Published : 10 Jan 2018 03:02 PM
Last Updated : 10 Jan 2018 03:02 PM

யானைகளின் வருகை 115: நான்கு முறை கரடிக் கடி; ஞானதிலகத்தின் வேதனைக் கதை

கரடியால் நான்காவது முறையாக கடிபட்ட அனுபவத்தை ஞானதிலகமே தன் கூற்றாக சொல்கிறார் கேளுங்கள்:

''துணியை அலசி எடுத்துட்டிருந்தேன். அப்போ, பின்பக்கமாக வந்த உருவம் என்னை கட்டிப்பிடிச்சது. அதோடு மனிதர்களைப் போலவே வாயையும் பொத்தியது. அதன் கைகளைப் பார்த்தவுடனே கரடிதான் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. கத்த முற்பட்டேன். ஆனால் அது வாயைப் பொத்தியபடியே தலையோடு இழுத்துச் சென்றது. அப்படி இப்படி உதறிவிட்டு நான் சத்தம் போட்டேன். எனது சத்தம் கேட்டு எம் புருஷனும், அக்கம்பக்கத்தில் இருந்தவங்களும் ஓடியாந்தாங்க. சத்தம் போட்டும், தடியால் அடித்தும் கரடியை விரட்டினார்கள். இதற்கு பிறகு நான்கைந்து மாசம் ஆஸ்பத்திரியில்தான் இருந்தேன். அந்த அளவுக்கு என் உடம்பெல்லாம் கரடி பிறாண்டியதில் காயம். உடல் பாதிப்பு. இப்ப என்னால் வேலையே செய்ய முடியலை. எங்கே எதைப் பார்த்தாலும் கரடி நிற்கிற மாதிரியே தெரியுது. எனக்கும் எம் புருஷனுக்கும் உரிய இழப்பீட்டைக் கொடுத்தா போதும். நாங்க ஊரை விட்டே போய் எங்காவது பொழைச்சுக்குவோம். ஏன் அந்த கரடி என்னையே குறிவச்சு வந்து தாக்குதுன்னே தெரியலை. அதைப் புடிச்சு கூண்டுல அடைக்கச் சொல்லியும் பார்த்துட்டோம். இதுவரை எதுவும் செய்யலை அதிகாரிங்க!'' என்றார் கண்ணீருடன்.

ஞானதிலகத்தின் கண்ணீர்க் கதையை இந்த சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ளவர்கள் அத்தனை பேரும் அறிந்துள்ளார்கள்.

''கரடிகிட்ட ஞானதிலகம் போலவே நிறைய பேர் சிக்கியிருக்கிறோம். ஆனா அவரைப் போல நிறைய தடவை நாங்க மாட்டினதில்லை. தொடர்ந்து ஆட்களைக் கடிக்கும் கரடிகளைப் பிடிச்சு கூண்டுல அடைக்கவும், கரடியால் கடிபட்ட ஞானதிலகத்திற்கு இழப்பீடு வழங்கவும் பல முறை போராட்டம் செஞ்சுட்டோம். இதுவரை எதுவும் நடக்கவில்லை. ஒரே ஒரு முறை கரடியைப் பிடிக்க வனத்துறையில் முயற்சி செஞ்சாங்க. கரடி இதுவரை அகப்படவேயில்லை!'' என்றனர் பொதுமக்கள்.

இதேபோல் கோத்தகிரி பக்கமுள்ள ஜக்கனாரை தொத்தமுக்கை கிராமத்தைச் சேர்ந்த தேயிலைத் தொழிலாளி ஆலன் (வயது 55), அவருடைய மனைவி மாதி (வயது 50) ஆகிய இருவரும் கரடி கடித்துதான் இறந்தனர். இந்த சம்பவம் 2015 மார்ச் 26-ம் தேதி நடந்தது. இருப்புக்கல் கிராமத்தில் 30 வயது குமாரை கரடி கடித்தது. அவர் படுகாயமுற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தார்.

பிறகு மக்கள் போராட்டம் செய்ய, அந்தக் கரடியைப் பிடிக்க வனத்துறையினர் முயற்சி செய்தனர். அதைப் பிடிக்க சரியான தொழில்நுட்பம் பயன்படுத்தாததால், கரடியைப் பிடிக்க முயற்சி செய்த போது வனத்துறை ஊழியர்கள் ஸ்டேன்லி, (வயது 52), கருணாமூர்த்தி (வயது 56) மற்றும் சிறப்புக் காவல் படையைச் சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரை கரடி கடித்துக் குதறியது. இதனால் இந்தக் கரடியைத் துப்பாக்கியால் மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முயற்சி எடுக்கப்பட்டது. மயக்க ஊசியால் சுடப்பட்ட கரடி 50 அடி தொலைவில் சென்று மயங்கி விழுந்தது. அதை கூண்டில் ஏற்றி முதுமலை சீகூர் வனப்பகுதியில் விட்டனர் வனத்துறையினர். அதோடு கரடி தொல்லை விட்டதா என்றால் இல்லை. இதேபகுதியில் வனத்தில் விடப்பட்ட கரடியின் குட்டிகள் மக்களை பாடாய்ப் படுத்த ஆரம்பித்தது.

