Published : 30 Jan 2018 01:32 PM
Last Updated : 30 Jan 2018 01:32 PM

யானைகளின் வருகை 123: காலியான வால்பாறை பின்னணி சோகம்

 

வால்பாறையில் முக்கியமாக நடுவாறு, சோலையாறு என்ற இரண்டு ஆறுகள் உள்ளன. அதில் சோலையார் அணை நிரம்பியதும், அது பரம்பிக்குளத்திற்கு வருகிறது. இந்த நீரோட்டத்தை ஒட்டிய காடுகள் எல்லாம் யானைகளுக்குரியவையே. எஸ்டேட்டுகளுக்கு 30 சதவீதம் போக மீதி நிலங்களை எல்லாம் காடுகளுக்கே விட வேண்டும் என்பது பிரிட்டீஷார் பாலிஸியாகவே இருந்தது.

இயற்கைக்கு எதிராக மனிதத் தேவைக்கு நீராதாரங்கள், மின்சாரம் போன்ற கட்டுமானங்களை உருவாக்குவது எல்லாம் காட்டு விலங்குகளுக்கும், அவற்றின் நாடியாக விளங்கும் காடுகளுக்கும் சேதமில்லாமல், இயல்பு மாறாமலே ஏற்படுத்த வேண்டும் என்பது கூட அவர்களின் திட்ட வரையாக இருந்தது. ஆனால் அதையெல்லாம் மீறியே கட்டுமானங்கள் பல உருவாக்கப்பட்டுள்ளன. கோவை காடுகளைப் போல அல்லாவிட்டாலும், நீலகிரி காடுகளைப் போல கான்கிரீட் காடுகளாக மாறாவிட்டாலும், மனிதத்தேவைக்கான மின்சாரம், நீர்த்தேவை, பாசனத்திட்டங்கள் இங்குள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், காடாம்பாறை, சோலையாறு அணைகள் மூலமாகவே உருவாக்கப்பட்டள்ளது. அதிலும் ஆசியாவிலேயே பெரிய திட்டமான பரம்பிக்குளம்- ஆழியாறு திட்டத்தின் காண்டூர் கால்வாய் எல்லாம் மலைகளை குடைந்தே அமைக்கப்பட்டிருக்கிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களை வளப்படுத்தும் இந்த திட்டம் கிட்டத்தட்ட 4 லட்சம் ஏக்கருக்கு பயனாவதாக கோடிட்டுக் காட்டப்படுகிறது. இந்தத் திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள வாய்க்காலின் நீளம் மட்டும் சுமார் 49.3 கிலோ மீட்டர் ஆகும். வால்பாறை மலைப்பிரதேசத்தில் கேரள எல்லை்பகுதியில் அமைந்துள்ள நீராறு அணையிலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சோலையாறு அணைக்கு நீர் வந்து அங்கிருந்து 46 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பரம்பிக்குளம் அணைக்கு வருகிறது.

அதன் பிறகு அதே நீர் 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தூணக்கடவு வந்து, அங்கிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் ஆழியாறு அணை வந்து சேருகிறது. அங்கிருந்து திருமூர்த்தி அணைக்கு சுரங்க வழியில் செல்கிறது. ஆழியாறு அணைக்கும், திருமூர்த்தி அணைக்கும் இடைப்பட்ட தூரம் 29 கிலோமீட்டர் ஆகும். இந்த நீர்ப்பாதையின் மொத்த தூரமான 120 கிலோமீட்டரில் கேரளப் பகுதிகளை கழித்தது போக 49 கிலோமீட்டர் தூரம் வாய்க்கால்கள் மூலமும், மலைகளை குடைந்தெடுத்த சுரங்கப்பாதைக் கால்வாய்கள் மூலமும்தான் (16 அடி விட்டம் உள்ளவை) நீர் பயணம் செய்கிறது.

இதன் பிறகே ஒப்பந்தப்படி கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பாசனப் பரப்புகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இந்த மெகா பிராஜக்ட் நிறைவேற்றப்பட்ட ஆண்டு 1963. பரம்பிக்குளம் அருகே உள்ள சர்க்கார்பதி நீர்மின் நிலையத்தில் ஆண்டொன்றுக்கு 22 டிஎம்சி நீர் திறந்து விடப்பட்டால் குறைந்தபட்சம் 19 டிஎம்சி நீர் திருமூர்த்தி அணைக்கு சென்று சேர்கிறது.

இந்த நீர்ப் பங்கீடு சுழற்சி முறை நடப்பதெல்லாம் வால்பாறை காடுகள்தான் என்கிற போது இதன் கட்டுமானப் பணிகளுக்காக இங்கே எத்தனை இயந்திரங்கள், எத்தனை தொழிலாளர்கள் பணியாற்றியிருப்பார்கள். இதன் பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருப்பார்கள். இந்த மனிதத் தேவையின் மூலம் எந்த அளவுக்கு சூழலியல் மாற்றமும், கானுயிர்களின் நிலை தடுமாற்றமும் ஏற்பட்டிருக்கும்?

