Last Updated : 19 Jan, 2018 12:44 PM

 

Published : 19 Jan 2018 12:44 PM
Last Updated : 19 Jan 2018 12:44 PM

டெல்லியில் நிறவெறி தாண்டவமாடுகிறது: கவிஞர் மாலதி மைத்ரி பேட்டி

மாலதி மைத்ரி ஒரு பெண் கவிஞர் என்றுகூறுவதை விட ஒரு பெண்நிலைவாதக் கவிஞர் எனக் குறிப்பிடலாம். அவர் ஒரு பெண்ணிய போராளி. தனது 'சங்கராபரணி' தொகுப்புமூலம் இலக்கிய உலகிற்குள் அடியெடுத்துவைக்கும்போதே ஆணின் ஆதிக்கத்தன்மையை உடைக்கும்விதமான கவிதைகளை ஒரு ஆயுதம் போல தாங்கி வந்தார். அடுத்தடுத்து, நீரின்றி அமையாது உலகு, நீலி, எனது மதுக்குடுவை போன்ற கவிதைத் தொகுப்புகள் அவரை தமிழ்வெளியில் முரண்பாடுகளோடு நிலைநிறுத்தின. சென்னை புத்தகக் காட்சி வளாகத்தில் அண்மையில் வெளியிட்டுள்ள அவரது கவிதைத் தொகுப்பான 'முள்கம்பியில் பின்னும் பறவை' புத்தகத்தை அங்காடிகளில் தர வந்திருந்தார். அவரிடம் 'தி இந்து' தமிழ் இணையதளப் பிரிவிற்காக சந்தித்தோம். சமகால கவிதைகள், பெண்ணியச் சூழல், அவரது அணங்கு பதிப்பகச் செயல்பாடுகள் என பேச்சு விரிந்தது......

மாலதி, புதுச்சேரியிலிருந்து புதுடெல்லி வாழ்க்கைக்கு வந்துவிட்டீர்கள். எப்படி பார்க்கிறீர்கள் இந்த நாட்களை...?

மிகமிக மோசமான நிறவெறியைப் பார்க்கிறேன். நான் கறுப்பு என்பதால் என்னை தலித் என்று பார்க்கிறார்கள். நான் என்ன ஜாதின்னு இவங்களுக்கு எதுக்கு தெரியணும். சாதாரண ஒரு புரவிஷன் ஸ்டோர்லகூட பொருட்களை கைல கொடுக்கத் தயங்கறாங்க. தூக்கிப் போடறாங்க. அகாடமிக்ல வேலை செய்யறவங்ககூட வேறுபாடு பாக்கறாங்க.

கூட வேலை செய்யறாங்களேத் தவிர அவங்களுக்குள்ள கறுப்பா இருக்கானா அவன் தமிழன் நான் நார்த்இண்டியன் அப்படிங்கற நிறவெறி இருக்கறதைப் பாக்கமுடியுது. வடஇந்தியர்கள் பெயர்களிலேயே குடும்பப் பெயர், ஜாதி எல்லாம் உண்டு. ஆனால் தமிழ்நாட்டில் இருந்து போறவங்க யாருடைய பேருக்கு பின்னாடியும் இதெல்லாம் இருக்காது. இதுவே அவங்களுக்கு எரிச்சலை தருது.

ஆசிரியர்கள் மத்தியிலேயே இப்படின்னா மாணவர்கள் மத்தியில எப்படியிருக்கும் பாருங்க. ஜேஎன்யூவில் எனக்கு தெரிஞ்சு நாலைஞ்சு மாணவர்கள் வெளியே வந்துட்டாங்க. கருப்பா இருந்தா தலித் அல்லது தமிழன். தமிழ் மாணவர்கள் ஜேஎன்யுவின் முத்துக்கிருஷ்ணன், எய்ம்ஸ்ஸில் சரவணன், எய்ம்ஸ்ஸின் ஒரு விங்கா இருக்கற ஐஏஎம்எஸ்ஸில் இப்போ சரத்பிரபுன்னு தமிழ் மாணவர்கள் உயிரே கேள்வியா ஆகிடுச்சி... இன்னைக்கு.