அது மட்டுமல்ல, கோத்தகிரி கன்னேறிமூக்கு பகுதியிலும் ஒரு கரடி தற்போதும் மக்களை அச்சத்தில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது. இந்த கரடிகள் மட்டுமல்ல, இங்கே யானைகள், சிறுத்தைகள், காட்டு மாடுகள் சுற்றுவதும் மிக அதிகமாகவே உள்ளன.

இவை எல்லாம் 20 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதிக்குள்ளேயே வராதவை. அபூர்வமாய் வந்தாலும் மனித வாசம் கண்டாலே ஓடிப்போகிற தன்மையில்தான் இருந்திருக்கின்றன.

''அந்த அளவுக்கு அவை வாழும் காடுகள் அழிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான தீவனங்கள் அங்கே விளைவதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இப்போதெல்லாம் முப்பது வருடங்களுக்கு முன்பு நடப்பட்டு, தொடர்ந்து பலன் கொடுத்துக் கொண்டிருக்கும் தென்னை மரங்களை கூட தற்போது யானைகள் வந்து முட்டி சாய்த்துவிடுகின்றன. அந்த மரத்தின் குருத்துகளை மட்டும் தின்றுவிட்டுச் செல்கின்றன. அதனுடைய வாய் பெரிய மரங்களிலிருந்து போன வருஷம் நட்ட தென்னம் நாற்றுக்களை கூட விட்டு வைப்பதில்லை.

நீங்களே சொல்லுங்கள். யானைகள் இப்படி தொடர்ந்து வந்திருந்தால் 30 வருஷத்துக்கு முந்தி நாங்கள் நட்ட தென்னை மரங்களை இவ்வளவு காலம் விட்டு வைத்திருக்குமா? இப்போது மட்டும் அதை முட்டிச் சாய்த்து உண்ண அதற்கு என்னதான் காரணம்? அதை எப்போதாவது யோசித்து செயல்படுகிறார்களா வனத்துறையினர். எனக்குத் தெரிந்து சிங்காரா ரேஞ்சில் மட்டும் 23 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் உள்ளன. அதில் 90 சதவீதம் உண்ணிச் செடிகளும், அதன் முட்களும்தான் நிறைந்து கிடக்கின்றன. அதற்குள் நாய், நரி, மான் கூட போக முடியாத அளவு புதர் மண்டிக்கிடக்கிறது.

அவை எல்லாம் 20 வருஷத்துக்கு முந்தி மூங்கில் காடுகளாகவும், யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் சாப்பிடும் இலை, தழை, கொடிகளைக் கொண்டதாகவும் இருந்தன. ஊருக்குள் வந்து இது காடு, காட்டை விட்டு வெளியேறு என தொடர்ந்து புதுசு, புதுசா சட்டங்களையும், விதிமுறைகளையும் காட்டி விரட்டும் வனத்துறையினர் எப்போதாவது காடுகளுக்குள் செல்கிறார்களா? அந்த காட்டில் இருக்க வேண்டிய தாவரங்களை உள்ளது உள்ளபடியே கண்காணித்து வளர்க்கிறார்களா? அது இல்லாத போது யானை என்ன பூனை என்ன சிறுத்தை புலி என்ன எல்லாம் ஊருக்குள் வரத்தானே செய்யும்?'' என்கிறார் மசினக்குடியை சேர்ந்த விவசாயி வர்க்கீஸ்.

வாளையாறு முதல் சிறுமுகை, பர்லியாறு வரையிலான யானைகளின் வலசையில் யானை மனித மோதல்களைப் பற்றியே அதிகமாக பகிர்ந்து கொண்டோம். ஆனால் யானைகளின் புகலிடமான முதுமலை, முத்தங்கா, பந்திப்பூர் சரணாலயப் பகுதியில் யானைகள் குறித்துப் பேசியதை விட, 'அதற்குரிய நிலங்கள் யாரிடம் இருக்கின்றன. அதன் இயல்பாக இருக்கும் காடுகளின் நிலை என்ன. அதில் யானையை போலவே வசிக்க வேண்டிய விலங்குகளான புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், காட்டுமாடு, மான், கடமான் போன்றவைகளின் கதி என்ன. இந்த விலங்குகளுடன் இரண்டற கலந்து காலம் காலமாக வாழ்ந்த மக்கள், இந்த சுழற்சியில் தீது ஏற்பட்டதால் என்ன பாடுபடுகிறார்கள்?' என்பது பற்றியே நிறைய பேசியிருக்கிறோம். பேசிக் கொண்டேயிருக்கிறோம்.

