Published : 16 Feb 2018 12:19 PM
Last Updated : 16 Feb 2018 12:19 PM

யானைகளின் வருகை 132: அச்சுறுத்தும் இடுக்கி பேக்கேஜ்

ஆனைமலை புலிகள் காப்பகத்தின் இன்னொரு சிறப்பு மற்ற இடங்களில் இல்லாத, அரிதிலும் அரிதான விலங்குகள் சரமாரியாக காணப்படுவதுதான். தமிழக அரசு விலங்கான நீலகிரி வரையாடுகள் இங்கு மிக அதிக எண்ணிக்கையில் உள்ளது. அவற்றை வால்பாறை செல்லும் வழியில் 10-வது, 11-வது கொண்டை ஊசி வளைவுகளிலேயே காணலாம்.

மேலும் ஆனைமலையின் தனிச் சிறப்பான சிங்கவால் குரங்குகள், நீலகிரிக் கருங்குரங்குகள், ஆனைமலையின் பெருமையான இருவாச்சிப் பறவை, 350 வகைப் பறவையினங்கள், ராஜநாகம், விஷமில்லாத பறக்கும் பாம்பு உள்ளிட்ட எண்ணிலடங்காத பாம்பு வகைகள், கடமான், புள்ளிமான் எனப் பலவகை மான்கள், காட்டெருமை, காட்டு மாடு, வீட்டில் செல்லப் பிராணியாக வளர்க்கப்படும் ராட்சதச் சிலந்திகள், பறக்கும் பச்சைத் தவளை, மனித ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகள் என டைனோசர் இல்லாத ஜூராசிக் பார்க்கே இங்கே குடிகொண்டிருக்கிறது.

யானைகளின் விருப்ப உணவும், நம் மருத்துவர்களின் மருந்துக்குப் பயன்படுவதுமான அயினிப் பலா, சிங்கவால் குரங்குகள் விரும்பி உண்ணும் குரங்குப் பலா, 500-க்கும் மேற்பட்ட அழகிய ஆர்க்கிட் மலர்கள், காட்டுப் பகுதிக்கே உரிய கல்வாழை, காட்டு நெல், வெளிநாட்டுக்கு ஏற்றுமதியாகும் நூற்றுக்கணக்கான மூலிகைகள் அனைத்தையும் ஆனைமலை வனத்தில்தான் தரிசிக்க முடியும். இப்படிப்பட்ட அதி அற்புத பிரதேசம் சுற்றுலாத் தலமாக அறிவித்துள்ளதால் அரசு சார்பில் கோடை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் சுற்றுலா தன்மை முழுமையாக செயல்பட்டு, மக்கள் மேலும் குவிய ஆரம்பித்துவிட்டால் வால்பாறை இன்னமும் மோசமான சூழ்நிலைக்கு ஆட்படும். அது நீலகிரி உயிர்ச்சூழலை கெடுத்தது போலவே ஒரு நிலையை ஏற்படுத்தினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

இதை விட முக்கியமான இன்னொரு விஷயம், மூணாற்றில் கேரள அரசு கட்டும் அணைகள். இந்த ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கிழகோடியாக விளங்குவது அமராவதி வனச்சரகம். இந்த காடுகள் அமராவதி நதியின் மூலமே பசுமை பூத்துக் குலுங்குகிறது. சின்னாறு, மூணாறு, தேனாறு, பாம்பாறு உள்ளிட்ட கேரள நீர்ப்பிடிப்பு பகுதிகளிலிருந்து சின்னச்சின்ன ஆறுகளே தமிழகத்தில் அமராவதி ஆறு என்று பெயர் பெறுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே காமராஜர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்டதுதான் அமராவதி அணை.

இந்தப் பிரதான அணையிலிருந்து 15 தடுப்பு அணைகள், 8 மண் அணைகள், 25 பாசன வாய்க்கால்கள் மூலமாக கிட்டத்தட்ட 29,500 ஏக்கர் நிலங்கள் இங்கே பழைய ஆயக்கட்டு பாசன வசதி பெறுகிறது. தவிர சுமார் 63 கி.மீ. தூரத்திற்கு வாய்க்கால்கள் மூலம் சுமார் 25,000 ஏக்கர் நிலங்கள் புதிய ஆயக்கட்டு பாசனம் நடைபெறுகிறது. 4 டி.எம்.சி அளவே கொள்ளவு கொண்ட அமராவதி அணை முன்பெல்லாம் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழைக் காலங்களில் எப்போதும் நீர்வரத்து உள்ள அணையாக காணப்பட்டது. முப்போக நெல்சாகுபடி முறையும் இருந்து வந்தது.