எங்க அப்பார்ட்மெண்ட்ல பக்கத்து பிளாட்ல இருக்கறவங்ககூட எங்ககிட்ட பேசறதில்லை. ஏன்னா நான் பொட்டு வக்கறதில்லை. அது அவங்களுக்கு வேறமாதிரி தெரிஞ்சிருக்கு அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்? அவங்களோட நல்ல நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைக்கறதில்லை. அதுவும் பக்கத்துவீடு. அங்கே ஒரு சாவு விழுந்திடுச்சி... போக முடியல. எப்படி போக முடியும். நல்ல நாள்லேயே கண்டுக்காதவங்களை எப்படி இந்தமாதிரி துக்கத்துல கலந்துக்க முடியும்? இவ்வளவு வலிகளுடன் நான் டெல்லியில் வாழ்ந்துகிட்டிருக்கேன். புதுச்சேரியில் சங்கராபரணி ஆற்றங்கரையில் வாழ்ந்த இனிய நினைவுகள் இப்போது இல்லையென்றுதான் சொல்லமுடியும். ஏனெனில் டெல்லியில் நிறவெறி தாண்டவமாடுது.

பெண் கவிஞர்களின் பாடுபொருள் உடல்மொழி மட்டுந்தானா?

அப்படி குறுக்கிவிட முடியாது. சுயவெளிக் கவிதைகள் என அழைக்கலாம்.

அப்துல் ரகுமான், சிற்பி, மேத்தா காலத்து வானம்பாடி பிரச்சாரக் கவிதைகளைக் கடந்து புதுக்கவிதைகள் நிறைய மாறிவந்தது. நான் எழுத வந்த காலம்

சோஷியல், கலகக் கூறு, அகம், சுயவெளின்னு எழுத ஆரம்பிச்சோம். அதைக்கூட டைரிக்குறிப்புகள் மாதிரி இருக்கு என்று சொன்னார்கள். நாங்கள் வந்த பிறகுதான் பெண்மொழி அரசியல், உடல்மொழி அரசியல் என்று எங்களுக்கென்று சுயவெளியை உருவாக்கினோம்.

90களுக்குப் பிறகான பெண் வாழ்நிலையை கால அரசியல் என எழுத ஆரம்பித்தோம். நவீன வாழ்க்கையில் பெண்ணின் இருப்பின் நிலையை எங்கள் கவிதைகள் பிரதிபலித்தன. முக்கியமாக என்னுடைய கவிதைகளில் பெண் அரசியல், சூழலியல் கவிதைகள், நிலம் சார்ந்த அரசியல், சமூகம், பெண்ணியம் சார்ந்த அரசியல் என பல தளங்களில் கவிதைகள் எழுதி சூழலை மாற்றினேன். தற்காலத்தில் அதாவது இந்த சில வருடங்களாக எழுதப்படும் கவிதைகளில் பெண் அரசியலோடு, தலித் அரசியல், விளிம்புநிலை அரசியல் என பாடுபொருள்களை மேலும் மாற்றியுள்ளார்கள் இன்றைய பெண் கவிஞர்கள்.

அணங்கு பதிப்பக நூல்கள் பற்றி?

அணங்கு பதிப்பகம் ஒரு கலகச் செயல்பாடு. ஒரு அரசியல் நடவடிக்கை. பாப்புலர் படைப்பாளிகளைப் போட்டால் விற்பனையாகும் என்று நான் செயல்படுவதில்லை. யாருக்கும் தெரியாத ஆனால் தேடிக் கண்டடையவேண்டிய படைப்புகளை போடுகிறோம். மீனா கந்தசாமி ஆங்கில நாவலை தமிழில் 'குறத்தியம்மன்' என்ற பெயரில் பிரேம் மொழிபெயர்ப்பில் வெளியிட்டுள்ளோம். இந்நாவல் கீழவெண்மணி சம்பவங்களை பின்நவீனத்துவ பார்வையில் அணுகியுள்ளது. ப.சிவகாமியின் 'உயிர்', 'இடதுகால் நுழைவு' போன்ற புத்தகங்களையும் ஆனி ஜைதியின் 'குலாப்' ஆகிய நூலும் வெளியிட்டுள்ளோம்.