எதற்காக இவற்றைப் பற்றிப் பேச வேண்டும்; இந்த அளவு அடர்த்தி செறிவாக ஏன் தெரிந்து கொள்ள வேண்டும். காரணம் நிறைய இருக்கிறது. எப்படி?

மண்ணிலிருக்கும் கண்ணுக்கு தெரியாத நுண்ணுயிரிகளின் சுவாசம்தான் மனித குலத்தின் உயிர்ப் பொருளுக்கு சுழற்சிப் பொருளாக இருக்கிறது என்பதே விஞ்ஞானம். அப்படியிருக்கும்போது காடுகளுக்குள் இருக்கும் சிறு விலங்குகளின் நகர்வுகள் என்பது பெரிய விலங்கான யானைகளுக்கு எந்த ரீதியிலான சாதக பாதகத்தை ஏற்படுத்தும் என்பதையும் இந்த இடத்தில் நாம் உணர வேண்டும். யானையின் மூலமாகத்தான் பூமி உயிர்ச்சங்கிலியின் பிரம்மாண்டம் உணர முடியும்; அதன் மூலம்தான் மனிதகுலத்திற்கு நேரவுள்ள அபாயத்தையும் அறிந்து கொள்ள இயலும்.

யானை இருக்கும் இடம்; யானைகள் நகரும் இடம் நீர் நிரம்பியதாக இருக்கும். பூமி ஈரம் என்பது எட்டிப் பிடித்த மாதிரியாக இருக்கும். அதில் சிறு செடி முதல் பிரம்மாண்ட மரங்கள் வரை செழித்து வளரக்கூடியதாக இருக்கும். சூரியன் எப்படி அதன் குடும்பத்திற்கே வெளிச்சத்தின் சுழற்சியோ, சக்தியின் சுவாசமாக விளங்குகிறதோ, யானைகள் என்பது தட்பவெப்ப நிலையின் மானி என்றே கொள்ளலாம். அதுதான் சூழலியலின் உண்மை உணர்த்தும் கடிகாரம் என்று சொன்னால் கூட அது மிகையாகாது.

யானைகள் சாகிறது என்றால் அந்த இடத்தில் உயிர்ப்பொருள் குறைகிறது என்று அர்த்தம். யானைகள் கொத்துக் கொத்தாக இறக்கிறது என்றால் நிச்சயமாக அந்த இடம் மோசமானதொரு பவுதீக சூழலை ஏற்படுத்தப்போகிறது என்றும் உணர வேண்டும். அதிலிருந்தே மற்ற வன உயிரிகளின் சுழற்சியும், சுவாசமும் நகர வேண்டியிருக்கிறது என்பதற்காகவே காட்டுப்பூனை முதல் காட்டுப்பன்றி வரை இங்கே விவரித்து செல்ல வேண்டியதாக உள்ளது.

இந்த இடத்தில் யானைகளின் வலசை என்பதிலேயே பலருக்கு சந்தேகம் உள்ளது. அது யாருக்கும் வரலாம். ஆனால் யானைகளின் வலசை மற்றும் புகலிடங்களை கட்டிக் காக்கும் வனத்துறையினருக்கும், அந்த வலசை, புகலிடங்களை ஒட்டி வசிக்கும் கிராம மக்களுக்கும் வரலாமா? இதோ அதுவும் வந்தது. எங்கே? சரணாலய விஸ்தரிப்புக்கு எதிராக 1997-ல் புரட்சி நடந்த, 2008-ல் புலிகள் காப்பகத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடந்த, அதே மசினக்குடி கிராமங்களிலேயேதான் 2010-ம் ஆண்டு இதுவும் புறப்பட்டது.

பொக்காபுரம், மாயார், மாவனல்லா, வாழைத்தோட்டம் போன்ற 2009-ம் ஆண்டு தொடங்கி சில மாதங்களாகவே வனத்துறையினர் திடீர், திடீர் என்று உள்ளே நுழைவதும், நிலங்களை சர்வே செய்வதும், 'இந்த இடங்கள் எல்லாம் யானைகளின் வழித்தடங்கள். நீங்கள் இந்த இடங்களை விரைவில் காலி செய்ய வேண்டி வரும்!' என்று எச்சரிப்பதுமாக இருந்தனர்.

இது வழக்கமான பயமுறுத்தல்தான் என்று எண்ணிய மக்கள் வாளாவிருக்க, இது தொடர்பாக புதிய யானை வழித்தடங்களை பற்றிய ஓர் அறிக்கையையும், அதற்கான வரைபடத்தையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருப்பதாகவும் தகவல் கிடைக்கவும்தான் முன்பை விடவும் கொந்தளித்துவிட்டனர் மக்கள். மூலைக்கு மூலை போராட்டங்கள், மறியல்கள், ஆர்ப்பாட்டங்கள் என புறப்பட்டும் விட்டனர்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x