ஆனால் கடந்த 25 ஆண்டுகாலமாக அணை தூர்வாரப்படாமல் இருப்பதாலும், மழையளவு குறைந்துவிட்டதாலும், கேரளா ஆற்றின் வழித்தடங்களில் தன் தேவைக்காக ஆங்காங்கே தடுப்பணைகள் கட்டி நீர்த்தேக்கிக் கொள்வதாலும் இங்கே முப்போக சாகுபடி என்பது கேள்விக்குறியாகிவிட்டது. உடுமலை, தாராபுரம், வெள்ளக்கோயில், கரூர் உள்பட வழியோரங்களில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் இதன்மூலமே செய்யப்படுவதால் வருடத்திற்கு இந்த அணையின் மூலம் 15 டி.எம்.சி தண்ணீர் தேவைப்படுகிறது.

இந்த தேவைகளே பூர்த்தி செய்யப்படாமல் இருக்க இந்த அமராவதி ஆற்றின் பிரதான கிளை ஆறுகளில் ஒன்றான பாம்பாற்றின் குறுக்கே கேரளாவில் மறையூர் அருகே உள்ள காந்தலூர் கோயில்கடவு என்ற இடத்தில் பிரம்மாண்ட அணை ஒன்றை கட்ட 10 ஆண்டுகள் முன்பு கேரள அரசு திட்டம் தீட்டி 230 கோடி ரூபாய் நிதிஒதுக்கீடும் செய்தது.

இந்த பாம்பாற்றுக்கு மேலே ஆனைமுடி என்ற பகுதிகளில் பல்வேறு இடங்களில் தடுப்பணைகள் கட்டி பாசனப் பரப்பை அதிகப்படுத்தவும், போகிற வழியில் உள்ள தூவானம் அருவியில் மின்சாரம் தயாரிக்கவும் கேரளா திட்டமிடுவதாகவும் தமிழக விவசாயிகள் பிரச்சினை எழுப்பி போராட்டத்தில் அப்போதே இறங்கினர். அதன் எதிரொலியாக கேரள அரசு தனது பாம்பாறு அணைக்கட்டு திட்டத்தை தற்காலிகமாக கைவிட்டது.

பிறகு 3 ஆண்டுகள் கழித்து இடுக்கி பேக்கேஜ் என்ற பெயரில் புதிய அணை கட்டும் முயற்சியில் இறங்கியது. மறுபடியும் தமிழக அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் இறங்கின. மறுபடியும் தமிழக எதிர்ப்புகளின் விளைவாக அணைப்பணியை கைவிட்டது கேரளா.

அதையடுத்து மீண்டும் 2014 நவம்பரில் பாம்பாறு பட்டிச்சேரி பகுதியில் அணை கட்டுமானப் பணிகளை மேற்கொண்டது. இதற்கும் எழுந்த எதிர்ப்பை அடுத்து, கட்டுமானப் பணிகளை கிடப்பில் போடப்பட்டது. தற்போது இதே இடத்தில் 2 டி.எம்.சி அளவு நீரை தேக்கும் கொள்ளளவு கொண்ட ரூ.24 கோடி மதிப்பீட்டில் அணையைக் கட்டியுள்ளது கேரள அரசு. தமிழகத்தில் நிலவிய அரசியல் சூழல் காரணமாக இங்கே நடந்த விவசாயிகள் போராட்டம் எடுபடவில்லை. இப்போதே அமராவதிக்கு நீர்வரத்து பாதியாகக் குறைந்துவிட்ட நிலையில் இனி இதுபோல எத்தனை அணைகள் கேரளப் பகுதியில் எழுமோ என்ற அச்சம் தமிழக விவசாயிகளிடம் தலைதூக்கியுள்ளது. இது விவசாயிகள் பிரச்சினை மட்டுமல்ல. காடுகளுக்கும் பிரச்சினைகளை உருவாக்கி, கானுயிர்களையும் திசைமாற்றி அழிவுக்கு வழிவகுக்கும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

