Published : 08 Feb 2018 08:28 AM
Last Updated : 08 Feb 2018 08:28 AM

ஆழ்வார் புத்தகக் கடை இனி என்னவாகும்?

செ

ன்னை மயிலாப்பூரில் ஆர்.கே. ஆழ்வார் நடத்திவந்த பழைய புத்தகக் கடையை அறியாதவர்கள் இருக்க முடியாது. தமிழகம் முழுவதும் உள்ள வாசகர்கள், மாணவர்களால் அறியப்பட்ட அந்தப் புத்தகக் கடையின் எதிர்காலம் இன்றைக்குக் கேள்விக்குரியதாகி இருக்கிறது. காரணம், அந்தக் கடையைக் கடந்த சில ஆண்டுகளாக நடத்திவந்த அவரது மனைவி மேரியின் மரணம். 63 வயதான மேரி, ஜனவரி 30 அன்று காலமானார்.

புத்தக விற்பனையில் ஆழ்வாருக்கு எப்போதும் கைகொடுத்துவந்தவர் மேரி. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இந்தப் புத்தகக் கடையை நடத்திவந்த ஆழ்வார், பக்கவாத பாதிப்பு காரணமாக நடமாட முடியாத நிலையில் இருக்கிறார். அவருக் குப் பதிலாக அந்தக் கடையை வெற்றிகரமாக நடத்திவந்தார் மேரி.

அரிதான புத்தகங்கள், மறுபதிப்பு காணாத முக்கியப் புத்தகங்கள், பல்வேறு துறைசார் புத்தகங்கள் என்று ஒரு புத்தகப் புதையலாகவே இயங்கிவந்த கடை அது. பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் என்பதால் விலை மலிவு.

எந்த அடிப்படை வசதியும் இல்லாமல், நடை பாதையில் தார்பாயை மட்டுமே ஒரே பாதுகாப்பாகக் கொண்டு புத்தகங்கள் அடுக்கப்பட்டிருக்கும். ஒரு காலத்தில் அண்ணா போன்ற பிரபலங் களுக்கு அரிய புத்தகங்களை ஆழ்வார் விற்பனை செய்துள்ளார். 50 ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் இந்தக் கடை, மயிலாப்பூரின் அடையாளங்களில் ஒன்றாகவே மாறிவிட்டிருந்தது.

“ஆழ்வாரும் சரி, மேரியும் சரி அற்புதமான மனிதர்கள். காசுக்கு ஆசைப்படாதவர்கள். அவர் களுடைய கடையில் அனைத்துத் தரப்பினருக்குமான புத்தகங்களும் கிடைக்கும். அதிக விலை கொண்ட முக்கியமான புத்தகங்கள் நம்ப முடியாத அளவுக்கு மலிவாகக் கிடைக்கும்” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.சிவகுமார். “இங்கு பாடப் புத்தகங்கள் வாங்கி ஏழை மாணவர்கள் பலர் பலனடைந்துள்ளனர். அந்தத் தம்பதிக்கு மகள்கள் உண்டு. அவர்களால் இந்தக் கடையை நடத்த முடியுமா என்று தெரியவில்லை. ஏனெனில், ஆக்கிரமிப்பு என்று சொல்லி மாநகராட்சி அதிகாரிகள் அடிக்கடி இந்தக் கடையை அகற்ற முயற்சி செய்திருக்கிறார்கள். இனி, அந்தக் கடையை யார் நடத்துவார் என்று புரியவில்லை” என்கிறார் வருத்தத்துடன்.

அறிவுச் சுரங்கமாக விளங்கிய ஆழ்வார் கடை சகாப்தம் என்னவாகும்?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x