Published : 02 Jan 2018 07:55 PM
Last Updated : 02 Jan 2018 07:55 PM

யானைகளின் வருகை 110: மாஸ்டர் பிளான் ஊட்டி; ஊர்வலமாய் காட்டு மாடுகள்

இந்த விஷயம் அப்போது சூழலுக்கு எதிரான பெரிய விஷயமாக நீலகிரி முழுவதும் மட்டுமல்ல, தமிழகத்தின் பிற பகுதியில் கூட வெகுவாக பேசப்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு இது போன்ற விஷயங்கள் ஒழுங்கமைவுக்கு வந்ததா என்றால் அதுதான் இல்லை. ஊட்டிக்கு ஹெலிகாப்டரில் வந்து இறங்கி கோடநாடு சென்று வந்த ஜெயலலிதாவிற்காக, கோடநாடு எஸ்டேட்டிலேயே ஹெலிகாப்டர் இறங்கும் தளம் அமைக்கப்பட்டது. அங்கே விதிமுறைகள் மீறி 5 அடுக்கு மாடிக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டன. பளிங்கு போன்ற சாலைகள் ஏற்படுத்தப்பட்டன.

''சரி, அவராவது முதல்வர். அவருக்காக - அவரை குஷிப்படுத்துவதற்காக அதிகாரிகள் விதிமுறை மீறுகிறார்கள், அல்லது விதிமுறைகளை மாற்றி அமைத்துக்கொள்கிறார்கள். கோவையில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் அமைந்திருக்கும் ஆன்மீக மையம் ஒன்று சமீபத்தில்தான் தன் இருப்பிடத்தில் ஹெலிகாப்டர் தளம் அமைத்துள்ளது. அதில் கிளைடர் போன்ற குட்டி விமானங்களும் பறக்க விடப்படுவதாக தகவல் வருகிறது. வனத்துறையினர் அதை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனால் எல்லாம் இம்சையுறும் விலங்குகள் ஊருக்குள் வராமல் என்ன செய்யும். மக்களை பாடாய்படுத்தாமல் என்ன செய்யும்?''

என்று வேதனை தெரிவிக்கும் வன உயிரின ஆராய்ச்சியாளர்கள், ''இதுபோன்ற விஷயங்கள் இனி வனப்பகுதிகளில் அதிகரிக்கவே செய்யும். ஏனென்றால் தற்போது பிரமாண்ட பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், ஆன்மீக மையங்கள், மருத்துவமனைகள் கூட பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளை ஒட்டியும், அதற்குள்ளும்தான் அமைக்கப்பட்டு வருகிறது. அதை அமைப்பவர்கள் எல்லாமே அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக ஆளும் அரசாங்கத்தையே ஆட்டுவிப்பவர்கள். அவர்கள் எல்லாம் அவரவர் இடங்களில் ஒரு ஹெலிகாப்டர் தளம் அமைக்காமல் விடுவார்களா? அதில் நிறுத்த ஒரு ஹெலிகாப்டரை வாங்காமல்தான் இருப்பார்களா?'' என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

நீலகிரியின் அழகையும், அதன் இயற்கை அற்புதத்தையும் சிறிதும் சேதப்படுத்தக்கூடாது என்பதில் ஆரம்ப காலங்களில் அக்கறை கொண்டிருந்தவர்தான் ஜெயலலிதா. அவர் ஆட்சிக் காலத்தில்தான் 7 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் நீலகிரியில் எழுப்பக்கூடாது என்ற சட்டத்தை 1993-ல் அமல்படுத்தினார்.

நீலகிரி மாவட்டம், நிலநடுக்கப் பட்டியலில் உள்ளதாலும், மழைக் காலங்களில் அடிக்கடி நிலச்சரிவு அபாயங்கள் ஏற்படுவதாலும், 'இப் பகுதியில் கட்டப்படும் கட்டிடங்கள் முறையான திட்டத்தின் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட வேண்டும்' என்பது, ஆங்கிலேயர் காலத்திலேயே வலியுறுத்தப்பட்ட விதிமுறையாகவே இருந்துள்ளது.