ஆழியாறு, திருமூர்த்தி அணை, பில்லூர், சிறுவாணி பகுதிகளில் கட்டப்பட்டிருக்கும் அணைகள் பெரும்பகுதி, மலைச்சரிவுகளும், சமதளமும் சந்திக்கும் பள்ளத்தாக்குப் பகுதிகளில். அதனால் பெரிய அளவு காடுகளுக்கும், கானுயிர்களுக்கும் பாதிப்பு இல்லை. அந்த அணைகளின் பாசனத்தின் மூலம் விவசாயிகள் பயன்பெறுவதோடு, அப்பகுதிகள் சோலைக்காடுகளால் நிறைந்துள்ளன. அது அங்கே நீர் அருந்த வரும் யானைகளுக்கும், மற்ற வனவிலங்குகளுக்கும் பயனுள்ளதாகவும், அவை கர்ப்ப காலத்தில் மாதக்கணக்கில் அங்கேயே தங்கியிருந்து பிரசவிக்கவும் வசதியாக உள்ளதை ஏற்கெனவே முந்தைய சில அத்தியாயங்களில் கண்டோம்.

ஆனால் மூணாறு பகுதியில் இடுக்கி பேக்கேஜ் என்ற பெயரில் கேரள அரசு தீட்டியுள்ள அணைகள் திட்டம் அப்படியானதல்ல. இவை சுத்தமாகவே அமராவதி ஆற்றிற்கு நீர் வரத்தை துண்டிக்கும். பெருமழைக் காலங்களில் மட்டுமே இங்கே ஆற்றைக் காண முடியும். ஆண்டு முழுக்க ஆற்றில் நீர் வரும்போதே சின்னாறு முதல் அமராவதி அணை வரை ஜனவரி தொடங்கி ஜூன் மாதம் வரை கடும் வறட்சியை சந்திக்கிறது. அக்காலங்களில் தண்ணீர் இல்லாமல் வனவிலங்குகள் தவிக்கிறது.

கேரள அரசு இதற்கு 40 கிலோமீட்டருக்கு அப்பால் உயரமான மலைப் பள்ளத்தாக்குகளிலேயே இப்படி அணைகள் கட்டி நீரைத் தேக்கிக் கொண்டால் என்ன ஆகும்? இதுவரை போடப்படாத அளவு ஆழமுள்ள ஆழ்குழாய் கிணறுகளை போட்டு தண்ணீர் உறிஞ்சி விவசாயம் செய்வர் விவசாயிகள். அந்தப் பயிர்களை அழிக்க வலசைப்பாதையை மாற்றிக் கொண்டு ஊருக்குள் வரும் யானைகள். யானைகள் உடுமலைப் பேட்டை நகரப் பகுதிகளுக்கே யானைகள் எதிர்காலத்தில் வர ஆரம்பிக்கும். வால்பாறை காடுகளை, கானுயிர்களின் உய்விடத்தின் பெரும்பகுதியை நூறாண்டுகளுக்கு முன்பு அழித்து தேயிலை, காபித் தோட்டங்களாகவும் மாற்றியதனால் ஏற்பட்ட கேடுகளை இப்போதுதான் இங்கே அனுபவிக்க ஆரம்பித்துள்ளோம்.

இப்போது வால்பாறையை சுற்றுலாத் தலமாக வளர்ச்சி பெற வைப்பது, அதன்மூலம் சுற்றுலாப் பயணிகள் என்ற பெயரால் மக்களை குவிய விடுவது, இடுக்கி பேக்கேஜ் பெயரில் கேரளா மூணாறில் அணைகளைக் கட்டி நீரைத் தேக்குவுது என்பதெல்லாம் அடுத்த பத்தாண்டுகளில் மிகப் பெரிய கேடுகளை ஏற்படுத்தும். ஆனைமலை புலிகள் காப்பகத்தின் உயிர்ச் சூழலையே பாதிக்கும், யானை மனித மோதலையும் அதிகரிக்கச் செய்யும்.

- மீண்டும் பேசலாம்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x