யானைகளின் வருகை 127: டாப் ஸ்லிப்- பரம்பிக்குளம்- தீவிரவாதிகள்

யானைகளின் வருகை 127: டாப் ஸ்லிப்- பரம்பிக்குளம்- தீவிரவாதிகள்
Updated on
3 min read

குறிப்பிட்ட அந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக முஸ்தபா, முருகன், சரஸ்வதி, மாகாளி ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளதாகவும் வனத்துறையினர் அறிவித்தனர். அதில் மாகாளி என்ற பெண் தன் கணவர் கிட்டான் என்பவர் 2 புலி நகங்களை பொள்ளாச்சி அருகே தரப்பாளையம் சித்த வைத்தியர் ஒருவரிடம் கொடுத்து வைத்திருப்பதாக சொல்ல, சம்பந்தப்பட்ட வைத்தியர் வீட்டை சோதனையிட்டதில் அங்கே 2 புலி நகங்கள், 4 புலிப்பற்கள், 10 மான் கொம்புகள், ஒரு நாட்டுத் துப்பாக்கி ஆகியவற்றையும் கைப்பற்றியதாக வனத்துறை தெரிவித்தது. அதில் சித்த வைத்தியர் கைதானார். கிட்டான் தப்பி விட்டார்.

இந்த குற்ற சம்பவத்தின் பின்னணியில் மின்சார ஊழியர் ஒருவரின் பெயரும் அடிபட்டது. அந்த மின்துறை ஊழியர் கார் டிரைவர். பூர்வீகம் கேரளா. இவர்தான் மன்னார்காட்டை சேர்ந்த முஸ்தபா என்பவறை காடாம்பாறைக்கு அழைத்து வந்திருக்கிறார்.

அந்த மின்துறை டிரைவர் சிறுவயது முதலே இங்கு வசிப்பவர். அதன் மூலம் பழங்குடி மக்களிடம் அவருக்கு அபரிமித செல்வாக்கு. இவர் காலால் இட்ட வேலையை தலையால் முடிக்கும் அளவுக்கு ஆதிவாசிகள் இவரிடம் வசியப்பட்டிருந்தனர். அதோடு மின் வாரிய அதிகாரிகள் காடாம்பாறைக்கு வரும்பொதெல்லாம் அவர்களுக்கு காடை, மான் இறைச்சியுடன் மது, மாது விருந்தும் வைத்து உபசரிப்பதை வழக்கமாக வைத்திருந்துள்ளார்.

இந்த செல்வாக்கின் நிமித்தம் காடாம்பாறையில் மட்டுமின்றி வால்பாறை மலைகளின் எந்த மூலையில் இவர் வாகனம் ஓட்டினாலும் எல்லா சோதனைச் சாவடிகளும், சோதனையில்லாமலே இவரின் காருக்காக திறந்து வழிவிடும் சக்தி பெற்றவர் ஆகியிருக்கிறார்.

இந்த நிலையில் சந்தனக்கட்டை, புலிப்பல், புலிநகம் பிடிபட்ட கும்பலுடன் கும்பலாக இவரும் வனத்துறை அதிகாரிகள் வசம் பிடிபட்டிருக்கிறார். வராத இடத்திலிருந்தெல்லாம் அவருக்காக ரெகமண்ட் போன் வரவும் அவரை மட்டும் விடுவித்த அதிகாரிகள் மற்றவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இன்றைக்கும் அந்த மின் ஊழியர் ஹாயாக காடாம்பாறை காடுகளில் வாகன உலா வந்து கொண்டிருப்பதாகத்தான் சொல்கிறார்கள்.

இந்த சம்பவம் நடந்து ஓர் ஆண்டுதான். மேற்சொன்ன குற்றச்சம்பவத்தை தாண்டி நடந்த ஒரு சம்பவத்தால், 'இது தீவிரவாதிகளின் கைங்கரியமோ? பயங்கரவாதிகளின் நடமாட்டமோ?' என டாப் ஸ்லிப் நடுங்கியது. அதற்கு காரணம் இந்தப் பகுதியில் அடர்ந்த காட்டுக்குள் கிடந்த கத்திகள், மலையேற்றக்கயிறு, கொக்கி, டார்ச் லைட், உணவுப் பொருட்கள்.

