Published : 19 Jan 2018 08:18 PM
Last Updated : 19 Jan 2018 08:18 PM

யானைகளின் வருகை 120: ரொனோல்டா, ரிவால்டோ, ரீட்டா...!

அத்தியாயம் 78-ல் 'யானைகளின் தும்பிக்கையில் ஏற்றப்பட்ட தார்த்தீ' அனுபவத்தை பத்திரிகை புகைப்படக் கலைஞர் மதிமாறன் கூறியதை கேட்டதை கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்வோம். அதில், 'முதுமலை அருகே ரிவால்ட்டோன்னு ஒரு யானை இருக்கு. இதற்கு தும்பிக்கை ஐந்தாறு அங்குலம் இல்லை. முனையுடன் தும்பிக்கை இல்லாததால் அதால எந்தப் பொருளையும் எடுத்து சாப்பிட முடியலை. அதனால ஜனங்களே அதுக்கு கையால் தீனி கொடுத்து வர்றாங்க. அதுக்கேத்த மாதிரி ஜனங்க கூட அதுவும் பழகிடுச்சு. அது கூட மனிதர்கள் வைத்த தார்த்தீயால்தான் கருகியிருக்கும்!' என கூறியிருந்ததை சற்றே நினைவுக்கு கொண்டு வாருங்கள்.

அந்த யானையுடன் நாம் முதுமலையிலிருந்து விடைபெற்று அடுத்த வனச் சரணாலயமான ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குள் (முந்தைய பெயர் இந்திரா காந்தி வன உயிரின உய்விடம்) செல்வோம்.

நீங்கள் கூடலூர், மைசூர்- பெங்களூர் சாலையில் மற்றும் முதுமலை, மசினக்குடி, மாவனல்லா, ஆனைகட்டி, வாழைத்தோட்டம், சீகூர் வனப்பகுதிகளில் எங்காவது போக நேரிட்டால் எங்காவது சாலையோரம் பரிதாபமாக ஒரு கொம்புள்ள ஓர் ஆண் யானை நின்றிருந்தால், அதற்கு யாராவது வாழைப்பழம், பலாப்பழம் போன்ற உணவுப்பொருட்களை வாய் வரை கொண்டு போய் கொடுத்துக் கொண்டிருந்தால் அது நிச்சயம் இந்த ரிவோல்டா யானையாகத்தான் இருக்கும் என்பதை உணருங்கள். இந்த ரிவால்டோவின் ஃபிளாஷ்பேக் மிகவும் பரிதாபத்திற்குரியது.

கூடலூர் மாவனல்லா சீகூர் வனப்பகுதியில் வாழைத்தோட்டம் அருகே உள்ளது சேடாபட்டி. இங்கே வசித்த இயற்கை ஆர்வலர் ஒருவர் 13 ஏக்கரில் மரங்கள் நிறைந்த தோட்டம் ஒன்றை வைத்திருந்தார். அபரிமித வசதிக்காரர். அந்த ஆர்வலருக்கு குடும்பம், குழந்தை- குட்டி எதுவும் இல்லை. தான் தனித்திருந்த சதா சர்வகாலமும் சுருட்டு. கஞ்சா, மது என்று வாழ்ந்தார். அதே சமயம் இவர் நிலத்திற்கு வரும் வனவிலங்குகள் மேல் அபரிமித பற்று வைத்திருந்தார். அவற்றுக்கு தன்னால் என்ன உணவு இடமுடியுமோ அதை இட்டு வந்தார்.

அதிலும் வலசைப்பாதை தன் நிலத்தின் அருகில் இருப்பதால் அவ்வழி செல்லும் காட்டு யானைகள் மீது அபரிமித பாசம். தன் தோட்டத்திற்குள் வரும் யானைகளுக்கு வேண்டிய புல், வாழை, பலா என்று வைப்பார். முக்கியமாக அவற்றுக்கு ஒவ்வொரு மரத்தடியிலும் நான்கைந்து தர்பூசணி மற்றும் பலாப்பழத்தை போட்டு வைப்பதும், அவற்றை விரும்பி வந்து உண்ணும் யானைகளை கண்டு ரசிப்பதும் அவர் 'ஹாபி' யாகவே ஆக்கி விட்டார்.

இரவு நேரங்களில் மட்டுமல்ல; பகல் பொழுதிலும் அங்கு யானைகள் வருவதும், இவர் அளிக்கும் தர்பூசணி மற்றும் பலாப்பழத்தை சாப்பிட்டு அருகில் உள்ள தண்ணித்தொட்டியில் நீர் அருந்திவிட்டு இவரை நன்றிப் பெருக்குடன் அவை பார்த்துச் செல்வதும் அன்றாட நிகழ்வு ஆகிவிட்டது. சரி, இந்த அற்புதக் காட்சியை பார்க்க அவர் தோட்டத்திற்குள் யாராவது நுழைய முடியுமா? என்றால் அதுதான் இல்லை. ஒற்றை ஆளை உள்ளே விடமாட்டார். அடித்து விரட்டி விடுவார்.

