Published : 25 Jan 2018 10:32 AM
Last Updated : 25 Jan 2018 10:32 AM

ஜீப் டிரைவர் சினேகா!- திரும்பி பார்க்க வைக்கும் திருநங்கை

ந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் திருநங்கையான பிரித்திகா யாஷினி காவல் துறையில் உதவி ஆய்வாளராக கடந்த ஆண்டு பொறுப்பேற்று பலரின் கவனத்தை ஈர்த்தார்.

அந்த வரிசையில் இணைந்திருக்கிறார் திருச்சியைச் சேர்ந்த சினேகா. ஆமாம் இவரும் திருநங்கைதான். அரசுத்துறையில் தற்காலிக ஜீப் ஓட்டுநராக பணியேற்று கடந்த இரண்டரை மாத காலத்தில் தனது சிறப்பான பணியால் பாராட்டுகளை பெற்று வருகிறார்.

திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியைச் சேர்ந்த காய்கறி வியாபாரம் செய்யும் தம்பதிகளுக்கு 3 மகன்கள், 2 மகள்கள் என மொத்தம் 5 பேர். கணவனும், மனைவியும் பொன்மலை ரயில்வே காலனியில் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களில் கடைசியாக பிறந்த மகன்தான் பின்னாளில் சினேகாவாக திருநங்கையானார்.

தற்போது 38 வயதாகும் சினேகா, 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார். அதன்பிறகு படிப்பதற்கான சூழல் இல்லை. தனது அண்ணன்கள் இருவரும் ஓட்டுநர்கள் என்பதால், தானும் ஓட்டுநர் பயிற்சி பெற்று 1999-ம் ஆண்டிலேயே உரிமம் பெற்று வாடகை வாகனங்களை இயக்கும் பேட்ச் உரிமம் பெற்றுள்ளார்.

இதன்பிறகு பல்வேறு முக்கிய பிரபலங்களிடம் கார் ஓட்டியுள்ளார். இதனிடையே திருச்சி மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்தில் தற்காலிக ஜீப் ஓட்டுநராக 9.11.2017 அன்று பணியேற்று தொடர்ந்து இரண்டரை மாதமாக பணியாற்றி வருகிறார்.

தனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றங்கள், போராட்டங்கள், எதிர்ப்புகள் ஆகியவற்றை தனது முன்னேற்றத்துக்கான படிக்கட்டுகளாக மாற்றியதுதான் சினேகாவின் சாதனை. அதுபற்றி நம்மிடம் அவர் பகிர்ந்தது:

நான் திருநங்கையாக உணரத்தொடங்கியதும் வழக்கம்போல எங்கள் வீட்டிலும் எதிர்ப்புதான். ஆனா, அம்மா மட்டும் பாசத்தை காட்டினார்கள். ஒரு கட்டத்தில் வீட்டைவிட்டு வெளியேறி மும்பை சென்றேன். மற்ற திருநங்கைகளுடன் யாசகம் கேட்டு கிடைத்த வருமானத்தில் வயிற்றை கழுவ வேண்டிய நிலை. எனக்கு அந்த வாழ்க்கை பிடிக்கல. சமுதாயத்தில் மரியாதையோட வாழ ஆசைப்பட்டேன். மனதில் ஒரு வைராக்கியத்தோட ஓட்டுநர் பயிற்சி பெற்று, லைசென்ஸ் வாங்கினேன்.

ஓட்டுநராக பலரிடம் பணியில் இருந்தாலும், ஒரு பெண்ணாக புடவையோ சுடிதாரோ அணிந்துகொள்ள முடியவில்லை. பேன்ட்- சட்டை அணிந்து கொண்டுதான் அப்போது வேலை செய்தேன். இது எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. குடும்பத்தினர் என்னிடமிருந்து விலகி இருந்தாலும், அம்மா அன்பால் மீண்டும் குடும்பத்துடன் இணைந்தேன்.

திருநங்கைகள் சமூக கூட்டமைப்பு என்ற அமைப்பின் மூலம் திருநங்கைகளின் மேம்பாட்டுக்கு உதவிகளை செய்து வரும் லால்குடியைச் சேர்ந்த சோனாலிதான் என் குரு. அவருடன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலெக்டர் ஆபீஸில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்துக்குச் சென்று, எனக்கு ஓட்டுநர் பணி வழங்குமாறு மனு அளித்தேன்.

அதன் பின்னர், பல ஆண்டுகள் கழித்து தற்போது மாவட்ட ஆட்சியராக உள்ள கு.ராஜாமணி அவர்கள் என் மனுவை பரிசீலித்து, இந்த தற்காலிக ஓட்டுநர் வேலையை அளித்துள்ளார். 

மிகுந்த ஆர்வத்துடன் பணியில் ஈடுபட்டு வருகிறேன். அலுவலகத்தில் யாரும் என்னை வேற்றுமையுடன் பார்க்கவில்லை. நானுண்டு, வேலையுண்டு என இருக்கிறேன். பலரும் என்னை ஆச்சர்யமாகவும் மரியாதையாகவும் பார்க்கின்றனர்.

திருநங்கையாக சமூகத்தில் வாழ்வது பெரும் சவால்தான். பெற்றோரும், உற்றாரும் ஒதுங்கிவிட வயிற்றுப் பிழைப்புக்காக பல செயல்களில் ஈடுபட வேண்டிய சூழல்தான் தொடர்கிறது. அரசோ, தனியார் நிறுவனங்களோ அவர்களுக்கு வேலை கொடுக்க முன்வர வேண்டும்.

நான் தற்போது பார்க்கும் வேலையும் தற்காலிகமானதுதான் என்றாலும் உழைத்து வாழப்பிடித்திருக்கிறது. போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. முயற்சித்தால் வெற்றி கிடைக்கும் என்பதை அனைவரும் மனதில் கொண்டால், வாழ்க்கையில் முன்னேறலாம் என்று ஆணித்தரமாக கூறி முடித்தார் சினேகா. இந்த நம்பிக்கை நிறைய சினேகாக்களுக்கு தேவையாய் இருக்கிறது.

t1

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x