ஆப்பிரிக்க கறுப்பின எழுத்தாளர் சிமாமந்தா எங்கோசி அடிச்சி எழுதிய 'ஊதாநிறச் செம்பருத்தி' நாவலை பிரேம் மொழிபெயர்ப்பில் கொண்டுவந்துள்ளோம். எங்கோசி அடிச்சி இன்னொரு புத்தகம் 'நாம் அனைவரும் பெண்ணியவாதிகளாக இருக்கவேண்டும்' இப்போது வெளிவந்துள்ளது.

அவுஸ்திரேய ஆதிகுடிகளின் பெண்ணிய கவிதைகள், 'பூலகைக் கற்றலும் கேட்டலும்' என்ற தலைப்பில் கொண்டுவந்துள்ளோம். இக்கவிதைகளை மொழிபெயர்த்துள்ளார் ஆழியாள். எங்கள் புத்தகங்களைப் பொறுத்தவரை எவ்வளவு பிரதிகள் விற்றன என்பதல்ல... எவ்வகையான விமர்சனங்கள் உருவாகியுள்ளன... என்பதுதான்.. அந்தவகையில் அணங்கு நூல்கள் நல்ல சரியான விமர்சனங்களையே எதிர்கொண்டு வருகிறது.

கவிதை என்று இல்லாமல் பொதுவாக இன்றுள்ள பெண்ணிய நிலைவாதம் எப்படியுள்ளது?

மிகவும் குறுகிவிட்டது. தங்களுக்கான உரிமைகள் முடக்கப்படும்போது அதை எதிர்த்து போராடத் துணிவின்றி இருக்கிறார்கள். சமரச அரசியல், சார்பு அரசியல் என நீர்த்துப்போயுள்ளனர். வரவர நீர்த்துப்போகும் நிலையில்தான் இன்றைய பெண்ணியம் உள்ளது. அதற்குக் காரணம் கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது ராட்சத கரங்களால் அவர்களது செயல்களை முடக்கியுள்ளதுதான். சிறந்த பெண்ணியவாதிகளாக வரும் படைப்பாளர்களை கூர் மழுங்கடிப்பதில்தான் கார்ப்பரேட்களின் வெற்றி அடங்கியிருக்கிறது. சமரச அரசியலில் பெண்நிலைவாதம் நீர்த்துப்போகும் விதமாக பெண்கள் செயல்படுவதுதான் இன்றைய மோசமான நிலைக்குக் காரணம்.

ஆண்டாள் ஒரு பிரச்சினையாக்கப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

ஆண்டாளைப் பற்றி வைரமுத்து தனது சொந்தக் கருத்தைக் கூறவில்லை என்பதை நீங்கள் பார்க்கவேண்டும். சொல்லப்போனால் வைரமுத்து அரசியலை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். ஆனால் வைரமுத்து கூறியது ஒரு மேற்கோள்தான்.

மொத்தக் கவிதைகளையும் பாராட்டிவிட்டு ஒரு மேற்கோளைத்தான் அவர் சுட்டிக் காட்டினார். அது அவர் அப்படியொரு பிரச்சினை வந்தபோது மன்னிப்பு கோரி அறிக்கை விட்டது மிகவும் கோழைத்தனமானது.இலக்கிய விமர்சனம் குறித்த புரிதல் சிறிதும் இன்றி ஆர்எஸ்எஸ், இத்துத்துவா அமைப்புகள் இவ்வளவு வேகமாக போராட்டத்தில் இறங்கியது தேவையற்றது.