பொள்ளாச்சி ஆனைமலைக்கு தெற்கே, வால்பாறைக்கு மேற்கே அமைந்துள்ளது டாப் ஸ்லிப் வனப்பகுதி. வால்பாறை மலைத்தொடர்களின் ஒன்றாகவே விளங்கும் இந்த டாப் ஸ்லிப், ஆனை மலை புலிகள் காப்பக பகுதிக்குள்ளேயே பசுமை சுடர்விடும் ரம்மிய பிரதேசம். கிட்டத்தட்ட 82 சதுர கிலோமீட்டர் தொலைவுக்கு விரிந்து, பரந்து கிடக்கும் இந்த வனப்பரப்பைச் சுற்றி, பசுமை மாறாக்காடுகளும், பசும்புல்வெளிகளும் நிறைந்து கிடக்கிறது.

பரம்பிக்குளம், ஆழியாறு, சோலையாறு, அமராவதி, திருமூர்த்தி என்று நீர்த்தேக்கங்கள் சூழ்ந்துள்ளதால் வனமிருகங்கள் துள்ளி விளையாடும் உயிரின வாசஸ்தலமாகவே இது விளங்குகிறது. அந்தக் காலத்திலேயே கோவை ஜில்லாவிற்கு வரும் பெரிய அதிகாரிகள், செல்வந்தர்கள் இந்திரா காந்தி வனவிலங்குச் சரணாலயப் பகுதியில் அமைந்துள்ள இந்த டாப் ஸ்லிப்பில் தங்குவதையே பெரிதும் விரும்புவார்கள்.

இங்கிலாந்தில் கப்பல் கட்டுவதற்குத் தேவைப்பட்ட தேக்கு, ஈட்டி, ஆய்மி மரங்களைப் பயிரிடக் கடந்த 1847-ல் பிரிட்டிஷ் அரசு இப்பகுதியில் விஞ்ஞான வன மேலாண்மையைத் தொடங்கியது. வனப்பகுதியில் வெட்டப்பட்ட மரங்களை யானைகளின் மூலம் கொண்டு வந்து டாப் ஸ்லிப் பகுதியில் இருந்து உருட்டி விட்டால் மலையடிவாரத்துக்கு அவை வந்துவிடுமாம். இதன்பின் துறைமுகங்களுக்கு மரங்கள் கொண்டு செல்லப்பட்டன. மரங்களை உருட்டிவிடும் மிக உயரமான இடம் என்பதால் டாப் ஸ்லிப் என அழைக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இம்முறையைக் கேப்டன் மைக்கேல் என்பவர் அறிமுகப்படுத்தியுள்ளார். டாப் ஸ்லிப்பில் தங்கும் விடுதிகள் உள்ளன. இங்கே மான், காட்டுப் பன்றிகள் ஆகியவற்றைக் கூட்டம் கூட்டமாக மிக அருகாமையில் பார்க்க முடியும். இங்கு மூலிகைப் பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த டாப் ஸ்லிப் பகுதியில்தான் வரகலியார் மற்றும் கோழிக்கமுத்தி ஆகிய இரு இடங்களில் யானைகளுக்கான பயிற்சி முகாம்கள் உள்ளன. இங்கு பயிற்சி பெற்றுள்ள யானைகள் பிற பகுதிகளில் அடங்காத யானைகளையும் அடக்கும் பயிற்சி பெற்றவை. ஆனைமலை வனப்பகுதிக்குள் செல்லவும், டாப் ஸ்லிப்பில் உள்ள விடுதிகளில் தங்கவும் அனுமதியுண்டு. யானை சவாரி செய்யவும், கோழிக்கமுத்தி முகாமைப் பார்வையிடவும் வனத்துறை அனுமதியுள்ளது. அதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் உள்ளன. டாப் ஸ்லிப் பகுதிக்கு பிப்ரவரி, மார்ச் மாதங்களைத் தவிரப் பிற மாதங்கள் எல்லாமே சுற்றுலா பயணிகள் குவிவது வழக்கமாக உள்ளது. மாலை 5 மணிக்கே சாலை ஓரங்களில் காட்டு யானைகள் தினசரி தரிசனமாக கிடைக்கும் பகுதி இதுதான் என்பதை வைத்து இந்தப் பகுதியின் கானுயிர்களின் உயிர் வாழ்க்கையின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம்.