இம்மாவட்டத்தில் 1949-ல் புவியியல்துறை நடத்திய ஆய்வு 'நிலச்சரிவு, மண்சரிவு, நிலநடுக்கப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடப்பது, பெரும் அபாயத்துக்கு வழிவகுக்கும்; பல உயிர் பலிகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது' என்பதை உறுதிபட தெரிவித்தது. இந்த ஆய்வை மீறி பிரம்மாண்ட கட்டிடங்கள் எழுப்பியதாலும், சாலைகள், கட்டுமானப் பணிகள் மேற்கொண்டதாலும் கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் பெரிய நிலச்சரிவுகள் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ளன. 500 வீடுகளுக்கு மேல் மண்ணில் புதைந்துள்ளன. 115 பேருக்கும் மேல் மண்ணிற்குள் சிக்கி உயிரோடு சமாதியாகியுள்ளனர். இந்த விஷயம் 2009-ம் ஆண்டு புவியியல் துறை நடத்திய ஆய்வின் போது தெரியவந்தது. இதற்கு முன்புதான் 1993ல் 'மாஸ்டர் பிளான் சட்டம்' ஜெயலலிதாவால் கொண்டு வரப்பட்டது. மலைப்பகுதிகளில் 7 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டிடங்கள் கட்டக்கூடாது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளம் மற்றும் புவியியல் துறை உள்ளிட்ட பல்வேறு துறையிடம் தடையில்லாச் சான்று பெற வேண்டும் போன்ற விதிமுறைகள் எல்லாம் வகுக்கப்பட்டன.

ஆனால், இந்த சட்டத்தை பணம் படைத்தவர்கள் முறைகேடாகப் பயன்படுத்தி, ஊட்டி, மசினகுடி, கூடலுார், குன்னுார், கோத்தகிரி, மஞ்சூர் ஆகிய பகுதிகளில் விதிமுறையை மீறிய கட்டிடங்கள் அதிகளவில் கட்டப்பட்டன. சிலர், இங்கு கட்டப்படும் குடியிருப்புகளை வெளி மாநில அல்லது சமவெளி பகுதிகளை சேர்ந்தவர்களுக்கு விற்று விடுகின்றனர். இதனால், விதிமீறல் களும் கட்டிடங்களை வாங்கும் பலர் பிற்காலங்களில் வரும் பிரச்சினைகளில் சிக்கி அவதிப்படுகின்றனர்.

மலை மாவட்டத்தில் விதிமீறிய கட்டிடங்கள் அதிகரித்து வந்ததால், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் பல்வேறு வழக்குகள் தொடரபட்டன. கோர்ட்டுகளின் உத்தரவின்படி, விதிமுறைகளை மீறியும், அனுமதியின்றியும் கட்டப்பட்ட கட்டிடங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. ஆனால் அதற்கு பலரும் தடை உத்தரவு பெற்றனர். வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இப்படிப்பட்ட கட்டிடங்கள் உருவாவதை மாவட்ட நிர்வாகத்தால் தடுக்கவே முடியவில்லை.

ஒரு கட்டத்தில் அந்த மாஸ்டர் பிளான் சட்ட மீறல் கோடநாடு எஸ்டேட்டிலும் நடந்தது. திமுக ஆட்சியில் அது ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டு சர்ச்சைகள் கிளம்பின. இப்படியாக ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் மட்டும் சுமார் 10 ஆயிரம் கட்டிடங்களுக்கு மேல் விதிமீறலுடன் கட்டப்பட்டிருப்பதாக அதிகாரிகளே தெரிவிக்கின்றனர். அதில் கோடநாடு பங்களாக்களை போலவே பிரமாண்ட 100க்கும் மேற்பட்ட வணிக வளாகங்களும் 15 மதக்கூடங்களும் 20 கல்வி நிறுவனங்களும் அடக்கம்.

நீலகிரி மாவட்டத்தில் தற்போதைய கணக்கிற்கு கிட்டத்தட்ட பத்து லட்சம் மக்கள் வாழ்வதாக புள்ளி விவரங்கள் சொல்கின்றன. இதில் 30 சதவீதம் பேர் ஊட்டி நகரில் வசிக்கின்றனர். ஆண்டுக்கு சுமார் 30 லட்சம் பேர் இந்த மாவட்டத்திற்கு சுற்றுலா வருகிறார்கள். நீலகிரியின் மொத்த விவசாயப் பரப்பில் 80 விழுக்காடு தேயிலைத் தோட்டங்கள். 20 ஆண்டுகளுக்கு முன்பு தேயிலை விலை வீழ்ச்சி கண்டதில் பலர் காய்கறி விவசாயம், மலர் விவசாயம் என்று மாறிவிட்டனர். அதை விட நிறைய பேர் நல்ல விலைக்கு நிலத்தை விற்று விட்டு செல்கின்றனர்.

