Published : 17 Feb 2018 07:07 PM
Last Updated : 17 Feb 2018 07:07 PM

யானைகளின் வருகை 133: எந்த இடத்தில் சறுக்குகிறோம்?

கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள வனச்சரகங்களிலும், அதையொட்டி இருக்கும் விவசாய, பட்டா நிலங்களிலும் நடந்து வந்திருக்கும் கானுயிர்களுக்கு எதிரான மாற்றங்களை, சேதங்களை, அத்துமீறல்களை, அதனையொட்டி பல்வேறு சம்பவங்களை அங்குல, அங்குலமாக இதுவரை கண்டு வந்துள்ளோம்.

கடைசி 20 ஆண்டுகளில் நடந்திருக்கும் மனிதர்களின் ஒழுங்கமைப்பற்ற செயல்பாடுகள்தான், அரசின் கொள்கை முடிவுகள்தான், ஆட்சியாளர்கள் அடுத்தடுத்து வகுத்து தந்திருக்கும் சட்ட- திட்டங்களும்தான், அந்த சட்டதிட்டங்களின்படி வன இலாகா அதிகாரிகளை இயங்கிட விடாத ஆளும் கட்சியினர்தான், அந்த ஆளுங்கட்சியினரை (கடந்த 50 ஆண்டுகளில் எந்தக் கட்சி ஆட்சியிலும் இதுதான் நிலைமை) இயக்கி வைக்கும் பெருந்தனக்காரர்கள்தான் மனித-மிருக மோதலுக்கான காரணி என்பதை இதை வாசித்தவர்கள் நிச்சயம் உணர்ந்திருப்பார்கள்.

இந்த மனித- மிருக மோதலை, அதில் ஏற்படும் உயிர் சேதங்களை, பொருட்சேதங்களை தவிர்க்க வேண்டுமானால் என்னதான் செய்ய வேண்டும்? குறிப்பாக காட்டு யானைகளினால் மனிதர்கள் இறப்பது, மனிதர்களால் யானைகள் மரிப்பது ஆகியவற்றை மாற்றிட வேண்டுமானால் மனிதன்-யானை என இரு தரப்புமே சுமுகமாக இம்மண்ணில் ஜீவிக்க வேண்டுமென்றால் மனித குலம் தன் செயல்பாடுகளை தற்போதைய நிலையிலிருந்து சுத்தமாக மாற்றிக்கொண்டுதான் ஆக வேண்டும். இதை இந்த யானைகளின் வருகை தொடரை இடைவிடாது வாசித்து வரும் வாசகர்கள் நிச்சயம் புரிந்திருப்பார்கள். சிலர் தங்கள் ரத்த நாளத்தில் கூட ஏற்றிக் கொண்டிருப்பார்கள் என நம்புகிறேன்.

இங்கே காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க நம்மவர்கள் செய்யும் ஏற்பாடுகள் எல்லாம் தற்காலிகமானவையாகவும், நிரந்தர தீர்வை நோக்கி பயணப்படாதவையாகவும் இருக்கின்றன என்பதையும் வாசிப்பவர்கள் தீர்க்கமாய் உணர்ந்திருப்பார்கள். சுருங்கச் சொன்னால் கிராமத்தவர் சொல்வது போல், 'கன்றைப்புடின்னா கட்டுத்தறியை புடிக்கிறான்!' என்ற சொலவடைக்கேற்பத்தானே அனைவருமே நடந்து கொள்கிறார்கள்?

இதை சொன்னால் நிறைய சூழலியல் அறிவுஜீவிகளுக்கும், காடுகளை காப்பாற்றுவதாக சொல்லும் வன இலாகா அதிகாரிகள் ஒரு சிலருக்கும் கூட முணுக்கென்று கோபம் எட்டிப் பார்க்கலாம். 'நாங்கள் அகழி வெட்டலையா? யானைகள் வாழ கால்தடம் கணக்கெடுத்து நடக்கலியா? காடுகளை காடுகளாக காப்பாற்றவில்லையா?' என்றெல்லாம் சத்தமாகக் கேட்பதையும் கேட்க முடிகிறது. அப்படி கோபம் கொள்பவர்கள் எல்லாம் அவர்கள் அளவில் தாங்கள் அறிந்த கானுயிர்கள் குறித்த அறிவாற்றலை தம் சிந்தனையில் உருட்டி, சுயநலமற்று உள்ளூர ஆழ சிந்தித்துப் பார்க்கட்டும். அந்தப் பயணத்திலேயே உள் மூழ்கட்டும். அந்தப் பயணம் எல்லைகள் கடந்து நடை பயிலட்டும். நிச்சயம் அந்த உள்ஒளியிலிருந்து ஒன்று புலப்படும்.