டாப் ஸ்லிப் தாண்டியதும், மேலே 2 கிலோமீட்டர் தூரத்தில் ஆனைப்பாடி என்ற கேரள எல்லை வந்து விடுகிறது. அதற்கு அப்பால் 20 கிலோமீட்டர் தொலைவில்தான் பரம்பிக்குளம் அணை உள்ளது. ஆனைப்பாடி சோதனைச் சாவடியிலிருந்து சற்று தொலைவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 2011-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தின் ஒரு சனிக்கிழமை நாளில் ரோந்து சென்றனர் சில வேட்டைத் தடுப்புக் காவலர்கள்.

அங்கே கொக்கியுடன் கூடிய 40 அடி உயர மலை ஏறும் கயிறு, அதன் அருகே 5 கத்திகள், ஒரு ஆக்ஸா பிளேடு, டார்ச் லைட்டுகள், டார்ச்சில் போடக்கூடிய பேட்டரி செல்களின் கவர்கள், நிறைய உப்பு பாக்கெட்டுகள் மற்றும் கூகுள் சியர்ச்சில் சென்று பிரிண்ட் அவுட் எடுக்கப்பட்ட மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளின் வரைபடங்கள் கண்டெடுக்கப்பட்டன.

இந்த வரைபடங்களை வனவிலங்கு வேட்டைக்காரர்கள் எடுத்திருக்க சாத்தியமில்லை. கைப்பற்றப்பட்ட கத்திகள் ஆறு அங்குலம் (அரை அடி) நீளமுடையவை. அதன் கைப்பிடியில் பிறை வடிவ முத்திரை இருந்தது. சீன தயாரிப்பின் பெயரும் அதில் இருந்துள்ளது. எனவே இதை தீவிரவாதிகள்தான் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

இதை ஆய்வு செய்த வனக்காவலர்கள். இத்தகவலை டாப் ஸ்லிப் வனச்சரகருக்கு தெரிவிக்க, அவர் ஆனைமலை போலீஸாருக்கு தகவல் கொடுக்க, கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரே சம்பந்தப்பட்ட பொருட்கள் கிடந்த இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினார். அதோடு தமிழ்நாடு சிறப்பு அதிரடிப்படை எஸ்.பி.கருப்பசாமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட அதிரடிப்படை வீரர்கள் காடுகளில் தேடுதல் வேட்டையில் இறங்கினர். 2 நாட்களுக்கு வனப்பகுதியை சல்லடையாக சலித்த அதிரடிப்படை, 'சில இடங்களில் மட்டும் மனிதர்கள் சென்றதற்கான தடம் உள்ளது. சில பாறை இடுக்குகளில் சமைத்து சாப்பிட்டதற்கான அடையாளங்களும் உள்ளது. இவையெல்லாம் வேட்டைக்காரர்கள் நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியே தவிர, தீவிரவாதிகள் யாரும் இல்லை!' என்று தெரிவித்தனர். அதே சமயம் அதையொட்டி, வேறுவிதமான கருத்துகளும் பரவின.

முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை மையப்படுத்தியே இந்த வதந்தி கிளப்பி விடப்பட்டுள்ளது. இது கேரள உளவுப்பிரிவு போலீஸாரின் வேலையாக இருக்கலாம். டாப் ஸ்லிப்பிற்கு மேலுள்ள பரம்பிக்குளம் அணைக்கு தீவிர வாதிகளால் ஆபத்து என்ற காரணத்தை கூறி கேரள போலீஸை பரம்பிக்குளம் பகுதியில் நிறுத்துவதற்காக நிகழ்த்தப்படும் நாடகம்தான் இது என்றனர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

கேரள போலீஸாரோ, 'இதை நாங்கள்தான் கிளப்ப வேண்டுமா? ஏன் தமிழக போலீஸாரே செய்திருக்கக் கூடாது? முல்லைப் பெரியாறு பிரச்சினையைத் திசைதிருப்பி கேரள மக்களின் கவனத்தை டாப் ஸ்லிப், பரம்பிக்குளம் பக்கம் திருப்பிவிட தமிழ்நாட்டு அரசாங்கம் திட்டம் போட்டிருக்கலாமே!' என்றனர்.

இந்த சம்பவம் அப்போதைக்கு பரபரத்து, பின்னர் பிசுபிசுத்து அடியோடு மறந்தும் போக 2013 செப்டம்பர் மாதத்தில் இதே போன்றதொரு தீவிரவாதிகள் கனல் இதே வால்பாறையின் கிழக்குத்திக்கில் உள்ள அமராவதி வனப்பகுதியிலிருந்து புறப்பட்டது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in