அதையும் தாண்டி எஸ்டேட்டுகள். உருவாகும் எஸ்டேட்டுகள் எல்லாம் தன் நிலப்பகுதியை 30 சதவீதம் மட்டுமே தேயிலை, காப்பி பயிரிடுவதற்கு வைத்துக்கொண்டு அதன் அருகாமை காடுகளை 70 சதவீதம் காடுகளாகவே வைத்திருக்க வேண்டும். அப்போதுதான் வன விலங்குகளுக்கான இயற்கை சூழல், சமநிலை பாதுகாக்கப்படும் என்பது ஆங்கிலேயர் விதித்த விதிமுறை. அதை எடுத்த எடுப்பிலேயே அத்துமீறினார்கள் எஸ்டேட்காரர்கள். எப்படி?

70 சதவீதத்திற்கு மேல் எஸ்டேட்டுகளாகவே மாற்றிவிட்டார்கள். மீதியெல்லாம் எஸ்டேட் ரோடுகளாக மாற்றம் கண்டன. பொதுவாக ஒரு சோலைக் காட்டிற்கும் இன்னொரு சோலைக் காட்டிற்கும் இணைப்பு இருக்க வேண்டும். அந்த இணைப்பே இல்லாமல் ஆக்கி விட்டார்கள்.

அந்த வகையில் வாட்டர் பால் எஸ்டேட் 5 டிவிஷன்கள் சுமார் 3 ஆயிரம் ஏக்கர். என்இபிசி கவர்கல் எஸ்டேட் 2 டிவிஷன், சுமார் ஆயிரம் ஏக்கர். ஐயர்பாடி-பாரி அக்ரோ 4 டிவிஷன் 2 ஆயிரம் ஏக்கர். கருமலை பிகேடி குரூப் 10 டிவிஷன் சுமார் 4 ஆயிரம் ஏக்கர். உப்பிரியார் குரூப் 4 ஆயிரத்து 500 ஏக்கர். ஜெயஸ்ரீ சோலையார் குரூப் 1500 ஏக்கர், டாடா காபி 5 ஆயிரம் ஏக்கர், பிபிடிசி முடீஸ் குரூப் 5 ஆயிரம் ஏக்கர், அரசு தேயிலை தோட்டக்கழகம் (டேன் டீ) சுமார் 10 ஆயிரம் ஏக்கர். 200 முதல் 300 ஏக்கர் வரை வைத்துள்ள சிறு எஸ்டேட்டுகள் சுமார் 30.

இவையெல்லாமே பெரும்பாலும் 100 வருஷ குத்தகை நிலங்களைத்தான் வைத்துள்ளன. இந்த எஸ்டேட்டுகள் சூழும் நடுப்பகுதியில் வால்பாறை நகரம் இருக்கிறது. எஸ்டேட் தொழிலாளர்கள் எல்லாமே தென் மாவட்டத்திலிருந்து வந்தவர்கள். யாருக்கும் சொந்தமான வீடுகள் கிடையாது. 60 வயதில் ஓய்வு பெற்றதும் ஊரை விட்டு சொந்த ஊருக்குப் போய்விட வேண்டியதுதான். சம்பளமும் சொற்பம். திருப்பூர் போன்ற நகரங்களில் வேலை வாய்ப்பும், கணிசமான சம்பளமும் கிடைக்க கூட்டம் கூட்டமாக வால்பாறையை விட்டு வெளியேறினர் தொழிலாளர்கள்.

10 ஆண்டுகளுக்கு முன்பு கிட்டத்தட்ட 40 ஆயிரம் பேர் வெளியேறிய நிலையில் அதற்கு பதிலாக எஸ்டேட் நிர்வாகம் வட இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களை கூலிக்கு கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்கள். அப்படி, இப்போது வட நாட்டவர்கள் 10 ஆயிரம் பேருக்கும் அதிகமாக உள்ளார்கள்.

இந்த புலம் பெயர்வு. அதற்குண்டான மாற்றங்கள். சோலைக்காடுகள் பெரும் அழிவை சந்தித்தன. காடுகள் காடுகளாக இல்லை. எஞ்சியிருக்கிற காடுகளிலும் தீவனங்கள் இல்லை. யானைகள் பகலிலேயே தேயிலைக் காடுகளுக்குள் சுற்றித்திரிய ஆரம்பித்தன. சிறுத்தைகளோ வால்பாறை நகருக்குள்ளேயே வந்து நாய்களை, குழந்தைகளை கவ்விக்கொண்டு போக ஆரம்பித்தன. எங்கெல்லாம் ரேஷன் கடைகள் இருக்கிறதோ, அங்கெல்லாம் சுவரை, கதவுகளை உடைத்து தும்பிக்கையை நுழைத்து சர்க்கரையோ, வெல்லமோ, அரிசியோ, பருப்போ எது கிடைத்தாலும் ஒரு பிடி பிடிக்க ஆரம்பித்தன காட்டு யானைகள்.