இதனால் கோடநாடு எஸ்டேட்டை சசிகலா, ஜெயலலிதா வாங்கியது போல பல்வேறு செல்வந்தர்கள் பெரிய அளவில் எஸ்டேட்டுகளை வாங்கி தங்கள் கைகளை அகல பரப்புகின்றனர். அதையெல்லாம் மீறி நூற்றுக்கணக்கான கல்குவாரிகளும் இங்கே மலையைக் குடைந்து தோண்டோ தோண்டென்று தோண்டியிருக்கிறது. பாறைகளை வெடிவைத்து தகர்த்திருக்கிறது. இதனால் எல்லாம் உதகையின் பழைய சீதோஷ்ண நிலையே மாறியிருப்பதாக தெரிவிக்கின்றனர் புவியியல் வல்லுநர்கள். குளிர்காலத்தில் கூடுதல் குளிரையும், வேனிற்காலத்தில் கூடுதல் வெப்பத்தையும் தரும் நிலையை இந்த சூழல் மாற்றம் ஏற்படுத்தியிருப்பதாக கவலை தெரிவித்து வருகிறார்கள் இயற்கை விரும்பிகள்.

ஒரு பக்கம் தேயிலைத் தோட்டங்களால் காடுகள் அழிவு. மறுபக்கம் கான்கிரீட் காடுகளால் நடக்கும் சூழல் சேதம். இப்படியே இருந்தால் வனவிலங்குகள் என்னதான் செய்யும். கூடலூர், பந்தலூர் போன்ற தாழ்நிலைப் பகுதியில் மட்டுமல்ல, குன்னூர், கோத்தகிரி, ஊட்டி போன்ற உயரமான நகரப் பகுதிகளிலும் காட்டு விலங்குகளின் உச்சத்தை தொட்டன.

அதில் ஒன்றாகத்தான் தற்போது நீலகிரியின் தேயிலைக் காடுகளில் எல்லாம் யானைகளும், சிறுத்தை, கரடிகளும் சுற்றித்திரிகின்றன. நகரப்பகுதியில் கூட எங்கே, எப்போது, எந்த வீட்டின் கதவைத் திறந்தாலும் முன்னே காட்டு மாடுகள் (INDIAN GOUR) நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அது பலரை பந்தாடி உயிரைக் குடிக்கவும் செய்து வருகிறது.

தேயிலை பறிக்கும் இடங்களில், சாலைகளில், குப்பை மேடுகளில், சுடுகாடுகளில், வார, தினசரி சந்தைகளில், பேருந்து நிலையங்களில் என அங்கிங்கெனாதபடி சுற்றித் திரிகின்ற இவை வீட்டு மாடுகளா, காட்டு மாடுகளா என்று இனம் பிரிக்க முடியாத அளவிற்கு வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருட்டில் வரும் வாகன ஓட்டிகள் சாலையில் மலை மாதிரி படுத்திருக்கும் காட்டு மாடுகள் மோதி அடிபடுவதும், தேயிலை தோட்டங்களில் தேயிலை பறிக்கும்போது பின்பக்கமாக வந்து அவை முட்டித்தள்ளுவதும் நிறைய விபத்துகளும் நடக்கின்றன.

இந்த வகையில் கடந்த ஆண்டில் மட்டும் 7 பேர் வரை இறந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். கடந்த மே 5-ம்தேதி கேத்தி பகுதியில் ரயில் தண்டவாளத்தைக் கடந்த மைதீன் (63 வயது) என்ற கூலித்தொழிலாளியை துரத்திய காட்டு மாடு முட்டித் தள்ள ஒரு பள்ளத்தில் விழுந்து அங்குள்ள மரக்கிளையை பிடித்துக்கொண்டு தொங்கினார். அதைப் பார்த்து மாடு மீண்டும் அவரை முட்டித் தள்ள எகிற, அந்தப் பள்ளத்திலேயே விழுந்து இறந்தது. மாடு முட்டிய தொழிலாளி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதற்கு 2 நாள் கழித்து தூணேறி கிராமத்தில் ருக்குமணி (60 வயது) என்பவர் காட்டு மாடு முட்டி கோவை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இதுபோன்ற சம்பவங்கள் அணையட்டி, தாந்தநாடு, மசலகல், கன்னேறி முகடு, கேர்பன், மைநிலை, கட்டபெட்டு, கொலக்கம்பை, எல்லநள்ளி, மஞ்சூர், மஞ்சக்கொம்பை, அன்னமலை, குந்தா, கெத்தை, மஞ்சன கொரை, கொள்ளிமலை, குந்தா கோத்தகிரி, காத்தாடி மட்டம், தொட்டபெட்டா, மடித்தொரை, பேரார், புடியங்கி, கெட்டி கம்பை, உயிலடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நடந்துள்ளது.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x