அதேபோல பெரியார் அமைப்புகள் ஆண்டாள் கவிதைகளை கிண்டல்செய்வது, ஆண்டாள் கவிதைகளிலிருந்து பெண்கள் சார்ந்த கருத்தியல்புரிதல் இன்றி விமர்சிப்பதும் ஏற்றுக்கொள்ளமுடியாதது. இரண்டு எட்ஜூமே மிகவும் மோசமானது.

உங்களுடைய பேஸ்புக்கில் தொடர்ந்து கோபத்தை கொப்பளிக்கிற கருத்துக்களாகவே உள்ளனவே?

பெண்கள் கோபப்படக்கூடாதுன்னு அவங்கமேல ஒரு பிம்பத்தை உருவாக்கி வச்சிருக்கு இந்த சமூகமும் மீடியாவும். என்னைப் பொறுத்தவரை உண்மையைப் பேசறேன். நியாயத்தைப் பேசறேன். நான் சார்பற்று இயங்குகிறேன். அதனால் யாருக்கும் நான் பயப்படவேண்டியதில்லை.

மத்தவங்க என் அளவுக்குக் கோபப்படறவங்களா இல்லாம இருக்கலாம். ஆனா பர்சனலா பாதிக்கப்படும்போது தங்கள் கோபத்தை அதுவும் செல்லுபடியாகுமான இடங்கள்ல வெளிப்படுத்துறாங்க. பொதுவெளியில உருவாகிற முக்கியமான பிரச்சனைகளுக்கே என்னுடைய கண்டனத்தை நியாயத் தரப்பை முன்வைக்கிறேன்.

இது உங்களுக்கு கோவமாக தெரியுது. இதனால எனக்கு ஃபாலோயர்ஸ் குறைவாக இருக்கலாம். எனக்கு நிறைய ஃபாலோயர்ஸ் வரணும்கறதுக்காக அவங்களை திருப்திப்படுத்த என்னால் எழுத முடியாது.

சமீபத்தில் இளம் பெண்திரைப்படப் பாடலாசிரியரைப் புகழ்ந்து பிரபல எழுத்தாளர் பேசினதை எல்லாரும் அந்த இளம் பெண் கவிஞரின் பிரச்சினையாத்தான் பாத்தாங்க. ஆனா நான்தான் இது ஆணின் பிரச்சனை என்று சொன்னேன். ஒரு பெண்ணை அளவுக்கு அதிகமாக புகழ்தல் ஆணினுடைய பலவீனத்தை எடுத்துக்காட்டக்கூடியதாக உள்ளது. இப்பிரச்சனைக் குறித்து இப்பெண்கவிஞரைக் கேட்பதை விட அந்த எழுத்தாளரை போய் கேளுங்கள் என்று எழுதினேன்.

தேன்மொழி தாஸ், குட்டிரேவதி இவங்களெல்லாம் எனக்கு நெருக்கமானவங்கன்னு சொல்லமுடியாது. நாளைக்கு எனக்கு எதாவது பிரச்சினை என்றால் அவர்கள் வருவார்களா மாட்டார்களா என்பதும் எனக்குத்தெரியாது. ஆனா இவங்களுக்கென்று பிரச்சனைகள் வரும்போது பெண்கவிஞர்கள் பெண் படைப்பாளிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று வரும்போது நான் அவர்களுக்காக அணங்கு அமைப்பு சார்பாக குரல்கொடுத்தேன். இவர்களுக்கு ஆதரவாக பலரையும் திரட்டினேன். இதை கோபம், கொப்பளிப்பு என்று வெறும் உணர்ச்சிவயப்பட்ட நிலையிலிருந்து பார்க்கவேண்டாம்.

நமது கேள்விகளுக்கு மிகவும் மெல்லியக்குரலில் வெளிப்பட்ட பொறுமையான பதிலில் மாலதியின் தெள்ளிய பாதை வெளி புலப்பட்டது. சமூகக் கோபங்கள் ஒரு படைப்பாளிக்குத் தேவைதான் என்று தோன்ற புதிய கவிதைத் தொகுப்புக்கு வாழ்த்துகூறி விடைபெற்றோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x