பல்வேறு சுவை மிகுந்த தீவனங்களை சாப்பிட்டு பழகி, நட்புக்குரியதாகி விட்ட அந்த யானைகளுக்கு அந்த தோட்டத்துக்காரரே பெயர் வைத்தார். 'ரொனோல்டா, ரிவால்டோ, ரீட்டா...!' இப்படி. ஒருநாள் ரிவால்டோ மட்டும் தர்பூசணியை தும்பிக்கையால் உருட்டி மேலேற்றி சாப்பிட முடியாமல் தவித்தது. புல்லுக்கட்டை உதறி எடுக்க இயலவில்லை. உற்றுப்பார்த்த பிறகுதான் தெரிந்தது. அதன் தும்பிக்கை நிலத்தில் முட்டவில்லை. சுமார் 9 அங்குல நீளத்திற்கு அதன் முனை வெட்டுப்பட்டு காணாமல் போய் ரத்தம் சொட்டிக் கொண்டிருந்தது. அது எப்படி? விளங்கவில்லை.

அது சாப்பிட அவதிப்படுவதைப் பார்த்து தர்பூசணியை பெரிய கம்பில் கட்டி அதன் வாயிற்கருகில் கொடுத்தார் தோட்டக்காரர். இயன்ற அளவு சிரமப்பட்டு சாப்பிட்டது. அப்படியே அடுத்தடுத்த நாட்கள் வரும்போதெல்லாம் தீவனம் கொடுக்கப்பட்டது. அதுவும் சாப்பிட்டது.

ஒரு நாள் தும்பிக்கைக்கு கீழே நன்றாகவே சீழ்பிடித்து விட்டது. பிறகுதான் விபரீதத்தை உணர்ந்தார் ஆர்வலர். பக்கத்தில் தனக்கு தெரிந்த கால்நடை மருத்துவரை அழைத்தார். அந்த மருத்துவருக்கு காட்டு யானைகளுக்கும் சிகிச்சையளித்த அனுபவம் இருந்தது. எனவே அதற்கு கிட்டவே போய் தீவனங்கள் கொடுத்தார். சில நாட்களில் அது பழகிப்போக சில சிகிச்சைகள் செய்தார். வனத்துறைக்கும் தகவல் கொடுத்தார்.

அவர்களும் வந்து அதன் தும்பிக்கை புண் 'செப்டிக்' ஆகாமல் இருக்க மாத்திரைகள் அளித்தார்கள். அதைச் சாப்பிட்ட சில நாட்களில் ரிவால்டோவிற்கு புண் சரியாகி விட்டது. ஆனால் எந்த உணவுப்பொருளையும் தன் துதிக்கையால் எடுத்து சாப்பிட இயலவில்லை.

ஒரு காட்டு யானை ஒரு கட்டு புல்லை உதறி எடுத்து தும்பிக்கையில் சுருட்டி அதன் வாய்க்குக் கொண்டு போக சராசரியாக அரை நிமிடமே எடுத்துக் கொள்ளும் என்றால் இது இரையை தும்பிக்கையில் எடுத்து உருட்டி தன் முன்னங்கால்களில் முட்டவைத்து மேலேற்றி வாய்க்கு கொண்டு போக ஐந்து நிமிடத்திற்கு மேல் ஆகிவிடும்.

அது படும் சிரமத்தைப் பார்த்து அந்த தோட்டத்துக்காரரும், கால்நடை மருத்துவரும் தீவனத்தை கம்பால் கட்டியும், கையால் எடுத்தும் ஊட்டியே விட்டனர். அந்த அளவுக்கு பழகிப்போன ரிவால்டோ திடீரென்று அங்கே வரவில்லை. ஒருவார காலம் காணாமல் போனது.

கால்நடை மருத்துவருக்கும் ஆச்சர்யம். 'அது நிச்சயம் காடுகளில் சுற்றி தீவனத்தை தானே எடுத்து தின்ன பழகியிருக்கும்!' என்றே நம்பினர். பிறகு பார்த்தால் ஒரு நாள் அங்கே வந்து நின்றது. மறுபடி வாரக்கணக்கில் காணாமல் போனது.

அது வரும் நாளில் வழக்கம் போல் தீவனம் வைத்த இவர்கள், மற்ற நாட்களில் அது எங்கே போகிறது என்று ஆராய்ந்து பார்த்ததில்தான் ஒரு வனத்துறை வாட்ச்சர் ஒருவரிடம் அது பழகி விட்டதையும், அவர் அதை வைத்து சுற்றுலா பயணிகளிடம் பழ வகைகளை வாங்கிக் கொடுத்து வருவதும், அவர்களை நிறுத்தி புகைப்படங்கள் எடுத்து அளிப்பதும், அதில் வருமானம் பார்ப்பதுமாக இருப்பதையும் கவனித்தனர்.