அது 2004-ம் ஆண்டு. வால்பாறையைச் சுற்றியுள்ள டாடா, இந்துஸ்தான் லீவர், ஸ்டேன்ஸ் போன்ற பெரும் நிறுவனங்களுக்கு சொந்தமான டீ எஸ்டேட்டுகளில் புலி, சிறுத்தை, காட்டு மாடு, கரடி, செந்நாய், காட்டு யானை போன்ற வனவிலங்குகள் வருவதும், அதை மக்கள் பாட்டாசு வெடிகள் கொளுத்தி விரட்டி அடிப்பதும் இயல்பான சமாச்சாரம்தான்.

ஆனால் குறிப்பிட்ட அந்த 2004-ம் ஆண்டில் வனமிருகங்களின் தொல்லை அதிகமாகியிருந்தது. உயிர்ச்சேதமும் மிகுந்திருந்தது. இரவு நேரங்களில் பத்து, பதினைந்து என குழுக்குழுவாக புறப்படும் காட்டு யானைகள் எஸ்டேட் குடியிருப்புகளுக்குள் நுழைய ஆரம்பித்தன. பள்ளிகளின் சத்துணவுக்கூடங்கள், மகளிர் சுயஉதவிக் குழுக்கள் நடத்தும் ரேஷன் கடைகள், மளிகைக்கடைகள் என எவற்றையும் அவை விட்டு வைக்கவில்லை.

அந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இங்குள்ள மாணிக்கா டிவிஷன் எஸ்டேட் பகுதியில் உள்ள தன் மகளைப் பார்ப்பதற்காக அங்காத்தாள் என்பவர் வந்துள்ளார். அப்போது எதிரில் வந்த ஒரு காட்டு யானை அவரை மிதித்துக் கொன்றுவிட்டது. அதே போல் டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதிகளில் முடீஸ் பகுதியில் ஜெயஸ்ரீ எஸ்டேட் உபாசி ஆய்வுக்கூடம் அமைந்துள்ள குடியிருப்புகளுக்குள் காட்டு யானைகள் வந்து கதவு, ஜன்னல் என சூறையாடியது. இதில் ஆறு தொழிலாளர்கள் வீட்டுக்கூரை மீது ஏறி தப்பித்துள்ளனர்.

இதே முடீஸ் பகுதியில் இதற்கு 20 நாட்களுக்கு முன் ஒரு பெண்மணியை ஒற்றை யானை தாக்கியது. அவர் அருகிலுள்ள பள்ளத்தில் உருண்டோடி உயிர் பிழைத்திருக்கிறார். இந்த யானைகளின் வருகையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் சொல்ல வால்பாறை தொகுதி எம்எல்ஏ கோவை தங்கம் டிசம்பர் 11-ம் தேதி கோவையிலிருந்து வால்பாறைக்கு 40 கொண்டை ஊசி வளைவு சாலையில் பயணம் செய்திருக்கிறார்.

அவர் பாதிப்புக்குள்ளானவர்களை சந்தித்துவிட்டு திரும்பும் வழியில் ஒற்றை யானையை எதிர்கொண்டிருக்கிறார். அது பிளிறிக் கொண்டு அவர் காரை நோக்கி தும்பிக்கையை தூக்கிக் கொண்டு ஓடி வர, வந்த வேகத்தில் எம்எல்ஏவின் கார் டிரைவர் வண்டியை சாமர்த்தியமாக ரிவர்ஸ் எடுத்து காப்பாற்றியிருக்கிறார்.

இதே காலகட்டத்தில் அனலி கிராமத்தில் தேயிலை பறித்துக்கொண்டிருந்த திலகராணி என்ற பெண்ணை காட்டுக்குள் பதுங்கியிருந்த கரடி ஒன்று பாய்ந்து கடித்துக் குதறியிருக்கிறது. திலகராணியை காப்பாற்றி கரடியை விரட்ட முற்பட்ட வன ஊழியரையும் பாய்ந்து பிடித்து கடித்திருக்கிறது கரடி. இது இப்படியென்றால் கருமலை எஸ்டேட்டில் காட்டு மாடு துரத்தியதில் ஓர் இளைஞன் அடிபட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டான்.

மீண்டும் பேசலாம்.

கா.சு.வேலாயுதன், தொடர்புக்கு: velayuthan.kasu@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x