

ம
ணக்கோலம் பூண்டிருந்தது வீடு, மணமகன் வீட்டாரும் வந்துவிட திருமண ஏற்பாடுகள் தீவிரமாக நடக்க, உறவினர்களின் வருகை என களைகட்டியிருந்த 2017 ஜூலை 19. விடிந் தால் திருமணம். திடீரென வந்திறங்கியது அதிகாரிகள் குழு. இந்த திருமணத்தை நிறுத்த வேண்டும் என மண வீட்டாரிடம் கூறினர். புரியாமல் விழித்த இருவீட்டாரும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில் திருமணம் நின்றது.
அப்படியானால் திருமணம் நிற்க யார் காரணம் என விசாரித்த பின்தான் தெரிந்தது, கல்யாணத்தை நிறுத்தச் சொன்னதே மணமகள்தான் என்று. அவரை மணமகள் எனச் சொல்வது கூட பொருத்தமாக இருக்காது. ஆமாம். திருமணம் நடக்கவிருந்தது 10-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு. சட்டப்படி அவர் 14 வயது குழந்தை. அவருக்கு திருமணம் செய்யவிருந்ததைத்தான் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மாணவியின் பெயர் நந்தினி. ஊர், திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த வடக்குமேடு கிராமம். 5-ம் வகுப்பு படிக்கும்போது தாய் இறந்துவிட்டார். அரவணைக்க வேண்டிய தந்தை யும் கைவிட்டுவிட நிராதரவாக இருந்த நந்தினியை தன் மக ளாக வளர்த்தார் அவரது பெரியம்மா குப்பு மற்றும் பெரியப்பா ஆறுமுகம். தாய் இல்லாத குறை தெரியாமல் வளர்ந்த நந்தினியை ஆரணி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர். 10-ம் வகுப்பு வரை வந்துவிட்டார். நன்றாக படித்து பெரிய ஆளாக வேண்டும் என நந்தினிக்கு ஊக்கமளிக்க தவறுவதில்லை பெரியம்மா குப்பு.
பட்டப்படிப்பு முடிக்க வேண்டும் என்ற கனவோடு படிக்கத் தொடங்கியவருக்கு திருமணத்துக்கு தயாராகும் படி திடீரென சொல்ல நந்தினி அதிர்ந்துபோனார். நன்றாகத்தானே படிக்கிறோம் பின்பு ஏன் திடீரென திருமணம் பற்றி பேசுகிறார்கள் என உள்ளுக்குள் குமுறல். நம்மால் என்ன செய்ய முடியும் எனத் தவித்தார். படிப்பை மட்டுமே வாழ்க்கையாக கொண்டிருக்கும் தனக்கு மண வாழ்க்கை அவசியம் இல்லை என்பதை எப்படிச் சொல்லி புரிய வைப் பது என அவருக்கு தெரியவில்லை.
அவரிடமே கேட்டோம் “நன்றாகப் படித்தது போதும். திருமணத்துக்கு தயாராகு என்று பெரியம்மா, பெரியப்பா சொன்னபோது தலையில் இடி விழுந்ததுபோல் இருந்தது. படிக்க வேண்டும் என்ற எனது ஆசையை புரிந்துகொள்ள அவர்களுக்கு மனம் இல்லை. யாரோ 28 வயது இளைஞருடன் எனக்கு திருமண ஏற்பாடு நடந்தது. என்னுடைய நிலையை தோழிகளிடம் கூறி அழுதேன். ஜுலை 20-ம் தேதி திருமணம். அதற்கு முந்தைய நாள் மாலை 6 மணிக்கு ஆட்சியரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு, எனக்கு நிகழப் போகும் கொடுமையைக் கூறினேன்.
இதையடுத்து, சமூக நல அலுவலர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் ஆகியோர் இரவு 9.45 மணி அளவில் எங்கள் வீட்டுக்கு வந்து விசாரித்து நடவடிக்கை மேற்கொண்டு திருமணத்தைத் தடுத்து நிறுத்தினர். எனது பள்ளியில் வழங்கப்பட்ட துண்டறிக்கையில் இடம்பெற்றிருந்த ஆட்சியரின் செல்போன் எண்தான் என்னை காத்தது” எனக்கூறி நெகிழ்ந்தார்.
என்ன படிக்கப் போகிறீர்கள் எனக் கேட்டபோது, “ஐஏஎஸ் ஆக வேண்டும் என்ற இலக்குடன் பயணிக்கிறேன். அப்போதுதான் என்னைப் போல பாதிக்கப்படும் மாணவிகளுக்கு உதவ முடியும். பல்வேறு சவால்களை மாணவிகளும் பெண்களும் எதிர்கொள்ள நேரலாம். அதற்காக அச்சப்படக் கூடாது. அச்சத்தை ஒதுக்கிவிட்டுப் போராட வேண்டும். ஒவ்வொரு பெண்களுக்கும் அவர்களேதான் பாதுகாப்பு. மற்றவர்கள் நம்மைப் பாதுகாப்பார் கள் என்று எதிர்பார்க்கக் கூடாது. எனக்கு நடக்க இருந்த சட்டவிரோத திருமணத்தை, நானே போராடி தடுத்து நிறுத்தியது மகிழ்ச்சியாக இருக்கிறது. என்னைப் போன்று பாதிக்கப்படும் சிறுமிகள் போராடி மீண்டு வர வேண்டும்” என பக்குவமாக பேசுகிறார் மாணவி நந்தினி.
இப்போது திருவண்ணாமலை டெரிடெஸ் குழந்தைகள் காப்பகத்தில் இருந்து கொண்டு, சீனிவாசா உயர்நிலைப் பள்ளியில் படிப்பை தொடர்கிறார்.
தனக்கு நடக்கவிருந்த கொடுமையை தடுத்து நிறுத்தி, தன்னை தற்காத்துக்கு கொண்டதுடன் மற்றவர்களுக்கும் உதாரணமான நந்தினியின் துணிச்சலுக்கு வீர தீர விருது கிடைத்துள்ளது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தில், வீர தீர செயல் புரிந்தற்கான விருதையும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையும் வழங்கி நந்தினியை கவுரவித்துள்ளது தமிழக அரசு. அது கல்விக்காக நடத்திய போராட்டத்துக்கு கிடைத்த பரிசு.