Published : 28 Feb 2018 08:44 PM
Last Updated : 28 Feb 2018 08:44 PM

யானைகளின் வருகை 136: அப்பனே பெரியவனே மன்னியுங்கள்!

காதல் வயப்பட்ட ஒரு பெண்ணும், பையனும் வீட்டை விட்டு ஓடிப்போனார்கள். இருவரும் கோயிலுக்கு சென்று மாலை மாற்றித் திருமணமும் செய்து கொண்டார்கள். பெண் வீட்டுக்காரர்கள் நல்ல வசதி. ஆளாளுக்கு வாகனங்களை எடுத்துக்கொண்டு தேடினார்கள். பெண் கடத்தல் என்று சொல்லி போலீஸில் புகாரும் செய்தார்கள். பையன் வீட்டார் அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியாது என கையை விரிக்க, பெண் வீட்டார் ஆள்கொணர்வு மனு ஒன்றை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்கள். அவர்களை போலீஸ் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பு செய்ய வேண்டிய காலக்கெடுவும் வந்தது. அதற்கு முன்தினம் அதிர்ச்சியான ஒரு சம்பவம் நடந்தது. எந்த நீதிபதி இந்த வழக்கில் தீர்ப்பு சொல்ல இருந்தாரோ, அவரின் ஒரே பெண் அவர் வீட்டு கார் டிரைவரை கூட்டிக் கொண்டு ஓடிப்போனார்.

இந்த விவகாரம் வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் பேசு பொருளானது. அதைவிட முக்கியமாய் தீர்ப்பு நாளில் பெண் வீட்டார் பல்வேறு வாகனங்களில் கூலிப்படையை கொண்டு வந்து ஆயுதங்களுடன் தயார் நிலையில் நிறுத்தி வைத்திருந்தனர். 'பையன்-பெண் திருமணம் செல்லும்' என்று வாதிட்டு தீர்ப்பை எதிர்நோக்கிக் காத்திருந்த வக்கீல் குழாத்திற்கு இதை எதிர்கொள்வது எப்படி என்று திகில் கொண்டிருந்தனர்.

அதே சமயம், 'தன் பெண்ணே ஒரு டிரைவரை காதலித்துக் அவனை கூட்டிக் கொண்டு ஓடிவிட்டதால் நீதிபதியின் தற்போதைய மனநிலையில் நிச்சயம் இந்த வழக்கில் பையனையும்-பெண்ணையும் பிரித்து வைத்தே தீர்ப்பு வழங்குவார்!' என்றே உறுதிபட நம்பினர்.

அப்படி வரும்பட்சத்தில் பையனை வாகனங்களில் காத்திருக்கும் கூலிப்படையிடமிருந்து காப்பாற்றுவது எப்படி என்றும் கைகளை பிசைந்தபடி இருந்தனர்.

ஆனால் அவர்கள் எல்லாம் எதிர்பார்த்ததற்கு மாறாக, 'பையன்-பெண் திருமணம் செல்லும். அவர்களுக்கு போதுமான பாதுகாப்பை போலீஸார் வழங்க வேண்டும்!' என்றே ஆணியடித்த மாதிரி தீர்ப்பை வழங்கினார் நீதியரசர். துலாக்கோல் நீதி என்பது இதுதான். தன் கால்களை விட்டு பூமியே நழுவினாலும் வழுவாது நிற்பதாகும்.

அதுபோலத்தான் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து நம்மை தாக்கிக் கொன்றாலும், அது இந்த மனிதகுலம் காலம், காலமாக அவற்றுக்கு செய்து வந்த தீவினையின் வினைப்பயனே என ஏற்றுக் கொள்வதாகும். அதில் நானும் என் குடும்பமும் மட்டும் விதி விலக்கல்ல. என்னையே யானை கொன்று விட்டாலும் கூட, யானையின் செயல் கொடியது என்று குற்றவாளிக்கூண்டில் நிறுத்திப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மரண தண்டனை விதிக்க வேண்டிய தேவையும் இல்லை. இந்த நீதியை எடுத்துச் சொல்வதற்கு இந்த மனிதகுலம் காலங்காலமாய் அவற்றுக்கு செய்து வந்த அநீதிகள் கோடி, கோடியாய் வரிசை கட்டி நிற்கிறது! என்பதே என் வாதம்.

