Last Updated : 28 Feb, 2018 09:34 AM

 

Published : 28 Feb 2018 09:34 AM
Last Updated : 28 Feb 2018 09:34 AM

‘வம்பன் 6’: விருது தந்த விதை

ற்ற கல்வியால் சிறப்புப் பெற்று, கற்றுக்கொண்ட வித்தையைக் காட்டி, யாரும் செய்யாத ஒன்றைச் செய்து என விருது பெறு வோர் பலர் இருக்க, விற்ற வி(த்)தையால் விருது பெற்றுள்ளார் விவசாயி செல்வி.

புதுக்கோட்டை மாவட்டம் வெண்ணாவல்குடி ஊராட்சிக்குட்பட்ட குறுந்தடிமனை கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி கருப்பையாவின் மனைவி தான் இந்த செல்வி. ஓராண்டில் 2 டன் உளுந்து விதையை விற்று சாதனை புரிந்ததற்காக சிறந்த விதை உற்பத்தியாளர் விருதை அறுவடை செய் திருக்கிறார். வறட்சி மாவட்டமான புதுக்கோட்டை யைச் சேர்ந்த பெண் விவசாயி ஒருவர் இந்த சாதனையை படைத்ததற்கு, திரும்பிய பக்கமெல்லாம் இவருக்கு பாராட்டுதான். செல்வியிடம் பேசினோம்.

“வடகிழக்குப் பருமழையைப் பயன்படுத்தி ஒரு போகம் நெல்லும், அதைத் தொடர்ந்து உளுந்தும் சாகுபடி செய்து வழக்கம். விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்தது. விவசாயத்தையே விட்டுவிட்டு வெளியூர் சென்றுவிடலாமா என்ற விரக்தியில் இருந்தேன். அந்த சமயத்தில், வேளாண் அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற விதை உற்பத்தி பயிற்சியில் கலந்துகொண்டேன். அவர்கள் கொடுத்த ஆலோசனைதான் விதை உற்பத்தி செய்து விற்றால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டது. உழைக்கத் தொடங்கினேன்.

மானாவாரி விவசாயத்துக்கு மிகவும் உகந்ததாக திகழும் உளுந்தில், வறட்சியைத் தாங்கி வளர்வதுடன் அதிக விளைச்சலைக் கொடுப்பது ‘வம்பன் 6’ ரகம். பொதுவாகவே உளுந்தில் இளம் செடியாக இருக்கும்போதே மஞ்சள் பூஞ்சான நோய் தாக்கி பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால், இந்த ரகத்தில் பூஞ்சான நோயை எதிர்க்கும் சக்தி உண்டு என்பதால் இந்த உளுந்தை மட்டுமே சாகுபடி செய்து வருகிறேன். அதிகபட்சம் 70 நாட்களில் அறுவடை செய்துவிடலாம்.

விதைக்காக விற்பனை செய்வதால் இரு மடங்கு லாபம் கிடைக்கிறது. சொந்த நிலத்தில் சாகுபடி செய்ய முடியாவிட்டாலும் பிற விவசாயிகளிடம் இருந்தும் தரமான உளுந்தை தேர்வு செய்து அரசுக்கும் நேரடியாக விவசாயிகளுக்கும் விற்கிறேன்.

ஏக்கர் ஒன்றுக்கு 8 கிலோ உளுந்து விதை தேவை. அதிகபட்சம் ஒரு டன் விளைச்சல் கிடைக்கும். டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை முடிந்து தை மாதத்துக்குப் பிறகு உளுந்து விதைப்பு தொடங்கும். புதுக்கோட்டை மாவட்டத்தில் எல்லா பட்டமும் உளுந்து சாகுபடி செய்யலாம்” என்றார்.

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 2 டன் அளவுக்கு ‘வம்பன் 6’ ரக உளுந்து விதையை விற்பனை செய்திருக்கிறார். இதற்காக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், தமிழகத்தில் இருந்து 6 பேரைத் தேர்வு செய்து ‘சிறந்த விதை உற்பத்தியாளர்’ என்ற விருது வழங்கியது. “அந்த 6 பேரில் நான் மட்டுமே பெண் விவசாயி” என பெருமை பொங்கக் கூறினார் செல்வி. பெண்கள் எதில்தான் சாதிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x