அந்த வாட்ச்சர் இதை வைத்தே நிறைய பணம் சம்பாதித்துவிட்டார். இன்னொரு வன ஊழியர் பார்த்தார். அவரும் ரிவால்டோவை 'அப்படியே' பயன்படுத்த ஆரம்பித்தார். தொடர்ந்து இன்னொரு ஆதிவாசியும் பங்குக்கு வந்தார். இவர்களுக்குள் இதை கொண்டாடுவதில் போட்டி. டைம் டேபிள் போட்டு வைத்து ரிவால்டோவை பயன்படுத்த அதிலும் வந்தது வினை.

ஒரு நாள் இரண்டு பேருக்கான சண்டையில் ஒருவன் ஒரு குழியில் விழுந்து இறந்துவிட்டான். அவனை இந்த 'ரிவால்டோ' தான் கொன்றது என்ற புரளியும் கிளம்பியது. அதில் இழப்பீடு வாங்கவும் பரிந்துரை போனது. இதில் பசிக் கொடுமையால் அவதிப்பட்டது ரிவால்டோதான்.

பசியெடுத்தால் போதும் சாலையோரம் ரிவால்டோ வந்து நின்றுவிடும். யாராவது வருவார்களா; ஏதவாது தருவார்களா? என்று ஏக்கமாய் ஏங்கும் அதன் விழிகள். அது அடிக்கடி ஊருக்குள் வந்து நின்று விடுவதால் மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். அதிலும் பள்ளி செல்லும் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோர் ரொம்பவுமே அச்சப்பட்டனர். அதன் எதிரொலி.

'ஏற்கெனவே ஒருவரைக் கொன்றுவிட்டது இந்த ரிவால்டோ. அது எங்களையும் பதம் பார்க்காமல் விடாது. எங்கள் குழந்தைகள் பள்ளி செல்லவே பயமாக இருக்கிறது' என்றெல்லாம் கோரிக்கை வைத்தனர். இதை சில இயற்கை ஆர்வலர்கள் வழிமொழிந்தனர்.

'இல்லையில்லை. இந்த ரிவால்டோ அப்பிராணி. யாருக்கும் தீது செய்யாது...!' என மற்றொரு தரப்பினர் எதிர்க்குரல் கொடுத்தனர்.

இதற்கிடையே ரிவால்டோவுக்கு பெயர் வைத்த அந்த தோட்டத்துக்காரர் சர்க்கரை நோயாளியால் அவதிப்பட்டு, கவனிப்பாரின்றி இறந்துவிட்டார். அந்த தோட்டத்தின் வாரிசு வந்து, 'ஒரு மனுசன் இப்படியுமா இடத்தை வச்சிருப்பான்?' என்று திட்டியபடியே சுத்தப்படுத்தி மராமத்து வேலைகளை செய்து விட்டார். அதற்குப் பிறகு ரிவால்டோ மற்ற யானைகளுடன் அவ்வப்போது அங்கே போய்ப் பார்க்கும்.

முன்பு போலவே அந்த தோட்டக்காரர் தனக்கு தர்பூசணி, பலாப்பழம் ஊட்டி விடுவாரா? என்று எதிர்பார்ப்பது போல் நாட்கணக்கில் நிற்கும். எதுவும் கிடைக்காது. திரும்பவும் சாலை ஓரங்களில் வந்து நிற்கும். யாராவது ஏதாவது கொடுப்பார்களா என்று ஏக்கத்துடன் காத்திருக்கும்.

அந்தக் காத்திருப்பு சிலருக்கு பீதியையும், சிலருக்கு அனுதாபத்தையும், சிலருக்கு வருமானத்தையும் தந்து கொண்டே இருப்பதாக சொல்கிறார்கள் இந்த ரிவால்டோ சுற்றித்திரியும் பகுதிக்காரர்கள். பலர் தங்கள் வீடுகளில் ரிவால்டோவை தன்னுடன் சேர்த்து புகைப்படம் எடுத்து மாட்டி வைத்திருக்கிறார்கள். காட்டில் திரிந்த வீரப்பனை சில மலைகிராமத்தினர் வீட்டில் புகைப்படமாக மாட்டியிருந்தது போல் நாட்டில் நடமாடும் இந்த ரிவால்டோவையும் தன்னுடன் நிறுத்தி புகைப்படம் எடுத்து மாட்டும் பாசம் நம் மனிதர்களைத் தவிர யாருக்குத்தான் வாய்க்கும்? இந்த மனிதர்கள்தான் இந்த ரிவோல்டாவை இந்த கதிக்கு ஆளாக்கினார்கள் என்பது அந்த யானையுடன் புகைப்படம் எடுத்து பிரேம் போட்டு வைத்துக்கொள்ளும் மனிதர்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x