இந்த நிலையில் நின்று ஒவ்வொரு மனிதனும் யோசிக்கும் போதும், சிந்திக்கும்போதும்தான் இதற்கான நிரந்தர தீர்வுகள் பிறக்கும். இது பேசுவதற்கும், எழுதுவதற்கும் வேண்டுமானால் சரியாக இருக்கலாம். உயிரை, உறவுகளை இழந்த நிலையில் நின்று பார்த்தால்தான் தெரியும் என்றே பெரும்பாலானவர்கள் இதற்கு எதிராக கருத்து சொல்வார்கள். தன்னலமேயான சமூகத்தில் நாம் அதைத்தானே எதிர்பார்க்க முடியும். நானும் அப்படித்தானே வாழ வேண்டும். அப்படியான உணர்வுகளூடேயே நானும், என் சுற்றத்தாரும் வாழ்கிறார்கள் என்பதால் அதுவே சமூக நீதியாக ஆகிவிடாது. இது உணர்ச்சி மயமான உலகம். எல்லா துன்பங்களையும் பிறர் மீது சுமத்தி, தன்னை நியாயப்படுத்திக் கொள்வதையே வழக்கமாக கொண்டிருக்கிறது. அது தகரும். தகரும் காலம் வந்தே தீரும். எழுத்து என்பது அதற்குள்ளும் எழுந்து நிற்பதாகும் என்பாதாலேயே இதற்கு இத்தனை அழுத்தமும் செறிவும் ஊட்டி எழுத வேண்டியிருக்கிறது.

காட்டுக்குள்ளிருந்து விளைநிலங்களுக்குள் வந்த யானைகள் வாழை, தென்னை, சோளம் என சகலத்தையும் கபளீகரம் செய்து விட்டது. அதை விரட்டப் பட்டாசு வெடித்தும், கரண்ட் வச்சும் வேலையாகவில்லை. இதை ரயில் வரும் நேரத்தில் ரயில்வே டிராக்கில் ஓட்டி விடுவதுதான் சரி. அதுவும் இரண்டு பக்கமும் குகைபோல் சூழப்பட்ட பாறை இடுக்கின் வழியே 2 மைல் தூரம் செல்லும் தண்டவாளத்தில் ஓட்டி விட்டால்தான் ஆகும் என முடிவெடுக்கிறது கோப மனம்.

அதே போல் விரட்டுகிறார்கள் மக்கள். ரயிலில் மூன்று யானைகள் சிக்கி நசுங்கி சாகிறது. அதில் ஒரு நிறைமாத கர்ப்பிணி யானையும் இறக்கிறது. அந்த யானையின் வயிற்றிலிருந்து கனகாம்பரப்பூ போன்ற நிறத்தில் ஒரு பிஞ்சு யானையும் வெளியில் வந்து விழுந்து, தண்டவாளத்தில் துள்ளத் துடிக்க தன் மூச்சை பிறப்புக்கு முன்பே நிறுத்திக் கொள்கிறது. அதைக் காண ஊரே திரள்கிறது. அத்தனை பேரும் வாயிலும் வயிற்றிலும் போட்டுக் கொள்கிறார்கள்.

இப்படியொரு கொடூரம் உண்டா என பதைக்கிறார்கள். இறந்து கிடந்த யானைகளுக்கு பூ மாலை, பொட்டு, சந்தனம் பூசி பூஜைகள் செய்து இறுதி மரியாதை செய்கிறார்கள். ஆயிரக்கணக்கான கண்விழிகள் கண்ணீர் ததும்ப யானைகள் அடக்கம் செய்யப்படுகின்றன. என்றாலும், அந்த யானைகளின் புகைப்படத்தை பிரம்மாண்ட பேனர்களாக்கி, ஊருக்கு ஊர் வைத்து மக்கள் ஊதுபத்தி, கற்பூரம் ஏற்றி கும்பிடுகிறார்கள்.

அந்த வழிபாட்டில் அந்த யானைகளை குகைத் தண்டவாளத்தில் விரட்டி விட்டவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

மற்றவர்களுக்காவது கண்களிலும், மனதிலும்தான் கண்ணீர். இவர்களுக்கோ இதயம் முழுக்க ரத்தக்கண்ணீராய் கசிகிறது.

'அப்பனே பெரியவனே. எங்களை மன்னித்து விடு!' நிச்சயம் அவர்களுக்குள் ஏதாவது ஒரு மூலையில் இந்த வரிகள் அசரீரி போல் ஒலித்தேயிருக்க வேண்டும். அது நிச்சயம் நடிப்பல்ல. நிஜம். (நினைவில் கொள்க எட்டிமடை சம்பவம்: யானைகளின் வருகை 7- நான்கு பெரிய ஜீவன்கள் மரணத்திற்கு காரணிகள் யார்?)