நாம் எந்தந்த இடத்தில் சறுக்குகிறோம். கானுயிர்களை காப்பாற்றுவதில், காடுகளை காப்பாற்றுவதில், அங்கே வளர வேண்டிய இயல்நிலை தாவரங்களை வளரவிடாமல் செய்வதில் யாரெல்லாம் பங்கு பெறுகிறார்கள். அவை எந்தந்த காரணங்களால் ஆட்சியாளர்கள் மற்றும் பெருந்தனக்காரர்கள் மூலம் மூடி மறைக்க நம்மையே கருவியாக்குகிறார்கள் என்பது அறிய வரும். அப்படி எதுவுமே தோன்றாமல் நாம் செய்வது எல்லாம் சரி என்று தோன்றினால் நிச்சயம் உங்கள் ஆழ்மனதில் ஒன்று சுத்தமாக இருப்பீர்கள். அல்லது நீங்கள் இன்னமும் சரி, தவறு என நமக்குள்ளேயே இருக்கும் பேராற்றலை உணரத் தலைப்படாமல் இருப்பீர்கள்.

இந்த இரண்டுமாக இல்லாவிட்டாலும் சரி, முந்தையது இல்லாமல் பிந்தைய நிலையில் இருந்தாலும் சரி, மேலும் நீங்கள் இந்தத் தொடரின் மூலம் மேலும் இதற்கான தீர்வுகளுக்குள் ஆழமாக, அழுத்தமாக பயணப்பட முடியும். அந்த தீர்வுகள் என்பது வெளி வட்டாரத்தில் இருப்பது அல்ல. நமக்குள்ளேயே இருப்பது.

வெளிவட்டாரத்தில் இருப்பது என்பது நாம் ஏற்கெனவே கண்டவைதான். இருந்தாலும் அதற்குள் சற்று பயணித்துவிட்டு, நமக்குள்ளான அந்தப் பயணத்தை சீக்கிரமே தொடரலாம். நாம் முந்தைய அத்தியாயங்களில் பார்த்த பல்வேறு சம்பவங்களில் காடுகளுக்கும் விவசாய நிலங்களுக்கும் இடையே அகழி வெட்டுவது, அந்த அகழியில் மனித மலத்தை தேக்கி நாற்றமெடுக்கச் செய்வது, தண்ணீர் தொட்டியில் சாணத்தை கலந்து வைப்பது, தோட்டங்களை, குடியிருப்புகளை சுற்றி மின்வேலிகள் அமைப்பது என்று பல்வேறு விஷயங்களையுமே கண்டோம். அதற்கு காட்டுயானைகள் எந்த மாதிரியான எதிர் விளைவுகளை கொடுத்தன என்பதையும் அறிந்தோம்.

மேற்சொன்ன ஏற்பாடுகளை மட்டுமல்ல, வேறு பல மாற்று ஏற்பாடுகளையும் வனத்துறை அலுவலர்களும், இயற்கை ஆர்வமுடைய தன்னார்வலர்களும், விவசாயிகளும் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள். அவையும் வீழலுக்கு இறைத்த நீராகவே ஆகிக் கொண்டிருக்கிறது என்பதையும் இந்த தொடரில் நிறைய இடங்களில் அறிந்துள்ளோம்.

இப்போதும் கூட கோவை, மேட்டுப்பாளையம் நெல்லித்துறை அருகே உள்ள கிராமத்தில் ஒரு விவசாயியின் வீட்டிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். அவர் வீட்டின் முகப்பில் நீண்ட வராண்டா போல் இருந்த ஒரு மூங்கில் கொட்டகை. அதன் உள்ளே மக்கா போன் போன்ற ஒரு ஒலிபெருக்கி கருவி. அதைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு கேட்டேன்.

''நீங்க விவசாயிகள் சங்கத்தலைவரா? உங்கள் வீட்டில் விவசாயிகள் கூட்டம் எல்லாம் போடுவீங்களா? அதுக்காகத்தான் இந்த ஸ்பீக்கரா?'' என் கேள்வியில் அவர் சிரித்து விட்டார்.

''அப்படியெல்லாம் இல்லீங்கோ. இது மாட்டியிருக்கிறதே காட்டுயானைக்காக!'' என சொல்லி மேலும் ஆச்சர்யப்படுத்தினார்.

''இதை வச்சு யானைகளை விரட்டறதா, எப்படி?'' என்று கேட்ட என்னை தன் வீட்டிற்குள் அழைத்துப் போனார்.

