

படிப்பு,விளையாட்டு,கதை,கவிதை,கட்டுரை,ஓவியம்,நடனம்,யோகாஎனஎக்கச்சக்கமானதிறமைகளோடுஇருந்தும்,பொருளாதாரத்தின்காரணமாகமட்டுமேமுடங்கிப்போயிருக்கும்முத்தானமாணவர்களைஅறிமுகப்படுத்தி,அவர்களின்வாழ்வில்ஒளியேற்றமுயற்சிக்கும்தொடர் 'அறம்பழகு'.
தாய்லாந்தில் நடைபெற உள்ள சர்வதேச குத்துச்சண்டைப் போட்டிக்கு தமிழகத்தில் இருந்து தேர்வாகியுள்ள ஒரே மாணவி யோகேஸ்வரிக்கு, போட்டியில் கலந்துகொள்ள ரூ.80,000 தேவைப்படுகிறது.
சென்னை, பெரம்பூர் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி யோகேஸ்வரி. 2015-ல் இந்திய குத்துச்சண்டைக் கூட்டமைப்பு அப்பள்ளிக்கு இலவசமாகப் பயிற்சி அளித்தது. அதில் ஆர்வத்துடன் கலந்துகொண்டார் யோகேஸ்வரி. திறமையும், ஆர்வமும் அவரைத் தொடர் வெற்றிகளை நோக்கித் தள்ளின.
வறுமையான சூழலில் வாடினாலும் மாநில அளவில் கீழ்ப்பாக்கத்தில் நடந்த குத்துச்சண்டை போட்டியில் தங்கம், தேசிய அளவில் மகாராஷ்டிராவில் நடந்த போட்டியில் வெண்கலம், பெங்களூருவில் நடந்த போட்டியில் வெள்ளி, கேரளாவில் இரண்டு தங்கங்கள், ஒரு டைட்டில் பெல்ட், டெல்லியில் ஒரு தங்கம் என ஏராளமான பதக்கங்களைக் குவித்திருக்கிறார் யோகேஸ்வரி. முத்தாய்ப்பாக 2017-ல் நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் தங்கம் வென்றார் யோகேஸ்வரி.
நேபாளத்தில் ஆசிய நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற சர்வதேசப் போட்டியில் அவர் சூடிய தங்கம், தற்போது உலகம் முழுவதிலும் இருந்து 108 நாடுகள் கலந்துகொள்ளும் சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் கலந்துகொள்ளும் வாய்ப்பை அளித்திருக்கிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து தேர்வான ஒரே பெண் யோகேஸ்வரி மட்டுமே.
சர்வதேசப் போட்டியில் 12- 14 வயது பிரிவில் 40 கிலோ எடைப்பிரிவில் தேர்வாகியுள்ளார் யோகேஸ்வரி. இவருடன் 6 மாணவர்கள் தமிழகம் சார்பில் கலந்துகொள்கின்றனர்.
அதேபோல வெவ்வேறு வயதினருக்கு நடைபெறும் குத்துச்சண்டை போட்டிகளுக்கு இந்தியா சார்பில் 25 பேர் தேர்வாகியுள்ளனர்.
யோகேஸ்வரியின் குடும்பம்
யோகேஸ்வரியின் அப்பா மதுப்பழக்கத்துக்கு தன்னை அடிமையாக்கிக் கொண்டவர். 'அம்மா' உணவகத்தில் வேலை பார்க்கிறார் தாய். தனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தில் அவர்தான் குடும்பத்தை நடத்தி, மகளையும் போட்டிகளுக்கு அனுப்பி வைக்கிறார்.
இதுகுறித்துப் பேசிய உலகளாவிய குத்துச்சண்டை கூட்டமைப்பின் இந்திய தலைவரும் யோகேஸ்வரியின் பயிற்சியாளருமான லோகேஷ், ''இப்போட்டியில் கலந்துகொள்ள யோகேஸ்வரிக்கு ரூ.80 ஆயிரம் தேவைப்படுகிறது. வறுமையான பின்னணியிலும் திறமையாக விளையாடி, அசகாய வெற்றிகளைப் பெற்றவர் யோகேஸ்வரி. அவரின் குடும்ப சூழல் குறித்து நன்கு அறிந்தவன் நான். அதனால் யோகேஸ்வரிக்காக நானும் பல்வேறு இடங்களில் ஸ்பான்சர் கேட்டு வருகிறேன்.
இந்நிலையில் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் மட்டும் யோகேஸ்வரி தங்கம் வென்றுவிட்டால், தன்னை நிரூபிக்க அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைக்கும். குறிப்பாக விளையாட்டுப் பிரிவினருக்கான ஒதுக்கீட்டில் அவருக்கு அரசு வேலை மற்றும் படிப்புக்கான உதவி கிடைக்க வாய்ப்புள்ளது. பல்வேறு நிறுவனங்கள் அவரை விளம்பரதாரராக நியமிக்கக் கூடும். ஒலிம்பிக்கில் இந்தியா பிரிவில் அவர் தேர்ந்தெடுக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.
சர்வதேச குத்துச் சண்டைப் போட்டி விவரம்
நடைபெறும் தேதி: மார்ச் 12 - 22, 2018.
இடம்: நிமிபுத்ரா தேசிய அரங்கம், பேங்காக், தாய்லாந்து.
போட்டிக்கான கட்டணம்: ரூ.25,000 (சர்வதேச விளையாட்டுக்கான அனுமதிச் சீட்டு, அடையாள அட்டை, மாணவர்களுக்கான சீருடை)
தங்கும் இடத்துக்கான கட்டணம்: ரூ.20,000 (10 நாட்களுக்கு)
உணவு: ரூ.10,000 (10 நாட்களுக்கு)
பயணக் கட்டணம்: ரூ.25,000 (போய், வருவதற்கு)
மொத்தம்: ரூ.80,000.
கட்டணம் கட்டுவதற்கான கடைசித் தேதி: 20 ஜனவரி, 2018.
யோகேஸ்வரியின் வாழ்க்கையையே மாற்றியமைக்கும் இப்போட்டியில் அவர் கலந்துகொள்ள, உதவும் வாய்ப்பும் மனமும் கொண்ட நல்லுள்ளங்களுக்காகக் காத்திருக்கிறோம்'' என்கிறார் லோகேஷ்.
யோகேஸ்வரி தாயாரின் தொடர்பு எண்: 9003045167.