத்தில் அந்த காட்டு யானைகள் என்னைக் கொன்றிருந்தால் என்னவாகி இருக்கும்? என் குடும்பத்தினர் காட்டு யானையை எந்த அளவு கரிச்சுக் கொட்டிக் கொண்டிருப்பர் என்று மட்டும் அல்ல, அதையும் தாண்டி யோசித்திருக்கிறேன்.

அதில் 'யானை ஏன் மனிதனை கண்டதும் தூக்கிப் போட்டு மிதிக்கிறது? அது ஒன்றும் புலி, சிங்கம், சிறுத்தை போன்ற ஊன் உண்ணி அல்ல. நம்மை அடித்து ரத்தம் குடித்து, புசிக்க வேண்டிய அவசியம் எதுவும் அதற்கு இல்லை. அது ஒரு தாவர உண்ணி. அப்படியிருக்க யானைக்குள் எங்கிருந்து வந்தது இந்த வன்மம்?' என்ற கேள்வியும் அடிக்கடி எழுந்திருக்கிறது.

'நாம் கொல்லாவிட்டால், அவன் கொன்று விடுவான் என்றுதானே? அந்த வன்மத்தை ஊட்டியது மனிதன்தானே?' என்றே கூட ஓர் எண்ணம் சுழல்கிறது. அதிலேயே சிந்தனை வயப்படுகிறது.

'சரி, யானை அடித்து நான் இறந்திருந்தால்?' என்ன செய்ய முடியும்? அதை கொலைகாரனாகப் பார்க்க முடியுமா? அது இருக்கும் இடத்திற்குள் நம் தேவைக்காக சென்றுவிட்டு, அதை கொலைகாரன் ஆக்குவது நியாயம் தானா? என்றே கேள்விகள் சுழல்கின்றன. இந்த இடத்தில் ஓர் உண்மைச் சம்பவம் ஞாபகத்திற்கு வருகிறது. அதுவும் எனது நண்பரும், சீனியர் வழக்குரைஞருமான சி.ஞானபாரதி சொன்னதுதான்.

- மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x