அங்குள்ள ஓர் அறை முழுக்க நிறைய எலக்ட்ரிக் ஒயரிங் சாதனங்கள், 24 வோல்ட் பாட்டரி எல்லாம் கசகசவென்று. எந்த ஒயர் எங்கே செருகுவது என்றே தெரியவில்லை. அவற்றில் இரண்டு ஒயரை எடுத்து அங்கே, இங்கே மாட்டிவிட்டார். உடனே வெளி வராந்தாவில் இருந்த ஒலி பெருக்கியில் சங்கு ஒலியெழுப்ப ஆரம்பித்துவிட்டது.

''எங்க தோட்டத்தை சுத்தியும் சோலார் மின்வேலி இருக்கு. அதுல காட்டுப்பன்றி பட்டாலோ, யானைகள் முட்டினாலோ மின்சாரம் தாக்கும். அதேநேரத்துல இங்கே அபாயச் சங்கு ஊத ஆரம்பிச்சுடும். உடனே நாங்க பக்கத்து தோட்டத்துக்கு எல்லாம் போன் பண்ணி எச்சரிக்கை பண்ணுவோம். ஆளாளுக்கு சியர்ச் லைட்டை (அதீத ஒளி உமிழும் டார்ச் லைட்) எடுத்துக்கிட்டு அடிச்சுப் பார்ப்போம். யானை உருவங்கள் தென்பட்டா வானவெடி வீசி விரட்டுவோம். இங்கே நாலஞ்சு தோட்டத்துக்கு ஒரு தோட்டம்னு வசதியுள்ளவங்க இந்த மைக்செட்டை வாங்கி வச்சிருக்கோம்!'' என விளக்கியவர், அடுத்ததாக இருந்த பக்கத்து அறைக்கும் கூட்டிப்போனார்.

அங்கே கட்டுக்கட்டாய் வானவெடிகள் வைக்கப்பட்டிருந்தன. ''இந்த வான வெடி, சியர்ச் லைட், சோலார் மின்சார ஒலிபெருக்கி செட் அப் எல்லாம் வனத்துறையே கொடுத்ததா?'' எனக் கேட்டபோது கோபப்பட்டார்.

''ஆமாம், நல்லா கொடுப்பாங்க போங்க. இந்த வெடி ஒண்ணு ரூ.20 கொடுத்து நாங்க வாங்கி வைக்கிறது. இந்த சோலார் பேட்டரி, ஒலிபெருக்கி செட்அப் எல்லாம் நான் ரூ.50 ஆயிரம் செலவு செஞ்சு வச்சிருக்கேன். அது போக மின்சார வேலி போடறதுக்கு லட்சக்கணக்குல ஆகும்!'' என்றார் அவர்.

இங்கே இப்படி என்றால் தமிழக கேரள எல்லையில் உள்ள கோவை மாவட்டம் அத்திக்கடவு கூடப்பட்டியில் விவசாயத் தோட்டங்களில் திரும்பின பக்கமெல்லாம் மின் கம்பி வேலியுடன் பாட்டில்களில் கற்களை நிரப்பி தொங்க விட்டிருந்தார்கள் கிராம மக்கள். இதே போன்ற காட்சிகளை ஆனைகட்டி, மாங்கரை, எட்டிமடை, மதுக்கரை, சிறுமுகை, காரமடை, பெரியநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் என பல்வேறு வனப்பகுதியை ஒட்டிய தோட்டங்களிலும் நான் போகுமிடங்களிலெல்லாம் காண நேர்ந்தது.

''காட்டு யானை இதைத் தாண்டி வந்தா வேலியில முட்டும். அப்போது இந்த பாட்டில்கள் ஆடும். அதில் போடப்பட்டிருக்கிற கற்கள் சலசலன்னு சத்தம்போடும். அப்போ யானை ஆளுக வந்துட்டாங்கன்னு ஓடிடும்!'' என இதற்கும் அனுபவப்பூர்வமாக காரணங்களை சொன்னார்கள் மக்கள்.

இப்படித்தான் கொங்கு மண்டல மலையடிவார கிராமங்களில் எல்லாம் ஒவ்வொரு விவசாயியும் காட்டுயானைக்கென்று விதவிதமான எலெக்ட்ரிக் கருவிகளையும், மின் வேலிகளையும், கற்கள் நிரப்பிய பாட்டில்களையும், வானவெடி பட்டாசுகளையும் அடுக்கி வைத்துக் கொண்டு தினசரி யானைகளுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தூக்கி சாப்பிடும் விதமாக வால்பாறை மக்கள் இதில் ஒருங்கிணைந்த இயக்கமாகவே செயல்பட்டு வருகிறார்கள்.

- மீண்டும் பேசலாம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x