யானைகள் இறந்த பிறகு அவர்களுக்குள் அந்த விவசாயிகளுக்குள் ஊற்றெடுக்கும் துக்கம், துயரம், மன அழுத்தம், அதே யானைகள் அவர்கள் தோட்டத்தில் வந்து அழிச்சாட்டியம் செய்யும் போது எங்கே போனது? கண்டிப்பாக அவை எங்கும் போகவில்லை. அவர்களுக்குள்ளேயேதான் உறங்கிக் கிடந்திருக்கிறது. அது சாதாரண உறக்கம் அல்ல. விவசாயிகள் விதையுறக்கம் என்று சொல்வார்களே. அது போல.

விதைகள் பல ஆண்டுகள் உறங்கிக் கிடக்கும். அவற்றை விவசாயி அவன் நிலத்தில் விதைக்கும் போதுதான் உயிர் கொள்ளும். அந்த விதைகளின் உறக்கம் எத்தனை ஆண்டுகாலம் இருந்திருக்கிறதோ, அந்த அளவுக்கு அதை துயிலெழுப்ப நிறைய சீர் செய்ய வேண்டியிருப்பது பண்பட்ட பாரம்பர்ய விவசாயிகளுக்குத்தான் தெரியும். அந்த விதைகளையும் தாண்டிய உறக்க சிந்தனைதான் நமக்குள் உறங்கிக் கிடந்திருக்கும் மேற்சொன்ன மானுட நெகிழ்வு. அதற்குள் நாம் நுழைய வேண்டுமென்றால், அந்த மானுட நெகிழ்வை நாம் அறியத்தலைப்பட வேண்டுமென்றால், அதன் உறக்கத்தை கலைய வைக்க வேண்டுமென்றால் ஆதி கால யானைகளைப் பற்றிய அறிதல், புரிதல், உணர்தல் என பல்வேறு தளங்களில் பயணப்பட வேண்டும்.

இதுவரை வெட்ட வெளியில் சுற்றித்திரியும் யானைகளை, காடுகளில் வாழும் யானைகளை, ஊருக்குள் புகும் யானைகளை பல்வேறு சம்பவங்கள் மூலம் அங்குலம், அங்குலமாக கண்டோம் அல்லவா? அதுபோல நமக்குள், நம் ஆழ்மனதுக்குள் ஊறிக்கிடக்கும் ஆதியும் இல்லாத அந்தமும் புரியாத பழம்பெரும் யானைகளை வெளியே கொண்டு வரவேண்டும். அதன் மூலம் யானை கொடிதா? மனிதன் கொடியவனா? என்ற எண்ணச் சுழற்சிக்குள் நாம் சுற்ற வேண்டும். இதை அவரவர் அனுபவத்திலிருந்தே பார்க்க வேண்டும். அப்படித்தான் பார்க்கவும் முடியும். அந்த வகையில் என் அனுபவத்திலிருந்தே யானை அறிதலுக்கான சில விஷயங்களுக்குள் பயணமாகிறேன். நீங்கள் அதனுடன் ஒட்டி உறவாடி நகரும் போது உங்களுக்கான அனுபவத்திற்குள் நுழைந்து நுழைந்து வெளி வருவீர்கள் என்றும் நம்புகிறேன்.

இதோ கண்கள் மூடி யோசிக்கிறேன்.

எனக்கு இந்த யானைகள் எப்போது எப்படி அறிமுகமாகின?

நினைவு தெரிந்த நாளில் அம்மா சொன்னாரா? அப்பா சொன்னாரா? இல்லை. நினைவில் இல்லை. ஆனால் ஊர்க்கோடியில் சிலை வடிவில் பிள்ளையார் நினைவில் ஆடுகிறது. யானை முகத்தோனை, துதிக்கையுடையோனை தோப்புக்கரணம் போட்டு கும்பிட்டால் படிப்பு நன்றாக வரும் என்ற கற்பிதம். யார் சொன்னார்கள்? தெரியவில்லை. தெரிந்து என்ன ஆகப்போகிறது. விடுங்கள். இப்படிப்பட்ட உருவம் உலகத்தில் இருக்கிறதா? என்று சிற்பக்கலையை நுணுக்கி, நுணுக்கி ஆராயும் நுட்ப மனம் இல்லாத பாலகப் பருவம்.

-மீண்டும் பேசலாம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x